Thursday, September 10, 2020

போலி வெண்ணெய்... எல்லாம் தாவர எண்ணெய்!

செப்டம்பர் 4-ம் தேதி, மாலை 3:00 மணி... ஜூ.வி அலுவலகத்துக்கு நேரில் வந்திருந்தார் ரமேஷ். தனது கைப்பையைத் திறந்து, பட்டர் பாக்கெட் ஒன்றைக் கையில் எடுத்துப் பிரித்தார். “என்ன இது... வெண்ணெய்போலத் தெரிகிறது..?” என்றோம். 


“இது போலியானது. வாசனையைப் பாருங்கள். தயாரித்த கம்பெனியின் பெயர், தயாரிக்கப்பட்ட தேதி, காலவதியாகும் தேதி எதுவுமே இல்லை” என்றார்.


நுகர்ந்து பார்த்தோம், ஒரிஜினல் பட்டருக்கான வாசனையே இல்லை.


“எங்கே வாங்கினீர்கள்?”


“சென்னை, கீழ்ப்பாக்கம் ஏரியாவிலிருக்கும் நம்மாழ்வார்பேட்டை பஜாரில், பேக்கரி ஒன்றில் வாங்கினேன்” என்றார்.


உடனே, தமிழக உணவு பாதுகாப்பு துறையின் கூடுதல் இயக்குநர் மதுசூதனனைத் தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொன்னேன். அடுத்த நொடி, சென்னை மாவட்ட அதிகாரி ராமகிருஷ்ணனுக்கு உத்தரவு பறந்தது.


மாலை 4:00 மணி. சென்னையின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஐந்து பேர் கீழ்ப்பாக்கம் ஏரியாவில் ரெய்டு நடத்துவதற்குத் தயாரானார்கள்.


நம்மாழ்வார்பேட்டை பஜாரிலுள்ள ஒரு பேக்கரியில், “பட்டர் இருக்கா?” என்று கேட்டார் அலுவலர் ஒருவர்.“50 கிராம் பாக்கெட்... 15 ரூபாய்” என்றார் கடைக்காரர்.


அலுவலர் பணத்தை நீட்ட... பாக்கெட் அவர் கைக்கு வந்தது.


அங்கேயே பிரித்து சோதித்தார். “இது போலி பட்டர்!” என்று அவர் சொல்லவும், மற்ற அலுவலர்கள் கடைக்குள் சரசரவென நுழைந்தனர். கடைக்குள் இருந்து 18 பாக்கெட்டுகளைக் கைப்பற்றினர். கடைக்காரர் நடப்பது குறித்து ஒன்றும் புரியாமல் திகைத்து நின்றுகொண்டிருக்க, கடைக்கு வெளியே ஒரு டூ வீலர் வந்து நின்றது. ரெய்டு விவரமேதும் புரியாத அவர், பைக் சீட் ஸ்டோரேஜிலிருந்து சின்னதும் பெரியதுமாக சில பட்டர் பாக்கெட்டுகளை எடுத்து வந்து கடைக் காரரிடம் கொடுத்தார். கடைக்காரர் கையைப் பிசைந்துகொண்டு நிற்க, “ஓ... இவர்தான் பட்டர் சப்ளையரா?” என்று அலுவலர்கள் அவரைச் சுற்றிவளைத்தனர்.


சட்டென்று சுதாரித்த அந்த நபர், “இது ஒரிஜினல் பட்டர் இல்லை சார்... ஸ்நாக்ஸ் பட்டர்னு நாங்க விக்கிறோம்” என்று சமாளிக்கப் பார்த்தார்.


“லேபிள் இல்லை... தயாரித்த கம்பெனி பெயர் இல்லை... எக்ஸ்பயரி தேதி இல்லை... உணவு பாதுகாப்பு துறைனு ஒண்ணு இருக்கிறது தெரியுமா, தெரியாதா? ஏற்கெனவே கொரோனா பிரச்னையில் ஊரே அல்லாடிக்கிட்டிருக்கு. இதுல நீங்க வேற மக்களோட உயிர் விஷயத்துல விளையாடுறீங்க...” என்று குரலை உயர்த்தவும் ‘அந்த நபர்’ அமைதியானார். அவரின் டூ வீலரில் நான்கரை கிலோ வரை போலி பட்டர் சிக்கியது. வாகனத்தையும் பட்டர் பாக்கெட்டுகளையும் அலுவலர்கள் தங்கள் கஸ்டடிக்கு எடுத்துக் கொண்டார்கள்.


ஸ்பாட்டிலேயே விசாரணை நடைபெற்றது, “என் பேரு நிர்மல்குமார். இதை நான் ஆவடியிலிருந்து வாங்கி வந்து, ஓட்டேரியில இரண்டு கடைகளுக்கு சப்ளை செய்யறேன்” என்றார். உடனே ஆவடிக்கும் புறப்பட்டது ஒரு ரெய்டு டீம்.ரெய்டின் முடிவில், சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ராமகிருஷ்ணனிடம் பேசினோம். “இதுவரை இரண்டு பேக்கரிகளிலிருந்து சுமார் ஆறு கிலோ போலி பட்டர் பாக்கெட்டுகளைக் கைப்பற்றியிருக் கிறோம். சாம்பிள்கள் பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பப் பட்டிருக்கின்றன. ரிசல்ட்டின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். உயிருக்கு ஆபத்தான பொருளாக இருந்தால், சிறைத் தண்டனை கிடைக்கும். தரம் தாழ்ந்த பொருளென்றால் அபராதம் விதிக்கப்படும். தொடர்ச்சியாக, வேறு சில இடங்களிலும் ரெய்டுகள் நடந்துவருகின்றன. கலப்படம் அல்லது போலி உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப் படுவதை அறிந்தால், உடனே சென்னையிலுள்ள உணவு பாதுகாப்பு துறையின் 94440 42322 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்குத் தகவல் அளிக்கலாம்” என்றார்.


விலை குறைவாகக் கிடைக்கிறது என்று, முறையான தகவல்கள் அச்சிடப்படாத உணவுப் பொருள்களை வாங்கி, உயிரோடு விளையாடாதீர்கள்!


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment