``புதிதாகக் கொண்டுவரப்பட்டிருக்கும் வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். ஸ்டாலினுக்குப் புதிய வேளாண் சட்டங்கள் பற்றித் தெரியவில்லை. அவருக்கு விவசாயமும் தெரியாததால்தான் இந்தச் சட்டங்களை எதிர்க்கிறார்.’’
- எடப்பாடி பழனிசாமி, முதல்வர்
``வேளாண் சட்டங்களை எதிர்த்துப் பேசிய அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியத்துக்கும் விவசாயம் பற்றித் தெரியாதா? மத்திய அரசின் சட்டங்களைப் பற்றி ஆராய்ந்து கருத்து சொல்ல விவசாயியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. வேளாண்மை பற்றிய அடிப்படை அறிவு, விவசாயிகள் நலனில் அன்பு, அக்கறை இருந்தாலே போதும்.’’
- மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர்
***
``வரும் தேர்தலில் நான் ஜோ பைடனிடம் தோல்வியுற்றால், அமைதியான முறையில் ஆட்சிப் பரிமாற்றத்தில் ஈடுபட மாட்டேன்.’’
- டொனால்டு ட்ரம்ப், அமெரிக்க அதிபர்
``இந்தத் தேர்தல் குறித்து அமெரிக்க மக்கள் முடிவு செய்வார்கள். வெள்ளை மாளிகையில் அத்துமீறி நுழைபவர்களை வெளியேற்றும் வல்லமைகொண்டது அமெரிக்க அரசு.’’
- ஜோ பைடன், ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர்
***
“ `ஊரகப் பகுதிகளில், சிறிய நகரங்களிலும் பெரிய கிராமங்களிலும் சந்தைகளை அமைப்போம்’ என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியளித்தோம். அதைச் செய்யாமல், இருக்கும் ஒரே ஒழுங்குமுறைச் சந்தையையும் ஒழிக்கும் முயற்சியை பா.ஜ.க அரசு செய்கிறது.”
- ப.சிதம்பரம், காங்கிரஸ்
``ப.சிதம்பரத்துக்கு விவசாயத்தைப் பற்றி என்ன தெரியும்... எதுவும் தெரியாது. அவர் எப்படி வேளாண் சட்ட மசோதா குறித்துக் கருத்துச் சொல்வார்? இந்தியாவிலுள்ள விவசாயிகள் காங்கிரஸ், தி.மு.க-விலுள்ள போலி விவசாயிகளின் பேச்சை நம்பி ஏமாற வேண்டாம்.’’
- ஹெச்.ராஜா, பா.ஜ.க
***
``தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையைப் பின்பற்றுவதற்காக மாநில அரசிடமிருந்து மத்திய அரசுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டதா? அப்படி கோரிக்கை வைக்கப்பட்டிருந்தால், அதில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன?’’
- தமிழச்சி தங்கபாண்டியன், தி.மு.க
``தமிழக அரசிடமிருந்து கோரிக்கை வைக்கப்பட்டது உண்மைதான். புதிய கல்விக் கொள்கைப்படி மும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும். ஆனால், மூன்றாவது மொழியாக எந்த மொழியைக் கற்க வேண்டும் என்பதை மாநிலங்கள் முடிவு செய்துகொள்ளலாம். மாநிலங்களின்மீது எந்த மொழியும் திணிக்கப்படாது.’’
- மத்திய கல்வித்துறை அமைச்சகம்
***
“இன்றுள்ள அமைச்சர்கள் அனைவரும் சசிகலாவால் பதவி பெற்றவர்கள். அவர் விடுதலையாகும்போது கட்சியில் மிகப்பெரிய அதிர்வலைகள் ஏற்படும்.”
- பிரேமலதா விஜயகாந்த், தே.மு.தி.க
“பிரேமலதா விஜயகாந்த் வரலாறு தெரியாமல் எந்த அடிப்படையில் பேசினார் என்பது தெரியவில்லை. தனது கட்சி விவகாரம் குறித்து மட்டும் அவர் பேசினால் நல்லது. எங்கள் அனைவரையும் அமைச்சர்கள் ஆக்கியது புரட்சித்தலைவி ஜெயலலிதாதான்.”
- ஜெயக்குமார், அ.தி.மு.க
***
``தி.மு.க பேசும் கதை, வசனம் மக்களிடம் எடுபடாது.”
- ஆர்.பி.உதயகுமார், அ.தி.மு.க
``எங்கள் தலைவர் கலைஞரின் கதை, வசனம் எடுபட்டதால்தான் 50 ஆண்டுக்காலம் கழித்தும் `மனோகரா’, `பராசக்தி’ வசனத்தைப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.’’
- வாகை சந்திரசேகர், தி.மு.க
No comments:
Post a comment