Wednesday, September 16, 2020

மாஞ்சா எனும் மரண விளையாட்டு... ரத்தம் சிந்தும் வடசென்னை

வானில் பல வண்ணப் பட்டங்கள் வட்டமிடுவதைப் பார்த்து ரசித்திருப்போம். அந்த வண்ணங்களில் கொடூரப் பகையும், போட்டிகளும், சூதாட்டமும், சாவுகளும், சாவின் ரத்தமும் கறையாகப் படிந்திருக்கும் கதை பலருக்கும் தெரியாது. குழந்தைகளுக்கு மிக விருப்பமான பட்டங்கள் அந்தக் குழந்தைகளையே காவு வாங்குவதுதான் மிகப் பெரிய சோகம். ஏன்... இந்த ‘மாஞ்சா’ எனும் மரணவிளையாட்டு?


பொழுதுபோக்குக்கும் மனநிம்மதிக்குமாக இருந்த பட்டம் விடுதல், ஒருகட்டத்தில் போட்டியாக உருவாகி பணமும் அதில் சேர்ந்துகொண்டது. பைக் ரேஸ், புறா பந்தயம் வரிசையில் நீளும் சூதாட்டங்களில் ஒன்றாகவும் அது மாறிப்போனது. பரபரக்கும் வட சென்னையின் காசிமேடு தொடங்கி எண்ணூர் வரை நீளும் வங்கக்கடலோரப் பட்டினங்களில் வெகு பிரபலமானது இந்த மாஞ்சா பட்டம் விடும் போட்டி. ஆளைத்தூக்கும் கடல்காற்று கைகொடுக்க... வானில் சரசரவென ஏறுகின்றன இந்தப் பட்டங்கள்.


உலகின் பல்வேறு இடங்களில் பட்டம் விடுதல் வெகு பிரபலம். குஜராத்தில் ‘உத்ராயண்’ என்கிற பெயரில் ஆண்டுதோறும் உலகாளவிய பட்டம் விடும் திருவிழா நடைபெறுகிறது. இங்கிலாந்தில் ‘போர்ட்ஸ் மவுத்’ என்றும், ஆஸ்திரேலியாவில் ‘ஃபெஸ்டிவல் ஆஃப் விண்ட்’ என்றும், இந்தோனேசியாவில் ‘பாலி கைட்’ என்றும் கலாசாரத் திருவிழாவாக உலகம் முழுவதும் வானை அலங்கரிக்கின்றன வண்ண வண்ணப் பட்டங்கள்.


ஆனால், சென்னையில் மட்டுமே தீராத குற்றப் பிரச்னைகளில் ஒன்றாகத் திகில் கிளப்புகின்றன மாஞ்சா பட்டங்கள். ஏனெனில் மாஞ்சாவை தயாரிக்க பயன்படுத்தப்படும் ‘பகீர்’ கலவை அப்படி. சமூக நலன் கருதி அதை இங்கே விரிவாக எழுதவில்லை.பகல் வெளிச்சத்தில் வெள்ளி நூலிழைபோலப் பளபளக்கும் இந்த மாஞ்சா, கண்களுக்குத் தட்டுப்படுவதில்லை. காற்றில் அலைபாயும் இவை திடீரென்று வழிமறித்து, கழுத்தை அறுக்கிறது. இதில் ஏற்பட்ட உயிர்ப்பலிகளும் கொடுங்காயங்களும் ஏராளம் ஏராளம். சென்னையில் 2006 தொடங்கி 2017 வரை 8 பேர் மாஞ்சா நூல் அறுத்து பலியாகியிருக்கிறார்கள். இவர்களில் மூன்று பேர் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள். அதன் பிறகும் சம்பவங்கள் தொடர்கின்றன.


2019, நவம்பர் 3... கொண்டிதோப்பைச் சேர்ந்த கோபால்குமார் தன் மனைவி, மகனுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். பெற்றோருக்கு இடையில் பிஞ்சுக் கால்களால் எழுந்து நின்று வேடிக்கை பார்த்தபடி வந்தான் இரண்டரை வயது குழந்தை அபினவ் ஷராப். கொருக்குப்பேட்டை மீனாம்பாள் பாலத்தைக் கடந்தபோது, காற்றில் பறந்துவந்த மாஞ்சா நூலொன்று பிஞ்சின் கழுத்தை அறுக்க... ரத்த வெள்ளத்தில் சரிந்தது அந்தக் குழந்தை. சுதாரிப்பதற்குள் மொத்தமும் முடிந்துபோனது. நடுரோட்டில் நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறியழுதார்கள் அந்தத் தம்பதியர்.


2020, ஆகஸ்ட் 2... சென்னை காவல்துறையில் காவலர்களாகப் பணியாற்றும் ஜெய்குமார்- மகேஷ்வரி தம்பதியர், பைக்கில் பாடி மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தனர். திடீரென்று ஜெய்குமாரின் கழுத்தை அறுத்தது மாஞ்சா. நிலைதடுமாறி விழுந்தனர். ஜெய்குமாரின் கழுத்தில் பெரும் காயம். நல்லவேளையாகக் குறைவான வேகத்தில் சென்றதால் காயங்களுடன் உயிர்பிழைத்தார் அவர்.


2020, ஆகஸ்ட் 15... சென்னை எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலையில் ரேவதியும் ரமணியும் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். பின்னால் அமர்ந்திருந்த ரமணியின் கழுத்தை அறுத்தது மாஞ்சா. ரத்தம் சொட்டச் சொட்ட மருத்துவமனைக்குத் தூக்கிக்கொண்டு ஓடினார்கள். உயிர் பிழைத்தாலும் ரமணியால் பல மாதங்களாகப் பேசவே முடியவில்லை!


2020, ஆகஸ்ட் 29... சென்னை விமானநிலையத்தில் பொறியாளராக வேலை பார்க்கும் சத்தியமூர்த்தி, திருவள்ளூர் மாவட்டம், மணவாளநகர் மேம்பாலத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். கண்ணுக்குத் தெரியாத மாஞ்சா கழுத்தை அறுத்தது. சுதாரித்தவர், பைக்கை நிறுத்தி மாஞ்சா நூலை எடுக்க முயன்றார். விரலைத் துண்டாக்கியது அது. குற்றுயிரும் குலையிருமாக மரணத்தின் விளிம்பு வரைச் சென்றவர், நல்லவேளையாக உயிர்பிழைத்தார்.


2020, ஜூன் 3... ராயப்பேட்டை சார்-பதிவாளரான வெங்கட்ராமன், கிண்டி அருகே இணைப்புச் சாலையில் பைக்கில் சென்றுகொண்டிருந்தார். இவரின் கழுத்தையும் கொடூரமாக அறுத்தது மாஞ்சா. தீவிர சிகிச்சைக்குப் பிறகே உயிர்பிழைத்தார் அவர்.


இவையெல்லாம் காவல்துறையில் பதிவான சம்பவங்கள். பதிவாகாமல் அன்றாடம் நடக்கும் ரத்தக்களரிகளுக்குக் கணக்கே இல்லை. இதில் பெரியவர்கள் பலரும் காயத்துடன் தப்பிக்க... குழந்தைகள் காவு வாங்கப்படுவதுதான் பெரும் துயரம். இந்தப் பிரச்னைக்குத் தீர்வே கிடையாதா? சென்னை காவல்துறை உயரதிகாரி ஒருவரிடம் பேசினோம்.“சென்னையில் மாஞ்சா பட்டம் விடுவதற்கு 2007-ம் ஆண்டே தடைவிதிக்கப்பட்டது. தடையை மீறுபவர்கள்மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். தொடர்ச்சியாக மீறுபவர்களைக் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கிறோம். சமீபத்தில், வடசென்னையில் மாஞ்சா நூல் விற்பனை செய்த 55 பேரை கைதுசெய்துள்ளோம். ஜெய்ப்பூரிலிருந்து ஆன்லைனில் வரவழைத்து, ஆவடியில் மாஞ்சா கயிறு விற்ற அன்பரசு என்பவரைக் கைதுசெய்துள்ளோம். அவரிடமிருந்து 40,000 ரூபாய் மதிப்பிலான காற்றாடிகள், மாஞ்சா நூல்கண்டுகளைப் பறிமுதல் செய்துள்ளோம்” என்றார்.


மாஞ்சா பட்டம் விடுபவர்கள் எங்கோ ஓர் உயரமான இடத்திலிருந்துகொண்டு கிட்டத்தட்ட வானத்தில் ஒரு கிலோமீட்டர் தொலைவுவரை பட்டம்விடுகிறார்கள். இதனால், இவர்களை அவ்வளவு எளிதில் பிடிக்க முடிவதில்லை என்கிறார்கள் போலீஸார். இந்தப் பிரச்னையால் சில மாதங்களுக்கு முன்பு, வில்லிவாக்கம் காவல்நிலைய ஆய்வாளர் ரஜீஸ் பாபு இடமாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


பணம் வைத்து சூதாடுவது என்பதற்கு அப்பால் போட்டி, பெருமை, வீரம் என வெற்று சுயபிரதாபங்களாக வானில் அலைகின்றன மாஞ்சா பட்டங்கள். இதில் பெரும்பாலும் பலியாவது எதுவுமே அறியாத பிஞ்சுக் குழந்தைகளே. குற்றம் இழைப்பவர்கள் ஒருகணம் தங்கள் வீட்டுப் பிஞ்சுகளை மணக்கண்ணில் நிறுத்திப் பார்த்தாலே மாஞ்சாவைத் தொடத் துணியமாட்டார்கள்!


ஆன்லைனில் மாஞ்சா!


‘மாஞ்சா’ என்கிற பெயரிலேயே அகமதாபாத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று ஆன்லைனில் இந்த நூலை விற்பனை செய்கிறது. இன்னும் சில நிறுவனங்கள் ‘கிளாஸ் கோட்டட்’ என்கிற ரகத்திலும் நூல்கண்டுகளை ஆன்லைனில் விற்பனை செய்கின்றன. இவற்றில் பலவும் மிகவும் உறுதியானவை என்றாலும், இவற்றுடன் ஆபத்தான கண்ணாடித் துகள்களையும் பூசி பட்டம் விடும்போதுதான் உயிர்ப்பலிகள் ஏற்படுகின்றன.


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment