Wednesday, September 30, 2020

RTI அம்பலம்: ‘மருந்து’க்குக்கூட மருந்து தயாரிக்கவில்லை!

ஹெச்.எல்.எல்

கொரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க உலகமே போராடிக்கொண்டிருக்கிறது. ஆனால், தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்காகவே செங்கல்பட்டு மாவட்டத்தில், மத்திய அரசு தொடங்கிய ஹெச்.எல்.எல் பயோடெக் நிறுவனம் எந்தவிதச் செயல்பாடும் இல்லாமல் முடங்கிக்கிடக்கிறது!


மத்திய அரசின் மருந்து உற்பத்தி நிறுவனங்களான குன்னூர் - லூயி பாஸ்டியர் ஆய்வு நிறுவனம், கிண்டி - கிங்ஸ் இன்ஸ்டிட்யூட், இமாச்சலப்பிரதேசம் - கசாலி ஆய்வு நிறுவனம் ஆகியவை நாட்டின் 80 சதவிகித தடுப்பூசி மருந்துகளைத் தயாரித்துவந்தன. தெற்காசிய நாடுகளின் தடுப்பூசி மருந்துத் தேவைகளையும் இவை பூர்த்தி செய்தன. சரியான நிதி ஒதுக்காதது, ஊழியர் பற்றாக்குறை உள்ளிட்ட சிக்கல்களிலும் இவை சிறப்பாகவே செயல்பட்டுவந்தன.


இந்தநிலையில், ‘உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்த உற்பத்தி முறைகள் பின்பற்றப்படவில்லை’ என்று இந்த மூன்று நிறுவனங்களின் தடுப்பு மருந்து உற்பத்திக்கான உரிமம் 2008, ஜனவரி 16-ம் தேதி ரத்து செய்யப்பட்டது. இதனால், இந்தியாவில் தடுப்பு மருந்துகளுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. தடுப்பூசி மருந்துகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் நிலை ஏற்பட்டது.இந்தச் சூழலில்தான் தடுப்பூசிகளை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய 2008-ம் ஆண்டு, செங்கல்பட்டு அருகே திருக்கழுக்குன்றத்தில் மத்திய அரசின் 100 சதவிகித மானியத்துடன் ஹெச்.எல்.எல் பயோடெக் தடுப்பு மருந்து உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கப்பட்டது.


594 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டுடன், 408 பணியாளர்களைக்கொண்டு, ஆண்டுக்கு 585 மில்லியன் டோஸ் தடுப்பூசி மருந்து தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நாடு முழுவதும் பச்சிளம் குழந்தைகளைக் கொடிய நோய்களிலிருந்து காப்பதே இந்த மையத்தின் நோக்கம் என்றும் அறிவிக்கப்பட்டது.


இங்கு ஆய்வு மேற்கொண்ட உலக சுகாதார நிறுவனம், இந்த ஆராய்ச்சி நிறுவனம் உலகத்தரத்தில் அமைந்திருக்கிறது என்று சான்றளித்துள்ளது. இந்த நிறுவனம் செயல்படத் தொடங்கினால், ரேபிஸ், மூளைக் காய்ச்சல் உள்ளிட்ட முக்கியமான பிரச்னைகளுக்கு ஏழு வகையான தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய முடியும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசு நிதி ஒதுக்காததால், இந்த நிறுவனத்தின் செயல் பாடுகள் முடங்கிவிட்டன. ஊழியர்கள் பலர் வேலையிலிருந்து நீக்கப் பட்டிருக்கிறார்கள். பணியிலுள்ள ஊழியர் களுக்கும் கடந்த சில மாதங்களாகச் சம்பளம் வழங்கப்படவில்லை.


டி.கே.ரங்கராஜன்

இது குறித்து விகடன் ஆர்.டி.ஐ குழு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரங்களைப் பெற்றிருந்தது. அதன்படி, ‘கடந்த ஏழு ஆண்டுகளில் ஒரு மருந்துகூட இங்கு உற்பத்தி செய்யப்படவில்லை. சில நிர்வாகப் பணிகளால் மட்டும் 6.97 கோடி ரூபாய் வருமானம் கிடைத்திருக்கிறது. ஆனால், வரவைவிட 15 மடங்கு அதிகமாக 93.07 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருக்கிறது. கடந்த ஏழு ஆண்டுகளில் ஏற்பட்ட நஷ்டம் மட்டும் 102.06 கோடி ரூபாய்’ என்கின்றன புள்ளிவிவரங்கள். இன்னொரு பக்கம் இங்கு நிறுவப்பட்ட உலகத்தரத்திலான உபகரணங்கள் செயல்படாமல் இருப்பதால், அவை பாழடைந்து, செயல்திறனை இழந்துவருகின்றன. `இந்த நிறுவனத்தை தனியார்மயமாக்குவதற்காகவே இப்படியெல்லாம் முடக்குகிறார்கள்’ என்கிறார்கள் துறை சார்ந்தவர்கள்.


இந்த நிறுவனம் தனியார்மயமாவதை எதிர்த்துப் போராடிவரும் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரான டி.கே.ரங்கராஜனிடம் பேசினோம். “ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்திலேயே இந்த நிறுவனத்தை தனியார் மயப்படுத்தும் வேலைகள் தொடங்கிவிட்டன. எதிர்ப்பு கிளம்பியதால், அந்த முடிவு கைவிடப்பட்டது. தற்போதைய பாஜ.க ஆட்சியில் மீண்டும் ஹெ.எல்.எல் நிறுவனத்தை தனியார்மயமாக்கும் முயற்சிகள் தொடர்கின்றன. இது குறித்து பிரதமர் மோடி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆகியோரைச் சந்தித்து முறையிட்டேன். இந்த நிறுவனத்தை நேரில் பார்வையிட்டு பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதாக உறுதியளித்துள்ளார் மத்திய அமைச்சர். இந்த நிறுவனம் தொய்வின்றி செயல்பட்டிருந்தால், இந்நேரம் கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி ஆராய்ச்சிகளைக்கூட இங்கு முன்னெடுத் திருக்கலாம்” என்றார் ஆதங்கத்துடன்.இன்னொரு பக்கம், “ஆண்டுக்கு 24,000 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனை நடக்கும் இந்திய மருந்துச் சந்தையில், பொதுத்துறை நிறுவனங்களின் மருந்து உற்பத்தியால், தனியார் மருந்து நிறுவனங்கள் பாதிக்கப்படும்; அதனாலேயே இது போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் முடக்கப்படுகின்றன” என்பதும் சமூகச் செயற்பாட்டாளர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது.


நோய்கள் சூழ வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் மக்கள். இந்த அவலச் சூழலிலும், அரசாங்கத்தின் மிகப்பெரிய மருந்து உற்பத்தி நிறுவனம் முடக்கப்படுகிறது என்றால், அது ஆட்சியாளர்களின் கையாலாகாத்தனமே!

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment