* போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கி, தகிக்கிறது பாலிவுட். இந்தநிலையில், நடிகை ஸ்ரீரெட்டி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் வீடியோ அறிவிப்பு ஒன்று தீயாகப் பற்றி எரிகிறது. அதில், `டோலிவுட்டில் நிறைய நடிகர், நடிகைகள் போதைப் பழக்கமுடையவர்கள். பெரிய ஹோட்டல்களில் நடக்கும் பார்ட்டிகள் அனைத்திலும் போதைப்பொருள் பயன்படுத்தப்படுகிறது. அங்கு ஏராளமான இளம் பெண்களுக்கு போதைப்பொருள் கொடுக்கப்பட்டு, அவர்களைப் பாலியல்ரீதியாகப் பயன்படுத்துகிறார்கள். போலீஸ் எனக்குப் பாதுகாப்பு கொடுத்தால், சில பிரபலங்களின் பெயர்களை வெளியிடத் தயார்’ என்று கூறியிருக்கிறார்.
* ‘கேம் ஓவர்’ படத்தைத் தொடர்ந்து, சமந்தாவைவைத்து ஹீரோயின் சென்ட்ரிக் படத்தை இயக்குகிறார் அஷ்வின் சரவணன். இந்தப் படத்தில் மாற்றுத்திறனாளியாக சமந்தா நடிப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. பிரசன்னாவும் இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
* விஷாலுடன் பிரச்னை ஏற்பட்டதால் `துப்பறிவாளன் 2’ படத்திலிருந்து விலகிய இயக்குநர் மிஷ்கின், சிம்புவுக்கும் அருண் விஜய்க்கும் வெவ்வேறு கதைகளைச் சொல்லியிருந்தார். அந்தப் படங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்தநிலையில், ‘பிசாசு’ படத்தின் சீக்வெலை விரைவில் ஆரம்பிக்கவிருக்கிறார் மிஷ்கின். அதன் நாயகியாக நடிப்பவர் ஆண்ட்ரியா.
* அறிமுக இயக்குநர் சுஜானா ராவ் இயக்கத்தில் `கமனம்’ என்ற ஆந்தாலஜி படம் உருவாகியிருக்கிறது. அதில் ஸ்ரேயா நடித்திருக்கிறார் என்பதை அவரது பிறந்த நாளன்று அறிவித்தது படக்குழு. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகியிருக்கும் இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த ஆந்தாலஜி கதையின் இன்னொரு பகுதியில் நித்யா மேனன் கர்னாடக இசைப் பாடகியாக நடித்திருக்கிறார்.
* மாதவன், அனுஷ்கா, அஞ்சலி, ஷாலினி பாண்டே ஆகியோர் நடித்திருக்கும் த்ரில்லர் ஜானர் படம்தான் ‘நிசப்தம்.’ இந்தப் படம் வரும் அக்டோபர் 2-ம் தேதி அமேஸான் ப்ரைமில் நேரடியாக வெளியாகவிருக்கிறது. இதைத் தொடர்ந்து, மாதவன் - ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் ‘மாறா’ படத்தையும் நேரடி ஓ.டி.டி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்கள். இது, மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்து ஹிட்டான `சார்லி’ படத்தின் ரீமேக்.
No comments:
Post a comment