Sunday, September 13, 2020

அங்கே என்ன நடக்கிறது?

கேரளா


* செப்டம்பர் 6-ம்தேதி, கொரோனா நோயாளியான 20 வயதுப் பெண் ஒருவர் ஆம்புலன்ஸ் டிரைவர் நவ்பால் என்பவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது மாநிலம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஆம்புலன்ஸில் பெண் நோயாளிகளை ஏற்றிச் செல்வதற்கு புதிய விதிகள் வகுக்கப்பட்டன.* நாட்டு வெடிகுண்டால் வாயில் காயம்பட்டு, தமிழக-கேரள எல்லையில் ஒரு மாதமாக அவதியுடன் சுற்றிவந்த மக்னா யானை, கேரளாவின் சோலையூர் சாலையில் மயங்கி விழுந்து உயிரிழந்தது. சாலையோரம் இறந்து கிடந்த மக்னாவுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.


* 2,000 கோடி ரூபாய் நிதி மோசடியில் ஈடுபட்டு, கடந்த சில நாள்களாகத் தலைமறைவாக இருக்கிறார் பத்தனம்திட்டாவைச் சேர்ந்த தாமஸ் டேனியல் என்பவர். அவரது வீட்டை போலீஸார் சோதனையிட்டபோது அங்கு சிக்கித் தவித்த நாயைக் கண்டனர். கிட்டத்தட்ட இறக்கும் தறுவாயில் இருந்த அதைக் காப்பாற்றிய காவலர்களைப் பாராட்டிக்கொண்டிருக்கின்றனர் நெட்டிசன்கள்.


மகாராஷ்டிரா

* மும்பையை `மினி பாகிஸ்தான்’ என்று சொன்னதையடுத்து ‘மும்பை வர வேண்டாம்’ என கங்கனா ரணாவத்துக்கு சிவசேனா நிர்வாகிகள் மிரட்டல் விடுத்தனர். ‘தடுத்துப் பாருங்கள்!’ என்று சவால்விட்ட கங்கனா, ஒய் ப்ளஸ் பிரிவு போலீஸ் பாதுகாப்போடு 9-ம் தேதி மும்பை வந்தது மகாராஷ்டிராவின் ஹாட் டாபிக். விதிகளைக் காரணம் காட்டி, அவரது வீட்டின் ஒரு பகுதியை இடித்தது சிவசேனா அரசு. அதற்கும், ‘‘என் வீட்டை இடித்து என்னைப் பழிவாங்கிவிட்டதாக நினைக்கிறீர்களா உத்தவ் தாக்கரே? இன்று என் வீடு இடிந்தது... நாளை உங்கள் வறட்டு கெளரவம் அழியும்’’ என்று வீடியோவில் ரியாக்ட் செய்தார் கங்கனா.* கடந்த வாரம் மும்பை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு விசாரணைக்கு வந்த சுஷாந்தின் தோழி ரியாவைப் பத்திரிகையாளர்கள் சூழ்ந்ததால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து `வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளுங்கள்’ என்று சஞ்சய் தத், சல்மான் கான் ஆகியோர் விசாரணைக்கு வந்தபோது போலீஸார் பாதுகாப்பு வழங்கிய புகைப்படத்தையும், ரியாவைப் பத்திரிகையாளர்கள் சூழ்ந்த புகைப்படத்தையும் பாலிவுட் நடிகைகள் சிலர் பதிவிட்டது வைரலானது.


* மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேயின் காலாபூர் பண்ணை இல்லத்துக்கு இரவு நேரப் பாதுகாப்புப் பணிக்காகச் சென்றுகொண்டிருந்த காவலாளியிடமே முதல்வரின் இல்லத்துக்கு வழி கேட்டு, அங்கு அத்துமீறி நுழைந்த மூன்று பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.


டெல்லி

* டெல்லியில் கடந்த நான்கு மாத காலத்தில் 17 போலீஸார் கோரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். கொரோனாவால் உயிரிழந்த போலீஸார் குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் வழங்குவதாக டெல்லி அரசு தெரிவித்திருந்தது. ஆனால், இதுவரை எந்தக் குடும்பத்துக்குமே நிவாரணம் வரவில்லை என்பதால் கடும் அதிருப்தியிலுள்ள காவல்துறையினர், விரைந்து நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.* ‘ஜி.எஸ்.டி வரி பாக்கியை மத்திய அரசு வழங்காதது துரோகம்’ என அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டியளித்து மத்திய அரசுக்கு ஷாக் கொடுத்தார்.


* டெல்லி அழைத்துவரப்பட்ட பீகாரைச் சேர்ந்த 14 குழந்தைத் தொழிலாளர்களை மீட்டெடுத்துள்ளது டெல்லி ரயில்வே போலீஸ். கொரோனா காரணமாக ஏற்பட்ட வறுமையால் குழந்தைகள் வேலைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


ஆந்திரா

* கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் 2-வது இடத்தில் உள்ளது ஆந்திரா. இருந்தும் அங்கு வரும் 21-ம் தேதியிலிருந்து 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலுமான மாணவர்களுக்குப் பள்ளிகளைத் திறக்க அரசு அனுமதியளித்துள்ளது. மேலும், அரசியல், விளையாட்டு, மதம், கல்வி தொடர்பான கூட்டங்களில் 100 சதவிகிதம் பேர் பங்கு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.* செப்டம்பர் 9-ம் தேதி விவசாயப் பொருள்களை ஏற்றிச் செல்லும் தென்னிந்தியாவின் முதல் கிசான் ரயில், ஆந்திர மாநிலம் அனந்தபூரிலிருந்து டெல்லிக்குப் பழங்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டிருக்கிறது.


* ஆந்திராவிலுள்ள கோதாவரி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற லக்ஷ்மி நரசிம்மர் கோயிலின் 40 அடி உயர ரதம் திடீரென தீப்பற்றி எரிந்தது. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது ஆந்திர அரசு.


* இளைஞர்கள் நலனைப் பாதுகாக்கும் நடவடிக்கையாக ரம்மி, போக்கர் உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு இந்த மாதத் தொடக்கத்திலிருந்து தடை விதித்து உத்தரவிட்டுள்ளார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.


கர்நாடகா

* கர்நாடக மாநிலத்தில் போதைப் பொருள் அதிகம் புழங்குவதாக வந்த தகவலையடுத்து, விரேன் கண்ணா என்பவரை மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் விசாரணை செய்ததையடுத்து கன்னட நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ரானி ஆகியோரையும் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.* கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. 4.03 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்கள், சாலைகள், மேம்பாலங்கள், பள்ளிகள், அரசுக் கட்டடங்கள் ஆகியவை இந்தப் பெருவெள்ளத்தால் நாசமடைந்துள்ளன. இதனால் கர்நாடக மாநிலத்துக்கு சுமார் 8,071 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.


* பெங்களூரு பூங்கா ஒன்றில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த ‘கோமாளி’ பட நடிகை சம்யுக்தாவை அரைகுறை ஆடை அணிந்திருப்பதாக காங்கிரஸைச் சேர்ந்த கவிதா ரெட்டி கடுமையாகத் தாக்கிப் பேசிய வீடியோ கடந்த வார வைரல். இது தொடர்பாக FIR பதிவு செய்தது காவல்துறை. சம்யுக்தாவிடம் கவிதா மன்னிப்பு கோரிய நிலையில், அதை ஏற்றுக் கொண்டு கவிதாவை மன்னித்துவிட்டதாகச் சொல்லியிருக்கிறார் சம்யுக்தா.


உ.பி

* அயோத்தி ராமர் கோயில் கட்டுவதற்காக அமைக்கப்பட்ட `ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா’ அறக்கட்டளையின் வங்கிக் கணக்கிலிருந்து கடந்த வாரத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் பெரிய அளவிலான தொகை எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சம்பவம் அயோத்தி ராம பக்தர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.* உத்தரப்பிரதேசம் நொய்டாவில் உயிரிழந்த 20 வயது ஓட்டுநரை அடையாளம் காண்பதில் அலட்சியம் காட்டி, `அடையாளம் தெரியாத நபர்’ என்று சொல்லி, அவரது உடலை தகனம் செய்ய உத்தரவிட்டிருக்கிறார் சப் இன்ஸ்பெக்டர் பவன். கடந்த மாதமே அவர் காணமல்போனதாகப் புகார் அளித்திருந்த நிலையில், இந்த விஷயமறிந்த ஓட்டுநரின் குடும்பத்தார் கொதித்தெழுந்துவிட்டனர். பவனை பணியிடை நீக்கம் செய்தது உ.பி காவல்துறை.


* கொரோனா வைரஸ் பரவலால் கடந்த மார்ச் 17-ம் தேதி மூடப்பட்ட இந்தியாவின் பாரம்பர்ய நினைவுச் சின்னங்களான ஆக்ரா கோட்டையும் தாஜ்மஹாலும் வரும் செப்டம்பர் 21-ம் தேதியன்று திறக்கப்படவுள்ளன.


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment