Friday, September 25, 2020

மிஸ்டர் கழுகு: உதயநிதிக்கு அன்பில் அர்ச்சனை!

கையில் லட்டு பிரசாதத்துடன் வந்தார் கழுகார். “புரட்டாசி மாதம் வேண்டுதலோ?” என்றோம். லட்டைக் கிள்ளி நமக்குத் தந்தவர், “வழியில் என்னை அடையாளம் கண்டுகொண்ட உம் வாசகர் ஒருவர்தான் பிரசாதம் கொடுத்தார். ‘புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை தரிசித்தால் எண்ணியவை தடையின்றி நடக்கும்’ என்பது நம்பிக்கை. அதே நம்பிக்கையுடன், அன்பில் மகேஷ், ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசித்திருக் கிறார். எல்லாம் உதயநிதிக்காகத்தான்” என்றபடி செய்திகளுக்குள் தாவினார் கழுகார்.


“ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்துக்கு செப்டம்பர் 19-ம் தேதி வந்த தி.மு.க-வின் திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் அன்பில் மகேஷ், விஸ்வரூப தரிசனத்தில் பெருமாளை 20 நிமிடங்களுக்கும் மேலாக தரிசித்திருக்கிறார். உதயநிதி பெயரிலும், அன்பில் பெயரிலும் சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்பட்டன. சமீபத்தில், ‘கட்சி மேலிட நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கியிருக்கும்படி’ தி.மு.க தலைவர் ஸ்டாலின் கடுகடுத்திருந்தது மகேஷின் மனதை முள்ளாகத் தைத்துவிட்டதாம். மகேஷைச் சமாதானப்படுத்திய கிச்சன் கேபினெட், ‘ஸ்ரீரங்கம் பெருமாளை தரிசிச்சிட்டு வா. எல்லாம் சரியாகிடும். அப்படியே உதயநிதிக்கும் சேர்த்து வேண்டிக்கோ’ என்று ஆலோசனை அளித்ததாம். பெருமாளை தரிசித்த அன்று மாலையே பத்திரிகையாளர்களைச் சந்தித்த மகேஷ், ‘வரும் சட்டமன்றத் தேர்தலில் உதயநிதி போட்டியிட வேண்டும். ஒரு நண்பனாக இது என் ஆசை’ என்று உருகியிருக்கிறார்!”“இதுவும் கிச்சன் கேபினெட் ஆலோசனைதானா?” என்று கண்சிமிட்டினோம். கண்டுகொள்ளாத கழுகார், “தி.மு.க-வுக்குள் சமீபத்தில் நடந்த களேபரம் ஒன்று தெரியுமா... ‘மு.க.அழகிரியிடம், ஸ்டாலின் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார்’ என்று பரபரப்பாக ஒரு விஷயம் ஓடியது. உண்மையில், அழகிரியைத் தொடர்புகொண்டது துரைமுருகன்தான். தேர்தலுக்கு முன்பாக அழகிரியைச் சரிக்கட்டி வைக்கும்படி துரைமுருகனுக்கு அசைன்மென்ட் தரப்பட்டதாம். இதையடுத்து அழகிரியை துரைமுருகன் தொடர்புகொண்டபோது, ‘முதல்ல என் மகனுக்கு தி.மு.க அறக்கட்டளையில் பொறுப்பு கொடுங்க. பிறகு பேசிக்கலாம்’ என்று வெறுப்பாக பதில் வந்திருக்கிறது. பதிலுக்கு துரைமுருகன், ‘அதைத் தேர்தல் முடிஞ்சதும் பார்த்துக்கலாம் தம்பி’ என்று மென்று விழுங்க... ‘தேர்தல் முடிஞ்ச பிறகு என்னை எதுக்கு கண்டுக்கப்போறீங்க... செய்யறதா இருந்தா இப்பவே செய்யுங்க’ என்று நெருப்பைக் கக்கிவிட்டு போனை வைத்துவிட்டாராம் அழகிரி.”


“சரிதான்!”


“தி.மு.க முப்பெரும் விழா செப்டம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைத்த ஐபேக் நிறுவனம், அண்ணா குறித்த குறும்படம் ஒன்றையும் திரையிட்டது. ‘எல்லோரும் நம்முடன்’ என்ற இணையவழி உறுப்பினர் சேர்க்கைத் திட்டத்தை ஸ்டாலின் தொடங்கிவைக்க, அதை பத்து ஐபேக் ஊழியர்கள் லேப்டாப் சகிதமாக மேற்பார்வை செய்தனர். இதற்கான செலவை ஒரு மாவட்டச் செயலாளரிடமிருந்து கறந்துவிட்டார்களாம். ‘இவங்க படம்போட்டுக் காட்டினதுக்கு என்கிட்ட பில் போட்டுட்டாங்க!’ என்று புலம்பியிருக்கிறார் அந்தப் புதிய மாவட்டச் செயலாளர்.”


“அரசனையே போண்டியாக்கி விடுவார்கள் போல... சரி, அ.தி.மு.க-வில் என்ன நடக்கிறது?”


துரைமுருகன் - அழகிரி

“உமக்குத் தெரியாததா? உமது நிருபர் கொடுத்த அ.தி.மு.க தொடர்பான கவர் ஸ்டோரியைப் படித்தேன். கச்சிதம். வேறு சில ஏரியா செய்திகளைச் சொல்கிறேன்... புதிய மாவட்டமான மயிலாடுதுறைக்கு நகரச் செயலாளராக இருந்த செந்தில்நாதன், மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக் கிறார். இந்தப் பொறுப்பை எதிர்பார்த்திருந்த பூம்புகார் எம்.எல்.ஏ பவுன்ராஜ், சீர்காழி எம்.எல்.ஏ-வான பாரதி, மயிலாடுதுறை எம்.எல்.ஏ-வான ராதாகிருஷ்ணன் ஆகிய மூவருமே கடும் அப்செட். பவுன்ராஜுக்கு ஆதரவாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் காய்நகர்த்தியும் வேலைக்கு ஆகவில்லை. செப்டம்பர் 16-ம் தேதி ஓ.எஸ்.மணியனுடன், முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து மூன்று எம்.எல்.ஏ-க்களும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ‘செந்தில்நாதனின் தம்பி மணி ‘மாவீரன் வன்னியர் சங்கம்’ என்ற கட்சியை நடத்துகிறார். கட்டப் பஞ்சாயத்து செய்கிறார். குறிப்பிட்ட சமூக மக்கள் அவரை அச்சத்துடன் பார்க்கிறார்கள். அப்படிப்பட்டவரின் அண்ணனை மாவட்டச் செயலாளராக நியமித்திருப்பது நியாயமா?’ என்று கொந்தளித்திருக்கிறார்கள்.”


“முதல்வர் என்ன சொன்னாராம்?”


“வழக்கம்போல, ‘இது கே.பி.முனுசாமி தலைமையிலான ஐவர் குழுவின் முடிவு’ என்று பூசி மெழுகிவிட்டாராம். கட்சியின் ஒருங்கிணைப்பாளரான பன்னீர்செல்வத்திடமும் மூன்று எம்.எல்.ஏ-க்கள் புலம்பியிருக்கிறார்கள். அதற்கு, ‘உங்க மேல ஏகப்பட்ட புகார் வருது. லோக்கல்ல ஏதாவது செஞ்சு கொடுத்தாத்தானே கட்சிக்காரன் வேலையைப் பார்ப்பான். எல்லாத்தையும் நீங்களே எடுத்துக்குறதா புலம்புறாங்க. உளவுத்துறை ரிப்போர்ட்டும் உங்களுக்குச் சாதகமா இல்லை. பிறகுதான், செந்தில்நாதனை கமிட்டி பரிந்துரைச்சுது. கமிட்டியின் சிபாரிசை நிராகரிக்க முடியாது. இனிமே இதைப் பத்திப் பேசிக்கிட்டு இருக்காம, கட்சிப் பணிகளைப் பாருங்க...’ என்று வெந்நீர் ஊற்றாத குறையாக அனுப்பிவைத்திருக்கிறார் பன்னீர்!”


“டெல்டாவில் வைத்திலிங்கமும் கடும் அதிருப்தியில் இருக்கிறாராமே?” என்றபடி கழுகாருக்கு சூடாக ஏலக்காய் டீயை நீட்டினோம்.


“ஆமாம்” என்றபடி டீயை ருசித்த கழுகார், “கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில், ‘11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை நியமிக்க வேண்டும்’ என்று வைத்திலிங்கம் தீவிரம் காட்டினாராம். வைத்தியின் கோபத்துக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக, அமைச்சர் வேலுமணியின் ஆதிக்கம் தஞ்சாவூர் மாவட்டத்திலும் கொடிகட்டிப் பறப்பது அவரை கடும் அதிருப்தி அடையவைத்திருக்கிறது. இது தொடர்பாக எடப்பாடியிடம் முறையிட்டும், எந்தப் பலனும் இல்லையாம். இதனால், முட்டி மோதிப் பார்த்துவிடுவதென்றுதான் ‘வழிகாட்டுதல் குழு அமைக்க வேண்டும்’ என்று கல்லெறிந்தாராம் வைத்தி!”


பொன்.ராதாகிருஷ்ணன், வைத்திலிங்கம், சிதம்பரம்

“ம்ம்... பா.ஜ.க-வில் அண்ணாமலை மீது அவர் கட்சியினரே கடுப்பில் இருக்கிறார்களாமே?”


“பா.ஜ.க-வில் ஏற்கெனவே சக்ரவர்த்தி, நயினார் நாகேந்திரன், வி.பி.துரைசாமி, வானதி சீனிவாசன், பேராசிரியர் கனகசபாபதி உள்ளிட்ட பத்து பேர் மாநிலத் துணைத் தலைவர்களாக இருக்கின்றனர். இவர்கள் போதாதென்று, அண்ணாமலையையும் துணைத் தலைவராக்கிவிட்டது கட்சித் தலைமை. இதைத் தொடர்ந்து, அனைத்து இடங்களிலும் அண்ணாமலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக மற்ற கட்சி நிர்வாகிகளிடம் புகைச்சல் எழுந்திருக்கிறது. இப்படித்தான், கோவையில் மோடி பிறந்தநாளுக்கு நாளிதழில் கொடுக்கப்பட்ட விளம்பரம் ஒன்றில், அண்ணாமலையின் படத்தைப் போட்டுவிட்டு, சீனியரான கனகசபாபதியின் படத்தைப் போடவில்லையாம். இதுதான் கட்சியினரின் கடுப்புக்குக் காரணம்.”


“பொன்.ராதாகிருஷ்ணனும் அப்செட்டாமே?”


“ஆமாம். கன்னியாகுமரி மாவட்ட மீனவர் சமூக முக்கியஸ்தர்களும் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மீனவர் சமூக முக்கியஸ்தர்களும் சமீபத்தில் ரகசியக் கூட்டம் போட்டிருக்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பலரும், ‘நம்மை பா.ஜ.க-வைக் காட்டி பயமுறுத்தியே ஓட்டு வாங்குகிறார்கள். பிறகு யாரும் கண்டுகொள்வ தில்லை. இந்த முறை கன்னியாகுமரி எம்.பி இடைத்தேர்தலில் பா.ஜ.க சார்பில் ஒரு மீனவரை வேட்பாளராக நிறுத்தினால்தான் அந்தக் கட்சிக்கு வாக்களிப்போம்’ என முடிவெடுத்துள்ளனராம். இது தொடர்பாக பா.ஜ.க மேலிடத்துக்கும் அவர்கள் தகவல் அனுப்பியிருக்கிறார்கள். ஒருவேளை, இவர்களின் கோரிக்கையை பா.ஜ.க ஏற்றுக்கொண்டால் திருத்தமிழ் தேவனார், புதூர் கண்ணன், தூத்தூர் எட்வின் ஜெரோம், குறும்பனை டிக்சன், ராமன்துறை ரீகன் என மீனவர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்குத்தான் பா.ஜ.க சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமாம். பொன்.ராதாவுக்கு சீட் கிடைக்காது. இதனாலேயே, அவர் ஏகத்துக்கும் அப்செட் என்கிறார்கள்” என்று சிறகுகளைப் படபடத்த கழுகார்,


“முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு செப்டம்பர் 16-ம் தேதி பிறந்தநாள். இதையொட்டி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியோ, ராகுல் காந்தியோ வாழ்த்துச் சொல்லவில்லையாம். அதேநேரம், கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் சட்டமன்ற பொன்விழாவையொட்டி, அவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார் ராகுல். ‘சமீபத்தில், காங்கிரஸில் சர்ச்சையைக் கிளப்பிய ஒரு கடிதத்தின் பின்னணியில் ப.சிதம்பரம் இருப்பதாகத் தலைமை கருதுகிறது. அந்தக் கோபத்தின் வெளிப்பாடாகத்தான் வாழ்த்துச் சொல்லவில்லை’ என்கிறது சத்தியமூர்த்தி பவன் வட்டாரம். இதனால் மனம் நொந்தவர், காரைக்குடி அருகே மானகிரியிலுள்ள தனது இல்லத்தில் முடங்கிவிட்டாராம்” என்றபடி விண்ணில் பறந்தார் கழுகார்.


கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட்!


* சசிகலா சம்பந்தப்பட்ட 13 நிறுவனங்களில் ஒரு நிறுவனத்தின் சொத்துகளை மட்டுமே தற்போது வருமான வரித்துறை முடக்கியிருக்கிறதாம். “இப்போது எந்த நடவடிக்கையும் வேண்டாம். தேவைப்படும்போது பார்த்துக்கொள்ளலாம்” என டெல்லியிலிருந்து வந்த உத்தரவால், மீதி 12 நிறுவனங்கள் தொடர்பான ஆவணங்களை ஓரமாக எடுத்துவைத்துவிட்டதாம் வருமான வரித்துறை.


* தமிழகத்தின் தடித்த மீசைக்கார அமைச்சர் ஒருவரும், அ.தி.மு.க தென்மண்டலப் பிரமுகரின் உதவியாளரும் மிகவும் நெருக்கம். அந்த உதவியாளர் கொடுத்த ஐடியாவில் கம்போடியா நாட்டில் ‘கனமான’ முதலீடுகளைச் செய்திருக்கிறாராம் அமைச்சர்.


* ஆட்சிபீடத்தின் முக்கியஸ்தர் ஒருவர் தமிழக வனத்துறையைச் சார்ந்து ஒரு தனியார் நிறுவனத்தைத் தொடங்கினாராம். அதற்கு மத்திய அரசின் அனுமதியை எதிர்பார்த்திருக்கிறார். ஆனால், மத்திய அரசு முகத்தைத் திருப்பிக்கொண்டதாம். இதனால், அந்த நிறுவனத்துக்கு எப்போது வேண்டுமானாலும் சிக்கல் ஏற்படலாம் என்கிறார்கள்.


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment