Wednesday, September 16, 2020

பன்முகக் கலைஞன் சுதாங்கன்!

எழுத்தாளர், பத்திரிகையாளர், நாவலாசிரியர், மொழிபெயர்ப்பாளர், அரசியல் விமர்சகர், சொற்பொழிவாளர், தொலைக்காட்சி நெறியாளர், நடிகர், திரைப்படங்கள் மற்றும் திரை இசைப் பாடல்களின் ஆய்வாளர், தமிழ் சினிமாவின் தகவல் களஞ்சியம் - இப்படி பன்முகங்கள் கொண்ட ஒரு மனிதர் உண்டென்றால், அவர் பெயர் சுதாங்கன். இயற்பெயர் ரங்கராஜன்.


குமுதத்தில் ஏற்கெனவே ஒரு (ரா.கி) ரங்கராஜன் இருந்ததால், எழுத்தாளர் ரங்கராஜன் ‘சுஜாதா’வாக மாறினார். அதுபோல், இந்த ரங்கராஜனை ‘சுதாங்க’னாக மாற்றியவர் பத்திரிகையாளர் ஜ.ரா.சுந்தரேசன்.


பத்திரிகையுலகப் பிதாமகரான ‘சாவி’யின் ‘திசைகள்’, இவர் போக வேண்டிய திசையைக் காட்டிற்று. பின்னர், குமுதத்தில் சில காலம் ஃப்ரீலான்சராகப் பணியாற்றினார். அந்த நேரத்தில், இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிசத்தை அடிப்படையாகக்கொண்டு தமிழ்ப் பத்திரிகையுலகில் ஒரு தீக்கங்குபோல் புறப்பட்ட ‘ஜூனியர் விகடன்’, சுதாங்கனை வாரியணைத்துக்கொண்டது. ‘‘ஒரு நிருபரின் வேலை, செய்திகளைச் சேகரிப்பது மட்டுமன்று; அந்தச் செய்திகளுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் உண்மைகளையும் வெளிக்கொண்டு வருவதே’’ என்பது, இவர் தன்கீழ்ப் பணியாற்றிய நிருபர்களுக்குப் போதித்த தாரக மந்திரம்.


ஒருமுறை, காவல்துறை அதிகாரியின் அத்துமீறல்களைப் பற்றிய கட்டுரையொன்று ஜூனியர் விகடனில் தயாரானது. தலைப்பு, ‘எனக்கு ஸ்டாலினையும் தெரியும்... அவர் அப்பனையும் தெரியும்!’ - அப்போது தமிழகத்தில் தி.மு.க-வின் ஆட்சி. கட்டுரையைப் படித்த உதவி ஆசிரியர் ஒருவருக்கு அந்தத் தலைப்பு அவ்வளவு கவர்ச்சியாக இல்லையென்று தோன்றவே, கவித்துவமாக யோசித்து, ‘காக்கிச்சட்டையின் காட்டு தர்பார்’ என்று எதுகை மோனையோடு அதை மாற்றினார். சிறிது நேரம் கழித்து அங்கே வந்த சுதாங்கன், தான் வைத்த தலைப்பு மாற்றப்பட்டிருப்பதைக் கண்டு அவரை அழைத்தார். மிகத் தன்மையான குரலில், ‘‘ஏம்ப்பா தலைப்பை மாத்திட்டே? நான் வெச்ச தலைப்பு உனக்குப் பிடிக்கலையா?’’ என்று கேட்டார். ‘‘அது கொஞ்சம் சாதாரண தலைப்பு மாதிரி பட்டுது சார். அதான் மாத்தினேன்’’ என்றார் உதவி ஆசிரியர். சுதாங்கன் அவருக்குச் சொன்ன அட்வைஸ், அனைத்து நிருபர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்குமான பாலபாடம்.


சுதாங்கன்


‘‘சமூகப் பிரச்னைகளையும் அரசியல் அவலங்களையும் தோலுரித்துக் காட்டும் ஜூனியர் விகடன் மாதிரியான பத்திரிகையில், அழகியலுக்கும் கவித்துவத்துக்கும் இரண்டாம் இடம்தான். ஒரு காவல்துறை அதிகாரி, முதல்வரின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி அராஜகம் பண்ணிக்கிட்டிருக்கார். அதுதான் இந்தக் கட்டுரையின் அடிநாதம். தலைப்பும் அதையொட்டிதான் இருக்கணும்’’ என்று அந்த இளைஞருக்கு விளக்கினார் சுதாங்கன்.


தன்னைப் பற்றி, தான் நடத்தும் பத்திரிகைகளில் ஒரு சின்ன துணுக்குச் செய்திகூட வரக் கூடாது என்று பிடிவாதமாக இருந்தவர் ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன். ஆனந்த விகடன் அட்டைப்படத்தில் வெளியான ஜோக் ஒன்றுக்காக அவர் கைதாகிப் பின்னர் விடுவிக்கப்பட்டதும், அதுபற்றிய உண்மைகளை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும் என்ற முனைப்போடு ஆசிரியரிடம் பேசி, அவரை சம்மதிக்க வைத்து பேட்டி எடுத்தார் சுதாங்கன். அது, ஜூனியர் விகடனில் ஏழு இதழ்களில் மினி தொடராக வெளிவந்தது.


நுரையீரல் தொற்று காரணமாக மரணத்தைத் தழுவினாலும், தன் எழுத்துகளால் என்றும் நம் மனதில் சுதாங்கன் வாழ்ந்துகொண்டிருப்பார்!


- ரவிபிரகாஷ்


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment