Monday, September 07, 2020

கழுகார் பதில்கள்

@மாணிக்கம், திருப்பூர்.


கேரள மக்களின் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்துச் சொல்லும் ஸ்டாலின், தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் இந்துக்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்லாமல் தவிர்ப்பது சரியா?


ஸ்டாலினுக்குத் தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை ‘இந்து.’ மற்றபடி அதையே மலையாளத்தில் மட்டுமல்ல, ஹீப்ரு மொழியில் எழுதினாலும் ஹி லவ்ஸ் இட். இதுதான் அவருடைய வாழ்க்கை ஏட்டில் எந்தப் பக்கம் புரட்டினாலும் காணப்படும் பாடம், பகுத்தறிவு, பயனுள்ள அரசியல் தத்துவம்!


@தாயுமானவன் ரங்கநாதன்.


மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு என்கிற பெயரில் உச்ச நீதிமன்றம் விதித்த தண்டனை சரியா?


மன்னிக்க முடியாத தவறு!


@பி.அசோகன், கொளப்பலூர், ஈரோடு மாவட்டம்.


குழந்தைகளையும் இளைஞர்களையும் சீரழிக்கும் பப்ஜி முதலான செயலிகளுக்குத் தடைவிதித்த மத்திய அரசு, ‘ஆன்லைன் ரம்மி’யைக் கண்டுகொள்ள மறுக்கிறதே?


‘ஏதாவது ஒன்றுக்காகவாவது இந்த அரசைப் பாராட்ட முடியாதோ எனும் நிலை இன்று மாறியது. PUBG தடை பல இளம் வாழ்வுகளை மீட்கும்’


- மனநல மருத்துவர் ஆர்.கே.ருத்ரன்.


ம்... நல்லது நடந்திருக்கிறது என்று ருத்ரன் போலவே சந்தோஷப்பட்டுக் கொள்ளுங்கள்.


@கே.ஆர்.ஜி. ஸ்ரீராமன், பெங்களூரு-77.


சசிகலா விடுதலையாக இருக்கும் நேரத்தில், ‘பினாமி சொத்துகள்’ என்றபடி அவருடைய சொத்துகளை வருமான வரித்துறை முடக்குகிறதே..?


சசிகலா, யாருடைய பினாமி என்று அறியப்பட்டாரோ... அவருக்கு அரசாங்கச் செலவிலேயே நினைவு இல்லம் அமைக்கிறார்கள். அவர் செலுத்த வேண்டிய வருமானவரி பாக்கியைக்கூட அரசுப் பணத்திலிருந்தே செலுத்துகிறார்கள். அதே வீட்டுக்கு எதிரே இருக்கும் சசிகலாவின் சொத்தை மட்டும் `பினாமி’ என்று முடக்குகிறார்கள். இப்போதும்கூட ‘அ.தி.மு.க., பா.ஜ.க இரண்டுமே சுத்தம் சுயம்பிரகாசக் கட்சிகள்’ என்று ஆனந்த ‘கும்மி’யடிப்போம்!


@காந்தி, திருச்சி.


‘சசிகலா வெளியே வந்ததும் அ.தி.மு.க பலம் பெருகிவிடும்’ என சுப்பிரமணியன் சுவாமி கூறுகிறாரே?


‘பலம்’ என்று சொன்னாரா அல்லது ‘பணம்’ என்று சொன்னாரா... நன்றாகக் காதில் வாங்கினீர்கள்தானே!


@முத்துவிக்னேஷ்வர், சைதாப்பேட்டை, சென்னை-14.


நம் சமூகத்தில் நடக்கும் நிறைய பிரச்னைகளுக்குக் காரணம், சட்டம் தெரியாமல் இருப்பதுதான். பள்ளிக்கூட வகுப்பிலிருந்தே சட்டம் பற்றிய பாடத்தை ஏன் கொடுக்கக் கூடாது?


காவல் நிலையம், அரசு அலுவலகங்கள் போன்ற இடங்களுக்கு நியாயம் வேண்டிச் செல்லும்போது, அங்குள்ள காவலர்களாலும் அதிகாரிகளாலும் கேட்கப்படும் முதல் கேள்வியே... ‘எங்கிட்டயே சட்டம் பேசுறியா...’ என்பதாகத்தான் இருக்கிறது. சட்டத்தைத் தெரிந்துவைத்திருப்பவர்களை விட... கட்டப் பஞ்சாயத்து தாதா, அடாவடி அரசியல்வாதி, ‘பவர்ஃபுல்’ உயரதிகாரிகள், எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள், அமைச்சர்கள் போன்றவர்களைத் தெரிந்துவைத்திருப்பவர் களால்தான் பிரச்னைகளிலிருந்து உடனடியாகத் தப்பிக்க முடியும் என்பதே நிகழ்கால நிதர்சனம்!


@ஜெ.நெடுமாறன், ராமாபுரம், சென்னை-89.


என்னவாயிற்று, 2,000 ரூபாய் நோட்டுகளைக் காண்பதே அரிதாக உள்ளதே?


வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் வரை பொறுத்துக்கொள்ளுங்களேன்!@கேஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்-6.


தற்போதைய காலச் சூழ்நிலையில் நியாயமாக வாழ நினைப்பதே தவறோ?!


எந்தக் காலச் சூழலிலும் அப்படி நினைப்பதில் தவறே இல்லை. ஆனால், அதன்படி ‘வாழவே முடியாது’ என்பதை இந்தக் காலத்தில்கூட தெரிந்துகொள்ளாமலிருப்பது தவறு.


@ரிஃபாத்துன்னிஷா, திருமங்கலக்குடி.


தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பல்வேறு கட்சியினரும் பா.ஜ.க-வில் தொடர்ந்து இணைவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாமே?


‘நமது அம்மா’, ‘முரசொலி’ ஆகியவற்றையும்கூட பாருங்கள். அடிக்கடி இப்படிப்பட்ட இணைப்புகள் அவற்றிலும் படம்பிடிக்கப் படுகின்றன. இவையெல்லாம் தேர்தல்கால அரசியல் அரங்கில் நூற்றாண்டு ‘கேலிக்கூத்து’களே!@சாந்தி மணாளன், கருவூர்.


பிரதமர் நரேந்திர மோடியின் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி, அதிகம் வெறுக்கப்பட்ட நிகழ்ச்சியாக மாறிவிட்டதே?


அது, ‘ஜன் கி பாத்’ என்பதாக இல்லாமல் போனதால்தான்.


@சேகர், ஆலப்பாக்கம், சென்னை-116.


ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ்., ஐ.ஆர்.எஸ் எனக் கஷ்டப்பட்டு படித்து அதிகாரிகளாக வருபவர்கள், ‘மக்கள் பிரதிநிதி’கள் என்கிற ஒரே காரணத்துக்காக, படிப்பறிவற்ற மற்றும் குறைந்தபட்சக் கல்வித்தகுதியுடைய அரசியல்வாதி களிடமெல்லாம் பணிபுரிய வேண்டியிருக்கிறது. `மக்கள் பிரதிநிதிகளாவதற்கு குறைந்தபட்சம் பட்டப்படிப்பு தேவை’ என ஏன் சட்டம் இயற்றக் கூடாது?


கல்வித்தகுதி வந்துவிட்டாலே, அத்தனை தகுதிகளும் வந்துவிட்டது என்று அர்த்தமல்ல. அதேபோல, படிப்பறிவில்லை என்பதற்காகவே அத்தனைபேரும் முட்டாள்கள் என்றும் அர்த்தமல்ல. மற்றபடி அடிபணிவதும், அடிபணிய வைப்பதும், அடிபணிய மறுப்பதும் அவரவர் ‘தேவை’யைப் பொறுத்தது. படிப்பு என்கிற அளவுகோலைப் பொறுத்தது அல்ல!


@மரு.ஆ.ஹேமலதா, வாழப்பாடி, சேலம் மாவட்டம்.


எதிர்க்கட்சி என்றால், அரசு செய்யும் அனைத்துக்கும் எதிராக அறிக்கைவிட்டே ஆக வேண்டுமா?


ஆளுங்கட்சி என்றால், ‘அரசாங்கம்’ என்கிற பெயரில் அனைத்திலும் ஆணவத்துடனேயே நடந்துகொண்டே ஆக வேண்டுமோ!


@‘திருப்பூர்’ அர்ஜுனன்.ஜி, அவிநாசி.


இந்த உலகத்தில் எதுவும் நிரந்தரமில்லை எனும்போது ‘நிரந்தர முதல்வர்’ என்று ஃப்ளெக்ஸ் வைக்கிறார்களே?


ஏற்கெனவே இப்படி ஃப்ளெக்ஸ் வைக்கப் பட்டவர்கள் பலரும் இப்போது இல்லை. ஆனாலும் கடைவாய்ப் புன்னகையுடன் அப்போது இந்தப் ஃப்ளெக்ஸ்களை ரசிக்கத்தான் செய்தார்கள்.


@ப்யூனி பிரதர்ஸ்


அக்கப்போர் செய்பவர்களைப் பற்றி..?


கிரேக்க தத்துவமேதை அரிஸ்டாட்டிலின் நண்பரைப் பற்றிய ஒரு செய்தியை, அரிஸ்டாட்டிலிடம் சொல்ல வந்தார் ஒரு நபர். அவர் அந்தச் செய்தியை ஆரம்பித்ததுமே, ‘முதலில் நீ சொல்லப்போகும் தகவலால் அந்த நண்பருக்கு ஏதும் பயன் உள்ளதா?’ என்று கேட்டார் அரிஸ்டாட்டில். ‘இல்லை’ என்றதும், ‘உனக்கு ஏதாவது பலன் உண்டா?’ என்று கேட்டார். அதற்கும் ‘இல்லை’ என்றே பதில் வந்தது. சரி, ‘எனக்கு ஏதும் பயன் உண்டா?’ என்று கேட்டார். இதற்கும் ‘இல்லை’ என்றே பதில் கிடைத்தது. ‘ஆணியே புடுங்க வேண்டாம்’ என்று அந்த நபரை அனுப்பிவைத்துவிட்டார் அரிஸ்டாட்டில்.


@பெ.பச்சையப்பன், கம்பம்.


‘தமிழக நாய்களுக்கு பராமரிப்புச் செலவு குறைவு’ என்கிறாரே பிரதமர் மோடி?


பார்த்தால் அப்படித் தெரியவில்லையே!


@பொன்விழி, அன்னூர்.


கொரானோ தடுப்புத் தகரங்கள், சவுக்குக் கட்டைகள், பூட்டுகள், கயிறுகள் என்று வாங்குவதற்கு இதுவரை தமிழக அரசு எவ்வளவு செலவு செய்திருக்கும்?


கொரோனா தலையில் கட்டிய கோடிகளுக்குக் கணக்கே இல்லை. இதெல்லாம் அரசாங்கத்துக்குத்தான் செலவு... ஆள்வோரைப் பொறுத்தவரை மே 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான முதலீடு. தகரம், சவுக்கு, பூட்டு, கயிறு, கிருமிநாசினி, குளோரின் பவுடர் என்று ஒவ்வொன்றையும் ஆளுங்கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் வரை கான்ட்ராக்ட் எடுத்து, கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். கொரோனா கணக்கெடுப்புப் பணியிலும், கணிசமான சம்பளத்துடன் அவர்களே பெருமளவில் களமிறக்கி விடப்பட்டுள்ளனர். ஆகக்கூடி கொரோனாவுடன் கைகோத்து ‘ராஜாதி ராஜதந்திரர்’ ஆகிவிட்டார் எடப்பாடி!


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment