Friday, September 04, 2020

ஜெயில்... மதில்... திகில்! - 53 - சிறையில் கொந்தளித்த ஜெ... சமாதானம் செய்த சசி!

 கடந்த அத்தியாயத்தின் கடைசி வரிகளில் குறிப்பிட்டிருந்த நபர், பஞ்சாப் முதலமைச்சராக இருந்த பிரகாஷ் சிங் பாதல். ‘அகாலி தளம்’ கட்சியின் தலைவர். 1989-ம் ஆண்டு இவர், தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். நான் அப்போதுதான் சென்னை மத்தியச் சிறையிலிருந்து கோவை மத்தியச் சிறைக்கு ஜெயிலராக மாற்றப்பட்டிருந்தேன்.


ஜி.ராமச்சந்திரன் - ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி., சிறைத்துறை


பணி நிமித்தமாக ‘ஏ’ கிளாஸ் தொகுதிக்குள் நுழைந்தேன். நந்தவனமாகக் காட்சியளித்தது தொகுதி. பஞ்சாப்பிலிருந்து வரவழைக்கப்பட்ட பூஞ்செடிகளில் பூக்கள் பூத்துக் குலுங்கின. நான்கு அறைகள்கொண்ட பெரிய தொகுதி பிரகாஷ் சிங் பாதலுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. குளியலறை, டைனிங் டேபிள், ஆயுர்வேத மசாஜ், உறங்க பட்டு மெத்தை, வெல்வெட் திண்டு, காஷ்மீர் கம்பளங்கள், தனிச் சமையலர்கள் என ஏராளமான சலுகைகளை அரசு அவருக்கு அனுமதித்திருந்தது.


அத்தனையும் அவரது சொந்தச் செலவு. அந்தக் காலத்திலேயே ஒரு நாள் உணவுக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்வார். குளித்து முடித்துவிட்டு, வெண்பட்டுடை உடுத்தி, தலையில் டர்பனுடன் அரசர்போல வீற்றிருப்பார் பிரகாஷ் சிங். அதேசமயம், தன் மக்கள்மீது மிகுந்த அக்கறைகொண்டவர் என்பதை அவரது பேச்சிலிருந்து உணர முடிந்தது. தன்மானத்தைப் பற்றியும் அதிகமாகப் பேசுவார். சிறையில் நான் சந்தித்த மனிதர்களில், மிக விந்தையான மனிதர் அவர்!


இதே அத்தியாயத்தில் இன்னொரு முதல்வரையும் சந்தித்துவிடுவோம். நமக்கெல்லாம் நன்கு தெரிந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாதான் அவர்.


கடந்த 1996-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியில் அமர்ந்தது. அ.தி.மு.க-வினர்மீது ஏராளமான வழக்குகள் பாய்ந்தன. அமைச்சர்கள் பலரும் சிறையில் அடைக்கப்பட்டனர். ‘அம்மாவைக் கைதுசெய்தால் தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும்’ என்று முழங்கினார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.விடவில்லை தி.மு.க அரசு. 1996, டிசம்பர் 7-ம் தேதி ஜெயலலிதாவைக் கைதுசெய்தது காவல்துறை.


அவரது முன்ஜாமீன் மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டிருந்தன. அன்றைய தினம் காலை, போலீஸ் டி.ஐ.ஜி-யான ராதாகிருஷ்ண ராஜா தலைமையிலான போலீஸ் பட்டாளம் திபுதிபுவென வேதா இல்லத்துக்குள் நுழைந்தது. காலை 9:45 மணிக்கு மாடியிலிருந்து கீழிறங்கி வந்தார் ஜெயலலிதா. அவரைக் கைதுசெய்த போலீஸார், அன்று மாலையே சென்னை மத்தியச் சிறைக்கு அழைத்துவந்தார்கள். ஜெயலலிதா அங்கு வருவதற்கு முன்னரே, அங்கிருந்த பெண் கைதிகள் சைதாப்பேட்டை மற்றும் வேலூர் பெண்கள் சிறைக்கு மாற்றப்பட்டிருந்தார்கள். பெண்கள் சிறை வளாகம் பளிச்சென்று சுத்தம் செய்யப்பட்டிருந்தது. அங்கு அவருக்கான அறை தயார் செய்யப்பட்டது.


அப்போது நான் சேலம் மத்தியச் சிறையின் கண்காணிப்பாளராக இருந்தேன். திடீரென்று சென்னை மத்தியச் சிறையின் கண்காணிப்பாளராக இருந்த ராஜ்குமார் விடுமுறையில் சென்றதால், மாற்றுப்பணியாக நான் சென்னை மத்தியச் சிறைக்கு அனுப்பப்பட்டேன்.


ஜெயலலிதா ‘இசட்’ பிரிவு பாதுகாப்புக்குரியவர். அதனால், அவருக்குச் சிறையில் நான்கு அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஆனாலும், அவருக்குச் சிறப்பு வகுப்பு தரப்படவில்லை. அவரது அறையில், குளியலறையும் சுத்தமான கழிப்பறை வசதியும் செய்துதரப்பட்டிருந்தன. ஒரு படுக்கை கொடுக்கப்பட்டது. அதன்மீது விரிப்புகளை விரித்துப் படுத்துக்கொள்வார்.


ஒருநாள் நள்ளிரவு. அவரது அறையிலிருந்து அலறல் சத்தம். அடித்துப் பிடித்துப்போய் பார்த்தார்கள் பெண் காவலர்கள். பெருச்சாளி ஒன்று அவரது அறையிலிருந்து ஓடியது. அன்றிரவு ஜெயலலிதா தூங்கவேயில்லை. மறுநாள், சிறை அலுவலர் ராஜேந்திரன், காலி எண்ணெய் டின்களைப் பிரித்துத் தகடாக்கி எந்த ஜந்துவும் நுழைய முடியாதபடி அந்த அறையின் ஓட்டைகளை அடைத்தார். ஆனால், அந்த அறையின் இருபதடி தூரத்தில் ஓடியது கூவம் ஆறு. அதிலிருந்து வரும் துர்நாற்றத்தை யாராலும் தடுக்கவே முடியாது. மொத்தத்தில் தூக்கம் தொலைத்தார் ஜெயலலிதா. இந்தத் தகவல் பத்திரிகைகளில் பெரிய அளவில் வெளியானது.


அதைப் பார்த்த முதல்வர் கருணாநிதி, உடனடியாகக் கண்காணிப்பாளரைத் தொலைபேசியில் அழைத்தார். ‘‘ஜெயலலிதா முன்னாள் முதல்வர். ஓர் அரசியல் கட்சியின் தலைவர். அவரது அறையில் அனைத்து வசதிகளையும் செய்து கொடுங்கள். செய்துவிட்டு, உடனடியாக எனக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.


மளமளவென பணிகள் நடந்தன. கட்டில் தரப்பட்டது. அவரது வீட்டிலிருந்து மெத்தை, தலையணைகள் வரவழைக்கப்பட்டன. நாற்காலி, மேஜை, மின்விசிறி, கொசுவத்திச் சுருள்கள், மினரல் வாட்டர் பாட்டில்கள் வழங்கப்பட்டன. சிறப்பு வகுப்புக்கான உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. உணவுத்துறை அலுவலர் அறிவுடை நம்பி என்பவர் தலைமையில் உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது. இவற்றையெல்லாம் செய்துவிட்டு முதல்வருக்குத் தகவலும் தெரிவிக்கப்பட்டது.


காலையில், ஒரு கப் காபி குடிப்பார் ஜெயலலிதா. பிறகு காலை 8:30 மணியளவில் சம்பா ரவை கோதுமை உப்புமா 400 கிராம், மதியம் 600 கிராம் தயிர் சாதம் வழங்கப்படும். நேர்காணலில் அவருக்குக் கொண்டுவரப்படும் பழங்கள், பிஸ்கெட்டுகள் சாப்பிட அனுமதிக்கப்பட்டன. மாலையில் ஒரு கப் காபி. அவர் சிறையிலிருந்த 28 நாள்களும் இதுதான் அவரது உணவு.


நிறைய புத்தகங்கள் படிப்பார். முன்னாள் முதல்வர் என்பதால், தினமும் அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும். ஆரம்பத்தில் ஓரிரு நாள்கள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டார். அதன் பிறகு ‘ஏதாவது உடல்நல பாதிப்பு என்றால் சொல்கிறேன்’ என்று பரிசோதனையைத் தவிர்த்துவிட்டார்.


சிறைக்குள் எந்தக் கூடுதல் சலுகையையும் அவர் எதிர்பார்க்கவில்லை. சிறை விதிகள் கடுமையாகப் பின்பற்றப்பட்டன. நேர்காணலும் விதிமுறைப்படி நடந்தது. நேர்காணலின்போது அவருக்குக் கொண்டுவரப்படும் பொருள்கள் தீவிர சோதனைக்குப் பிறகே அவருக்கு வழங்கப்பட்டன.


இதற்கிடையே ‘ஜெயலலிதாவின் இந்த நிலைக்குக் காரணம் சசிகலாதான்’ என்று கட்சிக்குள் சலசலப்பு கிளம்பியது. உடனே சிறையிலிருந்தே ‘சசிகலாவுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை’ என்று அறிக்கைவிடுத்தார் ஜெயலலிதா. சில நாள்களிலேயே ‘சசிகலா மென்மையான உணர்வுடைய குடும்பப் பெண். பொதுவாழ்வில் ஈடுபடுவதற்குரிய நெஞ்சுறுதியோ, துணிவோ இல்லாதவர். அவரது நட்பையும் பாசத்தையும் இழக்க நான் தயாரில்லை’ என்று மீண்டும் அறிக்கைவிடுத்தார். அப்போதுதான், ஜெயலலிதாவைச் சந்திக்க சசிகலா சிறைக்கு வருவதாகத் தகவல் வந்தது.


அந்த நேர்காணலை முன்னின்று நடத்த வேண்டிய பொறுப்பு என்னிடம் தரப்பட்டிருந்தது. ‘ஏ’ கிளாஸ் சிறைவாசிகளுக்கு நேர்காணல் நடக்கும் இடத்தில் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த அறையைச் சுத்தப்படுத்தி, நாற்காலியும் மேஜையும் போட்டிருந்தோம். இதற்கு முன்பும் ஒரு முறை இதே அறையில் சசிகலாவைச் சந்தித்திருக்கிறார் ஜெயலலிதா. அப்போது அறை இவ்வளவு சுத்தமாக இல்லை. அதனால் இம்முறை உள்ளே நுழையும்போதே ஆங்கிலத்தில், ‘‘கண்காணிப்பாளரான நீங்களே நேர்காணல் நடத்துவதால் இவ்வளவு சுத்தமா?” என்று கிண்டலாகக் கேட்டார்.
பிறகு, “நாங்கள் தனியாகப் பேச வேண்டும். நாற்காலிகளை அறையின் மூலையில் போடுங்கள்” என்றார். நான் அதை மறுத்து, ‘‘இங்கேயே பேசுங்கள், இங்குதான் நல்ல வெளிச்சமும் மின்விசிறியின் காற்றும் இருக்கின்றன’’ என்றேன். அவருக்கு வந்ததே கோபம்.... ‘‘நானும் சசியும் பேசுவதை நீங்கள் கேட்க வேண்டும். அதை அரசுக்குச் சொல்ல வேண்டும். அதுதானே உங்கள் நோக்கம்’’ என்று கொந்தளித்தார். நான் அவரிடம் “மேடம், எல்லாமே சட்டத்துக்கு உட்பட்டே நடக்கின்றன” என்று விளக்கினேன்.


உடனே அவர், “ஓ... அப்படியானால் நான் சசிகலாவைப் பார்க்கவே விரும்பவில்லை’’ என்று விருட்டென வெளியே செல்ல எத்தனிக்கவும், சசிகலா அந்த அறைக்குள் நுழையவும் சரியாக இருந்தது. சசிகலா என்னிடம் ஜெயலலிதாவின் கோபத்துக்கான காரணத்தை விசாரித்தார். பிறகு என்னிடம், ‘‘நாங்கள் தனியாக அமர்ந்து வழக்கு விஷயமாகப் பேச வேண்டும். கொஞ்சம் உதவுங்களேன்’’ என்று கேட்டார். நான் அனுமதித்தேன்.


சசிகலா என்னைப் பற்றி சமாதானமாகச் சொல்லியிருப்பார் போலிருக்கிறது. நான் மலையாளி என்று தெரிந்துகொண்டு, அறையிலிருந்து கிளம்பும்போது, ‘‘மனதில் ஏதும் வைத்துக் கொள்ளாதீர்கள்!’’ என்று மலையாளத்தில் என்னிடம் சிரித்துக்கொண்டே சொன்னார்.


1997, ஜனவரி 3-ம் தேதி, சிறையிலிருந்து ஜாமீனில் விடுதலையானார் ஜெயலலிதா. அதன் பிறகு மீண்டும் ஒரு முறை அவரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது அவர் முதல்வர். சிறை அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி பதக்கம் வழங்க மத்திய அரசு முடிவெடுத்தபோது, முதல் பதக்கம் எனக்கு வழங்கப்பட்டது. அதை வழங்கியது முதல்வர் ஜெயலலிதா. புன்னகையுடன் வாழ்த்தினார். பெருமிதத்துடன் நன்றி கூறினேன்.


அடுத்த அத்தியாயத்துடன் இந்தத் தொடர் நிறைவடைகிறது. அதில் நிறைவாக நீங்கள் சந்திக்கவிருக்கும் ஆகச்சிறந்த ஆளுமை... எல்லோரும் இன்புற்றிருக்க விரும்பியவர்!


(கதவுகள் திறக்கும்)


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment