‘‘என் வீட்டுக்காரரை கார்ல கடத்திட்டுப் போறாங்க... காப்பாத்துங்கய்யானு ஸ்டேஷன்ல போய் கெஞ்சினோமே... அந்த இன்ஸ்பெக்டர்தான் எங்க வீட்டுக்காரரைக் கடத்திக் கொலை செய்யச் சொன்னாருங்கிற விஷயம் அப்பவே தெரியாமப் போயிடுச்சே...’’ என்று பெருங்குரலெடுத்துக் கதறுகிறார் ஜீவிதா. அவரது நெஞ்சுக்கூட்டில் உறங்கிக்கொண்டிருந்த மூன்று மாதக் குழந்தை, தாயின் அழுகைச் சத்தம் கேட்டு வீறிட்டு அழுகிறது. அதைப் பார்க்கும் சொக்கன்குடியிருப்பு கிராம மக்களின் கண்களும் குளமாகின்றன.
செப்டம்பர் 17-ம் தேதி... தூத்துக்குடி மாவட்டம், சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்த 35 வயது இளைஞரான செல்வனின் பைக் மீது காரில் வந்த கும்பல் ஒன்று திட்டமிட்டு மோதியிருக்கிறது. நிலைதடுமாறிக் கீழே விழுந்த செல்வனை காரில் கடத்திச் சென்று உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்றிருக்கிறார்கள். இந்தக் கொடூரத்தின் பின்னணியில் அதே பகுதியில் சட்டம், ஒழுங்கைப் பராமரிக்கும் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் இருந்திருக்கிறார் என்பதுதான் அதிரவைக்கும் குற்றச்சாட்டு. இந்த வழக்கில் முதல் குற்றவாளியாகவும் அவர் சேர்க்கப்பட்டிருக்கிறார். மூன்று மாதங்களுக்கு முன்னர் தந்தை, மகன் கொல்லப்பட்ட சாத்தான்குளத்துக்கு அருகிலேயே இந்தக் கொடூரமும் நிகழ்ந்திருப்பதுதான் வேதனையிலும் வேதனை.
சொக்கன்குடியிருப்பு கிராமவாசிகளிடம் பேசினோம். ‘‘அ.தி.மு.க-வின் மாவட்ட வர்த்தகப் பிரிவு செயலாளரா இருக்கும் திருமணவேல் என்பவர் இந்தப் பகுதியில கட்டப் பஞ்சாயத்து, நிலமோசடிகள்ல ஈடுபடுறார். ஆளும்கட்சிங்கிறதால அவருக்கு போலீஸ்லயும் செல்வாக்கு இருக்கு. கொல்லப்பட்ட செல்வனோட சித்தப்பாகிட்ட அஞ்சு ஏக்கர் நிலத்தை கிரையம் முடிச்ச திருமணவேல், அதுக்குப் பக்கத்துல இருந்த செல்வன், அவரோட அண்ணன்கள் பங்காருராஜன், பீட்டர் ராஜாவுக்குச் சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலத்தையும் சேர்த்து கம்பிவேலி போட்டுக்கிட்டார். அவங்க மூணு பேரும் எதிர்ப்பு தெரிவிச்சதால ரெண்டு வருஷமாவே நிலப்பிரச்னை ஓடிக்கிட்டிருக்கு.
தட்டார்மடம் போலீஸ் ஸ்டேஷன்ல புகார் செஞ்சா, திருமணவேல் மேல நடவடிக்கை எடுக்காம புகார் செஞ்சவங்க மேலயே பொய் வழக்கு போட்டாங்க. அதனால, மனித உரிமை ஆணையம், நீதிமன்றம்னு போனாங்க. போலீஸ்காரங்க போட்ட வழக்கு ஒண்ணுல ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்குப் போன செல்வன், தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் தொடர்ந்து பொய் வழக்கு போடுறதை நீதிபதிகிட்ட ஆதாரத்துடன் சொன்னார். அது தொடர்பா செப்டம்பர் 18-ம் தேதி முறைப்படி மனு கொடுக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தாரு. அந்த மனுவைக் கொடுத்துடக் கூடாதுங்கிறதுக்காகவே இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், அ.தி.மு.க பிரமுகர் திருமணவேல் ஏற்பாட்டுல செல்வனைக் கடத்திட்டுப் போய் கொலை செஞ்சிருக்காங்க’’ என்று கொந்தளித்தார்கள்.
குடும்பத்தைத் தூணாகத் தாங்கிய செல்வனின் இழப்பால் அவரின் குடும்பமே நிலைகுலைந்து போயிருக்கிறது. சரிவரக் காது கேட்காத தந்தை தனிஸ்லாஸ் தனயனின் மரணத்தை நம்ப முடியாமல் பித்துப்பிடித்ததுபோல முடங்கிக் கிடக்கிறார். தாய் எலிசபெத் அழுது அழுது அடிக்கடி மயக்கமடைந்து விழுகிறார். மூன்று மாதங்களேயான பச்சிளம் குழந்தையை அரவணைத்தபடி கதறிக்கொண்டிருக் கிறார் செல்வனின் மனைவி ஜீவிதா. அவரைத் தேற்றிப் பேசவைத்தோம். ‘‘சொந்த நிலத்தைக் கேட்டதுக்காக எங்க வீட்டுக்காரரை இப்படி அநியாயமா அடிச்சு கொன்னுட் டாங்களே. காக்கிச் சட்டை போட்டவங்களும் மனுஷங்கதானே... அவங்களுக்கும் குடும்பம், குழந்தைகள் இருக்குதானே... இந்தப் பச்சக் குழந்தை நாளைக்கு, ‘எங்கப்பா எங்கம்மா?’னு கேட்டா என்னத்தைச் சொல்லச் சொல்லுறீக?’’ என்று கேட்டபடி வெடித்துக் கதறினார்.
ஜீவிதாவுக்கு ஆறுதல் கூறியபடியே நம்மிடம் பேசினார் செல்வனின் அண்ணன் மனைவி ஜோஸ்பின். ‘‘ஜனவரி 19-ம் தேதி என் கொழுந்தன் பங்காருராஜனை திருமணவேலுவும், அவரோட ஆளுங்களும் கடுமையா தாக்கினாங்க. அதுல காயமடைஞ்சு நெல்லை அரசு மருத்துவமனையில சிகிச்சைக் காகச் சேர்ந்திருந் தாங்க. ஆஸ்பத்திரிக்குப் போன இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் சிகிச்சையிலிருந்த பங்காருராஜனை டிஸ்சார்ஜ் செய்யவெச்சு, ஜீப்புல ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டுப் போய் தலைகீழா கட்டித் தொங்கவிட்டு அடிச்சார். அடுத்தடுத்து வழக்கு போட்டு மூணு பேரையும் குண்டாஸ்ல அடைக்கப்போறதா இன்ஸ்பெக்டர் மிரட்டிக்கிட்டிருந்தார். எல்லாத்தையும் சட்டப்படிப் பார்த்துக்கலாம்னு நினைச்சோம். செல்வனை இப்படி அடிச்சுக் கொல்லுவாங்கன்னு நினைச்சுக்கூடப் பார்க்கலையே...’’ என விம்மி, வெடித்து அழுதார்.
இந்தச் சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணனிடம் கேட்டோம். ‘‘எனக்கும் செல்வன் கடத்தலுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அவர்கள் தொடர்பான எந்த வழக்கையும் நான் விசாரிக்கவில்லை. சப்-இன்ஸ்பெக்டர்தான் நில விவகாரம் உள்ளிட்ட வழக்குகளை விசாரிக்கிறார்’’ என்று சொல்லி போனை கட் செய்தார்.
செல்வன் மரணம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டபோதிலும், அவர்மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து செல்வனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராடினார்கள். அதன் பிறகே, ஸ்டேஷனிலிருந்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அவரை மாற்றினார்கள். இந்தநிலையில், செல்வன் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றுவதாக டி.ஐ.ஜி-யான திரிபாதி அறிவித்தார். அதோடு, இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணனும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
‘‘செல்வனின் மனைவிக்கு அரசு வேலையும், இலவச வீட்டுமனைப் பட்டாவும் வழங்கப்படும். அவர்களின் நிலப் பிரச்னை சுமுகமாக முடித்துக் கொடுக்கப்படும்’’ என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வாக்குறுதியளித்தார். அதையடுத்து, செல்வனின் உடலை வாங்க மறுத்து, நான்கு நாள்களாக நடந்த போராட்டத்தை உறவினர்கள் முடித்துக்கொண்டார்கள்.
வழக்கில் தொடர்புடைய மாவட்ட அ.தி.மு.க வர்த்தக அணிச் செயலாளரான திருமணவேல், கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். திருமணவேலும், அவரின் சகோதரர் முத்துகிருஷ்ணனும் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இருவரிடமும் வாக்குமூலம் பெற, காவல்துறை நடவடிக்கை எடுத்துவருகிறது.
தூத்துக்குடி எஸ்.பி-யான ஜெயக்குமாரிடம் பேசினோம். ‘‘அ.தி.மு.க புள்ளி திருமணவேல் மற்றும் அவருடன் இணைந்து தாக்கியவர்கள்தான் முக்கியக் குற்றவாளிகள். இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணனிடம் துறைரீதியாக விசாரணை செய்யும்போதுதான் நடந்தது என்னவென்று தெரியவரும். ஆனால், சாத்தான்குளம் சம்பவத்துடன் இந்தச் சம்பவத்தை ஒப்பிட்டு காவல்துறையினர்மீது அவதூறு பரப்பி வருகிறார்கள்” என்றார்.
இன்னும் எத்தனை குடும்பங்களைத்தான் கதறவைக்குமோ காவல்துறை! சாத்தான்குளம் சம்பவத்தால் ஏற்பட்ட அவமானங்களிலிருந்துகூட காவல்துறை பாடம் படிக்கவில்லையே என்பதுதான் பொதுமக்களின் கொந்தளிப்பாக இருக்கிறது.
‘‘வாழைத்தோப்பில் தாக்கினார்கள்... வீட்டுக்கருகில் தூக்கில் தொங்கினார்!’’
மதுரை மாவட்டத்திலும் போலீஸார்மீது புகார் எழுந்திருந்திருக்கிறது.
சேடபட்டி அருகேயுள்ள அணைக்கரப் பட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ரமேஷை செப்டம்பர் 16-ம் தேதி இரவு சாப்டூர் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அதன் பின்னர் வீட்டுக்கு அருகிலுள்ள மரத்தில் ரமேஷ் தூக்கில் தொங்கிய சம்பவம், அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
‘காவல்துறையினர் விசாரணைக்கு என அழைத்துச் சென்று கடுமையாகத் தாக்கியதால் ரமேஷ் மர்மமான முறையில் மரணம் அடைந்திருக்கிறார். இதற்குக் காரணமானவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று ரமேஷின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக, பல்வேறு கட்சியினரும் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.
அவர்களிடம் பேசினோம். “ரமேஷின் அண்ணன் இதயக்கனி சொந்தக்காரப் பெண்ணைக் காதலித்தார். சில நாள்களுக்கு முன்னர் இருவரும் ஊரைவிட்டு ஓடி, தலைமறைவாக வாழ்கிறார்கள். தங்கள் பெண்ணுக்கு திருமண வயது வரவில்லை என்று பெண் தரப்பினர் புகார் செய்திருந்தார்கள். பெண்ணின் தந்தைக்கு எஸ்.ஐ ஜெயக்கண்ணன் நெருக்கம். அதனால், இதயக்கனியின் குடும்பத்தாரிடம் கொஞ்சம் ஓவராக விசாரணை நடத்தியிருக்கிறார். சம்பவம் நடந்த அன்று ரமேஷை அழைத்துச் சென்று வாழைத்தோப்பில் வைத்து தாக்கியிருக் கிறார்கள். அப்போது பெண் வீட்டுத் தரப்பினரும் அருகில் இருந்திருக்கிறார்கள். அதற்குப் பிறகுதான் ரமேஷ் தூக்கில் தொங்கியிருக்கிறார். அண்ணன் செய்த தவறுக்கு தம்பி எப்படிப் பொறுப்பாக முடியும்? சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவுசெய்ய வேண்டும்” என்றனர்.
ஆர்.டி.ஓ விசாரணை நடத்திய பிறகு, அவரின் பரிந்துரையில் சம்பந்தப்பட்ட எஸ்.ஐ-கள் ஜெயக்கண்ணன், பரமசிவம் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், ரமேஷின் பெற்றோருக்கு முதியோர் உதவித்தொகையும், மூன்று சென்ட் நிலமும் வழங்க ஆர்.டி.ஓ உத்தரவிட்டிருக்கிறார். இந்தநிலையில், ‘மாணவர் ரமேஷ் மரணம் பற்றி விளக்கமளிக்க வேண்டும்’ என்று மதுரை எஸ்.பி-க்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.
No comments:
Post a comment