‘12,000 வருட இந்தியப் பண்பாட்டை, வரலாற்றை எழுத மத்திய அரசு அமைத்திருக்கும் 16 பேர் கொண்ட குழுவின் பின்னணி, நாடு முழுக்க பலத்த அதிர்வலையை ஏற்படுத்திவருகிறது!
இது குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பியிருக்கும் எம்.பி சு.வெங்கடேசன், “16 பேர் கொண்ட இந்தக் குழுவில், தென்னிந்தியரோ, வடகிழக்கு இந்தியரோ, சிறுபான்மையினரோ, தலித்தோ, ஒரு பெண்ணோ இடம்பெறவில்லை. சாதிச் சங்கத் தலைவரும், உயர்சாதியைச் சேர்ந்தவர்களும் மட்டுமே இடம்பெற்றிருக் கிறார்கள்’’ என்று கொதித்திருக்கிறார்.
இந்தநிலையில், இந்த விவகாரம் குறித்துப் பேசும் வரலாற்று ஆய்வாளர்கள், “இந்தியப் பண்பாட்டு வரலாறு என்ற பெயரில், இந்துத்துவப் பண்பாட்டை நிலைநிறுத்துவதற்கான குழுவைத்தான் மத்திய அரசு அமைத்திருக்கிறது. எனவே, ஆதாரங்களின் அடிப்படையிலான பண்பாடுகள் அனைத்தும் புறந்தள்ளப்பட்டுவிடும். மாறாக, புராண - இதிகாச அடிப்படையிலான குறிப்பிட்ட மதம் சார்ந்த பண்பாட்டை மட்டுமே இந்தியப் பண்பாடாக, வரலாறாக மாற்றும் அபாயம்தான் நிகழப்போகிறது’’ என்று எச்சரிக்கின்றனர்.
எழுத்தாளரும் ‘விடுதலைச் சிறுத்தைகள்’ கட்சியின் எம்.பி-யுமான ரவிக்குமார், “இந்தியா என்பது பல தேசிய இனங்கள், பல்வேறு மொழிகளைப் பேசும் மக்கள் வாழும் ஒரு நாடு. ஆனால், இந்தப் பன்மைத்துவத்தை ஒழித்து, உயர் சாதி என்று சொல்லப்படும் ஒரு சிறிய வட்டத்தின் பண்பாட்டை மட்டுமே இந்தியப் பண்பாடாக நிலைநிறுத்தும் வேலைகளைத்தான் மத்திய அரசு, ஒளிவு மறைவின்றி செய்துவருகிறது. இன்றைக்கும் உலக அரங்கில், இந்திய நடனம் என்றால் அது பரத நாட்டியம்; இசை என்றால், அது கர்னாடக சங்கீதம் என்றுதான் முன்வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ‘ஒரே நாடு, ஒரே கலாசாரம், ஒரே மதம், ஒரே கட்சி...’ என்ற நிலையை நோக்கித்தான் நாட்டை நகர்த்திக்கொண்டிருக்கிறது மத்திய அரசு. மற்றபடி நாட்டின் பெரும்பான்மை மக்களின் பண்பாடுகளும் வரலாறுகளும் இவர்களது ஆராய்ச்சிக்குள் வருவதே கிடையாது.
இந்த கலாசார மேலாதிக்கத்தை அரசியல்ரீதியாக நாம் எதிர்க்க வேண்டியது அவசியம். ஆனால், அது வெறும் அரசியல் நடவடிக்கையாக மட்டுமே நின்றுவிடக் கூடாது. கூடவே தமிழ்ப் பண்பாடுகளின் வரலாற்றை எழுதுவதிலும் நாம் முனைப்பு காட்ட வேண்டும். ஏனெனில், இந்தியப் பண்பாட்டு வரலாற்றுக்கு நம்பகமான கல்வெட்டு ஆதாரங்களில் 60 விழுக்காடு தமிழ்நாட்டில்தான் இருக்கின்றன!’’ என்று தன் கருத்தை முன்வைத்தார்.
பண்பாட்டு ஆய்வுக்குழுவின் நோக்கம் மற்றும் அதன் பின்னணி குறித்து விளக்கம் கேட்டு, தமிழக பா.ஜ.க மூத்த தலைவரும் முன்னாள் இணை அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணனிடம் பேசினோம், “இந்திய கலாசாரங்களின் அடிப்படையான அம்சங்களில் ஒன்று நம்முடைய தமிழ் கலாசாரம். எனவே, இதை ஒதுக்கிவைத்துவிட்டு இந்திய கலாசாரத்தைச் சொல்லிவிட முடியாது. அதேநேரம், தமிழ்நாட்டின் கலாசாரம் வேறு; இந்திய கலாசாரம் வேறு என்றும் சொல்லிவிட முடியாது. ‘சிந்துவெளி நாகரிகம் தொட்டு நமக்குச் சொந்தம்’ என்று நாம் சொல்லிவருகிறோம். இது சம்பந்தமான ஆய்வுகளை இந்த ஆய்வுக்குழு எப்படியெல்லாம் ஆய்வு செய்து தரப்போகிறது என்பதைப் பார்த்துவிட்டு, அதன் பிறகு கருத்து சொல்வதுதான் சரியாக இருக்கும்.
மத்திய அரசு அமைத்திருக்கும் ஆய்வுக்குழு பற்றிச் சந்தேகம் எழுப்புகிறவர்கள், மஞ்சள் கண்ணாடி போட்டுக்கொண்டே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ‘சம்ஸ்கிருதத்தைவிடவும் பழைமையான மொழி தமிழ்; உலகின் தொன்மையான நாகரிகத்தைக் கொண்டவர்கள் தமிழர்கள்’ என்பதையெல்லாம் நமது பிரதமரே பல இடங்களில் பேசியிருக்கிறார். எனவே, பிரதமரின் இந்த எண்ணங்களெல்லாம் ஆய்வுக்குழுவின் முடிவுகளிலும் தெரியும் என்று நான் நம்புகிறேன்!’’ என்கிறார்.
இந்தியப் பண்பாட்டின் அடையாளம் அதன் பன்மிய வேர்கள்தான்!
``தொல்லியல், மானுடவியல், சமூகவியல், மரபணுவியல், தொல்விலங்கியல், தொல்தாவரவியல் போன்ற நம்பத்தக்க, புலன்விசாரிக்கத்தக்க பல்துறைத் தரவுகளே வரலாற்றை வழிநடத்த வேண்டும். இந்திய வரலாற்றின் கட்டமைப்பில் தென்னிந்திய வரலாறு குறிப்பாக, தொல்தமிழ் வரலாறு இதுவரை உரிய இடம் பெறவில்லை.
தமிழ்நாட்டில் கிடைக்கும் பழங்காலப் பானைக்கீறல்களுக்கும், சிந்துவெளிப் பொறிப்புகளுக்கும் இடையிலுள்ள உருவ ஒற்றுமையே ஒரு முக்கியமான தடயம். இந்தியாவில் கிடைத்துள்ள கீறல் குறியீடுகளுடன்கூடிய மட்பானைகளில், கிட்டத்தட்ட 75 விழுக்காடு தமிழ்நாட்டில்தான் கிடைத்துள்ளன. ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வில் கிடைத்த செம்பு உலோகத்துக்கும், ஹரப்பா பண்பாட்டு உலோகக் கலவைக்கும் இடையிலான ஒற்றுமைகள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன.
இந்தியப் பண்பாட்டின் அடையாளம் அதன் பன்மிய வேர்கள்தான். இவற்றில் வேர்கள் எவை, விழுதுகள் எவை என்ற தெளிவும் நமக்குத் தேவைப்படுகிறது. இந்தத் தேடலில், மரபணு ஆய்வுகள் புதிய வெளிச்சம் கொடுத்திருக்கின்றன. ராக்கிகடி எலும்புக்கூடும், கீழடி கீறல் பானைகளும் இருவேறு காலகட்டங்களைச் சேர்ந்தவை என்றாலும், அவை தரும் தரவுகளின் திசையும் தெளிவும் ஒன்றோடொன்று தொடர்புடையவைதான்.
எனவேதான் ‘சிந்துவெளி விட்ட இடமும், சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே’ என்ற எனது தரவு சார்ந்த நிலைப்பாட்டில் நான் தொடர்ந்து உறுதியாக இருக்கிறேன். அந்தவகையில், சங்க இலக்கியத்தைக் கணக்கில்கொள்ளாமல், வைகை, தாமிரபரணி, காவிரிக்கரை தொல்லியல் சான்றுகளைக் கணக்கில் கொள்ளாமல் இந்தியப் பண்பாட்டு வரலாற்றை எழுதுதல் என்பது முறையல்ல... அது சாத்தியமும் அல்ல!’’
- ‘சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்’, ‘Journey of A Civilization: Indus to Vaigai’ நூல்களின் ஆசிரியர், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன்.
No comments:
Post a comment