Wednesday, September 09, 2020

எங்கள் பெயரை அடகு வைக்காதீர்கள் அண்ணியாரே!

 அன்புள்ள (?) அண்ணியாரே...


ஒருநாள் காலை.


“கிங் மேக்கராக இல்லாமல், விஜயகாந்த் `கிங்’ என்ற நிலைக்கு மாற வேண்டும் என்பதுதான் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் விருப்பம். இது பற்றி பொதுக்குழு, செயற்குழு ஆகியவற்றைக் கூட்டி விஜயகாந்த் முடிவை அறிவிப்பார்!” என்கிற கணீர்க் குரல்.


எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறதே... என அரைத்தூக்கத்தில் வாரிச் சுருட்டி எழுந்து தொலைக்காட்சியைப் பார்த்தேன். நீங்கள் பேசிக்கொண்டிருந்தீர்கள். ஓ... தமிழகத்தில் தேர்தல் வந்துவிட்டதற்கான அறிகுறி என்று நிதானமானேன். தமிழகத்தின் அறிவிக்கப்படாத தேர்தல் ஆணையரே நீங்கள்தானே அண்ணியாரே! பின்னே... ‘தேசிய முற்போக்கு திராவிடர் கழகமாக’ கேப்டன் ஆரம்பித்த கட்சியை ‘தேர்தல் முன்பேரத் திட்டக் கழகமாக’ மாற்றிய பெருமை உங்களைத்தானே சேரும்.


போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தனித்துக் களமிறங்கி, 8.45 சதவிகித வாக்குகளைப் பெற்று கெத்து காட்டியது நம் கட்சி. அதற்கு அடுத்தடுத்த தேர்தல்களில், நம்முடன் கூட்டணிவைக்க இரு பெரும் திராவிடக் கட்சிகளும் காத்துக்கிடந்தன. உண்மைதான்! ஆனால், இன்றைக்கு நம் நிலை என்ன? வெறும் 2.4 சதவிகித வாக்கு வங்கியைக் கையில் வைத்துக்கொண்டு, நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் (கேப்டன் நீங்கலாக) போடும் ஆட்டம் இருக்கிறதே காணச் சகிக்கவில்லை அண்ணியாரே.


கடந்த தேர்தலில், ஒருபுறம் தி.மு.க-வோடும் மறுபுறம் பா.ஜ.க-வோடும் பேச்சுவார்த்தை நடத்தி, பொதுவெளியில் நாம் அம்பலப்பட்டதையெல்லாம் மறந்துவிட்டீரா அண்ணியாரே? அந்த ஆத்திரத்தில்தானே, அப்போது நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ‘நீ, வா, போ, உனக்கு...’’ எனப் பத்திரிகையாளர்களை ஒருமையில் பேசினீர்கள்? அது மட்டுமல்லாமல், “எங்க கட்சிக்குக் கொள்கை இல்லைன்னு உனக்குத் தெரியுமா... தெரியுமா...’’ எனப் பலமுறை கேட்ட நீங்கள், அந்தக் கொள்கையைக் கடைசிவரை சொல்லாததைச் சுட்டிக்காட்டி, பலர் கைகொட்டிச் சிரித்த கதையை மறந்துபோய்விட்டீரா அண்ணியாரே? இன்றுவரைக்கும்கூட கொள்கைகளைக் குறித்து நீங்கள் பேசி ஒரு வார்த்தை கேட்டதில்லையே அண்ணியாரே!அ.தி.மு.க - தி.மு.க என இரண்டு கட்சிகளிடமும் உங்கள் தம்பி சுதீஷ் நெருக்கமாக இருப்பதாகவும், நீங்கள் கெடுபிடி காட்டுவதாகவும் ஒரு நாடகத்தைத் தற்போது அரங்கேற்றிக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால், இரண்டு கட்சிகளுமே `பத்து சீட்டுகளுக்கு மேலே ஒத்தை இடம்கூடத் தர மாட்டோம்’ என்கிற முடிவில் இருப்பது உங்களுக்குத் தெரியாதா அண்ணியாரே?


கடந்தமுறை, கூட்டணியில் போட்டிபோட்டு வாங்கிய சீட்டுகளுக்கு நிறுத்த வேட்பாளர் இல்லாமல், சேலத்திலிருந்து ஒருவரை சென்னைக்கு ஷிப்ட் செய்தீர்களே... தோற்றுப்போவோம் எனத் தெரிந்திருந்தும் அவர் கைக்காசைச் செலவழிக்க, நீங்களோ கிடைத்ததை பத்திரமாக வீட்டுக்கு எடுத்துப்போன கதையெல்லாம் ஆளும் தரப்புக்குத் தெரியாது என்று நினைக்கிறீர்களா?


எல்லாம் அம்பலமான பின்னும் எதற்காக, யாருக்காக இந்த அபத்த நாடகம்?


அண்ணியாரே, மனதைத் தொட்டுச் சொல்லுங்கள்... நாம் கட்சி ஆரம்பித்தபோது, பலமான எதிர்க்கட்சியாக மாறியபோது, கட்சிப் பொறுப்பிலிருந்த நிர்வாகிகள் யாராவது இப்போது கட்சியில் இருக்கிறார்களா? கேப்டனின் முகத்துக்காக மிச்சமிருப்பது கொஞ்சமே கொஞ்சமாய் அவரின் ரசிகர்களாகிய நாங்கள் மட்டும்தானே!


கேப்டனின் மன்றச் செயல்பாடுகளிலிருந்து அவருக்கு நீங்கள் துணையாக இருந்ததால், உங்கள்மீது எங்களுக்கு ஒரு மரியாதை இருந்தது. அதையே மூலதனமாக்கி, கொஞ்சம் கொஞ்சமாகக் கட்சிக்குள் வந்தீர்கள். ஆரம்பத்தில் மேடைக்குக் கீழேதான் உங்களை அமரவைத்தார் கேப்டன். நாள்கள் செல்லச் செல்ல மேடைக்கு வந்தீர்கள்; நீங்கள் மேடைக்கு வந்ததும் காட்சிகள் மாறிப்போயின. பிறகெல்லாம் பிரச்னைதான்.


கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், யார் வேண்டுமானாலும் கேப்டனைச் சந்திக்கலாம் என்ற ஜனநாயக நடைமுறைக்கு இடையே நீங்களும் உங்கள் தம்பியும் பாசச்சுவர் எழுப்பித் தடுத்தீர்கள். பொதுக்குழுவில் கட்சி நிர்வாகிகளோடு கேப்டன் எடுக்கும் முடிவுகளையெல்லாம் வீட்டுக்கு வந்ததும் மாற்றி மாற்றிச் சிதைத்தீர்கள். உங்கள் அபார ராஜதந்திரம் இதோ கட்சியையும் எங்களையும் வீதியில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.


கேப்டன், மன்றம் ஆரம்பித்த காலத்திலிருந்தே அவருக்குத் தோளோடு தோள் நின்ற, கட்சிக்காகக் கடுமையாக உழைத்த பல நிர்வாகிகளின் கருத்துகளை மீறி, உங்கள் பேராசையால் 2016 தேர்தலில் ஒரு கூட்டணியில் சேர்ந்தீர்கள். முதல் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு, பா.ம.க-வின் கோட்டையான விருத்தாசலத்தில் வெற்றிபெற்ற எங்கள் கேப்டனை டெபாசிட் இழக்கச் செய்தீர்கள். இது போதாதா..? இதோ மீண்டும் எங்கள் கேப்டனைக் காட்டி உங்களின் பேரத்தைத் தொடங்கிவிட்டீர்கள்.


கட்சி பின்னோக்கி நடைபோட முரசு கொட்டும் உங்களிடம், குறைந்தபட்சமாய் முன்வைக்க இருப்பது இரண்டு கோரிக்கைகள்தான் அண்ணியாரே.


ஒன்று... உங்களின் பேரத்துக்காக எங்கள் (தொண்டர்கள்) பெயர்களை அடகுவைப்பதைத் தவிருங்கள்.


மற்றொன்று... கடந்த தேர்தலில், “கூட்டணிக்காக எல்லோரும் எங்கள் கால்களில் மறைமுகமாக விழுகிறார்கள்’’ எனச் சிறுபிள்ளைத்தனமாகப் பேசிய உங்கள் மகன் விஜயபிரபாகரனை இந்தத் தேர்தலின்போது வாய் திறக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்...


இல்லையென்றால் மிச்சமிருக்கும் இரண்டு சதவிகித வாக்குவங்கியும் இல்லாமல் போகும்!


கடும் வேதனையுடனும் விரக்தியுடனும்...


கேப்டனின் தொண்டன்


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment