Friday, September 25, 2020

ஓ.பி.எஸ்ஸும் இ.பி.எஸ்ஸும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்!

`அமைச்சர் வீடு’ என்பதற்கான பரபரப்பே இல்லாமல், அமைதியாக இருக்கிறது சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள அமைச்சர் செங்கோட்டையனின் இல்லம். செங்கோட்டையனின் அண்ணன் காளியப்பனின் மகன் செல்வன், தி.மு.க-வில் இணைந்தது ஈரோடு மாவட்ட அ.தி.மு.க-வில் அனல் பரப்பிக்கொண்டிருக்கிறது.


``பதவி நிரந்தரமானதல்ல, அது ஒரு பயணம்போலத்தான். அதேநேரத்தில் விசுவாசம் என்பது மிக முக்கியமானது. அந்த விஷயத்தில் இதுவரையில் நான் இம்மியளவுகூட மாறியதில்லை. என்னுடைய மகன் திருமணத்தில் ‘அம்மா’ பேசும்போது, `இமயமே தலையில் விழுகிறது என்றாலும், சறுக்காமல் வழுக்காமல் இருக்கக்கூடிய ஒரே நபர்’ என்று என்னைக் குறிப்பிட்டார். எத்தனையோ கஷ்டங்கள் வந்தபோதும் நான் துவண்டுபோனதில்லை. நாம் இருக்கிற இடத்துக்குச் சரியாக இருக்க வேண்டும்!” என்று தேநீரை உறிஞ்சியபடியே இயல்பாகப் பேசியவரிடம், சில கேள்விகளை முன்வைத்தோம்.


``உங்கள் அண்ணன் குடும்பத்துடன் என்ன மோதல்?”


``ஒரு பிரச்னையும் இல்லை. ஐந்து நாள்களுக்கு முன்புவரையில்கூட பேசிக்கொண்டுதான் இருந்தோம். இடையில் யார் குழப்பினார்கள் என்று தெரியவில்லை. ஒருவருக்கொருவர் மனம் புண்படும்நிலையில் நடந்துகொள்ளக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். என் அண்ணன் பொதுவானவர். `அரசியலுக்கு வர வேண்டும்’ என ஒருவர் முடிவெடுத்தால், அதற்கு ஏதாவது ஒரு காரணம் வேண்டும். என் அண்ணன் மகனுக்கு யாரோ தவறான ஆலோசனை கூறிவிட்டார்கள். அவர் சிறு வயதுக்காரர், ஏமாந்துவிடக் கூடாது என நினைக்கிறேன். அவர், அவர் வழியில் சென்றுகொண்டிருக்கிறார். `எங்கிருந்தாலும் வாழ்க’ என்ற மனநிலையில்தான் நான் இருக்கிறேன்.”


``கூவத்தூர் ரிசார்ட்டிலேயே நீங்கள் முதல்வர் ஆகியிருக்கலாம் என்கிறாரே உங்கள் அண்ணன் மகன் செல்வன்..?”


``தவறான தகவல். ரிசார்ட்டுக்கும் என் அண்ணன் மகன் செல்வனுக்கும் என்ன சம்பந்தம்? இவர் அங்கு இருந்தாரா... நான்தான் அனைத்தையும் செய்தேன் என்றெல்லாம் தவறாகப் பேசக் கூடாது. அம்மா மறைவுக்குப் பிறகு, `முதல்வர் பதவியில் நானா... அவரா?’ என்றெல்லாம் எழுதினார்கள். நான் அப்போது கூறியது ஒன்றுதான். `இந்தக் கட்சி உடையக் கூடாது. அதற்காக எந்தத் தியாகத்தை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறேன்’ என்றேன். முடிவில், `பழனிசாமி முதல்வர்’ என்றார்கள். அதற்கான டிராஃப்ட்டை நானும் தளவாய் சுந்தரமும்தான் தயார்செய்தோம். ரிசார்ட்டுக்கான ஏற்பாடுகளை புதுச்சேரியைச் சேர்ந்த முக்கிய நபர் ஒருவர்தான் செய்தார். அவர் அந்தப் பக்கமே வரவில்லை!”


``நான்கு பேரின் கட்டுப்பாட்டுக்குள் நீங்கள் இருப்பதாகச் சொல்கிறாரே..?”


``எல்லோருக்குமே நண்பர்கள் இருப்பார்கள். என்னுடன் இருக்கும் சிந்து ரவிச்சந்திரன், கழக வர்த்தக அணியின் மாநில நிர்வாகியாக இருக்கிறார். அவர் முன்னாள் மாவட்டச் செயலாளராகவும், வாரியத் தலைவராகவும் இருந்தவர், தேர்தலில் என்னை முன்மொழிந்தவர். இரண்டாவது நபர், நம்பியூர் ஒன்றியச் செயலாளர், மூன்றாவது நபர் கோபி சேர்மன். நான்காவது நபர் என்னுடைய உதவியாளர். நான் இல்லாத நேரத்தில்கூட இவர்கள் கட்சி வேலைகளை கவனித்துக்கொள்வார்கள். இதை எப்படித் தவறான ஒன்றாகப் பார்க்க முடியும்?”


``சசிகலா குடும்பத்தோடு நீங்கள் தொடர்பிலிருப்பதாகச் சொல்கிறாரே..?”


``அப்படி நான் யாருடனும் தொடர்பில் இல்லை. இந்த ஆட்சிக்கும் இயக்கத்துக்கும் விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம்.


இல்லாத ஒன்றைப் பெரிதாக்க வேண்டிய அவசியமில்லை.”``தலைமைக் கழகக் கூட்டத்தில் வெடித்த மோதலுக்கு என்ன காரணம்... ஒற்றைத் தலைமை இல்லாததன் வெளிப்பாடாக இதைப் பார்க்கலாமா?”


``அனைத்தும் சரியாகத்தான் சென்றுகொண்டிருக்கின்றன. பிரச்னை இருப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் இருவரும் (ஓ.பி.எஸ், இ.பி.எஸ்) நல்லபடியாகப் பேசிக்கொண்டுதானிருக்கிறார்கள்; இருவரின் மனநிலையும் ஒன்றாகத்தானிருக்கிறது. தி.மு.க-வில் கலைஞரும் பேராசிரியரும் இரட்டைத் தலைமையாகத்தான் இருந்தார்கள். தி.மு.க-வை அவர்கள் இருவரும்தான் இயக்கினார்கள். அதேபோலத்தான் இங்கும் நடக்கிறது.’’


``ஆனால், `அணிகள் இணைந்தாலும், மனங்கள் இணையவில்லை’ என்கிறார்களே?”


``கூட்டம் முடிந்ததும் இருவரும் ஒரு மணி நேரம் உட்கார்ந்து பேசித்தானே 28-ம் தேதி செயற்குழு வைத்துக் கொள்ளலாம் என முடிவெடுத்தார்கள்... கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரித்து அறிந்தால்தான் உண்மை புரியும். நான் வெளிப்படையாகவே சொல்கிறேன், அவர்கள் இருவரும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறார்கள்.”


`` `சசிகலா வந்தால் மாற்றம் வரும்’ என்கிறார் அன்வர் ராஜா, கடும் விமர்சனங்களை முன்வைக்கிறார் ஜெயக்குமார். நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?”


``அம்மாவழியில் இந்த ஆட்சி சிறப்பாகச் சென்றுகொண்டிருக்கிறது. மக்களிடம் எந்தவிதமான எதிர்ப்பு களும் இல்லை. ‘அவர்’ வந்தால் இது நடக்கும், அது நடக்கும் என்றெல்லாம் பேசுகிறார்கள். ‘அவர்’ என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார் என்பது யாருக்குமே தெரியாது. அப்படித் தெரியாத ஒரு விஷயத்தைக் கற்பனையாகப் பேசுவதில் என்ன இருக்கப்போகிறது... இயக்கத்தில் இருப்பவர்கள் ஒருங்கிணைந்து என்ன முடிவெடுக்கிறார்களோ, அதை ஏற்றுக்கொள்வோம். இதில் தனிமனிதன் எந்த முடிவையும் எடுக்க முடியாது.’’


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment