Wednesday, September 30, 2020

அபேஸ் ஆகும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் - ஊழல் கறையான்களின் அட்டகாசம்!

 


காலம் காலமாகக் கரையோரங்களில் வசித்த சென்னை பூர்வகுடிகளின் வாழ்விடங்களைப் பறித்து, வீடுகளைத் தரைமட்டமாக்கி, ‘சிங்கார’ சென்னையைவிட்டு துரத்தியது ஆளும்வர்க்கம். ஒடுக்கப்பட்ட அந்த மக்களுக்கு, ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒதுக்கிய வீடுகளையாவது விட்டுவைப்பார்கள் என்று பார்த்தால், அவற்றிலும் ஊழல் செய்து அவர்களின் வயிற்றிலடிக்கிறது அரசியல் கட்சியினர், அதிகாரிகள் உள்ளிட்ட கும்பல் ஒன்று. ஆம்... கூவம் மற்றும் அடையாற்றின் கரையோரங்களில் வாழ்விடம் பறிக்கப்பட்ட மக்களுக்காக, பெரும்பாக்கத்தில் கட்டப்பட்டிருக்கும் வீடுகளில் சுமார் பத்தாயிரம் வீடுகளைப் போலி ஆவணங்களைத் தயார்செய்து அபகரித்திருக்கிறது அந்தக் கும்பல். `இந்த ஊழலில் புரளும் பணம் மட்டுமே சுமார் நூறு கோடிகளைத் தொடும்’ என்று `பகீர்’ கிளப்புகிறார்கள் விவரமறிந்தவர்கள்.

தமிழக அரசின் நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை, 2014-15-ம் ஆண்டில் ஒரு திட்டத்தை முன்னெடுத்தது. அதன்படி கூவம், பக்கிங்ஹாம் கால்வாய், அடையாறு ஆகிய நீர்நிலைகளின் கரையோரங்களில் வசித்துவந்த மக்களுக்கு மத்திய அரசின் ஜவஹர்லால் நேரு தேசிய நகர புனரமைப்புத் திட்டத்தின்கீழ் மாற்று வீடுகளை வழங்க முடிவெடுக்கப்பட்டது. நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையுடன் சென்னை மாநகராட்சி, குடிசை மாற்று வாரியம், பொதுப்பணித்துறை ஆகியவை இணைந்து 2017-ம் ஆண்டு பணிகளைத் தொடங்கின.


கார்த்திகேயன்

இதற்கிடையே கரையோரத்தில் வசித்துவந்த மக்கள் தங்களது வாழ்விடங்களை விட்டுக்கொடுக்க முடியாது என்று கடுமையாகப் போராடினார்கள். அன்றாடக் கூலிகளான அவர்களுக்கு அந்தக் கரையோரங்களில்தான் வாழ்வாதாரங்களும் இருந்தன. மீன் மார்க்கெட், கோயம்பேடு காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் கூலித் தொழிலாளிகளாகவும், பெண்கள் சாலையோரங்களில் இட்லி சுட்டு விற்பது எனத் தங்களது வயிற்றுப்பாட்டைச் சமாளித்து வந்தனர். அவர்களின் பிள்ளைகளும் அருகிலிருந்த அரசுப் பள்ளிகளில் கல்வி பயின்றார்கள். நகருக்கு வெளியே மாற்று வீடுகளைக் கொடுத்தாலும், அங்கு தங்களுக்கான வாழ்வாதாரங்கள் கிடைக்காது; பிள்ளைகளின் கல்வியும் பாதிக்கப்படும் என்பது அவர்களின் அச்சமாக இருந்தது.


ஆனால், எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் ‘சென்னையை அழகுபடுத்தியே தீருவேன்’ என்று, விடாப்பிடியாக அவர்களை வெளியே இழுத்துப்போட்டு ஆயிரக்கணக்கான வீடுகளுடன் அவர்களின் கனவுகளையும் தரைமட்டமாக்கியது அரசு ‘இயந்திரம்.’ இப்படியாக 54 குடிசைப் பகுதிகள் அப்புறப்படுத்தப்பட்டன. அவர்களுக்காக நகரிலிருந்து சுமார் 45 கிலோமீட்டர் தள்ளி, பழைய மாமல்லபுரம் சாலையில், சோழிங்கநல்லூரை அடுத்த பெரும்பாக்கத்தில் எட்டு மாடிகளைக்கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளாக 21,000 வீடுகள் கட்டப்பட்டன. மொத்தம் 450 சதுர அடியில் கட்டப்பட்டிருக்கும் ஒவ்வொரு வீட்டின் மதிப்பும் தோராயமாக 14 லட்சம் ரூபாயைத் தாண்டும்.


இந்தத் திட்டத்தில்தான் பெரும் ஊழல் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. உண்மையான பயனாளிகளுடன், போலி பயனாளிகளுக்கும் வீடுகளை ஒதுக்கீடு செய்து, கோடிகளில் கொழிப்பதாக அ.தி.மு.க, தி.மு.க, பா.ஜ.க உட்பட பல்வேறு கட்சியினர்மீதும் புகார்கள் எழுந்திருக்கின்றன. இது தொடர்பாக போலி ஆதார் ஆவணம் ஒன்று நமக்குக் கிடைத்தது.


மகேஸ்வரி என்பவருக்கு, பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் வீடு ஒன்று ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதற்காக அவரது ஆதார் அட்டையின் நகல் இணைக்கப்பட்டிருக்கிறது. அந்த ஆதார் அட்டையில், ‘496, நெடுஞ்செழியன் காலனி, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை’ என்ற முகவரி இருக்கிறது. ஆனால், மகேஸ்வரியின் ஆதார் எண்ணை (8690 5342 8515) சோதித்துப் பார்த்தால் ‘பி.பி.கார்டன், அமைந்தரை, சென்னை’ என்ற முகவரி வருகிறது. ஆதாரில் முகவரியை மட்டும் போலியாக மாற்றி, சிந்தாதிரிப்பேட்டை கூவம் கரையோரத்தில் வசிப்பவர்போல போலியான ஆவணம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.


சிந்தாதிரிபேட்டையின் மேற்கண்ட முகவரியில் வசித்துவருவதாகச் சொல்லப்படும் மகேஸ்வரி என்பவர் குறித்து விசாரித்தோம். “அப்படி யாரும் இங்கு வசிக்கவில்லை” என்ற தகவலே கிடைத்தது.


இது தொடர்பாக, நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர் ஒருவர், ``இது ஒரு சாம்பிள்தான். இப்படி, சுமார் பத்தாயிரம் வீடுகளுக்கு போலி முகவரி தயார்செய்யப்பட்டிருக்கிறது. கூவம் கரையோரங்களிலுள்ள நிலம், பொதுப் பணித்துறைக்குச் சொந்தமானது. வீடுகளைக் கணக்கெடுப்பது முதல் வீடு ஒதுக்கீடு செய்வது வரை மாநகராட்சியும், குடிசை மாற்று வாரியமும் இணைந்து செயல்படுகின்றன. இதில், பயனாளிகளைத் தேர்வுசெய்யும்போது, சிந்தாதிரிப்பேட்டைக்கு 100 வீடுகள் ஒதுக்க வேண்டுமென்றால், அதிகாரிகள் கூடுதலாக 300 வீடுகளைக் கணக்கு காட்டுவார்கள்.இப்படி போலியாக உருவாக்கப்பட்ட பயனாளிகளிடம் ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை வாங்கிக்கொண்டு வீடுகளை ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள். கோயம்பேடு முதல் எஸ்.எம்.நகர் வரை சுமார் 20,000 கரையோர வீடுகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் மட்டுமே 6,000-க்கும் மேற்பட்ட வீடுகள் போலி முகவரி மூலம் ஒதுக்கப்பட்டுள்ளன. பொதுப்பணித்துறையின் தொழில்நுட்பப் பிரிவில்தான் இந்த போலி முகவரிகள் தயாரிக்கப்படுவதாகச் சொல்கிறார்கள்.


பொதுப்பணித்துறையின் நிலம் என்பதால், அந்தத் துறை அதிகாரிகள் சொல்வதுதான் கணக்காக இருக்கிறது. ஒருகட்டத்தில் அதிகாரிகள் மட்டத்தில் இதில் ஊழல் நடப்பதை மோப்பம் பிடித்த அரசியல் கட்சியினர், அவர்கள் பங்குக்கு அதிகாரிகளை மிரட்டி நூற்றுக்கணக்கான வீடுகளைத் தங்களுக்கு ஒதுக்கச் செய்தார்கள்.


இந்த விவகாரத்தில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி அ.தி.மு.க 62-வது வட்டச் (கிழக்கு) செயலாளர் இளங்கோ, இதே பகுதியின் தி.மு.க வட்டச் செயலாளர் ஜெகதீசன், மத்திய சென்னை பா.ஜ.க மாவட்ட எஸ்.சி பிரிவுத் தலைவர் பாலச்சந்தர் உள்ளிட்ட பலரது பெயர்களும் அடிபடுகின்றன. பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய வீடுகளிலிருக்கும் பயனாளிகளின் ஆதார் முகவரிகளை ஆராய்ந்தாலே இப்படியொரு ஊழல் நடந்திருப்பது அம்பலமாகும்” என்றார் அதிர்ச்சி விலகாமல்.


இது குறித்து சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி அ.தி.மு.க வட்டச் செயலாளர் இளங்கோவிடம் பேசினோம். ``என்மீதான புகாரில் உண்மை இல்லை. கலெக்டர் நகரில் நான் 500 வீடுகளை வாங்கியிருப்பதாகச் சொல்கிறார்கள். வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நான் உதவி செய்தேன். இந்த விவகாரத்தில் மூன்று துறைகளின் அதிகாரிகள் இருக்கிறார்கள். அவ்வளவு சாதாரணமாக வீடு கிடைத்துவிடுமா என்ன?” எனக் கொந்தளித்தார்.


அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் நம்மைத் தொடர்புகொண்டவர், ``முதன்முறையாக வீடுகளை அப்புறப்படுத்தியபோது, உண்மையான பயனாளிகளைத் தேர்வுசெய்து கொடுத்தார்கள். பிறகு, மூன்று துறை அதிகாரிகளின் கையெழுத்துகளை போலியாகப் போட்டு சிலர் ஆர்டர்களைத் தயாரித்திருக்கிறார்கள். இந்த மோசடியை அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு சென்றேன். பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் கவிதாவிடம் புகார் கொடுத்தேன். இந்த விவகாரத்தில் அ.தி.மு.க அரசின் பெயரைக் கெடுப்பதற்காகச் சிலர் புகார் சொல்கிறார்கள்” என்றார் ஆவேசத்துடன்.சேப்பாக்கம் தி.மு.க வட்டச் செயலாளர் ஜெகதீசனிடம் பேசினோம். ``என் தரப்பிலிருந்து யாருக்கும் வீடு பெற்றுத் தரவில்லை. இது தவறான தகவல்” என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார். மத்திய சென்னை மாவட்ட பா.ஜ.க எஸ்.சி பிரிவுத் தலைவர் பாலச்சந்தரிடம் பேசினோம். ``வீடுகளை இழந்த மக்களுக்கு வீடு கிடைக்காததால், அதிகாரிகளிடம் முறையிட்டேன். இதையொட்டி ஒதுக்கப்பட்ட வீடுகளை ஒரு பைசாகூட வாங்காமல் மக்களுக்கு ஒதுக்கினேன். அதேநேரம், அதிகாரிகளிடம் பேசியபோது தி.மு.க, அ.தி.மு.க கட்சிக்காரர்களுக்கே பெருமளவில் வீடு ஒதுக்கப்பட்டது தெரியவந்தது. `என்ன சார்... தி.மு.க, அ.தி.மு.க-வுக்கெல்லாம் ஒதுக்கியிருக்கிறீர்கள்... எங்கள் கட்சியெல்லாம் தெரியவில்லையா?’ என்றேன். இதன் காரணமாக, திரும்பவும் கொஞ்சம் வீடுகளை ஒதுக்கினார்கள்.


பெரும்பாக்கத்தில் வீடு வேண்டுமானால் ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் பொதுப்பணித்துறையின் உதவிப் பொறியாளர் கவிதா, உதவியாளர் பரந்தாமன் ஆகியோரைத்தான் பலரும் கை காட்டுகிறார்கள்” என்று சொன்னவர், அவரிடமே பணம் கேட்ட விஷயத்தையும் பகிர்ந்துகொண்டார். “என்னிடம் பரந்தாமன், ‘ஒரு ஒதுக்கீட்டுக்கு ஒரு லட்ச ரூபாய் வாங்குகிறேன். நீங்கள் 25,000 ரூபாய் கமிஷன் எடுத்துக்கொள்ளுங்கள்’ என்றார். `இதற்கெல்லாம் பணம் கொடுக்க வேண்டுமா?’ எனக் கேட்டபோது, `சி.இ., ஏ.இ-க்கெல்லாம் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால், என்னால் ஒதுக்க முடியாது’ என்று உறுதியாகக் கூறிவிட்டார். இப்படி, 1,500 வீடுகள் முறைகேடாக ஒதுக்கப்பட்டிருக்கின்றன.


வீடுகளை ஒதுக்கீடு செய்ய பயோ மெட்ரிக் எடுக்கும்போது பாதித் தொகையும், ஆதார் முகவரி மாற்றும்போது பாதித் தொகையும் கொடுத்துவிட வேண்டும். பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான இடம் என்பதால், அதிகாரிகள் சொல்வதுதான் எடுபடுகிறது. இந்த விவகாரத்தில் ஆளும்கட்சியின் அழுத்தமும் இருக்கிறது. பெரும்பாக்கத்தில் வீடு ஒதுக்கீடு பெற்றவர்களின் முகவரிகளை ஆய்வுசெய்தால் போலிப் பயனாளிகளின் பட்டியலைக் கண்டுபிடித்துவிடலாம். ‘ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு ஆதார் போதும்’ என்ற நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டனர்” என்றார்.குடிசை மாற்று வாரிய மேலாண் இயக்குநரும் சி.எம்.டி.ஏ உறுப்பினர் செயலருமான கார்த்திகேயனைச் சந்தித்து விவரத்தைத் தெரிவித்தோம். ``இந்தத் திட்டத்தில் மக்கள் நலனுக்காக மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டோம். 2018-ம் ஆண்டு நான் சென்னை மாநகராட்சியில் பொறுப்பிலிருந்தபோது 10,600 குடும்பங்களை மறுகுடியமர்த்தச் செய்தோம். கிரீம்ஸ் சாலையிலிருந்த திடீர் நகரையே பெரும்பாக்கத்துக்கு மாற்றினோம். அவ்வாறு இடமாற்றம் செய்யும்போது, ஆள்மாறாட்டம் செய்கிறார்களா என்பதை உடனடியாகக் கண்டுபிடிக்க முடியாது. அந்தப் பகுதிக்குச் சென்று பயோ மெட்ரிக் எடுத்து, குடும்ப உறுப்பினர்களைக் கணக்கெடுக்கும் பணியைப் பொதுப்பணித்துறை, சென்னை மாநகராட்சி, குடிசை மாற்று வாரியம் ஆகியவை இணைந்துதான் செய்கின்றன.


இதில், பொதுப்பணித்துறையின் பணிதான் முக்கியமானது. அதேசமயம், மூன்று துறையைச் சேர்ந்தவர்களும் சேர்ந்து தவறு செய்தால்தான் இப்படி ஊழல் நடக்க வாய்ப்புண்டு. அப்படி நடந்திருக்கிறதா என ஆய்வு செய்கிறேன். ஆதாரில் போலியாக முகவரி கொடுத்திருந்தால் சட்டப்படி அவர்களுக்கான ஒதுக்கீட்டை ரத்து செய்துவிடுவோம். இது போன்ற முறைகேடுகளை அனுமதிக்க முடியாது. இந்த விவகாரத்தை விரிவாக விசாரிக்கச் சொல்கிறேன்” என்றார் உறுதியாக.


`மறுகுடியமர்த்துதல்’ என்ற பெயரில் சென்னையின் பூர்வகுடிகளை ஊரைவிட்டு ஓரங்கட்டியது ஒருபுறம் என்றால், அவர்களுக்கான வீடுகளிலும் `ஊழல் கறையான்கள்’ புற்றுகளைக் கட்டுவது சரிதானா?


“150 வீடுகளுக்கு போலி ஆர்டர்!”


பரந்தாமனிடம் பேசினோம். ``என்மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை. பயனாளிகள் விவரத்தைக் கணக்கெடுக்கும் பணியை மாநகராட்சி செய்கிறது. அங்கே வசிப்பவர்களின் முகவரி உண்மைதானா என்பதை ஆராய்ந்து, நாங்கள் பட்டியலைக் கொடுக்கிறோம். 2017-ம் ஆண்டு முதல் வீடுகளைக் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுவந்தோம். கூவம் படுகையில் இதுவரை 13,000 வீடுகளைக் கணக்கெடுத் திருக்கிறோம். பயனாளிகளைச் சரியாகத்தான் தேர்வு செய்தோம். இந்த விவகாரத்தில் சிலர் போலியாகக் கையெழுத்துப் போட்டு ஆர்டர் தயாரித்தார்கள். அவற்றைக் கண்டுபிடித்து 150 வீடுகளுக்கான ஒதுக்கீடுகளை ரத்து செய்தோம்”


“ஆமாம், அரசியல் அழுத்தம் இருந்தது!”


சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உதவிப் பொறியாளர் கவிதாவைச் சந்தித்து விளக்கம் கேட்டோம். ``ஒரு வீட்டுக்குள் நான்கு பேர் இருப்பார்கள். நான்கு பேருமே வீடு கேட்பார்கள். இதுதான் நடந்ததே தவிர, இதில் ஆதாயம் பெறுவதற்கு எந்த வழியும் இல்லை” என்றவரிடம், சில கேள்விகளை முன்வைத்தோம்.


``நான்கு பேர் கேட்கிறார்கள் என்றால், ஒரு முகவரியில் ஒருவருக்குத்தானே வீடு கொடுக்க வேண்டும்?”


``நீதிமன்ற உத்தரவில், `ஆதார் அட்டை இருந்தால் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த அடிப்படையில்தான் வீடு கொடுக்கப்பட்டது. நிலம் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமானது. நாங்கள் இடிப்பதற்கு மட்டுமே சென்றோம்.”


``தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சியினருக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டதாகச் சொல்கிறார்களே?”


``அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கொடுத்த பட்டியலின்படி வீடுகளை ஒதுக்கவில்லை. நாங்கள் கணக்கெடுக்கும்போது, சம்பந்தப்பட்டவர்கள் அங்கே இருக்க வேண்டும். அங்கே குடியிருந்ததற்கான ஆதாரம் இருக்க வேண்டும்.”


``அரசியல் அழுத்தமே வரவில்லையா?”


``ஆமாம், அரசியல் அழுத்தம் வரத்தான் செய்தது. இல்லையென்று மறுக்கவில்லை. அதற்காக நாங்கள் இறங்கிப்போய் கொடுக்கவில்லை. இந்த விவகாரத்தில், யாருக்குமே வீடு இல்லை எனக் கூறவில்லை. யாருக்காவது வீடு வரவில்லையென்றால், அவர்கள் வந்து கேட்கட்டும். நான் கூவம் படுகையில் 12,000 வீடுகளைக் கணக்கெடுத்திருக்கிறேன். இதற்காக வீடு வீடாக ஆய்வு நடத்தினோம். எங்களால் முடிந்தது இது மட்டும்தான்.”


``ஆதாரில் போலி முகவரியைப் பதிவுசெய்து ஏராளமானோர் வீடு பெற்றிருக்கிறார்களே..?”


``நாங்கள் வீடு வீடாகச் சென்று ஆய்வு நடத்தினோம். அப்படி எதுவும் நடக்கவில்லை.”


``உண்மையான பயனாளிகளுக்கு வீடு கிடைக்க வேண்டும் என்பதுதானே அரசின் நோக்கம்?”


``ஆய்வு நடக்கும்போது அந்த வீட்டில் அவர்கள்தான் இருந்தார்கள். அதைப் பார்த்துத்தான் வீடு கொடுத்தோம்.”


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment