Thursday, September 10, 2020

ரகசியமாய்... அவசரமாய்... நொய்யலில் கலக்கும் ரூ.230 கோடி!

“தமிழகத்துக்குள் அமைதியாக அடியெடுத்துவைக்கும் காவிரி ஆறு, கரூரைக் கடக்கும்போது ஆவேசத்துடன் ஆர்ப்பரித்துப் பாய்கிறதே எப்படி?” என்று சோழ மன்னர்கள் ஆச்சர்யப்பட்டனர். கொங்கு மண்டலத்திலிருந்து காவிரியில் கலக்கும் ஓர் ஆறு, தன் வேகத்தால்தான் காவிரியின் போக்கையே மாற்றுகிறது என்று கண்டுபிடித்தனர். அந்த ஆறு நொய்யல்!


அப்படிப்பட்ட நொய்யலை பெரு நிறுவனங்களும், பொறுப்பில்லா மக்களும், சுயநல அரசியல்வாதிகளும் போட்டி போட்டுக்கொண்டு திணறடித்துவருகிறார்கள். கண்மூடித்தனமாக ஆக்கிரமிப்பு செய்கிறார்கள்; சாயக்கழிவுகளைத் திறந்துவிடுகிறார்கள்; பிளாஸ்டிக் கழிவுகளைக் குவிக்கிறார்கள்; கழிவு நுரைகளைப் பறக்கவிட்டு சூழலை மாசுபடுத்துகிறார்கள். மணல் மாஃபியாக்கள் ஒருபுறம் மணலைச் சுரண்டிக்கொண்டேயிருக்கிறார்கள்.


2018-ம் ஆண்டு, நொய்யலை மாசடையாமல் தடுக்க ரூ.150 கோடியை ஒதுக்கி உத்தரவிட்டார் எடப்பாடி பழனிசாமி. இரண்டு ஆண்டுகளாகியும் நொய்யல் மாசடைவதைத் தடுக்க முடியவில்லை. இந்நிலையில், திடீரென நொய்யல் ஆற்றை ரூ.230 கோடி மதிப்பில் புனரமைக்கும் பணியைப் பொதுப்பணித்துறை செய்துவருகிறது. நடந்துவரும் பணிகள்மீதான விமர்சனம் ஒருபுறமிருக்க, இந்தப் பணிகளால் உயிர்ச்சூழல் பாதிக்கப்படுவதாகப் புகாரும் எழுந்துள்ளது.


ம.தி.மு.க மாநில இளைஞரணிச் செயலாளர் ஈஸ்வரன், “நொய்யலைப் புனரமைக்க ஏதாவது திட்டம் இருக்கிறதா என ஓராண்டுக்கு முன்னர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டிருந்தேன். ஆனால், ‘அப்படி எந்தத் திட்டமும் இல்லை’ என்று பதிலளித்தனர். திடீரென்று ரூ.230 கோடி ஒதுக்கி, நொய்யலைப் புனரமைக்கிறோம் என்கிறார்கள். இதற்காக இயற்கை ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட யாரிடமும் கருத்து கேட்கவில்லை. இந்தத் திட்டத்தில் என்ன செய்யப்போகிறார்கள் என்பதும் யாருக்கும் தெரியவில்லை. திட்டத்தின் முழு விவரங்களைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாகக் கேட்டிருக்கிறேன். பார்க்கலாம்” என்றார்.


சூழலியல் செயற்பாட்டாளர் மோகன்ராஜிடம் இது குறித்துப் பேசினோம், “நொய்யல் ஆற்றில் பல இடங்களில் கழிவுநீர் கலக்கிறது. அவற்றைக் கண்டறிந்து அங்கு சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க வேண்டும். நொய்யலிலுள்ள மீன்கள், பறவைகள், செடி கொடிகளை ஆவணப்படுத்த வேண்டும். பிறகு, அங்குள்ள உயிர்ச்சூழலுக்குத் தகுந்தாற்போலப் பணிகளைச் செய்ய வேண்டும். பல்லுயிர்ப் பெருக்கச் சட்டத்தின்படி, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் ‘பல்லுயிர்ப் பெருக்க மேலாண்மைக்குழு’ அமைக்கப்பட வேண்டும். பணியைத் தொடங்குவதற்கு முன்னர், இந்தக் குழுவிடம் ஒப்புதல் வாங்க வேண்டும். பல மாநிலங்களில் அமைக்கப்பட்டிருப்பதைப்போல, தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இந்தக் குழு அமைக்கப்படவில்லை. இவை எவற்றையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல், இவ்வளவு அவசரமாக இவர்கள் பணி செய்வதைப் பார்க்கும்போது, அந்தப் பணத்தைச் சுரண்டுவதில்தான் இவர்கள் அதிக ஆர்வம்காட்டுவதாகத் தெரிகிறது” என்றார்.

ஈஸ்வரன் - மோகன்ராஜ் - வாசுதேவன்


சூலூர் அருகேயுள்ள அருகம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வாசுதேவன், “எங்கள் பகுதியிலுள்ள பாசன வாய்க்கால் 10 ஆண்டுகளாகப் புதர்மண்டிக்கிடக்கிறது. எங்கள் பகுதியில் மட்டுமே 380 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் நொய்யலை நம்பி இருக்கின்றன. இரண்டு ஆண்டுகளாகப் பல்வேறு வகையில் போராடிக் கொண்டிருக்கிறோம். நொய்யலில் பெரும்பாலும் சாக்கடைத் தண்ணீர்தான் ஓடுகிறது. நொய்யல் நீரைப் பழையபடி விவசாயத்துக்குப் பயன்படுத்த வேண்டுமென்றால், முதலில் கழிவுநீர் அதில் கலப்பதைத் தடுக்க வேண்டும்” என்று தன் ஆதங்கத்தைப் பகிர்ந்துகொண்டார்.

பணிகள் எப்படி நடக்கின்றன என்பதை நொய்யலின் வழித்தடத்தில் நேரடியாகச் சென்று கள ஆய்வு செய்தோம். கோவையில் கனமழை கொட்டியதில், பல இடங்களில் இவர்கள் கட்டிய கான்கிரீட் கட்டுமானங்கள் அதற்குள்ளாகவே தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டிருந்தன. ‘கான்ட்ராக்டர்கள் தங்கள் கட்டுமானங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற சுயநலத்தால், மழை பெய்தபோதும் மதகுகளைத் திறந்துவிட மறுத்துவிட்டார்கள்’ என்று உள்ளூர்வாசிகள் குமுறினார்கள். ஆள் உயரத்துக்குப் பறந்துகொண்டிருந்த கழிவுநுரைகள் மூச்சுவிட முடியாமல் அசௌகரியத்தை ஏற்படுத்தின. ஆச்சான்குளம், பள்ளபாளையம்குளம், வெள்ளலூர்குளம் உள்ளிட்ட பல பகுதிகளில் கரைகளை பலப்படுத்த கான்கிரீட் சுவர் அமைக்கும் பணி நடந்துவருகிறது. கரைகளில் இருந்த தாவரங்கள், புதர்கள், புற்கள் வெட்டி வீசப்பட்டுவிட்டதால், பறவைகள் தங்களின் பழைய வாழ்விடத்தைத் தேடி வட்டமடித்துக் கொண்டிருந்தன. நொய்யல் இன்னும் ஒரு துயரக் காட்சியாகத்தான் இருக்கிறது.


பொதுப்பணித்துறையின் ஓய்வுபெற்ற அதிகாரிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்களிடம் பேசினோம், “நொய்யலில் பல இடங்களில் தடுப்பணைகள் வலுவிழந்துதான் இருக்கின்றன. அவற்றை பலப்படுத்துவது வரவேற்கத்தக்க விஷயம்தான். ஆனால், நொய்யலின் மிகப்பெரிய பிரச்னையான கழிவுநீர் கலப்பு, ஆக்கிரமிப்பு ஆகியவற்றைச் சரிசெய்யாமல் முன்னெடுக்கப்படும் எந்தப் பணியுமே கைகொடுக்காது. பறவைகள், பூச்சிகளுக்குக் கரையிலுள்ள புதர்கள், புற்கள் அவசியம். கரைகளில் கருங்கற்களால் தடுப்புச் சுவர் அமைப்பதுதான் வழக்கம். அப்படிச் செய்தால், கற்களிடையே சற்று இடைவெளி இருக்கும். அதில், புற்கள், செடிகள் வளர்ந்து பல்லுயிர்ச் சூழலுக்கு உதவியாக இருக்கும். கான்கிரீட் சுவரில் அதற்கு வாய்ப்பில்லை. மேலும், கான்கிரீட் சுவர் சில ஆண்டுகளிலேயே உடைந்துவிடும். இந்தப் பணி களுக்கான டெண்டர், மேலிடத்துக்கு மிகவும் வேண்டப்பட்டவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. நொய்யல் மீதான இவர்களின் திடீர் அக்கறையை நம்ப முடியவில்லை. தேர்தல் நெருங்கும் நேரத்தில், கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டி, அதில் பலனடையலாம் என்பதுதான் இவர்களின் நோக்கம். பெரும்பணம், கழிவுநீரைப்போல நொய்யலில் கலக்கப்போகிறது” என்றனர்.

பொதுப்பணித்துறை கோவை செயற்பொறியாளர் ராஜேந்திரனிடம் பேசினோம். “இது நொய்யலை மீட்டெடுக்கும் திட்டமல்ல. விரிவாக்குதல், புனரமைத்தல் மற்றும் நவீனமயமாக்கல் ஆகியவைதான். பாதிப்படைந்த பகுதிகளைச் சரிசெய்து, இருக்கும் அமைப்பை பலப்படுத்துகிறோம். சில இடங்களில் புதிய தடுப்பணைகளும் கட்டுகிறோம். ஒவ்வொரு பகுதியிலும் விவசாயிகள், தன்னார்வலர்களின் கருத்துகளைக் கேட்டுத்தான் பணிகளைச் செய்கிறோம். விவசாயிகள் பயனடைய வேண்டும் என்பதற்காக இந்தத் திட்டம் கொண்டுவரப் பட்டுள்ளது.

ஆக்கிரமிப்பு என்பது தனிப்பிரச்னை. அதேபோலக் கழிவுநீர் பிரச்னைக்கு, ‘நடந்தாய் வாழி காவிரி’ என்று ரூ.12,000 கோடி மதிப்பில் தமிழகம் தழுவிய ஒரு திட்டம் கொண்டுவரப்படுகிறது. இப்போதைய திட்டத்துக்கும், இந்தப் பிரச்னை களுக்கும் சம்பந்தமில்லை. இதில், சூழலுக்கு எதிராக எந்தப் பணியையும் மேற்கொள்ளவில்லை. இது மத்திய அரசின் நிதியில் செய்யப்படும் திட்டம். ஏராளமான நடைமுறைகளைக் கடந்துதான் பணிகளைச் செய்கிறோம்” என்றார்.

இந்த அரசியல் விளையாட்டில் ஆறுகளை நதிகளை விட்டுவிடுங்களேன். பாவம்!

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment