Thursday, September 10, 2020

வரியா... வழிப்பறியா?

 


ஊரடங்குக்கு இடையிலேயே ஏப்ரல் 16-ம் தேதி, தமிழகத்திலுள்ள 26 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. மீதமுள்ள 21 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 முதல் கட்டண உயர்வு அமுலுக்கு வந்தது. இன்னும் இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பாத நிலையில், இந்தக் கட்டண உயர்வால் காய்கறி உட்பட பல அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும் என மக்கள் அச்சப்படுகிறார்கள். என்ன சொல்கிறார்கள் இவர்கள்...

“கொரோனாவுல நாடு சின்னாபின்னமாகிக் கெடக்குது. மாசக்கணக்குல சாப்பாட்டுக்கு வழியில்லாம கெடந்து, இப்போதான் பொழைப்பைத் தேடி மக்கள் வெளியில போறாங்க. முடங்கிப் போயிருக்கும் மக்களின் வாழ்வாதாரத்துக்கும், அவங்க சாப்பாட்டுக்கும் அரசு எந்த வழியையும் சொல்லலை. ஆனா, ஊரடங்கு முடிஞ்ச கையோட டோல்கேட் கட்டணத்தை ஏத்திட்டாங்க.

இந்த நேரத்துல இந்தக் கட்டண உயர்வு தேவைதானா? என்னை மாதிரி சொந்த வண்டிவெச்சிருக்குற வங்களை விடுங்க, வாடகை கார், லாரி, மினி வேன் ஓட்டுறவங்க நிலைமையை இந்த அரசு உண்மையிலேயே யோசிக்குதா? கட்டணம் மட்டும்தான் ஏத்துறாங்களே தவிர, எந்த வசதியையும் டோல்கேட் நிர்வாகங்கள் செய்யறதில்லை. அரசும் அதைக் கண்டுக்கிறது இல்லை. கொடுமை!”

- சேகர், குடும்பத்தலைவர், திண்டிவனம்

சேகர், சென்னகேசவன்

“கொரோனா லாக்டெளனால் டிரான்ஸ்போர்ட் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மூடிக்கிடப்பதால் சரக்குப் போக்குவரத்து முற்றிலும் முடங்கிவிட்டது.

இதனால் லாரி உரிமையாளர்களும், லாரித் தொழிலை நம்பி வாழக்கூடிய ஓட்டுநர்கள், சுமைதூக்கும் தொழிலாளர்கள், புரோக்கர்கள் எனப் பலரும் வருமானம் இழந்து நடு ரோட்டுக்கு வரும் நிலை ஏற்பட்டிருக்கிறது. கடந்த நான்கு மாதங்களாக லாரிகள் ஓடாமல் வீட்டில் கிடக்கின்றன. ஆனால், லாரிகளுக்குச் செலுத்த வேண்டிய காலாண்டுக்கான ஸ்டேட் பர்மிட் டாக்ஸும், நேஷனல் பர்மிட் டாக்ஸும் செலுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

இந்நிலையில் சுங்கவரிக் கட்டணத்தை உயர்த்தியிருப்பது, லாரித் தொழிலைக் குழிதோண்டிப் புதைப்பதுபோலத்தான் இருக்கிறது. இந்தியா முழுவதும் 565 டோல்கேட்களும், தமிழ்நாட்டில் 48 டோல்கேட்டுகளும் இருக்கின்றன. இந்தப் பேரிடர் காலத்தில் அரசு எங்களுக்கு நன்மை செய்யவில்லையென்றாலும் பரவாயில்லை. தொடர்ந்து துன்பத்தை ஏற்படுத்தாமல் இருந்தால் சரி. இந்தச் சுங்கவரி உயர்வால், ஒரு வாகனத்துக்கு மாதம் 1,000 முதல் 1,500 ரூபாய் வரை இழப்பு ஏற்படும்.’’

- சென்னகேசவன், சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர்

பண்ருட்டி வேல்முருகன், நாராயணன் திருப்பதி

“கடந்த 2019, செப்டம்பர் மாதம் நான்கு முதல் பத்து சதவிகிதம் சுங்கக் கட்டணத்தை அதிகரித்தது மோடி அரசு. அதனால், பல இடங்களில் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையே வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்டது.

இந்த வேளையில்தான் கொரோனா தொற்று பரவி, கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கை அறிவித்தது மத்திய அரசு. அனைத்துச் சுங்கச்சாவடிகளும் மூடப்பட்டன. மீண்டும், ஏப்ரல் 19-ம் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கைத் தளர்த்துவதாக அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடெங்கும் சுங்கச் சாவடிகள் திறக்கப்பட்டன. மாற்றியமைக்கப்பட்ட 10% கூடுதல் கட்டணத்தைத் தாண்டி 30% வரை மேலும் கூட்டி வசூலித்துக் கொண்டிருக்கின்றன சுங்கச்சாவடிகள்.

மத்தியிலும் மாநிலத்திலும் சாலைப்போக்கு வரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகங்கள், மக்கள் வரிப்பணத்தில்தான் இயங்குகின்றன. அப்படியிருக்க, வழிப்பறிக் கொள்ளையை நடத்தும் சுங்கச்சாவடிகள், அவற்றின் காலக்கெடு முடிந்தும் இன்னும் ஏன் வசூலித்துக்கொண்டிருக்கின்றன... இதில் கட்டண உயர்வு வேறா... நடப்பது அரசாங்கமா இல்லை அராஜகமா?’’

- பண்ருட்டி வேல்முருகன், தலைவர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி,

‘‘வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி அரசில், தங்க நாற்கரச் சாலைகள் அமைத்தபோது, அரசே 80 சதவிகிதச் சாலைகளைப் போட்டது. பராமரிப்புப் பணிகளுக்கு மட்டுமே தனியாரிடம் ஒப்பந்தம் போடப்பட்டு, சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அதற்கான ஒப்பந்தம், 1998-2004 வரை வெறும் ஆறு ஆண்டுகள் மட்டுமே. அதற்குப் பிறகு வந்த காங்கிரஸ் கூட்டணி அரசில்,

டி.ஆர்.பாலு நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்தபோது போடப்பட்ட சாலைகளில்தான் 80 சதவிகிதம் தனியாரிடம் ஒப்பந்தம் போடப்பட்டது. அவர்கள் வங்கிகளில் 20-25 ஆண்டுகள் ஒப்பந்தம் போட்டு, கடன் பெற்றுத்தான் சாலைகள் போட்டார்கள். அந்த ஒப்பந்தம் போடும்போதே, ‘ஒவ்வொரு வருடமும் ஐந்து சதவிகிதம் கட்டணத்தை அதிகரித்துக்கொள்ளலாம் அல்லது மொத்தவிலைக் குறியீட்டின் அடிப்படையில் கட்டணத்தை மாறுதலுக்கு உட்படுத்தலாம்’ என்று அனுமதித்துவிட்டார்கள்.

அதனால், ஒவ்வொரு வருடமும் கட்டணவு உயர்வு இருந்துகொண்டேதான் இருக்கும். ஒப்பந்தங்களை மீறிச் செயல்பட முடியாது என்பது தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கும் தெரியும். ஆனால், அவர் கட்டணத்தை ரத்துசெய்ய வேண்டும் என்று மலிவான அரசியல் செய்துவருகிறார். அப்படி ரத்துசெய்ய வேண்டுமென்றால், ஒப்பந்ததாரர்களுக்கு

தி.மு.க-விலிருந்து ஸ்டாலின்தான் பணம் கொடுக்க வேண்டும்’’

- நாராயணன் திருப்பதி, பா.ஜ.க செய்தித் தொடர்பாளர்

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment