Tuesday, September 22, 2020

நாடெங்கும் நடக்குது யாகம்! - யாருக்கெல்லாம் அடிக்கும் யோகம்?

‘வாக்கிய’ பஞ்சாங்கப் படி செப்டம்பர் 1-ம் தேதி இடம்பெயர்ந்த ராகு, கேது கிரகங்கள், ‘திருக்கணித’ பஞ்சாங்கப்படி செப்டம்பர் 23-ம் தேதி இடம்பெயரவிருக்கின்றன. இந்த இடப்பெயர்வு களை முன்வைத்து அரசியல் பிரமுகர்கள், வி.வி.ஐ.பி-கள் செய்யும் பரிகார ரகளைகள் ராகுவையும் கேதுவையுமே மிரளவைக்கின்றன. வெளியே பகுத்தறிவுப் பாசறைப் புலிகளாக வலம்வரும் பலரும் பூஜையறைகளில் பரிகார எலிகளாகப் பதுங்கிக்கிடக்கிறார்கள்.


கண்கட்டு வித்தைகள், யட்சினி சூட்சுமங்கள், மாந்திரீக சமாசாரங்கள் என விதவிதமாக வித்தை காட்டுகிறார்கள் அரசியல் தலைவர்கள். அவர்களின் பண்ணை வீடுகளிலும், கிராமத்துத் தோட்டங்களிலும் அனல்பறக்க நடக்கின்றன யாகங்கள். அமைச்சர்களின் கைகளில் பளபளக்கும் கலர் கலரான கயிறுகளின் பின்னணியில் இருப்பவை இந்தச் சடங்குகளே. இடுப்பு மடிப்புகளை அலங்கரிக்கும் தாயத்துகளின் கணக்கு தனி! இன்னும் சிலர் கிரக ராசிக்கேற்ப பச்சை, மஞ்சள், ஊதா, சிவப்பு என்று கண்ணைப் பறிக்கும் வண்ணச் சட்டைகளில் திரிகிறார்கள்.ஆளுங்கட்சியின் உச்சப் பிரமுகர் ஒருவருக்கு இதிலெல்லாம் அசைக்க முடியாத நம்பிக்கை. காலை அவர் கண்விழிப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னதாக பண்டிதர்கள் சிலர், அவரது படுக்கையறைக் கதவு முன்பாக நின்று மந்திரங்களை உச்சாடனம் செய்கிறார்கள். பிறகு, திரும்பிப் பார்க்காமல் அவர்கள் கிளம்பிவிட வேண்டும். அவர்கள் சென்றதும் அந்தத் தலைவர் கண்விழிக்கிறாராம். அதன் பிறகே அவரது அன்றாட வேலைகள் தொடங்குகின்றன. ‘மாற்றுத்திறனாளி ஒருவர் உங்கள் கண் பார்வையிலேயே இருக்க வேண்டும்’ என்று ஜோதிடர் ஒருவர் சமீபத்தில் கொளுத்திப் போட... மாற்றுத்திறனாளி ஒருவரைத் தூக்கிவந்து வீட்டிலேயே அமரவைத்து விட்டார்கள். இந்தத் தலைவருக்காக, தமிழகத்தின் பிரபல நரசிம்மர் கோயில்களில் சுதர்சன ஹோமங்கள் பொறிபறக்கின்றன. இவை தவிர, பண்ணாரி காடுகளில் ரத்தம் சொட்டச் சொட்ட நடக்கின்றன ரகசிய வேள்விகள். அரசியல் அதிகாரத்தில் தன்னை எதிர்த்து யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்பதே இந்த வேள்விகளின் நோக்கமாம்!


பகுத்தறிவு பேசும் தலைவர் ஒருவரின் இல்லத்தரசி அவர். இவர் கிழிக்கும் கோட்டைத் தாண்டி கட்சியின் எந்தவொரு முக்கிய முடிவும் எடுக்கப்படாது. அந்தக் கோட்டுக்குப் பின்னால் இருக்கின்றன சடங்குகளின் சூட்சுமங்கள். உக்கிரமான ‘தேவி’யை சாந்தப்படுத்த தினமும் நடக்கின்றன யாகங்கள். ஆனால், செலவு செய்வதில் கறார் பேர்வழி என்கிறார்கள். இவர்கள் சார்பில் லட்சங்களைக் கொட்டி யாகங்களை நடத்தியவர்களுக்கு பணத்தைத் திருப்பித் தருவதில்லையாம். அதுவே சம்பந்தப்பட்ட தலைவருக்குச் சாபமாக மாறிவருகிறது என்று குமுறுகிறார்கள் செலவுசெய்தவர்கள்.மாநிலத்தில் அத்தனை பேரையும் பாதுகாக்க வேண்டிய காவல் அதிகாரி அவர். அவரது பாதுகாப்புக்கு பங்கம் என்று சிலர் கொளுத்திப்போட... சந்தனக்கட்டைகளை அடுக்கிவைத்து ‘ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுன’ மந்திரம் ஓதிவருகிறாராம். விஷ்ணு எந்திரத்தை வெள்ளித்தட்டில் பொறித்து, அதன் முன்பாக இந்த மந்திரங்களை 1,008 முறை, ஏழு நாள்கள் உச்சாடனம் செய்ய வேண்டும் என்பது ஐதிகம். அப்படிச் செய்தால், ‘யுத்தத்தில் எதிரிகளைவிட இவரிடம் அதிகமான சேனைகள் உருவாகும்’ என்கிறது சாஸ்திரம்!


தமிழகத்தின் நட்சத்திர நடிகர் ஒருவருக்கு அவரது ‘நட்சத்திர’த்திலேயே சிக்கல்! அவரது திருவோண நட்சத்திரத்தில், வரும் ஜனவரி 23-ம் தேதியிலிருந்து அவருக்குக் கட்டம் சரியில்லையாம். இதற்காக உத்தரகாண்ட் மாநிலத்திலும் நேபாளத் திலும் பல தலைமுறைகளாக யாகம் நடத்தும் சாமியார்கள் சிலரைப் பிடித்து பனிமலைகளில் யாகம் வளர்க்கிறார்கள். இவருக்காக அகோரிகள் சிலரும் காசியில் யாகம் நடத்துகிறார்கள்.


ஆளுங்கட்சியில் யுத்ததுக்குப் பெயர்பெற்ற தலைவர் ஒருவர், சோழர்காலச் சுவடிகளைத் தேடிப்பிடித்து அதில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளில் யாகங்களை நடத்துகிறார். தங்கத்தில் பசு உருவச் சிலையைச் செய்து, அதன் வயிற்றுப் பாகத்தில் நுழைந்து வெளியே வந்து, அந்தப் பசுவை தானமாகக் கொடுத்தாராம். வெள்ளிக் காகிதத்தில் அவரது ஜாதகத்தை எழுதி, அதைச் சுருட்டி, சீறிப்பாயும் ஜல்லிக்கட்டுக் காளையின் கொம்பில் துளையிட்டு அதற்குள் பொருத்தியிருக்கிறார்கள். இழந்த அதிகாரத்தைத் திரும்பப் பெறுவதற்கான முயற்சி இது என்கிறார்கள்!


மன்னார்குடிக் குடும்பத்தினர் சித்தர் வழிபாடுகளில் பிரசித்திபெற்றவர்கள். சைவ பூஜை மட்டுமே நடத்துகிறார்கள். பழைமையான பெருமாள் கோயில்களையும் தேடிப்பிடித்து வழிபடுகிறார்கள்.


கைலாசா நாட்டிலிருக்கும் நித்தி, தன்னைச் சுற்றி நெருப்பு வளையமூட்டி அதன் நடுவே அமர்ந்து தியானம் செய்கிறாராம். வரும் அக்டோபர் மாதத்துக்குப் பிறகு சிறைக்குச் செல்ல நேரிடும் என்று கட்டம் காட்டிக்கொடுத்ததால் இந்த அக்னி வளையப் பாதுகாப்பு என்கிறார்கள்.


இந்தச் சடங்குகள் குறித்தெல்லாம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த அட்சய லக்ன பத்தடி ஜோதிடர் பொதுவுடை மூர்த்தியிடம் பேசினோம். “கணவரை இழந்த பெண்கள், ஆதரவற்ற முதியோர், மாற்றுத்திறனாளிகள்... இவர்களுக்கு உதவினாலே அது ராகுவுக்குப் பரிகாரமாக அமையும். வேத பாடசாலைகளுக்கு உதவுவது, அறநெறி நூல்களை தானமாகக் கொடுப்பது ஆகியவை கேதுவுக்குப் பரிகாரமாக அமையும். அதைவிடுத்து, மாந்திரீகர்கள் சொல்வதைச் செய்வதெல்லாம் வேஸ்ட்” என்றார்.


உண்மையான ஜனநாயக வேள்வி, தேர்தல் களம் மட்டுமே. அங்கு பரிகாரப் பலன்களை மக்கள்தான் முடிவுசெய்வார்கள்!


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment