கதறும் ‘21 நாள் மனைவி’ ஜெயந்தி...
“அரசியல் பலம், ரெளடிகள் பலம், பண பலம்... இவற்றுக்கு முன்னால் நான் சாதாரணம். சட்டம், நீதியெல்லாம் அவர்களுக்கு தூசுக்குச் சமானம். இனி எந்தப் பெண்ணின் வாழ்க்கையையும் கெடுக்க வேண்டாம். நான் நம்பியவர்கள் எல்லோருமே என்னைக் கைவிட்டுவிட்டனர். கஷ்டமான கடந்த காலம், வெறுமையான எதிர்காலம்... இதுவே எனது கடைசிப் பதிவாக இருக்கலாம்” - இப்படி ஃபேஸ்புக்கில் நீள்கின்றன ஜெயந்தி முத்துக்குமரன் என்கிற இளம்பெண்ணின் கண்ணீர் வரிகள்!
தனிப்பட்ட நபர்களின் அந்தரங்கங்களைத் தோண்டுவதில்லை என்றாலும், மேற்கண்ட வரிகள் ஆணாதிக்க அதிகாரத்தால் பாதிக்கப்பட்ட ஓர் அபலைப் பெண்ணின் பதிவாக இருக்கவே... இது குறித்து விசாரித்தோம். அப்போதுதான் பல பெண்களிடம் மையல்கொண்டு, உறவாடிக் கைவிட்ட ஒரு நபரின் லீலைகள் வெளிச்சத்துக்கு வந்தன. அவர் வேறு யாருமல்ல... என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட வெங்கடேச பண்ணையாரின் மனைவியும், முன்னாள் மத்திய உள்துறை இணையமைச்சருமான ராதிகா செல்வியின் தம்பி முத்துக்குமரன்தான் அந்த நபர். “வழக்கறிஞரான முத்துக்குமரன் ஏற்கெனவே இரு பெண்களைத் திருமணம் செய்து, விவாகரத்து வாங்கியிருப்பதுடன், என்னையும் ஏமாற்றி திருமணம் செய்து, விரட்டிவிட்டார்” என்று புகார் சொல்கிறார் ஜெயந்தி.
ஜெயந்தியைச் சந்தித்தோம். விஷயத்தை ஆரம்பிக்கும்போதே அவரது கண்களிலிருந்து கண்ணீர் பொலபொலவென்று கொட்டியது. “இதையெல்லாம் வெளியே சொல்லக் கூடாதுன்னுதான் நினைச்சேன். ஆனா, எனக்கு செஞ்ச துரோகத்தை அந்தாளு இன்னொரு பொண்ணுக்கு செஞ்சிடக் கூடாதுங்கிறதுக்காகத்தான் இதை வெளியே சொல்றேன். அவருக்கு யாரெல்லாம் பொண்டாட்டின்னே தெரியலை...” என்றவர், அழுகையை அடக்க முடியாமல் சேலைத் தலைப்பால் முகத்தை மூடிக்கொண்டு தேம்பித் தேம்பி அழுதார். சில நிமிடங்களில் தன்னைத் தானே தேற்றிக்கொண்டவர் முகத்தைத் துடைத்துக்கொண்டு மெதுவாகப் பேச ஆரம்பித்தார்.
“திருநெல்வேலி, களக்காடுதான் என் சொந்த ஊர். எங்க குடும்பம், ஊர்லயே பெரிய குடும்பம். அப்பா உயிரோட இல்லை. 2011-ல தன்னோட தம்பி முத்துக்குமரனுக்காக என்னைப் பெண் பார்க்க ராதிகா செல்வி வந்திருந்தாங்க. பெரியவங்கதான் பேசினாங்க. முத்துக்குமரனும் என்கிட்ட பேச ஆரம்பிச்சார். என்ன பிரச்னைனே தெரியலை... கல்யாணம் மட்டும் தள்ளிப்போய்க்கிட்டே இருந்தது. ஒரு வருஷம் கழிச்சு திடீர்னு முத்துக்குமரன், ‘எனக்கு ஏற்கெனவே ரேணுகாதேவிங்கற பொண்ணோட கல்யாணமாகி விவாகரத்தும் ஆகிடுச்சு’னு சொன்னப்ப என் தலையில இடி விழுந்த மாதிரி இருந்துச்சு. அதுக்கப்புறம் எங்க ரெண்டு தரப்புலயும் பேச்சுவார்த்தை நின்னுபோச்சு!
என்ன நினைச்சாங்களோ... 2016, ஜூன் மாசத்துக்குப் பிறகு ராதிகா செல்வி மறுபடியும் என்கூடப் பேச ஆரம்பிச்சாங்க. ‘என் தம்பியை நீதாம்மா நல்ல வழிக்குக் கொண்டுவரணும். ரெண்டு வருஷத்துக்கு முன்னால, அவனுக்கும் காஞ்சனாதேவிங்கற பொண்ணுக்கும் கல்யாணம் நடந்துச்சு. ரெண்டு பேரும் விவாகரத்து வாங்கிட்டாங்க. அவன் வாழ்க்கை உருப்படுறது உன் கையிலதாம்மா இருக்கு’னு தினமும் போன்ல பேசுவார். ஒருவழியாக கல்யாணத்துக்கு சம்மதிச்சோம். கல்யாணத்துக்கு கொஞ்சநாள் முன்னாடி ஒருநாள் நைட்டு, நான் முத்துக்குமரனுக்கு போன் பண்ணினப்போ, உஷானு ஒரு பொண்ணு பேசினாங்க. ‘அவர் என் வீட்டுலதான் தினமும் தங்குவார். நீ ஏண்டி எங்க வாழ்க்கையில குறுக்க வர்றே... அவருக்கும் எனக்கும் கல்யாணம் முடிஞ்சிருச்சு’னு மிரட்டினாங்க. ‘ரேணுகா தேவி, காஞ்சனா தேவி, உஷா... இன்னும் எத்தனை பொண்ணுங்கதான் இவர் வாழ்க்கையில இருப்பாங்களோ’னு பயத்தோட ராதிகா செல்விகிட்ட பேசினேன்.
‘உஷாவை முத்துக்குமரன் வெச்சிருக்காம்மா. உன்கூட கல்யாணம் ஆகிடுச்சுனா எல்லாம் சரியாகிடும்’னு சொல்லிட்டு, உஷாவை போனில் அழைச்சு கண்டிச்சாங்க. நானும் கல்யாணத்துக்குப் பிறகு எல்லாம் சரியாகிடும்னு முட்டாள்தனமா நினைச்சேன்...” என்றவர் சற்றே நிறுத்தி, நினைவலைகளை யோசித்தவராகத் தொடர்ந்தார்.
“திருச்செந்தூர் முருகன் கோயில்ல எனக்கும் முத்துக்குமரனுக்கும் 2018, ஜூலை 11-ம் தேதி கல்யாணம் நடந்துச்சு. கல்யாணத்துக்கு அப்புறம் பழைய வண்ணாரப்பேட்டையில இருக்குற ராதிகா செல்வி வீட்டுக்கு வந்தோம். ‘எவ்வளவோ கஷ்டங்களைத் தாண்டி இந்தக் கல்யாணம் நடந்திருக்கு. இனி என் வாழ்க்கை விடிஞ்சிரும்’னு நினைச்சேன். ஆனா, விடியவே இல்லை. ராத்திரியாச்சுன்னா அவர் வீட்டுல தங்க மாட்டார். ரெண்டு தெரு தள்ளி உஷாவைக் குடி வெச்சிருந்தாரு. அங்கே போயிடுவாரு. நடுராத்திரி உஷாகிட்ட இருந்து வீடியோ கால் வரும். பக்கத்துல முத்துக்குமரன் படுத்திருக்குறதைக் காட்டி, ‘உன் புருஷன் என்கூடத்தான் இருக்கான். அவனைவிட்டுப் போகலைனா உன்னை உயிரோட விடமாட்டேன்’னு மிரட்டுவாங்க.
இதையெல்லாம் மாமியார் தங்கபுஷ்பம் கிட்டயும், நாத்தனார் ராதிகா செல்விகிட்டயும் சொல்லி அழுவேன். ஆரம்பத்துல சில நாள்கள் ஆறுதல் சொன்னவங்க ஒருகட்டத்துல, ‘ஊர் மரியாதைக்காக அவனுக்கு உன்னைக் கல்யாணம் பண்ணிவெச்சோம். காஞ்சனா தேவியை இன்னும் விவாகரத்து பண்ணலை. இப்ப உஷாவைக் கண்டிச்சா, அவளாலயும் பிரச்னை வரும். நீ உன் அம்மா வீட்டுக்கே போயிடு’னு ஜூலை 31-ம் தேதியே வீட்டைவிட்டு விரட்டிட்டாங்க.
என் கணவர்கூட நான் வாழ்ந்தது வெறும் 21 நாள்கள்தான். காஞ்சனா தேவியோட விவாகரத்தே செய்யாம என்னை ஏமாத்திக் கல்யாணம் பண்ணியிருக்காரு. இதையெல்லாம் ராயபுரம் போலீஸ் ஸ்டேஷன்ல புகாரா கொடுத்தேன். நீதிமன்ற உத்தரவுப்படி என் புகாரை ராயபுரம் உதவி ஆணையர் விசாரிச்சு, ‘என் புகார் அத்தனையும் உண்மை’னு அறிக்கை கொடுத்திருக்காரு. களக்காடு போலீஸ் ஸ்டேஷன்லயும் புகார் கொடுத்திருக்கேன். எனக்கு நியாயம் கிடைக்கலை. உயர் நீதிமன்றத்துல வழக்கும் தொடர்ந்திருக்கேன். இப்பகூட என் கணவருக்கு இன்னொரு பொண்ணை பார்த்துக்கிட்டிருக்காங்க. என்னை மாதிரி யாரும் ஏமாந்துடக் கூடாது” என்றார் கண்ணீர் மல்க.
நம்மை நேரில் சந்தித்தார் உஷாவின் கணவர் குருசாமி. ‘என் பொண்டாட்டி அவன் காதைக் கடிக்குற போட்டோவை நடுராத்திரி எனக்கு வாட்ஸ்அப்ல அனுப்பி, முத்துக்குமரன் வெறுப்பேத்துவான். என் கடை முன்னாடி பைக்கை நிறுத்தி, எகத்தாளமா என்னைப் பார்த்து சிரிப்பான். எவ்வளவு வன்மம் பாருங்க...’ என்றபடி நம்மிடம் விரக்தியுடன் பேசினார் அவர்.
“முத்துக்குமரனோட டெக்ஸ்டைல் நிறுவனத்துக்குப் பக்கத்துலதான் என்னோட ஹோட்டல் இருந்துச்சு. 2016 வாக்குல எப்படியோ என் பொண்டாட்டி உஷாகூட பழக்கமாகியிட்டான். இந்த விவகாரம் எனக்குத் தெரிஞ்சதும், பிள்ளைங்களைக் கூட்டிக்கிட்டு அவ போயிட்டா. 2016, டிசம்பர் 30-ம் தேதி, என் வீட்டுப் பூட்டை உடைச்சு 110 பவுன் நகை, மூணு சொத்துப் பத்திரம் எல்லாத்தையும் உஷா திருடிக்கிட்டுப் போயிட்டா. அவ சென்னையில ஒருத்தரோட இருக்கிறதா சொன்னாங்க. சென்னைக்கு வந்து தண்டையார்பேட்டை போலீஸ்ல புகார் கொடுத்தேன். முத்துக்குமரன் என்னை ஆள்வெச்சு அடிச்சான். அதுக்கும் ஒரு புகார் கொடுத்தேன். எந்த நடவடிக்கையும் இல்லை. இப்ப உஷாவும் முத்துக்குமரனும் ஒண்ணாத்தான் இருக்காங்க. என் சொத்தை உஷாவுக்குப் பிரிச்சுக் கொடுக்கச் சொல்லி கொலை மிரட்டல் விடுறான் முத்துக்குமரன்” என்றார் கண்ணீருடன்.
முத்துக்குமரனிடம் பேசினோம். “காஞ்சனாவோட எனக்கு முறைப்படி விவாகரத்து ஆகிவிட்டது. ஜெயந்தியுடன் எனக்கு நிச்சயதார்த்தம்தான் முடிந்திருக்கிறது. திருமணம் நடக்கவில்லை. அவர் என்னிடம் பணம் பறிப்பதற்காக இப்படி நடந்துகொள்கிறார். உஷாவுக்கும் குருசாமிக்கும் தகராறு ஏற்பட்டதால், என்னிடம் சட்டரீதியாக உதவி கேட்டு உஷா வந்தார். மற்றபடி நான் யாரையும் மிரட்டவில்லை” என்றார்.
உஷாவிடம் பேசினோம். “குருசாமிக்கும் எனக்குமுள்ள பிரச்னை நீதிமன்றத்தில் இருக்கிறது. அவரவர் பிரச்னையை அவரவர் இடத்திலிருந்து பார்த்தால்தான் தெரியும். இதற்கு மேல் என்னால் பேச முடியாது” என்றபடி தொடர்பைத் துண்டித்தார். ராதிகா செல்வியைப் பலமுறை அழைத்தும் அவர் நம் அழைப்பை ஏற்கவில்லை.
ஜெயந்தியுடன் திருமணம் நடைபெறவில்லை என்று முத்துக்குமரன் கூறியிருக்கும் நிலையில், இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்தததற்கான போட்டோக்களும் வீடியோக்களும் நமக்கு கிடைத்திருக்கின்றன. ரேணுகாதேவி, காஞ்சனா தேவி, ஜெயந்தி, உஷா எனப் பல பெண்களை பகடைக்காயாகப் பயன்படுத்தியிருக்கிறார் முத்துக்குமரன். அவரின் நண்பர்கள் வட்டாரத்தில் கிடைத்த தகவல்களெல்லாம் வெளியே சொல்ல முடியாத ‘பகீர்’ ரகங்களாக இருக்கின்றன. பலரது குடும்பச் சூழல் கருதி அவற்றையெல்லாம் வெளியிட முடியவில்லை.
மேற்கண்ட விவகாரங்கள் வெறும் குடும்பப் பிரச்னைகளாகத் தெரியவில்லை. பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகவே தெரிகிறது. காலம் காலமாக ஒடுக்கப்பட்டவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்கள் பெண்கள். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவை நீதி!
No comments:
Post a comment