Friday, September 25, 2020

உயிரைக் காப்பாற்ற சில சட்டதிட்டங்களை மீறுவதில் தவறில்லை!

தமிழகத்தின் முதல் சித்த மருத்துவ கோவிட்-19 பராமரிப்பு மையத்தை நடத்திவந்த சித்த மருத்துவர் வீரபாபு மீது பாராட்டுகளும் குற்றச்சாட்டுகளும் சம அளவில் குவிந்துள்ளன. இந்தச் சூழலில் சென்னை சாலிகிராமம், ஜவஹர் கல்லூரியில் நடத்திவந்த கோவிட்-19 மையத்தைத் திடீரென காலிசெய்யப்போவதாக அறிவித்திருக்கிறார் வீரபாபு. அவரைச் சந்தித்துப் பேசினோம்.


‘‘5,000-க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்களைக் குணப்படுத்தி யிருக்கிறீர்கள். உங்கள் மையத்தில் இறப்புகளே இல்லை என்கிறீர்கள். ஆனால், உடல்நிலை மோசமான தொற்றாளர்களை வேறு மையங்களுக்கும், அரசு மருத்துவமனைகளுக்கும் நீங்கள் அனுப்புவதாக உங்கள்மீது விமர்சனம் வைக்கப்படுகிறதே..?’’


‘‘மிதமான வைரஸ் பரவலுள்ள தொற்றாளர்களுக்கு மட்டும்தான் சிகிச்சை வழங்க மாநகராட்சி எனக்கு அறிவுறுத்தி யிருந்தது. நாளடைவில் அரசு உயரதிகாரிகள், அரசியல்வாதிகள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் எனப் பலரும் அவர்கள் குடும்பத்தினரை என்னிடம் அழைத்து வந்து என்னையே முழு சிகிச்சையும் வழங்கச் சொன்னார்கள். ஆங்கில மருத்துவர்கள், செவிலியர்களை நியமித்து, ஒருங்கிணைந்த மருத்துவ சிகிச்சை வழங்கினோம். ஆக்‌ஸிஜன் குறைந்தவர்கள், நுரையீரல் தொற்று ஏற்பட்டவர்கள் எனப் பலரது உயிரையும் காப்பாற்றினோம்.’’


‘‘மாநகராட்சியின் அனுமதியில்லாமல் பல தொற்றாளர்களை நீங்களாகவே அனுமதித்து, அவர்களிடம் பணம் வசூலித்ததாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றனவே..?”


‘‘அட்மிஷனுக்கு அனுமதி வழங்குவது மாநகராட்சியும் காவல்துறையும்தான். அமைச்சர்களும் அரசு உயரதிகாரிகளும், மாநகராட்சி அதிகாரிகளிடம் அனுமதி பெற்று, முன்னுரிமையின் அடிப்படையில் சிகிச்சைக்கு வந்தார்கள். பேரிடர் காலத்தில் நோயாளிகள் சிகிச்சைக்காக குவிந்தவண்ண மிருந்தனர்; ஆக்ஸிஜன் பற்றாக்குறை, நுரையீரல் தொற்று என அவதிப்பட்டனர். என்னை நம்பி வந்தவர்களின் உயிரைக் காப்பதுதான் முக்கியம். அரசு அதிகாரிகள், வசதி படைத்தவர்கள் எனப் பலரும் பணம் கொடுத்து, `ஆக்ஸிஜன் வாங்கி குணப்படுத்துங்கள்’ என்று கேட்டுக்கொண்டனர். வசதி படைத்தவர்கள் தாமாக முன்வந்து கொடுத்த பணத்தைவைத்து, எளியவர்களின் உயிரையும் காப்பாற்றினேன்.


அரசுத் தரப்பிலிருந்து ஆக்ஸிஜனுக்குப் பணம் கொடுக்கவில்லை. சித்த மருத்துவக் கஷாயத்துக்கும் உணவுக்கும் மட்டுமே பணம் கொடுப்பதாகச் சொன்னார்கள்.


நானும் மாநகராட்சி அதிகாரிகளிடம் பணம் கேட்டு, தொந்தரவு செய்ய விரும்பவில்லை. அரசிடமிருந்து பணம் பெற்ற பிறகும் மக்களிடம் நான் பணம் வாங்கியிருந்தால்தான் அது குற்றம். சுற்றிலும் தொற்றாளர்கள் உயிருக்குப் போராடும்போது, அவர்கள் உயிரைக் காப்பாற்ற சில சட்டதிட்டங்களை மீறுவதில் தவறில்லை என்றே எனக்குத் தோன்றியது.’’


‘‘அரசின் அங்கமாகச் செயல்பட்ட நீங்கள், தன்னிச்சையாகச் செயல்பட்டு, பணம் வாங்கி மற்றவருக்கு உதவியது எப்படிக் குற்றமில்லை என்று சொல்கிறீர்கள்?’’


‘‘என் மனசாட்சிப்படி இது குற்றமேயில்லை. எந்த விசாரணைக்குச் சென்றாலும் இதை தைரியமாகச் சொல்வேன். சிகிச்சைக்காக மனமுவந்து பணம் கொடுத்தவர்களிடம் மட்டுமே பணம் வாங்கினேன். யாரையும் நான் வற்புறுத்தவில்லை. இது தவறென்றால் மக்கள் பணம் கொடுத்திருப்பார்களா?


வடபழனியில் ‘உழைப்பாளி’ என்ற பெயரில் உணவகம் நடத்தி, 10 ரூபாய்க்குச் சாப்பாடு வழங்கிக்கொண்டிருக்கிறேன். இப்போது அதே பெயரிலேயே ‘10 ரூபாய் மருத்துவமனை’ தொடங்கியிருக்கிறேன். ‘உணவே மருந்து’ என்கிற சித்த மருத்துவத்தின் அடிப்படையில் இதுபோன்ற காரியங்களைச் செய்கிறேன். பணத்தின் மீது ஆசையிருந்தால் இதையெல்லாம் செய்வேனா? என்னைப் பொறுத்தவரை இருப்பவர்களிடம் பெற்று, இல்லாதவர்களுக்குக் கொடுப்பது என்பதும் அறம்தான். அது தவறென்றால் அந்தத் தவற்றை மீண்டும் செய்வேன். அஞ்ச மாட்டேன்.’’‘‘அரசிடமே, ‘ஆக்ஸிஜன் குறைபாடு உள்ள நோயாளிகளுக்கும் சிகிச்சை வழங்குகிறேன்’ என அனுமதி கேட்டு, நிதி பெற்று சிகிச்சை வழங்கியிருக்கலாமே?’’


‘‘அதிகாரிகள் பலரும் இந்தப் பேரிடர் காலத்தில் தீவிரமாக வேலை செய்துவருகிறார்கள். அந்தப் பரபரப்பில் இதைச் சொல்லி அனுமதி கேட்டால், ‘மிதமான தொற்றுள்ளவர்களுக்கு மட்டும் சிகிச்சையளியுங்கள்’ என்று சொல்லிவிடுவார்கள். விளக்கிச் சொல்வதற்கான கால அவகாசமும் எனக்கில்லை. மேலும், என்னிடம் சிகிச்சை பெற்ற பலரும் உயரதிகாரிகள், அரசியல்வாதிகள் என்பதால் இது அதிகாரிகளுக்கும் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. அவர்கள் என் சிகிச்சையைப் பார்த்திருக்கிறார்கள்; அவர்கள் உடனிருப் பார்கள் எனத் துணிந்தே உயிர்களைக் காப்பாற்றும் வேலையைச் செய்தேன். மற்றதைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என நினைத்தேன்.’’


‘‘ஜவஹர் கல்லூரியில் செயல்படும் உங்கள் மையத்தைத் திடீரென காலிசெய்ய என்ன காரணம்?”


‘‘ஐந்து மாதங்கள் தொடர்ச்சியாக வேலை செய்திருக்கிறேன். எனக்கும் கொஞ்சம் ஓய்வு தேவைப்படுகிறது. எனது ‘10 ரூபாய் மருத்துவமனை’யையும் செயல்படுத்த வேண்டும். மாநகராட்சி அலுவலர்கள், ‘விலக வேண்டாம்’ என்றுதான் சொன்னார்கள். அரசு மருத்துவர்களை நியமிக்கும்வரை, அங்கு சிகிச்சையளிப்பதைத் தொடர்கிறேன். என்னை விசாரணை செய்து நீக்கினார்கள் என்றெல்லாம் செய்தி பரவுகிறது... அதில் கொஞ்சமும் உண்மையில்லை.’’


‘‘உங்கள் அடுத்தகட்ட செயல்பாடு என்னவாக இருக்கும்?’’


‘‘ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் வருகையை நான் ஆதரிக்கிறேன். எளிய மனிதனாக இருந்து உழைப்பால் உயர்ந்தவர். அவர் கட்சி ஆரம்பித்தவுடன் அரசியலில் அவருடன் பயணிப்பேன்!”


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment