Thursday, September 03, 2020

கழுகார் பதில்கள்

 பழ.இராமன், கிருஷ்ணராயபுரம், கரூர் மாவட்டம்.


அடுத்து தி.மு.க ஆட்சிக்கு வந்தால்... ஸ்டாலின் முதல்வர், உதயநிதி துணை முதல்வர். மருமகன் சபரீசனுக்கு என்ன பதவி?


சசிகலா பதவி!


அ.ச.நாராயணன், பாளையங்கோட்டை, திருநெல்வேலி-2.


உச்சத்தில் இருப்பவர்களையும்கூட கொரோனா விட்டுவைக்கவில்லையே?


உங்களுக்குத்தான் அவர்கள் ‘உச்சம்.’ கொரோனாவுக்கு அனைவருமே ‘துச்சம்.’


சம்பத்குமாரி, பொன்மலை, திருச்சி.


இந்தியாவின் எந்த மூலையில், யார் ஊரடங்கால் பாதிக்கப்பட்டாலும் உடனடியாக உதவிக்கரம் நீட்டும் பாலிவுட் நடிகர் சோனு சூட் பற்றி?


ஒஸ்தி நாயக்!


@‘முனைவர்’ ஆ.பிரேம்குமார், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு மாவட்டம்.


‘தனியார் பள்ளி என்றாலே கல்விக் கொள்ளையர்கள்’ என்ற அர்த்தத்தில் கழுகார் பதிலளித்திருப்பது சரிதானா... தனியார் பள்ளிகள் நடத்தும் அனைவருமே கொள்ளையர்களா?


உயர் நீதிமன்றமே, ‘70 சதவிகிதக் கல்விக் கட்டணத்தை தவணை முறையில் வசூலிக்கலாம்’ என்று உத்தரவிட்ட பிறகும்கூட, நூறு சதவிகிதக் கட்டணம் கேட்கிறார்கள். பேருந்துக் கட்டணம், விடுதிக் கட்டணம்கூட வசூலிக்கிறார்கள். ‘நடவடிக்கை பாயும்’ என்று நீதிமன்றமே எச்சரித்த பிறகும் ‘எரிகிற வீட்டில் பிடுங்கிய வரை லாபம்’ எனக் கொள்ளையடிக்கிறார்கள். பெற்றோர்கள் பயந்து ஓடும் அளவுக்கு இப்படிக் கசக்கிப் பிழிந்து கட்டணத்தை வசூலிப்பவர்களை வேறெப்படி அழைப்பது... மற்றபடி நியாயமான கட்டணம் வசூலிப்பவர்களுக்கு அந்த பதில் பொருந்தாது. இதனால், அவர்களின் மனம் புண்பட்டிருந்தால், அதற்காக பகிரங்க மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.


முனைவரே, உங்களுக்கு ஒரு தாழ்மையான விண்ணப்பம். உண்மையிலேயே நியாயமான கட்டணம் மட்டுமே வசூலிக்கும் பள்ளிகளின் பட்டியலை அனுப்பிவைத்தால், கைதொழ வசதியாக இருக்கும்.


@இரா.கோதண்டராமன், அசோக்நகர், சென்னை-83.


ஸ்டெர்லைட் போன்ற தனியார் ஆலைகளை அரசுடைமையாக்கி, தேவையான பாதுகாப்புகளுடன் தமிழக அரசே நடத்தினால் பலருக்கும் வேலைவாய்ப்பு கிடைப்பதுடன், சுற்றுச்சூழலும் மாசுபடாதுதானே..?


மாறாதய்யா மாறாது. ‘அரசாங்கத் தொழிற்சாலை’ என்கிற திமிருடன் இன்னும் கூடுதலாகவே சூழலைக் கெடுப்பார்கள். சமீபத்திய உதாரணம்... சென்னை அருகே அத்திப்பட்டு பகுதியிலிருக்கும் வடசென்னை அனல் மின்நிலையம். இதன் சாம்பல் கழிவுகள் சுற்றுப்புற கிராமங்களில் பரவி, மக்களின் உடைமைக்கும் உயிருக்கும் உலைவைத்துக் கொண்டிருக்கின்றன. அரசாங்கமோ, தனியாரோ... ஆள்வோர், ‘மக்கள்நலனில் உறுதிகொண்ட நெஞ்சனாய்’ இருந்தால் மட்டுமே எதுவும் சாத்தியம்.

கார்த்தி சிதம்பரம்


@ஆர்.சுந்தரராஜன், சிதம்பரம், கடலூர் மாவட்டம்.


‘மதுபானக் கடைகளை ஒருபோதும் மூடக் கூடாது. அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் விற்பனை செய்யலாம்’ என்கிறாரே கார்த்தி சிதம்பரம் எம்.பி?


கதர்ச்சட்டை அணிந்த காந்தி கண்ட காங்கிரஸின் எம்.பி அல்ல அவர். ‘கார்ப்பரேட்’களின் கைப்பிள்ளைகளாகிப் போன ‘காந்தி’கள் கையில் எடுத்துக்கொண்ட காங்கிரஸின் உறுப்பினர். வேறு எப்படிப் பேசுவார்!


‘வண்ணை’ கணேசன், சென்னை-110.


பிரதமர் நரேந்திர மோடி உருவாக்கிய ‘பிஎம் கேர்’ நிவாரண நிதித் திட்டம், சட்ட விதிமுறைகளுக்கு எதிரானது என்று தொடரப்பட்ட வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டதே?


டோன்ட் கேர்!


@அந்திவேளை.


‘மணல் கொள்ளைக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியர்கள் மீது சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும்’ என்று உயர் நீதிமன்றம் எச்சரிக்கை செய்திருக்கிறதே..?


இப்படி நீதிமன்றங்கள் எச்சரிப்பது எத்தனையாவது தடவை என்று நான் கணக்கு வைத்துக்கொள்ளவில்லை. அதேசமயம், ‘சி.ஐ.ஏ விசாரணையைக்கூட எதிர்கொள்ளத் தயார்’ என்று ‘கூகுள்மீட்’ போட்டு அவர்களில் பலரும் சிரித்துக்கொண்டிருப்பதாகக் கேள்வி.


@தாமரை நிலவன், கீழ்க்கட்டளை, சென்னை-117.


‘அ.தி.மு.க தலைமையில்தான் கூட்டணி’ என முதல்வர் அறிவித்திருப்பது, பா.ஜ.க-வுக்கு விடுக்கப்பட்ட சவால் என்று எடுத்துக்கொள்ளலாமா?


ஒருவேளை, ‘ரொம்ப ரொம்பக் கேவலமாக இருக்கிறது. ஒரே ஒரு தடவை சொல்லிக் கொள்கிறேன்’ என்று ‘மேலே’ அனுமதி ஏதாவது பெற்றிருந்தால்?! எனவே, ‘வரலாற்று அடலேறே...’ என்றெல்லாம் அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வந்துவிட வேண்டாம்!


@சி.கார்த்திகேயன், சாத்தூர், விருதுநகர் மாவட்டம்.


ஜெயலலிதாவின் அண்ணன் மகன் ஜெ.தீபக், தமிழக பா.ஜ.க-வில் இணையப்போகிறாராமே?


‘அய்யாவுக்கு ஸ்ரீரங்கம் தொகுதி பார்சல்ல்ல்ல்ல்ல்ல்’!


@வாசுதேவன், பெங்களூரு, கர்நாடக மாநிலம்.


நிம்மதியின் விலை?


100 சதவிகிதம் இலவசம்.


@சரவணகுமார் சின்னசாமி, தாராபுரம்.


‘பதினேழு லட்சம் மாணவர்கள் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்திருப்பதே மாணவர்கள் ஜே.இ.இ மற்றும் நீட் தேர்வுகளை எழுத ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது’ என்று மத்திய கல்வி அமைச்சர் சொல்வதைக்கேட்டு அழுவதா... சிரிப்பதா?


‘ஆயுள் காப்பீடு எடுத்திருப்பவர்களெல்லாம், இறப்பதற்குத் தயாராக இருக்கிறார்கள்’ என்று உலவிக்கொண்டிருக்கும் ஒரு மீம்ஸ்தான் நினைவுக்கு வருகிறது.


@பெ.பச்சையப்பன், கம்பம், தேனி மாவட்டம்.


எதையும் எதிர்பார்க்காமல் உயிர்வாழ முடியுமா?


முடியும் - தேவைக்கு மேல் எதிர்பார்க்காமல். தேவை என்ன என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.


வேலைக்காரப் பெண்மணி இரண்டு நாள்கள் விடுமுறை எடுத்துக்கொள்கிறார். இதைப் பற்றி வீட்டில் பேசிக்கொள்ளும் கணவன்-மனைவி பற்றிய ஆங்கில வாட்ஸ்அப் ஒன்று இப்போது சுழன்றுகொண்டிருக்கிறது. தன் மகள் மற்றும் பேத்தியைப் பார்க்கச் செல்லும் வேலைக்காரப் பெண்மணிக்கு 500 ரூபாயைக் கொடுப்பதாகக் கூறுகிறார் மனைவி. ‘தீபாவளிக்கு வேறு கொடுப்பாயே... இப்போது எதற்கு?’ என்கிறார் கணவர். ‘பாவம், ஊருக்குப் போகிறார். நாம் ஒரு நாளைக்கு பீட்சா வாங்கும் காசுதான் அந்த 500 ரூபாய்’ என்று சொல்லி, கொடுத்துவிடுகிறார் மனைவி. விடுப்பு முடிந்து திரும்பிய வேலைக்காரப் பெண்மணியிடம், ‘500 ரூபாயை என்ன செய்தாய்’ என்று கேட்கிறார் வீட்டு உரிமையாளர்.


‘பேத்திக்குத் துணி-150 ரூபாய், பொம்மை-40 ரூபாய், ஸ்வீட்ஸ்-50 ரூபாய், கோயில் செலவு-50 ரூபாய், பேருந்துக் கட்டணம்-60 ரூபாய், மகளுக்கு வளையல்-25 ரூபாய், மருமகனுக்கு பெல்ட்-50 ரூபாய். மீதி 75 ரூபாயை மகளிடம் கொடுத்து பேத்திக்கு பேனா, பென்சில் வாங்கித் தரச் சொல்லிவிட்டேன்’ என்றார்.


‘ஓ... வெறும் 500 ரூபாயிலேயே இப்படி எட்டுவிதமான தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியுமோ’ என்பதை நினைத்தபோது, எட்டுத் துண்டுகளாகத் தரப்படும் 500 ரூபாய் பீட்சா, வீட்டு உரிமையாளரின் கண்களில் நிழலாடியது!


எஸ்.கே.வாலி, முருங்கப்பட்டி, திருச்சி மாவட்டம்.


தமிழக அமைச்சர்கள் ஒவ்வொருவரும் பிரதமர் மோடியின் பிரசார பீரங்கியாகச் செயல்படுகிறார்களே?


இந்த பீரங்கிகளுக்கு ‘எண்ணெய்’ போடுவதே ‘டெல்லி’தானே!

மோடி - செல்லூர் ராஜு

@பா.ரேஷ்மா, வந்தவாசி, திருவண்ணாமலை மாவட்டம்.


அ.தி.மு.க-வின் சிறந்த முதல்வர் வேட்பாளர் என்று யாரை நினைக்கிறீர்கள்?


‘செல்லூர்’ ராஜூதான் வெகு பொருத்தம். நடக்கிற அநியாயங்களைப் பார்த்து பொங்கும்போதெல்லாம் ‘தெர்மா கோல்’, ‘மாஸ்க்’ போல ஏதாவது கிச்சுக்கிச்சு மூட்டி நம்முடைய வேதனைகளையாவது மறைக்கச் செய்துவிடுவார்.

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment