Wednesday, September 09, 2020

எடப்பாடியா... சசியா? - மதில்மேல் மந்திரிகள்!

 அ.தி.மு.க-வுக்குள் சத்தமில்லாமல் யுத்த அறிகுறிகள் தென்படுகின்றன. அடுத்தடுத்த மாதங்களில் வெடிக்கக் காத்திருக்கிறது பெரும் பிரளயம். ஏற்கெனவே, ‘முதல்வர் வேட்பாளர் யார்?’ என்பதில் முட்டிக்கொள்ள ஆரம்பித்தவர்கள், சசிகலாவின் விடுதலையை முன்வைத்து போர்ப்படை அணிகளாக வாள் உரச ஆயத்தமாகிவருகிறார்கள். பன்னீர்செல்வத்தின் சமீபத்திய ‘பார்ட் 2’ யுத்தத்துக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் மீதான மனக்குமுறலில் இருந்த அமைச்சர்கள் பலரும் பன்னீரின் வழியாக சசிகலாவின் பின்னால் அணிதிரள ஆரம்பித்திருக்கிறார்கள். “எடப்பாடியின் எதேச்சதிகாரமும், கட்சிக்கு வலுவான தலைமை இல்லாததுமே இதற்குக் காரணங்கள்” என்கிறார்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகள்!


எடப்பாடியின் எதேச்சதிகாரம்!


2017-ம் ஆண்டு, டேபிள் சேர்களுக்கு இடையே பல்லியைப்போல ஊர்ந்து சென்று, சசிகலாவின் காலைத் தொட்டு வணங்கி, அரியணையில் அமர்ந்தார் எடப்பாடி. அடுத்த சில மாதங்களில் சசிகலா தரப்பினர் அனைவரையும் ஓரங்கட்டி, அரசியலில் தான் ஓர் ‘அமைதிப்படை அமாவாசை’ என்று நிரூபித்தார். கட்சிக்குத் தலைமை பன்னீர்செல்வம், ஆட்சிக்குத் தலைமை எடப்பாடி என்ற ஒப்பந்தத்துடன் கைகோத்த பன்னீரின் பாடும் திண்டாட்டமானது.


‘‘கடந்த மூன்று ஆண்டுகள் ப்ளஸ் ஏழு மாதங்களில் ஆட்சி, கட்சி என இரண்டையும் முழுமையாக ஆக்கிரமித்து, தனது எதேச்சதிகாரத்தை நிலைநாட்டிவருகிறார் எடப்பாடி. இதுதான் பல்வேறு அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் காரணமாகத்தான் ‘அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்?’ என்பதில் அமைச்சர்கள் பலரிடமும் ஒருமித்த கருத்து நிலவவில்லை’’ என்கிறார்கள் எடப்பாடியின் எதிர்கோஷ்டியினர்.


பன்னீர் - தினகரன்... துளிர்க்கும் புது நட்பு!


முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் பன்னீர் காட்டிய பாய்ச்சல், டி.டி.வி.தினகரனுக்கு வாய்ப்பாக மாறியிருக்கிறது. கடந்த ஐந்து மாதங்களாகவே வெளியே வராமல் புதுச்சேரியிலுள்ள தனது இல்லத்திலிருந்து தமிழக அரசியல் நிலவரங்களை கவனித்துவந்தார் தினகரன். அ.ம.மு.க-வின் பலவீனங்களை உணர்ந்திருந்தவர், வரும் தேர்தலில் தனித்து நிற்க முடியாது என்ற முடிவுக்கும் வந்திருக்கிறார். தவிர, சசிகலாவின் விடுதலை, அ.தி.மு.க-வுக்குள் கடும் சலசலப்பை ஏற்படுத்தும் என்பதும் தினகரனின் அசைக்க முடியாத நம்பிக்கை. அவர் எண்ணியதுபோலவே பஞ்சாயத்தைக் கிளப்பினார் பன்னீர். இதைத் தனக்குச் சாதகமாக்கிக்கொள்ள காய்நகர்த்தல்களைத் தொடங்கியிருக்கிறார் தினகரன்.அவரது அரசியல் கணக்கில் தினம் தினம் புதுப்பிக்கப்படுகின்றன, கைவிட்டுப்போன பழைய நட்புகள். தனக்கு நெருங்கிய கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளரை பன்னீருக்குத் தூது அனுப்பி, பேச்சுவார்த்தையை முன்னெடுத்திருக்கிறார் தினகரன். “சேர்மனிடம் (பன்னீரை சேர்மன் என்றே அழைக்கிறார்) பேசுங்கள். அவரை முன்னிறுத்துவதில் எங்களுக்கு ஒன்றும் பிரச்னை இல்லை. எடப்பாடி செய்த துரோகத்தைவிட பன்னீர் செய்தது ஒன்றும் தவறல்ல” என்று தகவல் அனுப்பினார். அதற்கு பன்னீர் தரப்பும் இசைந்தது. “சாருக்கு என்னைப் பற்றி நன்றாகத் தெரியும். எடப்பாடியிடம் நிறைய பட்டுவிட்டேன். இனியும் அமைதியாக இருக்க மாட்டேன்” என்று அவர் பச்சை சிக்னல் கொடுக்க, கட்சிக்குள் சத்தமில்லாமல் அடுத்தடுத்த நகர்வுகள் நடக்கின்றன.


எடப்பாடிக்கு எதிராக அமைச்சர்கள்!


கடந்த மூன்றரை ஆண்டுகளாக ‘எடப்பாடியே எஜமான்’ என்றிருந்த அமைச்சர்கள் பலரும் அவருக்கு எதிராகச் சத்தமில்லாமல் திரள ஆரம்பித்துள்ளனர். இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, சசிகலா விடுதலை. அடுத்து, எடப்பாடியின் சமீபகால எதேச்சதிகாரப் போக்கு. தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமெடுத்த நிலையில் பல்வேறு துறைகளும் முடக்கப்பட்டிருக்க, எடப்பாடியின் பொதுப்பணித்துறையிலும் நெடுஞ்சாலைத்துறையிலும் மட்டும் தொடர்ந்து ஒப்பந்தங்கள் அறிவிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.


இது பற்றிப் பேசும் கட்சி மேல்மட்ட நிர்வாகிகள், “எடப்பாடி ஆட்சியில் ‘விர்ச்சுவல்’ சாலைகளில் ‘பயணிக்கும்’ அரசாங்கத்தின் பல ஆயிரம் கோடி ரூபாய், எங்கெங்கோ ரகசியமாக முதலீடு ஆகிறது. கொரோனா காலத்தில்கூட, நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில் சுமார் 15,000 கோடி ரூபாய்க்கான திட்டங்கள் நெடுஞ்சாலைத் துறையில் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.


31 அமைச்சர்கள் இருந்தாலும், கொங்கு மண்டலம் உள்ளிட்ட ஏழெட்டு எடப்பாடி ஆதரவு அமைச்சர்கள் மட்டுமே மொத்தமாக வாரிக்குவிக்கிறார்கள். இவர்கள் தங்கள் துறை மட்டுமன்றி பிற துறைகளிலும் ஆதிக்கம் செலுத்துவதுதான் பிரச்னைக்கு முக்கியக் காரணம்” என்றார்கள்.


துணை முதல்வர் பன்னீரின் நிதி மற்றும் வீட்டுவசதித் துறையிலும், சி.வி.சண்முகத்தின் கனிமவளத் துறையிலும் எடப்பாடி தலையீடு அதிகம். ஆர்.பி.உதயகுமாரின் வருவாய்த்துறையில் வேலுமணியின் தலையீடு அதிகம். எடப்பாடியும் வேலுமணியும்தான் அமைச்சர் வளர்மதியின் சமூகநலத் துறை ஒப்பந்தங்களை முடிவு செய்கிறார்கள். அமைச்சர் வளர்மதியின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் சேவூர் ராமச்சந்திரனின் அறநிலையத்துறையின் பெரிய ஒப்பந்தங்கள் அனைத்தும் எடப்பாடி கைகாட்டும் நபர்களுக்கே செல்கின்றன. கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தன் துறையில் நடக்கும் பெரிய ஒப்பந்தம் எதுவாக இருந்தாலும் வேலுமணிக்காகக் காத்திருக்க வேண்டியிருக்கிறது.


கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாகவே இது தொடர்பான மனக்குமுறல்கள் அமைச்சர்களிடம் இருந்தன. ‘பூனைக்கு மணி கட்டுவது யார்?’ என்று அவர்கள் புலம்பிவந்த நேரத்தில்தான், பன்னீர் பற்றவைத்த நெருப்பு அமைச்சர்களிடம் புகைய ஆரம்பித்திருக்கிறது.


எடப்பாடிக்கு எதிராக இணையும் கரங்கள்


சமீபத்தில் கடலூருக்கு வந்த முதல்வர் எடப்பாடியின் கார் டயரைக் குனிந்து வணங்கினார் அமைச்சர் எம்.சி.சம்பத். இது பலத்த விமர்சனங்களைக் கிளப்பினாலும், அதற்கு இன்னொரு கோணத்தைக் கற்பிக்கிறார்கள் கடலூர் கட்சி நிர்வாகிகள். “அரசியலில் ஒரேயடியாக விழுந்து வணங்குவது என்றாலே அமைதியாகக் ‘காலை வாருவது’ என்றே அர்த்தம். அதன் பின்னணி யில்தான் சம்பத் எடப்பாடியை வணங்கினார்” என்றவர்கள், அதை உறுதிசெய்யும்விதமாகச் சில சம்பவங்களையும் சுட்டிக்காட்டினார்கள்.“எம்.சி.சம்பத்துக்கும், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கும் ஏழாம் பொருத்தம். ‘முதல்வர் வேட்பாளர் யார்?’ என்ற பிரச்னையில் எலியும் பூனையுமாக இருந்தவர்கள், இப்போது எடப்பாடிக்கு எதிராக கரம்கோத்து காய் நகர்த்துகிறார்கள். சில நாள்களுக்கு முன்னர், சண்முகத்தை அவரது வீட்டிலேயே சந்தித்துப் பேசியிருக்கிறார் சம்பத். இரு தரப்பிலும் துறைரீதியாகத் தங்களுக்கு இழைக்கப்பட்ட ‘துரோகங்கள்’, நேர்ந்த இழப்புகள் பற்றி புலம்பியிருக்கிறார்கள். தொடர்ந்து இருவரும் மற்றொரு வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த அமைச்சரான கே.சி.வீரமணியிடமும் பேசியிருக்கிறார்கள். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஓரங்கட்டப்பட்டிருந்த வீரமணி, தனது ‘இழப்பு’களையும் பக்கம் பக்கமாக வாசித்திருக்கிறார்” என்கிறார்கள் அவர்கள்.


இவர்கள் இப்படியென்றால், இன்னொரு பக்கம் எடப்பாடிக்கு நெருக்கமாக இருந்த அமைச்சர்கள் சிலர்கூட கடந்த 15 நாள்களுக்குள் மனமாற்றம் அடைந்திருக்கிறார்கள். அவர்களுள் முக்கியமானவர் ஆர்.பி.உதயகுமார். சமீபத்தில் பன்னீர்செல்வத்தை மதுரையில் சந்தித்து ஒரு மணி நேரத்துக்கும் மேல் ஆலோசனை நடத்தியிருக்கிறார். “இவர்கள் இருவருக்குமான பந்தம் சமுதாயரீதியானது. ‘முக்குலத்தோர் கோலோச்சும் கட்சியாக இருந்த அ.தி.மு.க., தற்போது கவுண்டர்கள் கட்சியாக மாறிவிட்டது’ என்று இவர்களின் சந்திப்பிலும் ஆதங்கத்தைக் கொட்டியிருக்கிறார்கள். ‘பன்னீர்செல்வம் - பழனிசாமி இடையே கருத்து வேறுபாடு கிடையாது. இருவரும் இணைந்து செயல்படுகிறார்கள்’ என்று ஸ்டேட்மென்ட் விடுத்த அமைச்சர் காமராஜ், தனது பக்கத்து மாவட்ட அமைச்சரான ஓ.எஸ்.மணியனுடன் பழைய பாசத்தை அசைபோட்டுள்ளார். இருவருமே சசிகலா குடும்பத்தினரால் வளர்க்கப்பட்டவர்கள். இருவரும் முக்குலத்தோர் அமைச்சர்களை அரவணைத்து, புது லாபியைக் கையிலெடுக்க முடிவுசெய்துள்ளார்கள். கடந்த பத்து நாள்களில் மட்டும் இது போன்று அமைச்சர்கள் பலரும் தனித்தனி கோஷ்டிகளாக நடத்திய பேச்சுவார்த்தைகள், வரும் நாள்களில் அ.தி.மு.க-வில் பெரும் பூகம்பமாக வெடிக்க வாய்ப்பிருக்கிறது” என்கிறார்கள் கட்சியின் உள்விவகாரங்கள் அறிந்தவர்கள்.


பன்னீரின் பகடை ஆட்டம்!


சுமார் இரண்டு ஆண்டுகளாக, பன்னீரின் பின்னால் யாரும் இல்லை என்பது உண்மைதான். ஆனால், எடப்பாடியின் எதேச்சதிகாரப் போக்கு இந்த பிம்பத்தைப் படிப்படியாக உடைக்கத் தொடங்கியுள்ளது. இது பற்றிப் பேசும் பன்னீரின் ஆதரவாளர்கள், “பவ்யமாக இருந்த பன்னீர், படைதிரட்ட தற்போது தீவிரமாகக் காய்நகர்த்தி வருகிறார். எடப்பாடிக்கு நெருக்கமான கொங்கு அமைச்சர்கள் உள்ளிட்ட சிலரைத் தவிர்த்து, அமைச்சர்கள் ஒவ்வொருவரிடமும் தனித் தனியாகப் பேசிவருகிறார். எம்.எல்.ஏ-க்களிடமும் ஒன் டு ஒன் பேசி வருகிறாராம். அதற்குப் பலனும் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. ‘எடப்பாடி ஆட்சியே அடுத்த முறையும் தொடரும்’ என்று கருத்து சொன்ன ராஜேந்திர பாலாஜியின் மனதையே பன்னீரின் பேச்சுக் கரைத்துவிட்டதென்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அவரும் தனது மனக்குமுறல்களை பன்னீரிடம் கொட்டியிருக்கிறார்.


சமீபத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளர்கள் நியமன விவகாரத்திலேயே எடப்பாடிக்கு எதிராகக் குரலை உயர்த்தினார். உடுமலை ராதாகிருஷ்ணன், சசிகலாவின் தயவே தனக்கு முக்கியம் என்று அவரின் ஆதரவாளர் களிடம் சொல்லியிருக்கிறார். கடம்பூர் ராஜூ ஏற்கெனவே தினகரன் தரப்புடன் நெருக்கமாக இருந்தவர். இப்போது அந்தப் பாசத்தைச் சத்தமில்லாமல் புதுப்பிக்க ஆரம்பித்துவிட்டார். டெல்டாவில் அ.தி.மு.க-வின் முக்கியப்புள்ளியான வைத்திலிங்கம் தரப்பிலிருந்து ‘முதல்வர் வேட்பாளரைப் பொதுக்குழு மட்டுமே முடிவு செய்யும். அதுவரை அமைதியாக இருங்கள்’ என்று கடுமை காட்டப்பட்டிருக்கிறது.


இவர்கள்தான் இப்படி என்றால், `எடப்பாடிக்கு வலதுகரம்’ என்று அறியப்பட்ட கொங்கு அமைச்சரான தங்கமணியே எடப்பாடிமீது வருத்தத்தில் இருக்கிறார். தங்கமணிக்குத் துறைரீதியான உள்விவரங்களில் பெரிதாக அத்துப்படி இல்லை. அதிகாரிகள் சொல்வதை வெள்ளந்தியாகக் கேட்டுக்கொள்வார். கொடுக்கல் - வாங்கல் விவகாரங்களிலும் அவ்வளவாக மூக்கை நுழைக்க மாட்டார். இந்நிலையில்தான் சில மாதங்களுக்கு முன்னர் மின் உற்பத்தி நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் மற்றும் நிலக்கரிக் கொள்முதல் ஒப்பந்தங்களில், தனக்கே தெரியாமல் நடந்த பல நூறு கோடி ரூபாய் விவகாரங்கள் தங்கமணியின் கவனத்துக்கு வந்துள்ளன.


சமீபத்தில் மின்சாரத்துறை சேர்மன் மாற்றத்தின்போது, கிர்லோஷ் குமாரைக் கொண்டுவர விரும்பினார் தங்கமணி. ஆனால், அந்த இடத்துக்குத் தனக்கு வேண்டிய பங்கஜ் குமார் பன்சாலைக் கொண்டுவந்து ஷாக் கொடுத்தார் எடப்பாடி. மேற்கண்ட அதிருப்தி களால் சுமார் ஒன்றரை மாதங்கள் முதல்வரைச் சந்திக்காமலேயே இருந்த தங்கமணி, கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிறகே ஒருமுறை சந்தித்தார். இன்றைய நிலைமைக்கு அமைச்சர் வேலுமணியும், சில ஜூனியர் அமைச்சர்கள் மட்டுமே எடப்பாடி பின்னால் அணிதிரளத் தயாராக இருக்கிறார்கள்’’ என்கிறார்கள் அவர்கள்.சசிகலாவா, எடப்பாடியா?


பழனிசாமியை எதிர்க்க பன்னீரைவைத்து பகடையாடத் திட்டமிடுகிறது தினகரன் - சசி டீம். சமீபத்தில் பா.ஜ.க தரப்பில் ஒரு முக்கியப் பிரமுகருடன் பேசியிருக்கிறது தினகரன் டீம்.


“அ.தி.மு.க-வுடன் இணைந்து செயல்படத் தயார்; பன்னீரை முன்னிறுத்தி தேர்தலைச் சந்திக்கலாம்” என்பதே இந்த டீமின் திட்டம். இதை சசிகலாவின் காதுக்கும் கொண்டு சென்று, ஓகே வாங்கியிருக்கிறார்கள். தவிர, சமூகம் சார்ந்தும், வாய்ப்பளித்த நட்பின் அடிப்படையிலும் பல மூத்த அமைச்சர்களைத் தனது தொடர்பு வட்டத்துக்குள் கொண்டுவர ஆரம்பித்திருக்கிறார் தினகரன்.


சில நாள்களுக்கு முன்னர் கொடநாடு மேலாளர் நடராஜன் பெங்களூரு சிறைக்குச் சென்று சசிகலாவைச் சந்தித்திருக்கிறார். சசிகலாவின் விடுதலைக்கு முன்பாக 10 கோடி ரூபாய் அபராதத் தொகை கட்ட வேண்டும். சசிகலாவின் சொத்துகள் வருமான வரித் துறையால் முடக்கப்பட்டுள்ள சூழலில், கோவையைச் சேர்ந்த ஒரு நிதி நிறுவனம் மூலம் மேற்கண்ட தொகையைக் கடனாகப் பெறுவதற்குப் பேச்சுவார்த்தை நடத்தப் பட்டுவருகிறது.


பி.ஜே.பி பிளான்!


“சசிகலா மீதான வருமான வரித்துறையினரின் பிடி இறுகுவதற்குப் பின்னால் பா.ஜ.க இருப்பதாகத் தகவல் பரப்பப்படுகிறது. அது தவறு. வழக்கு தொடர்பாக வருமான வரித்துறையின் வழக்கமான ஒரு நடவடிக்கையே” என்கிறார்கள் சட்ட நிபுணர்கள்.


‘எதிரிக்கு எதிரி நண்பன்’ என்கிற ஃபார்முலாவின்படி, தனது பிரதான எதிரியான தி.மு.க-வை அழிக்கும் வரையிலாவது தன் தற்காலிக நண்பன் அ.தி.மு.க வலிமையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறது பா.ஜ.க. அதற்கு சசிகலா, தினகரன் உள்ளிட்டவர்கள் அ.தி.மு.க-வுக்குள் இருந்தால் மட்டுமே சாத்தியம். தமிழகத்தின் முதல்வராக நான்கு ஆண்டுகளை எடப்பாடி நகர்த்திவிட்டாலும், டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கட்சியில் அவருக்குச் செல்வாக்கு இல்லை. சசிகலாவே ஆதிக்கம் செலுத்துகிறார். இதுவும் சசிகலாவுக்காக பா.ஜ.க தரப்பிடம் எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது.


சசிகலாவின் தண்டனைக்காலம் 2021, பிப்ரவரி 14-ம் தேதியுடன் முடிவடைகிறது. ஏற்கெனவே இரண்டு முறை அவர் சிறையிலிருந்த நாள்களையும், பரோலில் இரண்டு முறை வெளியே வந்த நாள்களையும் கணக்கிட்டால் 2021, ஜனவரி 27-ம் தேதியுடன் அவரது தண்டனைக்காலம் முடிவுக்கு வருகிறது. நன்னடத்தை விதிகளின்படி, மாதத்துக்கு மூன்று நாள்கள் தண்டனைக்காலத்தில் விலக்கு அளிக்கப்படும். அதன்படி, கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் 43 மாதங்களாக சசிகலா சிறையில் இருக்கிறார். 43 x 3 என்று கணக்கிட்டால், 129 நாள்கள் தண்டனைக்காலத்தில் கழியும். அதன்படி, இம்மாத இறுதியில் சசிகலா விடுதலையாகலாம்.விடுதலைக்குப் பிறகு சசிகலா வாசம் செய்வதற்காக, போயஸ் கார்டனில் ஜெயலலிதா வசித்த வீட்டுக்கு எதிரிலேயே புதிய பங்களா கட்டப்பட்டுவந்தது. கட்டுமானப் பணிகளை இளவரசி மகன் விவேக் கவனித்துவந்தார். கடந்த வாரத்தில், இந்தச் சொத்து வருமான வரித்துறையால் முடக்கப்பட்டுள்ளது. சசிகலாவின் குடும்பத்தில் பல்வேறு குழப்பங்கள் இருந்தாலும், சசிகலா வெளியே வந்தால், அவரது தீவிரமான அரசியல் மறு பிரவேசத்துக்குக் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவு அளிப்பார்கள். இதுவும், சசிகலாவின் பின்னாள் அமைச்சர்கள் அணிதிரள ஒரு காரணமாக அமையும்.


தமிழகத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கை 31. அவர்களில் சுமார் 15 அமைச்சர்கள் எடப்பாடிக்கு எதிராகக் களமிறங்கத் தயாராகிவிட்டார்கள். 15 அமைச்சர்கள் என்றால் 15 மாவட்டங்கள் என்பதே அரசியல் கணக்கு. கிட்டத்தட்ட சரி பாதி தமிழகம்.


எதிர்பாராத நிகழ்வுகளே எப்போதும் அரசியல் கள யதார்த்தம். இப்போதைக்கு எடப்பாடி பக்கம் சிலரும், பன்னீர்வழியாக சசிகலா பக்கம் பலரும் அணிதிரண்டாலும்... இந்த மந்திரிகள் அனைவருமே மதில் மேல் பூனைகள்தான். இவர்கள் எந்தப் பக்கம் பாய்வார்கள் என்பதைப் பணமும் அதிகாரமுமே தீர்மானிக்கும். விரைவில் அதற்கான விடையும் தெரிந்துவிடும்!


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment