Tuesday, September 22, 2020

வைகுண்டராஜனுக்கு வழிவிடுகிறதா டாமின்?

`தாது மணல் வர்த்தகத்தை அரசே ஏற்று நடத்தும்’ என்று 2016 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டார் ஜெயலலிதா. ஆட்சி அமைத்ததும், சொன்னதுபோலவே தாது மணல் ஏற்றுமதிக்குத் தடை விதித்தார். வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தில் பல்வேறு ரெய்டுகள் நடந்தன. அரசு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதையடுத்து, தாது மணல் வியாபாரத்தை நடத்த முடியாமல் முடங்கியது வி.வி.மினரல்ஸ்.


இந்தநிலையில்தான், ``கடந்த 25 ஆண்டுகளாக நடைபெற்ற வர்த்தகம் தடைப்பட்டுப்போனதை வைகுண்டராஜனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால், அதிகாரத்தின் கதவுகளைத் தட்டத் தொடங்கினார். அதற்குப் பலன் கிடைக்கத் தொடங்கியிருக்கிறது” என்கிறார்கள் டாமின் வட்டாரத்தில்.


இது குறித்து தமிழ்நாடு கனிமவள நிறுவன ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் விஜயனிடம் பேசினோம். ``வைகுண்டராஜன் மற்றும் அவர் சார்ந்த மூன்று நிறுவனங்கள் நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களின் கடற்கரைகளில் கார்னெட் மணலைப் பிரித்தெடுக்கும் பணிகளைச் செய்து வந்தார்கள். இந்தக் கனிமங்களை `மேஜர் மினரல்ஸ்’ என்று குறிப்பிட்ட மத்திய அரசு, அவற்றை நிர்வகிக்க ‘இந்தியன் ரேர் எர்த்ஸ்’ (ஐ.ஆர்.இ) என்ற நிறுவனத்தைத் தொடங்கியது. இதற்காக மணவாளக்குறிச்சியில் அலுவலகம் தொடங்கப் பட்டது. ஆனால், சிலரது அரசியல் லாபியால் இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் முடங்கிப் போயின. இதையடுத்து, அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டியும், அனுமதிக்கப்படாத இடங்களிலும் கணக்கு வழக்கு இல்லாமல் வி.வி.மினரல்ஸ் நிறுவனம் மணலைத் தோண்டியெடுத்தது.கடந்த 2015-ம் ஆண்டு மத்திய பா.ஜ.க அரசு, `மேஜர் மினரல்ஸ்’ என்பதை `மைனர் மினரல்ஸ்’ என்று மாற்றியது. இதன் அடிப்படையில், `மாநில அரசுகளே இதற்கான அனுமதியை வழங்கிக் கொள்ளலாம்’ என்று விதிகள் வகுக்கப்பட்டன. இதையடுத்துத்தான் 2016-ம் ஆண்டு, ‘தாது மணல் வணிகத்தை அரசின் டாமின் நிறுவனமே ஏற்று நடத்தும்’ என்று உத்தரவிட்டார் ஜெயலலிதா. அதன் பிறகு எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். ஆனால், தாது மணலை டாமின் நிறுவனம் ஏற்று நடத்துவதற்கான அறிகுறிகளே தென்படவில்லை.


டாமின் நிறுவனம், மத்திய அரசின் ஐ.ஆர்.இ நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுச் செயல்பட வேண்டும். அதற்கான வேலைகளும் நடக்கவில்லை. இது தொடர்பாக, ஆகஸ்ட் 20-ம் தேதி முதல்வருக்குக் கடிதம் எழுதினோம். அதற்கும் பதில் வரவில்லை. இந்த விவகாரத்தில் அதிகாரிகள் திட்டமிட்டே வைகுண்டராஜன் தரப்புக்குச் சாதகமாக நடந்துகொள்கிறார்கள்” என்றார் கொதிப்புடன்.


நம்மிடம் பேசிய டாமின் அதிகாரிகள் சிலர், “டாமின் நிர்வாக இயக்குநரான கஜலட்சுமி ஆகஸ்ட் 28-ம் தேதி கூட்டம் நடத்தினார். அப்போது, `தாது மணல் வணிகத்தை டாமின் நிறுவனமே நடத்துவதற்கான வேலைகள் துரிதமாக நடக்கின்றன’ என்றார். இடைமறித்த ஊழியர் சங்க நிர்வாகி ஒருவர், `ஏற்கெனவே மகேசன் காசிராஜன் எம்.டி-யாக இருந்த போதும் இதையே சொன்னார். இப்போது நீங்களும் சொல்கிறீர்கள். ஆனால், எதுவுமே நடக்கவில்லை’ என்று அதிருப்தி தெரிவித்தார்.


அதற்கு பதிலளித்த கஜலட்சுமி, `இன்னும் மூன்று மாதங்களில் டாமினைத் தூக்கி நிறுத்துவோம்’ என்றார். ஆனால், சில நாள்களில் அவரையும் இடம்மாற்றிவிட்டனர். இப்போது புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் இயக்குநராக இருந்த சரவணனை டாமினின் நிர்வாக இயக்குநராக நியமித்திருக் கிறார்கள். தாது மணல் வணிகத்தை அரசே ஏற்று நடத்துவதற்காக ஒரு பணியும் தொடங்கப்படவில்லை. கிட்டத்தட்ட டம்மி நிறுவனமாகிவிட்டது டாமின். இதன் மூலம் இந்த அரசு தனியார் தாது மணல் நிறுவனங்களுக்குச் சாதகமாக நடந்துகொள்வது அப்பட்டமாகத் தெரிகிறது” என்றார்கள்.


வைகுண்டராஜன்

டாமின் நிறுவனத்தின் உதவிப் பொது மேலாளர் ராபர்ட்டிடம் பேசினோம். ``யாருக்குச் சாதகமாகவும் டாமின் நடந்துகொள்ளவில்லை. தமிழக அரசு தனியாக எதையும் செய்ய முடியாது. மத்திய அரசின் ஐ.ஆர்.இ நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. இந்த விஷயத்தில் மத்திய அரசு சில வழிமுறைகளைத் தெரிவித்திருக்கிறது. இது பெரிய பிராசஸ். இதற்காக நிறைய அனுமதிகளைப் பெற வேண்டும். எனவே, இதை தாமதம் என்று கருதக் கூடாது. ஐ.ஆர்.இ நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவது குறித்து, மார்ச் 24-ம் தேதி நடந்த சட்டசபை தொழில்துறை மானியக் கோரிக்கையின் கொள்கை விளக்கக் குறிப்பிலும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது” என்றார் சாவகாசமாக. அரசு ஓர் உத்தரவை வெளியிட்டு, நான்காண்டுகளாகியும் எந்த ஒரு வேலையும் தொடங்கப்படவில்லை. ஆனால், அது இவர்களைப் போன்ற அதிகாரிகளுக்கு ‘தாமதம்’ என்று உறைக்காமல் போவதுதான் இந்த அரசு அமைப்பின் சாபக்கேடுகளில் ஒன்று.


வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தின் வழக்கறிஞர் மகாராஜனிடம் பேசினோம். ``தனியார் சுரங்கங்களுக்கு விதிக்கப்பட்ட தடையால் வி.வி.மினரல்ஸ் நிறுவனத்துக்கு மட்டுமல்ல... 40,000 குடும்பங்களின் வாழ்வாதாரமும் அரசுக்கு வர வேண்டிய அந்நியச் செலாவணியும் பாதிக்கப் பட்டுள்ளன. தூத்துக்குடி துறைமுகத்துக்கு ஆண்டொன்றுக்கு வந்து கொண்டிருந்த 1,000 கோடி ரூபாய் வருமானமும் நின்றுபோனது. இந்த பாதிப்புகளையெல்லாம் குறிப்பிட்டிருக்கும் வைகுண்டராஜன், ‘ராயல்டியை அதிகப்படுத்தி டன்னுக்குக் கூடுதல் விலையை நிர்ணயித்தாலும் அதை ஏற்றுக்கொண்டு தொழிற்சாலைகளைத் திறக்கத் தயாராக இருக்கிறோம்’ என்று மத்திய, மாநில அரசுகளுக்குக் கோரிக்கை விடுத்திருக்கிறார். அதைப் பரிசீலித்துவருவதாக மத்திய, மாநில அரசுகள் தெரிவித்திருக்கின்றன” என்றார்.


சமீபத்தில் கொரோனா காலத்தில் அரசின் வருவாயைப் பெருக்க அமைக்கப்பட்ட ரங்கராஜன் கமிட்டி, `தாது மணலால் ஆண்டுக்கு 20,000 கோடி ரூபாய் அரசுக்குக் கிடைக்கும்’ என்று குறிப்பிட்டிருக்கிறது. ஆனால், ஆட்சியாளர்கள் இதைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. ஒருவேளை ஆட்சியாளர்களின் ‘சொந்த வருவாயை’ப் பெருக்கலாம் என்று சொல்லியிருந்தால், இந்நேரம் அவர்களின் வேகமே வேறு மாதிரியாக இருந்திருக்கக்கூடும்!

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment