Saturday, September 12, 2020

மிஸ்டர் கழுகு: சீனியாரிட்டி படிதான் பதவியா? - கொந்தளிக்கும் கனிமொழி ஆதரவாளர்கள்...

 “ஒருவழியாக ஆன்லைனிலேயே பொதுக்குழுவை நடத்தி முடித்துவிட்டார்கள்போல!” என்றபடி என்ட்ரி கொடுத்தார் கழுகார். “தி.மு.க பொதுக்குழு சுவாரஸ்யங்களைக் கொட்டப்போகிறீர்... அப்படித்தானே...” என்றபடி கழுகாருக்கு சுடச்சுட வெங்காய பஜ்ஜியை நீட்டினோம். தேங்காய்ச் சட்னியுடன் பஜ்ஜியை சுவைத்த கழுகார், “மகிழ்ச்சி, நெகிழ்ச்சி, ஆனந்தக் கண்ணீர் என்று அரங்கேறிய பொதுக்குழுவில் சில கோபதாபங்களும் நிழலாடியுள்ளன” என்றபடி செய்திகளுக்குள் தாவினார்.


“துணைப் பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்ட ஆ.ராசா, ‘பொதுப்பிரிவில் எனக்குப் பதவி கொடுத்த கட்சித் தலைமைக்கு நன்றி’ என்று சொல்லி, ‘நான் கோட்டாவில் இந்தப் பதவிக்கு வரவில்லை’ என்பதை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதைப்போலச் சொல்லிவிட்டார். தங்களுக்குப் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று மதுரை தி.மு.க-வினர் எதிர்பார்த்தார்கள். ஆனால், தேவையற்றதைப் பேசி, சர்ச்சையை இழுத்துவிடக் கூடாது என்பதற்காகப் பேச வாய்ப்பளிக்கவில்லை. அதேபோல, ‘பிற கட்சியிலிருந்து வந்தவர்களுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள்’ என்கிற புலம்பல் இருந்தது. அதையும் சரிக்கட்ட, பிற கட்சியிலிருந்து வந்தவர்களுக்குப் பேச வாய்ப்பு வழங்கவில்லை.”


கனிமொழி


“தி.மு.க மகளிரணிச் செயலாளர் கனிமொழித் தரப்பு கடும் அதிருப்தி என்கிறார்களே?”


“சற்குணபாண்டியன் மறைவுக்குப் பிறகு, துணைப் பொதுச்செயலாளர் பதவி கனிமொழிக்குத் தரப்படும் என்று அவரின் ஆதரவாளர்கள் எதிர்பார்த்தார்கள். அது கிடைக்கவில்லை. பிறகு பொருளாளர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தார்கள். ஆனால், மக்களவை தி.மு.க குழுத் தலைவராக இருக்கும் டி.ஆர்.பாலுவுக்குப் பொருளாளர் பதவியை அளித்துவிட்டது கட்சித் தலைமை. இதனால், கனிமொழியின் ஆதரவாளர்கள் கொந்தளிப்பில் இருக்கிறார்கள். இது குறித்து கட்சித் தலைமையிடமும் அவரின் ஆதரவாளர்கள் கேட்டிருக்கிறார்கள். அதற்கு, ‘சீனியாரிட்டி அடிப்படையில்தான் பதவிகள் நிரப்பப்படுகின்றன’ என்று பதில் வந்ததாம்.”


“பிறகு என்ன ஆனதாம்?”


“இதைக் கேட்டு மேலும் கொதித்துப்போய் விட்டார்கள் கனிமொழியின் ஆதரவாளர்கள். ‘சீனியாரிட்டிபடிதான் பொறுப்புகள் வழங்கப்படுகின்றன என்றால், இளைஞரணிச் செயலாளர் பதவி உதயநிதிக்கு எப்படி ஒதுக்கப்பட்டது? சிற்றரசு, நாமக்கல் ராஜேஷ் உள்ளிட்டோருக்கு மாவட்டப் பொறுப்பாளர் பதவிகள் எப்படி வழங்கப்பட்டன?’ என்று ஆவேசப்படுகிறார்கள். ‘சமீபகாலமாகத் தென்மாவட்டங்களில் பல ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை கனிமொழி மேற்கொள்கிறார். சமீபத்தில், ‘இந்தி தெரியாது போடா’ வாசகத்தை தேசிய அளவில் வைரலாக்கி, கட்சியின் ஸ்கோரை ஏற்றினார். இதை மனதில்வைத்தாவது பதவி கொடுத்திருக்கலாம்’ என்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள்.”


“பொதுக்குழு முடிந்தவுடன் பேசுவேன் என்று முழங்கினாரே மு.க.அழகிரி?”


“இதுவரை எதுவும் பேசவில்லை. கட்சிக்குள் எஞ்சியிருக்கும் அவரின் ஆதரவாளர்கள் ஒரு சிலர்கூட விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார்கள். இன்னொரு பக்கம், தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா தரப்பினரும் அதிருப்தியில் இருக்கிறார்களாம். பொதுக்குழுக் கூட்டம் ஆரம்பித்த பிறகும் திருச்சி கலைஞர் அறிவாலயத்துக்கு வரவில்லை சிவா. கன்டோன்மென்ட்டிலுள்ள அவரது வீட்டில் இருப்பதாகத் தகவல் தெரிந்து, கட்சித் தலைமையிலிருந்து போன் போனதாம். அதன் பிறகே கிளம்பிவந்து, ஒரு மணி நேரம் தாமதமாகக் கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறார் சிவா.”


“அவருக்கு அப்படியென்ன விரக்தி?”


“தனக்கு ஜூனியரான ஆ.ராசாவுக்குத் துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப் பட்டது முதல் விரக்தி. செப்டம்பர் 14-ம் தேதி மாநிலங்களவைத் துணைத் தலைவர் தேர்தல் நடக்கவிருக்கிறது. முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் பதவிக்கு தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி சார்பில் மாநிலங்களவை எம்.பி-யான சிவாவை முன்னிறுத்த, பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. ஆனால், தி.மு.க தலைமை நீண்ட யோசனைக்குப் பிறகு ‘சிவாவை நிறுத்த வேண்டாம்’ என்று முடிவெடுத்ததாம். மேலும், துணைத் தலைவர் தேர்தலையே வாக்களிக்காமல் புறக்கணிக்கலாம் என்றும் முடிவுசெய்திருக்கிறது அறிவாலயம். இது இரண்டாவது விரக்தி.”


திருச்சி சிவா

“சரிதான்... அ.தி.மு.க-வில் இரட்டையர்களின் பஞ்சாயத்து ஓய்ந்துவிட்டதா?”


“அது எப்படி ஓயும்? இரட்டை இலைபோல, இரட்டைத் தலைமைதான் கட்சிக்குச் சரிப்படும் என்று தீர்மானமாக இருக்கிறார் பன்னீர்செல்வம். மனக்கசப்பு ஏற்பட்ட பிறகு, இருவரும் நேரடியாக எதுவும் பேசிக்கொள்வதில்லையாம். சில தினங்களுக்கு முன்னர் கட்சியில் பொறுப்பாளர்கள் மாற்றம் குறித்துச் சில ஃபைல்கள் பன்னீருக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று திருப்பி அனுப்பிவிட்டாராம் பன்னீர். இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு கடுப்பாகியிருக்கிறது” என்ற கழுகாருக்கு இளநீர்ப் பாயசத்தைக் கொடுத்தபடி, “தஞ்சாவூரில் உளவுத்துறை ஏதோ `நோட்’ எடுத்ததாமே...” என்றோம்.


ஏலக்காய் நறுமணத்தை ரசித்தபடியே பாயசத்தை அருந்திய கழுகார், “வைத்திலிங்கம் பிறந்தநாள் கொண்டாட்டம்தானே... சொல்கிறேன் கேளும்...” என்றபடி செய்திகளைத் தொடர்ந்தார்.“பொதுவாக வைத்திலிங்கம் தனது பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடியதில்லை. ஆனால், செப்டம்பர் 9-ம் தேதி தஞ்சாவூரிலுள்ள அரசு ஆய்வு மாளிகையில் பிறந்தநாளைக் கோலாகலமாகக் கொண்டாடியிருக்கிறார். அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி மற்றும் கட்சிக் கொறடா தாமரை.ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நேரில் வாழ்த்துத் தெரிவித்தனர். அப்போது ஆதரவாளர்கள் சிலர், ‘முதல்வர் வேட்பாளர் லிஸ்ட்டில் இருக்கும் அண்ணன் வைத்திலிங்கம் வாழ்க’ என்று கோஷமிட, அந்த இடமே ஆரவாரத்தில் திளைத்திருக்கிறது. வைத்திலிங்கமும் சிரிப்பை உதிர்த்தாராம். இந்த விஷயத்தை `நோட்’ போட்டு ஆட்சித் தலைமைக்கு அனுப்பியுள்ளது உளவுத்துறை.’’


“அடுத்த பஞ்சாயத்து ஆரம்பம் என்று சொல்லும்...”


“ஒரு விவகாரம் சொல்கிறேன்... பெயர் கேட்கக் கூடாது” என்று கண் சிமிட்டிவிட்டுத் தொடர்ந்தார்.“தொடக்கக்காலத்தில் `சசிகலாவின் தீவிர விசுவாசி’ என அடையாளப்படுத்தப்பட்ட அமைச்சர் அவர். அந்த அமைச்சருக்கு, பெண் ஒருவர் உதவியாளராக இருக்கிறார். தினமும் காலை 8 மணிக்கு அமைச்சரின் வீட்டுக்கு வரும் அந்தப் பெண், அமைச்சரை மகிழ்ச்சிக் கடலில் குளிப்பாட்டுவதில் தொடங்கி, சாப்பாடு ஊட்டுவது வரை சகலத்தையும் செய்து குளிர்விக்கிறாராம். அமைச்சர் கோட்டைக்குப் புறப்படும் முன்பாக, கொத்தாகச் சில கோரிக்கைக் கடிதங்களை நீட்டி, ‘இதெல்லாம் கொஞ்சம் பார்த்து செய்யுங்க’ என்று கொஞ்சலாகக் கேட்கிறாராம். அடுத்த இரண்டு மணி நேரத்தில் கோரிக்கைகள் நிவர்த்தி ஆகிவிடுகின்றனவாம். அமைச்சரை ‘உடும்பு’ப்பிடியில் வைத்திருக்கும் பெண்ணின் பராக்கிரமத்தைக் கேள்விப்பட்டு இடமாற்றம், டெண்டர் ஃபைல்களோடு பலரும் அவர் வீட்டு வாசலில் `பெட்டி’யோடு நிற்கிறார்கள்!”


“யாரென்று புரிகிறது...” நாமும் கண் சிமிட்டிவிட்டு, “பா.ஜ.க செய்திகள் ஏதேனும்?” என்றோம்.


“வரும் அக்டோபர் 7-ம் தேதி, திருத்தணியில் தொடங்கி திருச்செந்தூர் வரை முருகனின் அறுபடை வீடுகள் அமைந்துள்ள ஊர்கள் அனைத்துக்கும் யாத்திரை செல்லவிருக்கிறார் பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன். இதற்கு ‘வெற்றிவேல் யாத்திரை’ என்று பெயரிட்டுள்ளார். தி.மு.க-வை இந்து விரோதச் சக்தியாக அடையாளப்படுத்துவதே இந்த யாத்திரையின் நோக்கமாக இருக்கும் என்கிறது கமலாலயம்.”


“ஓஹோ...”


“மறைந்த கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்துக்கு ‘சீட்’ கொடுக்கக் கூடாது என்று சத்தியமூர்த்தி பவனில் குடுமிப்பிடி சண்டை நடக்கிறது. ராபர்ட் புரூஸ், அசோகன் சாலமன், ரூபி மனோகரன் எனப் பலரும் முட்டி மோதுவதால், கன்னியாகுமரி தொகுதி ‘சீட்’டை யாருக்கு ஒதுக்குவது என்று குழம்பித்தவிக்கிறது காங்கிரஸ்.”


“நாம் தமிழர் கட்சிக் களேபரத்தில் ஏதேனும் அப்டேட்ஸ் உள்ளனவா?”


“சீமான் - கல்யாணசுந்தரம் கருத்து மோதலுக்குப் பிறகு, கட்சியிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துவிட்டார் கல்யாணசுந்தரம்.


வெளிநாடுகளில் நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளராக கல்யாணசுந்தரம் பணியாற்றியபோது, அந்தந்த நாடுகளில் கட்சியின் நிர்வாகிகளாக அவரின் ஆதரவாளர்களையே நியமித்திருந்தாராம். தற்போதைய பிரச்னையில் அவர்கள் அனைவரும் சீமானுக்கு எதிராகத் திரண்டு வருகிறார்களாம்!” என்ற கழுகார் ‘ `டிஜிட்டல் கழுகார் அப்டேட்ஸ்’ பகுதிக்காக நிறைய இடங்களுக்குப் பயணிக்க வேண்டியிருக்கிறது, கிளம்புகிறேன்’ என்று விண்ணில் பாய்ந்தார்.


கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட்!

 எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணியின் மகன் சந்திரன். இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அரசுத் தரப்பிடம் சில உதவிகளை எம்.ஜி.ஆர் குடும்பம் கேட்டும் யாருமே கண்டுகொள்ளவில்லையாம்!


 முன்னாள் மத்திய இணை அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணன், மாதம் இரண்டு முறை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்வது வழக்கம். செப்டம்பர் 9-ம் தேதி கோயிலுக்கு வந்தவர், வழக்கத்துக்கு மாறாக முருகனிடம் கண்ணீர்விட்டு நெக்குருகிவிட்டாராம். ‘எல்லாம் வரவிருக்கும் கன்னியாகுமரி இடைத்தேர்தல் செய்யும் மாயம்தான்’ என்கிறார்கள் கட்சி நிர்வாகிகள்!


 துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஆலோசனை வழங்க சமீபத்தில் ‘மில்க்’ மனிதர் ஒருவர் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். பா.ம.க வேட்பாளராக மத்தியச் சென்னையில் சாம் பால் போட்டியிட்டபோது, அவரிடம் இந்த ‘மில்க்’ பிரமுகர் 30 லட்ச ரூபாயை ஆட்டைபோட்ட விவகாரம் பன்னீர் தரப்புக்குத் தாமதமாகத் தெரிந்திருக்கிறது. சுதாரித்தவர்கள், ‘மில்க்’கை கைகழுவிவிட்டார்களாம்.


சர்ச்சையில் கொடியேரியின் மகன்!

ஸ்வப்னா தங்கக் கடத்தல் விவகாரத்தில், கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணனின் மகன் பினீஷ் கொடியேரி பெயர் அடிபடுகிறது. தங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பாகக் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி பெங்களூரில் கைதுசெய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த அனூப் முகம்மது என்பவர், “பினீஷ் கொடியேரி எனக்குப் பணம் கொடுத்தார்; அவர் என் நண்பர்” என்று கூறியிருக்கிறார். அதேசமயம், “அனூப் முகம்மது என் நண்பர்தான். அவர் பெங்களூரில் ஹோட்டல் தொடங்குவதற்கு ஆறு லட்சம் ரூபாய் கடன் கொடுத்திருந்தேன். ஆனால், இப்படிப்பட்ட நபர் என்று எனக்குத் தெரியாது” என்கிறார் பினீஷ் கொடியேரி. கேரள அரசியலை இது பரபரக்கவைத்திருக்கிறது.


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment