Tuesday, September 22, 2020

பாயும் பா.ஜ.க - திமிறும் திரிணாமுல்!

மேற்குவங்கத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல், முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மட்டுமல்ல, அங்கு ஆட்சியைப் பிடிக்கத் துடித்துக்கொண்டிருக்கும் பா.ஜ.க-வுக்கும் வாழ்வா சாவா தேர்தல்தான்!


மேற்குவங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, தன் கட்சியின் சார்பில் ஜூலை 21-ம் தேதி நடைபெற்ற தியாகிகள் தின நிகழ்ச்சியில், பா.ஜ.க-வையும் பிரதமர் மோடியையும் கடுமையாகச் சாடியதோடு, ‘அச்சம் வேண்டாம். நான் இருக்கிறேன்’ என்று தொண்டர்களைப் பார்த்துக் கூறினார். ஆனால், மம்தாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக பா.ஜ.க இருக்கிறது என்பதுதான் மேற்குவங்கத்தின் கள யதார்த்தம்.


அங்கு தொடர்ச்சியாக 34 ஆண்டுகள் ஆட்சிபுரிந்த சி.பி.எம் தலைமையிலான இடது முன்னணியை, 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வீழ்த்தி, அதிகார நாற்காலியைக் கைப்பற்றினார் மம்தா. அந்தத் தேர்தலில் வெறும் நான்கு சதவிகித வாக்குகளுடன் நான்கு தொகுதிகளில் மட்டுமே பா.ஜ.க வெற்றிபெற்றது. ஆனால், இன்றைக்கு ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றக்கூடிய அளவுக்கு பலம்மிக்க இயக்கமாக பா.ஜ.க அங்கு வளர்ந்திருக்கிறது. 2014 நாடாளு மன்றத் தேர்தலில் 18 சதவிகித வாக்குகளைப் பெற்ற பா.ஜ.க-வுக்கு இரண்டு எம்.பி-க்கள் கிடைத்தனர். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 40 சதவிகித வாக்குகளைப் பெற்று மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்ற பா.ஜ.க-வுக்கு இப்போது 18 எம்.பி-க்கள்.


இப்போது அங்கு மம்தாவுக்கும் பா.ஜ.க-வுக்கும் தான் நேரடிப் போட்டி. கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சிக்கட்டிலில் இருக்கும் மம்தா, வரக்கூடிய தேர்தலிலும் வெற்றிபெற்று ஹாட்ரிக் அடிக்க வேண்டும் என்று விரும்புகிறார். மம்தாவுக்கு 65 வயதாகிறது. இந்த முறை பா.ஜ.க-வை ஜெயிக்கவிட்டால், பிறகு ஜென்மத்துக்கும் தம்மால் ஆட்சிக்கு வர முடியாது என்று கணிக்கும் மம்தா, தன் முழு பலத்தையும் திரட்டி வேலை செய்து கொண்டிருக்கிறார். பிரசாந்த் கிஷோரின் ‘ஐபேக்’தான் மம்தாவுக்கும் தேர்தல் உத்திகளை வகுத்துக்கொடுக்கிறது. ஒரு மாதத்துக்கு முன்பாக, 294 தொகுதிகளிலும் ஐபேக் ஒரு சர்வே நடத்தியிருக்கிறது. அதில், 78 தொகுதி களில் மட்டுமே மம்தாவுக்குச் சாதகமாக இருப்பதாக முடிவுகள் வந்திருக் கின்றன. கொரோனா மற்றும் அம்பன் புயல் பாதிப்புகள் ஆகிய பிரச்னைகளை மம்தா அரசு சரிவரக் கையாளவில்லை என்பது காரணமாகச் சொல்லப்படுகிறது.‘ஐபேக்’ பல்வேறு புதிய உத்திகளை வகுத்துக் கொடுக்க, அவற்றை உறுதியுடன் அமல்படுத்திவருகிறார் மம்தா. வளர்ச்சி குன்றிய கிராமப் பஞ்சாயத்துகளை அடையாளம் கண்டு, அங்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் போர்க்கால அடிப்படையில் செய்து முடிக்குமாறு அதிகாரிகளை விரட்டிக்கொண்டிருக்கிறார். கட்சியின் கட்டமைப்பில் பல அதிரடி மாற்றங்களைச் செய்திருக்கிறார். மாவட்டத் தலைவர் உள்ளிட்ட பல முக்கியப் பதவிகளுக்கு இளைஞர்களையும் புதுமுகங்களையும் கொண்டுவந்திருக்கிறார்.


அதே நேரத்தில், மம்தாவைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாக பா.ஜ.க-வும் வேலை செய்துகொண்டிருக்கிறது. முதல்வர் மம்தாவுக்கும் கவர்னர் ஜக்தீப் தன்கருக்கும் இடையேயான மோதல் மேற்குவங்க அரசியலின் பரபரப்பை அதிகரித்துவருகிறது. பா.ஜ.க-வின் உத்திகள் டெல்லியில் வகுக்கப்படுகின்றன. 50 சதவிகிதத்துக்குமேல் வாக்குகளைப் பெற்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பது பா.ஜ.க-வின் இலக்கு. மம்தாவுக்கு எதிராக மதப் பிரச்னையை பா.ஜ.க கையிலெடுக்கிறது. அயோத்தியில் ஆகஸ்ட் 5-ம் தேதி, ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அன்றைய தினம், மேற்கு வங்கத்தில் முழு ஊரடங்கை மம்தா அமல்படுத்திவிட்டார் என்றும், அவர் ஓர் இந்து விரோதி என்றும் பா.ஜ.க தலைவர்கள் பிரசாரம் செய்கிறார்கள். பா.ஜ.க அரசியலை முறியடிக்கும் யுக்தியாக சில நடவடிக்கை களை மம்தா சமீபத்தில் மேற்கொண்டிருக்கிறார். ‘மேற்குவங்கத்தில் ஏழை பிராமண புரோகிதர்கள் 8,000 பேருக்கு மாத உதவித்தொகை ரூ.1,000 மற்றும் இலவச வீடு வழங்கப்படும்’ என்று அறிவித்திருக்கிறார். மேலும், மாநிலத்தில் இந்தி பேசக்கூடிய 14 சதவிகித மக்களைக் கவரும் நடவடிக்கையாக அவர்களின் மொழி, இலக்கியம், கலாசாரம் ஆகியவற்றைப் பாதுகாக்கும் வகையில் ‘இந்தி அகாடமி’யை அறிமுகப்படுத்தி யிருக்கிறார்.


‘கொரோனா போய்விட்டது. ஆனால் பா.ஜ.க பொதுக்கூட்டங்கள் நடத்துவதைத் தடுப்பதற்காக மம்தா அரசு ஊரடங்கை அமலில்வைத்திருக்கிறது’ என்று ஆவேசப்படுகிறார் பா.ஜ.க மாநிலத் தலைவரும், முதல்வர் வேட்பாளருமான திலீப் கோஷ். அதற்கு பதிலடி கொடுக்கும் மம்தா கட்சியினர், ‘மாநிலத்தில் 3,000 பேர், இந்தியா முழுவதும் 95,000 பேர் என்று ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றுக்கு மக்கள் ஆளாகும் நிலையில், கொரோனா போய்விட்டது என்று திலீப் கோஷ் கூறுகிறார். அவர் உடனடியாக ‘மருத்துவரை’ப் போய் பார்க்க வேண்டும்’ என்று கிண்டல் செய்கிறார்கள்.மூன்றாம் இடத்திலும், நான்காம் இடத்திலும்தான் காங்கிரஸும் இடதுசாரிகளும் இருக்கிறார்கள். காங்கிரஸின் நாடாளுமன்ற மக்களவைக்குழுத் தலைவரான ஆதிர் ரஞ்சன் சௌத்ரியை, மேற்குவங்க மாநிலத் தலைவராகக் களமிறக்கியிருக்கிறார் சோனியா காந்தி. அங்கு செல்வாக்குமிக்க தலைவர் அவர். இடதுசாரிகளுடன் கூட்டணிவைப்பது காலத்தின் தேவை என்று வெளிப்படையாக அவர் பேசிவருகிறார். முந்தைய தேர்தலின்போது, காங்கிரஸுடன் கூட்டணி வைப்பதா, வேண்டாமா என்பதில் தத்துவார்த்தக் குழப்பத்தில் இருந்த இடதுசாரிகள், இந்தமுறை என்ன முடிவெடுக்கப்போகிறார்கள் என்பது தெரியவில்லை.


களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. கூட்டணி வியூகங்கள், தேர்தல் வாக்குறுதிகள், சலுகைகள், பிரசார உத்திகள் என வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கும் ஏராளமான விஷயங்கள் இனிமேல்தான் அரங்கேறும். பார்க்கலாம்!


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment