Wednesday, September 09, 2020

மிஸ்டர் கழுகு: அடுக்கடுக்கான நெடுஞ்சாலைத்துறை ஊழல்! விரைவில் சென்னை வரும் சி.பி.ஐ டீம்?

 சூடான ஆனியன் பக்கோடாவை மென்றபடி, ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றப் பட்டியலைப் படித்துக்கொண்டிருந்தார் கழுகார். காபியைக் கோப்பையில் நிரப்பித் தந்துவிட்டு, “லிஸ்ட்டில் ஏதாவது விவகாரமோ?” என்றோம். “டிரான்ஃஸ்பர் என்றாலே விவகாரம்தானே...” என்று காபியை உறிஞ்சியபடி செய்திகளுக்குள் நுழைந்தார் கழுகார்.


“செப்டம்பர் 3-ம் தேதி நான்கு ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். வேலூர் எஸ்.பி-யாக இருந்த பிரவேஷ்குமார், சென்னை கோட்ட ரயில்வே எஸ்.பி-யாக மாற்றப்பட்டார். திருப்பூர் நகரத் துணை ஆணையராக இருந்த செல்வகுமார், வேலூர் எஸ்.பி-யாக பொறுப்பேற்றுக்கொண்டார். ஒரு நாள் இடைவெளியில், உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகரிடமிருந்து செப்டம்பர் 5-ம் தேதி மற்றோர் அறிவிப்பு வெளியானது. அதில், பிரவேஷ்குமாரின் இடமாற்றம் திருத்தம் செய்யப்பட்டு, அவர் தருமபுரி எஸ்.பி-யாக நியமிக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த திடீர் ‘யூ டர்ன்’ பின்னணியில், ‘பவர்’ புரோக்கர் ஒருவர் இருப்பதாகப் பேச்சு எழுந்துள்ளது.”


“ஓஹோ... காத்திருப்பு பட்டியலில் இருந்த வருண்குமாருக்கும் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளதே!”


“ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சாதியப் பின்னணியைக்கொண்ட எம்.எல்.ஏ ஒருவர், தனக்குக் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கும்படி வருண்குமாரிடம் கேட்டிருக்கிறார். ஆனால் வருண்குமார் தரப்போ, ‘ஏற்கெனவே கொடுக்கப்பட்ட பாதுகாப்பே போதும்’ என்று சொல்லிவிட்டதாம். வெகுண்டெழுந்த அந்த எம்.எல்.ஏ இது பற்றி முதல்வரிடம் போட்டுக்கொடுத்துவிட்டார் என்கிறார்கள். இந்தச் சூழலில்தான், ராமநாதபுரத்தில் நடந்த ஒரு கொலைச் சம்பவம், தனிப்பட்ட பகை காரணமாகவே நடந்ததாகப் பொதுவெளியில் பேசியிருக்கிறார் வருண்குமார். ‘விசாரணையில் இருக்கும் ஒரு வழக்கில் அவர் எப்படிக் கருத்து சொல்லலாம்?’ என்று வருண்குமாருக்கு எதிரானவர்கள் முதல்வரிடம் காய் நகர்த்தி விட்டனர். இதைத் தொடர்ந்துதான் அவர் காத்திருப்பு பட்டியலுக்கு தூக்கியடிக்கப்பட்டார். இப்போது அவரை கணினிமயமாக்கல் பிரிவு எஸ்.பி-யாக டம்மி பதவிக்கு நியமித்திருக் கிறார்கள்.”


“சரிதான். தி.மு.க-வில் பொன்முடி ஏதோ காய்நகர்த்துகிறாராமே..?”


பொன்முடி - கௌதம சிகாமணி


“பொன்முடியை மாநிலப் பொறுப்புக்கு கொண்டுவருவது தி.மு.க-வில் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஆனாலும், மாநிலப் பொறுப்புடன், விழுப்புரம் மாவட்டமும் தனது கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம் பொன்முடி. இதற்காக, தன் மகன் கெளதம சிகாமணியை விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் பொறுப்புக்குக் கொண்டுவரத் தீவிரமாகக் காய்நகர்த்துகிறார் என்கிறார்கள். திருக்கோவிலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பொன்முடி உதவிகள் வழங்கிக்கொண்டிருக்க... அதே அரங்கத்தில் தனியாக ஒரு கூட்டத்தைக் கூட்டி, ‘அண்ணன் மாநிலப் பொறுப்புக்குச் சென்றால், மாவட்டச் செயலாளர் பதவியை கெளதம சிகாமணிக்குக் கொடுக்க வேண்டும் என்று நீங்களெல்லாம் அண்ணனிடம் அழுத்தம் கொடுக்க வேண்டும்’ என்று ஆதரவு திரட்டிக்கொண்டிருந்தார் பொன்முடியின் உதவியாளரான பாபு. மேலும், விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க-வில் விக்கிரவாண்டி, வானூர், விழுப்புரம், திருக்கோவிலூர் என நான்கு தொகுதிகள் வருகின்றன. மகனின் பதவிக்காக மாவட்டத்தையே இரண்டாகப் பிரிக்கவும் தயாராக இருக்கிறாராம் பொன்முடி.”


“அ.தி.மு.க-வில் என்ன நடக்கிறது?”


“அதைத்தான் இந்த இதழின் அட்டைப்படக் கட்டுரையாக விரிவாகவே எழுதியிருக்கிறார் உமது நிருபர். நான் சில மாவட்ட அளவிலான பஞ்சாயத்துகளைச் சொல்கிறேன், கேளும். தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியான தளவாய் சுந்தரத்தின் கை அவரது சொந்த மாவட்டமான குமரியில் மேலோங்கியிருக்கிறது. அவரின் ஆதரவாளர்களான மேற்கு மாவட்டச் செயலாளர் ஜான் தங்கம், கிழக்கு மாவட்டச் செயலாளர் அசோகன் இருவருக்கும் எதிராக அதே பகுதியைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளே தலைமைக்குப் புகார் அனுப்பிவருகிறார்கள். ஜான் தங்கத்துக்கு எதிராக மாநில இலக்கிய அணிச் செயலாளர் நாஞ்சில் டொமினிக் தலைமையில் ஒரு கோஷ்டியும், அசோகனுக்கு எதிராக தோவாளை ஒன்றியச் செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் ஒரு கோஷ்டியும் செயல்படுகின்றன. இந்தத் தகராறில் ‘தோவாளை’ கிருஷ்ணகுமார் சம்பந்தப்பட்ட கண்றாவியான செல்ஃபி வீடியோ ஒன்று வெளியாகி மாவட்டத்தையே ‘உவ்வே’ ஆக்கியுள்ளது. அந்த வீடியோவை ‘மார்பிங்’ என்று கிருஷ்ணகுமார் தரப்பு மறுத்தாலும், விவகாரம் உண்மைதான் என்கிறது எதிர்கோஷ்டி. இதற்கு பதிலடியாக, ‘பால்வளத்துறையில் பணியிட மாற்றத்துக்குப் பணம் பெற்றார்’ என்று அசோகன் தரப்பு பேசும் ஆடியோ ஒன்றும் வெளியாகி பரபரப்பாகியிருக்கிறது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த ‘வீடியோ’ பூசலைச் சமாளிக்க முடியாமல் தவிக்கிறாராம் தளவாய் சுந்தரம்.”


“கழகத்தில் கண்றாவிகள் அதிகரித்து விட்டதாகச் சொல்லும்...”


“தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளராக இருப்பவர், ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ சண்முகநாதன். இவரின் அண்ணன் ஜெயபாண்டியனின் மகன் சுந்தரராஜன், தி.மு.க-வில் தெற்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளராக இருக்கிறார். இருவருக்கும் இடையிலான குடும்பப் பகை ஊரறிந்த ஒன்று. இந்த நிலையில், ‘என்னை சண்முகநாதன் துப்பாக்கியைக் காட்டி மிரட்டுகிறார். அவரால் என் குடும்பத்துக்கு ஆபத்து’ என்று தூத்துக்குடி எஸ்.பி-யிடம் சுந்தரராஜன் புகார் அளித்திருப்பது, மாவட்ட அரசியலில் பரபரப்பைப் பற்றவைத்துள்ளது” என்ற கழுகாருக்கு கேரட் ஜூஸை நீட்டினோம்.


ஜூஸை ரசித்துப் பருகியவர், “திருவள்ளூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை இரண்டு அமைச்சர்களுக்கு இடையே அதிகாரப் போட்டி நிலவுகிறது. சில தினங்களுக்கு முன்னர், திருவேற்காடு நகராட்சி அலுவலகத்துக்கு அமைச்சர் ஒருவரின் உதவியாளர் பெரும் பணத்துடன் வந்திருக்கிறார். இதை மோப்பம் பிடித்த எதிர் அமைச்சர் டீம், லஞ்ச ஒழிப்புத் துறைக்குத் தகவலைப் `போட்டுக்கொடுத்து’ விட்டது. உடனடியாக நகராட்சி அலுவலகத்தைச் சுற்றிவளைத்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், அமைச்சரின் உதவியாளரிடம் கணக்கில் வராத பெரும் தொகையைப் பறிமுதல் செய்தனராம். மேலிடத்து விவகாரம் என்பதால் வழக்கு எதுவும் பதிவுசெய்யவில்லை. பிரச்னையைச் சுமுகமாக முடிக்க, பஞ்சாயத்து நடப்பதாகத் தகவல்.”


“பெரிய விவகாரம்தான்...”


“இதுவும் இரண்டு அமைச்சர்கள் தொடர்பான விவகாரம்தான். தென்மாவட்டத்தைச் சேர்ந்த அந்த அமைச்சர்களில் ஒருவர், சென்னை கடற்கரையோரம் இருக்கும் சித்தரின் பெயர்கொண்ட அறக்கட்டளையில் தன் குடும்ப உறுப்பினரைச் சேர்த்துவிட்டாராம். மற்றோர் அமைச்சர் தன் குடும்ப உறுப்பினர் பெயரில் தனி அறக்கட்டளை ஒன்றை நடத்திவருகிறார். சில மாதங்களாக இந்த அறக்கட்டளைகளில் அபரிமிதமான பணம் புழங்க ஆரம்பித்துள்ளது. இந்த விவகாரங்களையெல்லாம் மத்திய உளவுத்துறை, ஆவணங்களுடன் டெல்லிக்கு ‘நோட்’ போட்டுள்ளது. எதிர்க்கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரிடமிருந்து கூடுதல் ஆவணங்களையும் பெற்றுள்ளது ஐ.பி டீம். இரண்டு அமைச்சர்களுக்கும் எந்நேரமும் நெருக்கடி வரலாம்.”


“வேறு தகவல்கள் ஏதேனும்.?”


“நெடுஞ்சாலைத்துறையில் நடந்த ஊழல்களைப் பட்டியலிட்டு, அதற்கான ஆவணங்களையும் இணைத்து மத்திய அரசுக்கு அனுப்பியிருக்கிறது சமூக ஆர்வலர்கள் டீம் ஒன்று. அதில், கட்சிப் பாகுபாடு இல்லாமல் கடந்த 2006-ம் ஆண்டிலிருந்து நெடுஞ்சாலைத்துறையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தப் பணிகள் என்னென்ன, யார் யாருக்கு ஒப்பந்தங்கள் அளிக்கப்பட்டன, கமிஷன் எவ்வளவு, சாலையே அமைக்காமல் ஆவணங்களில் மட்டுமே கணக்கு காட்டப்பட்ட திட்டப் பணிகள் என்னென்ன, ஒப்பந்ததாரர்களின் சொத்துப் பட்டியல், அவர்களின் பினாமிகளின் சொத்துப் பட்டியல் உள்ளிட்ட விவரங்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன. இந்த விவரங்களையெல்லாம் மத்திய அமைச்சர் ஒருவர் அமுக்கி வைத்திருந்தார். இந்த விவரத்தையும் அந்த டீம் டெல்லிக்குத் தெரிவித்துள்ளதாம். தற்போது பிரதமர் மோடிக்கு எதிர் கோஷ்டியில் அந்த அமைச்சர் இருப்பதால், இந்த விவகாரத்தைப் பெரிய அளவில் தோண்டியெடுக்க முடிவு செய்திருக்கிறது மத்திய உளவுத்துறை. விரைவில் டெல்லியிலிருந்து பிரத்யேக சி.பி.ஐ டீம் சென்னையை முற்றுகையிடலாம்.’’‘‘ஓஹோ!”


“தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்திடம், ‘பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தில் மோசடி செய்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று பா.ஜ.க தலைவர்கள் வி.பி.துரைசாமி, கரு.நாகராஜன் உள்ளிட்டவர்கள் நேரில் மனு கொடுத்துள்ளனர். அவர்களிடம், ‘மாநிலங்களின் வருவாய்த்துறை, வேளாண்மைத்துறைகளின் டேட்டா பேஸுடன் கிசான் சம்மான் திட்டத்துக்கான செயலியை இணைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான், இது போன்ற தவறுகள் நடக்காது’ என்றாராம் சண்முகம். மிகப்பெரிய அளவில் நடந்துள்ள இந்த ஊழல் சி.பி.ஐ விசாரணைக்கும் போகலாம்” என்று கிளம்ப ஆயத்தமான கழுகார்,


“கடந்த இதழில் எஸ்.டி.சோமசுந்தரத்தின் மகன்


எஸ்.டி.எஸ்.செல்வம் அ.ம.மு.க-விலிருந்து தி.மு.க-வில் இணையத் திட்டமிட்டுள்ளதாகக் கூறியிருந்தேன் அல்லவா... இந்தச் செய்தியை செல்வம் மறுத்திருக்கிறார். கூடவே, `தினகரனுக்கு எதிராக எந்த நடவடிக்கையிலும் இறங்க மாட்டேன்’ என்றும் சொல்லியிருக்கிறாராம்” என்றபடி விண்ணில் பாய்ந்தார் கழுகார்.


கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட்!

* துணை முதல்வர் அலுவலகத்தில் கிரிவலம் வரும் அதிகாரி ஒருவர், ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ ரேஞ்சுக்கு அள்ளிவருகிறாராம். சி.எம்.டி.ஏ அதிகாரி களுக்கு இவ்வளவு, மீடியாக்களுக்கு இவ்வளவு என்று மாதந்தோறும் ‘ஆட்டையைப்போடும்’ தொகை பல லகரங்களைத் தாண்டுகிறதாம். இதில் சர்ச்சை என்னவெனில், யாருக்கும் எதுவும் ‘டெலிவரி’ ஆகாததுதான் என்கிறார்கள்!


* அ.தி.மு.க-வுடன் பா.ஜ.க கூட்டணி தொடர்ந்தால், வரும் தேர்தலில் காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் முடிவில் இருக்கிறாராம் ஹெச்.ராஜா. ஒருவேளை கூட்டணி தொடரவில்லை யெனில் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்கிறார்கள்.


* கொடநாடு வழக்கில் சம்பந்தப்பட்ட சிலர் ஜாமீன் பெற்று கேரளாவில் உள்ளனர். கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்த இ-பாஸ் பிரச்னையால் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே இந்த வழக்கை முடிக்கும்படி காவல்துறைக்கு மேலிடத்திலிருந்து அழுத்தம் தரப்படுகிறதாம்.


* சென்னையில் முக்கிய அரசு மருத்துவமனை ஒன்றில் பணிபுரியும் சர்ச்சைக்குரிய அந்தப் பெண் மருத்துவர், இப்போது கல்வித்துறையிலும் கோலோச்ச ஆரம்பித்துள்ளாராம். ஏற்கெனவே சுகாதாரத்துறையில் இவர் ஆடிய ஆட்டத்தால் துறை அமைச்சரே அரண்டுபோனார். இப்போது கல்வித்துறைக்குள் கல்லாகட்டத் தொடங்கிவிட்டார்.


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment