Friday, September 04, 2020

உங்கள் தொண்டர்கள் உற்சாகமாக இருக்கிறார்களா ஸ்டாலின்?

 “நான், தலைவர் கலைஞர் இல்லை. அவரைப்போல் எனக்குப் பேசத் தெரியாது; பேசவும் முடியாது. அவரைப்போல் மொழியை ஆளத் தெரியாது. ஆனால், எதையும் தொடர்ந்து முயன்று பார்க்கும் துணிவு பெற்றிருக்கிறேன்.” - 2018, ஆகஸ்ட் 28-ல் தி.மு.க-வின் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டபோது உணர்ச்சி பொங்கச் சொன்ன வார்த்தைகள் இவை. இதோ... தி.மு.க-வின் தலைவராக இரண்டாண்டுகளை வெற்றிகரமாகக் கடந்திருக்கிறார் மு.க.ஸ்டாலின்!


`வாரிசு அரசியல்’ என்கிற விமர்சனம் தி.மு.க மீது எப்போதும் கடுமையாக வைக்கப்படும் ஒன்று. ஆனால், ஸ்டாலின் தலைவரானதை அப்படி மொத்தமாக முத்திரை குத்த முடியாது என்கின்றனர் தி.மு.க-வினர். இளைஞர் அணிச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர், பொருளாளர், செயல் தலைவர் என்று படிப்படியாகத் தலைவர் பதவியை எட்டிப் பிடித்தவர் ஸ்டாலின்.


தி.மு.க என்கிற இயக்கமே ‘திராவிடச் சித்தாந்தம்’ என்கிற ஆணிவேரால் உருவான ஆலமரம். அதை ஸ்டாலினும் நன்கு அறிந்தவர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்கு ஆதரவான அலை நாடு முழுவதும் அடித்தபோது, காங்கிரஸ் கட்சியே கதிகலங்கித் தவித்தது. தென்னகத்திலிருந்து, “சாடிஸ்ட் மோடி ஆட்சிக்கு முடிவுகட்டுங்கள்” என்று உரக்கக் குரல் கொடுத்தார் ஸ்டாலின். பிற மாநிலத் தலைவர்கள் ஸ்டாலினைப் புருவம் உயர்த்திப் பார்த்தார்கள்.


நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்களில் எதிர்க்கட்சியாக இருந்துகொண்டே ஆளும்கட்சியைவிட அதிக பொறுப்புகளைக் கைப்பற்றியது; மூன்றாவது பெரிய கட்சியாக நாடாளுமன்றத்தில் தி.மு.க-வை அமரவைத்தது என தி.மு.க தலைவராக ஸ்டாலினின் அரசியல் கிராஃப் கடந்த இரண்டாண்டுகளில் ஏறியிருக்கிறது.


அதேவேளையில், தன்னிடமுள்ள சில குறைகளையும் ஸ்டாலின் களைந்துகொள்ள வேண்டும்.


தனக்கு மிக நெருக்கமானவர்களாக இருந்தாலும் சரி, தவறு செய்தால் தண்டிக்கும் கண்டிப்பு கருணாநிதியிடம் இருந்தது. மின்துறை அமைச்சராக ஆற்காடு வீராசாமி சரியாகச் செயல்படவில்லை என்றதும், யோசிக்காமல் அவரை ஒதுக்கினார் கருணாநிதி. அதேபோல், தன் தோள்மீது தூக்கி வளர்த்த துரைமுருகன், தான் சொன்னதைக் கேட்காமல் அலட்சியமாக இருந்தார் என்பதற்காக பொதுப்பணித்துறையைப் பறிக்கும் துணிவும் கருணாநிதியிடம் இருந்தது. ஆனால், ஸ்டாலினிடம் இந்த விஷயத்தில் தெளிவும் உறுதியும் இல்லை.


எந்தெந்தப் பகுதியில் யாருக்குச் செல்வாக்கு இருக்கிறது, எந்தச் சமூகத்துக்கு எவ்வளவு பிரதிநிதித்துவம் தர வேண்டும் என்கிற தரவுகள் கருணாநிதியின் விரல்நுனியில் இருக்கும். அந்த வித்தையை ஸ்டாலினால் இன்னும் கற்றுக்கொள்ள முடியவில்லை. தலைமைக் கழகத்தில் பரிதிக்குப் பின்னால் யாருக்கும் வாய்ப்பு இல்லையே என்கிற பெருமூச்சு, ஒடுக்கப்பட்ட மக்களின் ஒரு பிரிவினரிடம் இப்போதும் உள்ளது. இது ஸ்டாலினின் கவனத்துக்கு இதுவரை வந்ததாகத் தெரியவில்லை.


கட்சிக்குள் இதுவரை அமைக்கப் பட்ட விசாரணைக்குழுக்களின் அறிக்கைகள் அலமாரியில் உறங்குகின்றன. மாவட்டவாரியாக நிர்வாகிகளைச் சந்தித்து, கேட்டறிந்த குறைகள் மீதான நடவடிக்கை என்ன? `ஒருவருக்கு இரட்டைப் பதவி இருக்கக் கூடாது’ என்ற அறிவிப்பு இன்றுவரை நிறைவேறாதது ஏன்? மாவட்டச் செயலாளர்களால் பாதிக்கப்பட்ட தொண்டர்கள் எந்த நம்பிக்கையில் தலைமையை அணுகுவார்கள்? இப்படி நிறைய கேள்விகள் ஸ்டாலினின் ‘தலைமை’ மேசையில் கொட்டிக் கிடக்கின்றன.


‘கழகம் ஒரு குடும்பம்’ என்று தொண்டர்கள் நினைக்கிறார்கள். ஆனால், ஸ்டாலினின் நடவடிக்கை பல நேரங்களில், ‘ஒரு குடும்பம் மட்டுமே கழகம்’ என்று நினைக்கவைத்துவிடுகிறது. 70 வயதை நெருங்கும் ஸ்டாலின், தனக்குத் துணையாக மகனையும் மருமகனையும் வைத்துக்கொள்ளட்டும். அதில் ஒரு பிரச்னையும் இல்லை. ஆனால், மகனுக்கும் மருமகனுக்கும் நெருக்கமானவர்களுக்கு மட்டுமே பதவி வழங்கப்பட்டால்... எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, சொந்தக் கட்சிக்காரர்களே வசைபாடத்தான் செய்வார்கள்!


கருணாநிதி தலைவராக இருந்தபோது, தி.மு.க-வின் இளைஞரணிச் செயலாளராக இருந்த ஸ்டாலின், தனியாக எந்தவொரு கருத்தையும் தெரிவிக்க மாட்டார். தலைமையின் கருத்து ஒருமித்ததாக இருக்கும். ஆனால், இப்போது தலைவர் ஸ்டாலினின் கருத்துக்குப் பிறகு, இளைஞரணியிலிருந்து வேறோரு கருத்து வருகிறது. இதை ஸ்டாலினும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை; தடுக்கவும் இல்லை. அரசியல் தலைமையைக் கையாள்வதில் இதுவெல்லாம் முக்கியமான அம்சம்.


`வேறு கட்சிகளிலிருந்து புதிதாக வந்தவர்களுக்கு தி.மு.க-வில் தரப்படும் முக்கியத்துவம், பல ஆண்டுகளாக தி.மு.க-வில் இருப்பவர்களுக்குக் கொடுக்கப் படுவதில்லை’ என்கிற குரல்கள் கட்சிக்குள் ஓங்கி ஒலிக்கின்றன. ‘கண்டிப்பு, அரவணைப்பு’ என்கிற இரண்டு மாயக்கோல் களைக் கையில்வைத்திருந்தார் கருணாநிதி. அதுவே, பல சோதனைகளைச் சந்தித்த தி.மு.க-வை மீண்டும் மீண்டும் எழுந்துவரச் செய்தது. இன்று ஸ்டாலினுக்கு எதிரான குரல்கள் கட்சிக்குள் இல்லாததுபோன்ற ஒரு பிம்பம் இருக்கலாம், ஆனால், பலரது குமுறல்கள் உள்ளுக்குள் நீறுபூத்த நெருப்புபோலக் கனன்று கொண்டுதான் இருக்கின்றன. அந்த நெருப்பைக் கொழுந்துவிட்டு எரியவைக்கும் பணியைத்தான் இப்போது பா.ஜ.க செய்ய ஆரம்பித்திருக்கிறது. இனியும் தன்னைச் சுற்றியிருக்கும் சில ஆளுமைகளுக்கு மட்டுமே இவர் செவிசாய்த்துவந்தால் கட்சிக்குள்ளே கலகம் பிறக்கும்!


“என்னைப்போல் ஒருவர்தான் தி.மு.க தொண்டர். நான் உற்சாகமாக இருக்கும்போது அவரும், அவர் உற்சாகமாக இருக்கும்போது நானும் என மாறி மாறி உற்சாகம் பெறுகிறோம்” - இது, ஒரு பேட்டியில் கருணாநிதி சொன்ன கருத்து. தொண்டனின் முதுகெலும்பு பலத்தில்தான் கட்சிப் பந்தல் எழுந்து நிற்கிறது என்பதை கருணாநிதி அறிந்திருக்கிறார்.


ஸ்டாலின் அவர்களே... நீங்கள் உற்சாகமாக இருக்கிறீர்கள்; உங்கள் தொண்டர்கள் உற்சாகமாக இருக்கிறார்களா?


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment