Wednesday, September 30, 2020

கழுகார் பதில்கள்

@குத்தாலம் ஜெ.நடராஜன், மயிலாடுதுறை.


‘விவசாயிகளின் வருமானத்தை 2022-ம் ஆண்டுக்குள் இரண்டு மடங்காக உயர்த்தியே தீருவேன்’ என்கிறார் பிரமதர் மோடி. ஆனால், விவசாயிகளுக்காக ஆண்டுக்கு 6,000 ரூபாய் உதவித்தொகை கொடுத்த திட்டத்திலேயே 110 கோடி ரூபாய் அளவுக்கு அதிகாரிகள் ஊழல் செய்திருக்கிறார்கள். இதைப் பார்த்தால், ‘தோட்டம் காக்கப் போட்ட வேலி பயிரைத் தின்பதோ... அதை கேள்வி கேட்க ஆளில்லாமல் பார்த்து நிற்பதோ?’ என்கிற வாலியின் பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது... இது எதைக் காட்டுகிறது?


கவிஞரே அடுத்த வரியில் பதிலையும் சொல்லிவிட்டாரே... ‘நானொரு கை பார்க்கிறேன். நேரம் வரும் கேட்கிறேன்.’


@ஆர்.துரைசாமி, கணபதிபுதூர், கோவை.


காங்கிரஸ் கட்சிக் கூட்டங்களில் உறுப்பினர்கள் நாற்காலியைத் தூக்கி வீசிக் கலகம் செய்வதற்கும், பாசறைக் கூட்டங்களில் அ.தி.மு.க உறுப்பினர்கள் ரகளையில் ஈடுபடுவதற்கும் உள்ள வித்தியாசம்?


வேட்டியின் கரையும் கட்சிக் கறையும்!


@பா.ரேஷ்மா, வந்தவாசி.


தமிழ் அல்லது இந்தி... இரண்டில் கற்கச் சிறந்த மொழி எது?


அவரவர் தாய்மொழி.@ச.ந.தர்மலிங்கம், ஈரோடு.


அரசு மக்கள் மீது சுமத்தியிருக்கும் கடன் சுமையை மு.க.ஸ்டாலினோ, ரஜினியோ ஆட்சிக்கு வந்தால் குறைப்பார்களா?


நமது மூடநம்பிக்கைகள்தான் அரசியல்வாதிகளின் மூலதனம்!


@வண்ணை கணேசன், சென்னை.


‘இரு மொழிக்கொள்கையே நீடிக்கும். தமிழக அரசு ஒருபோதும் பின்வாங்காது’ என்கிற முதல்வரின் அறிவிப்பு பற்றி..?


பழனிசாமி சார், நீங்க நல்லவரா... கெட்டவரா?@அனிதா, சோலையூர்.

காதில் அணியும் கம்மலுக்கும், காலில் அணியும் மெட்டிக்கும் என்ன சம்பந்தம் என்று நீட் தேர்வில் இவை கழற்றப்படுகின்றன... இப்படித்தான் நமது அரசாங்கம் எல்லா விஷயங்களிலும் சிறு பிசிறும் இல்லாமல் நிர்வாகம் செய்கிறதா?


கேள்வியில் நியாயமும் உக்கிரமும் தெரிகிறது. கேள்வியைப் படித்துவிட்டு உங்கள் பெயரைப் பார்த்ததும் ஒரு கணம் என் மனம் நடுங்கியது உண்மை!


@ஏழாயிரம்பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்.


எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த ‘ஹரிதாஸ்’, பி.யூ.சின்னப்பா நடித்த ‘ஜகதலப்பிரதாபன்’, எம்.ஜி.ஆர் நடித்த ‘மந்திரிகுமாரி’, நாகேஸ்வர ராவ் நடித்த ‘தேவதாஸ்’ போன்ற பழைய படங்களை கழுகார் பார்த்ததுண்டா?


1929-ல் வெளிவந்த பேசாத படமான ‘கோவலன்’ போன்ற படங்களைக்கூட தேடித் தேடிப் பார்ப்பதுண்டு!


@எஸ்.ராமதாஸ், சேலம்.


மக்கள் கொரானாவுடன் வாழப் பழக வேண்டுமா, அதை எதிர்த்து வெற்றி பெற வேண்டுமா?


பாதுகாப்புடனும் கவனத்துடனும் அதை எதிர்த்து போராடப் பழகிக்கொள்ள வேண்டும்!


@மதியழகன், மேட்டுப்பாளையம்.


இந்தியாவின் உண்மையான மக்கள் தலைவன் யார்?


‘யாவன் ஒருவன் தனது ஜனன தேசமாகிய இந்தியாவானது இந்த வறிய நிலையில் இருப்பது பற்றி இராப்பகல் வருந்துகிறானோ, யாவன் ஒருவன் இந்த முப்பது கோடி இந்தியரும் வயிறார உண்பதற்கு உணவும் உடுக்க உடையுமின்றித் தவிக்கிறார்களே என மனமிரங்கி கண்ணீர் சொரிகிறானோ, யாவன் ஒருவன் பொது ஜனங்களுக்கு வந்த சுகதுக்கங்களும் கஷ்ட நஷ்டங்களும் தனக்கு வந்ததாக எண்ணி அனுதாபிக்கிறானோ, யாவன் ஒருவன் இந்தத் துன்பங்களை நிவர்த்திப்பதன் பொருட்டுத் தனது உயிரையும் இழக்கத் தயாராய் இருக்கிறானோ... அவன் ஒருவனே ஜனத் தலைவன்!” -12.1.1907 ‘இந்தியா’ இதழில் ‘ஜனத் தலைவன் யார்?’ என்ற கேள்விக்கு பாரதியார் தந்த பதில். நூற்றாண்டுகள் தாண்டியும் பொருந்தும்!


@கேஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்.


சமீபகாலமாக உண்மையை ஊடகங்களில் வெளியிடுவதால் நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்கு உட்படுத்தப்படுவது அதிகரித்துவருகிறதே?


அதே ஊடகங்கள் இவர்கள் கருத்தின் நியாய, அநியாயங்களை அலசி, உண்மையை மக்கள் முன் எடுத்துரைத்துக்கொண்டுதானே இருக்கின்றன!


@ச.ந.தர்மலிங்கம், ஈரோடு.


வளர்ந்துவரும் உதயநிதி ஸ்டாலினைத் தட்டிக்கொடுக்காமல் தலையில் குட்டுகிறீர்களே..?


‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்


கெடுப்பா ரிலானும் கெடும்.’


இது சாமானியன் முதல் மன்னன் வரை பொருந்தும்!@பா.ஜெயப்பிரகாஷ், பொள்ளாச்சி.


அன்னா ஹசாரே என்ன செய்துகொண்டிருக்கிறார்?


அதுதான் செய்ய வேண்டியதை யெல்லாம் ‘சிறப்பாக’ச் செய்து ‘முடித்து’விட்டாரே!


@மூர்த்தி பாலகிருஷ்ணன், அனுப்பானடி.


நவீனம் என்பது காலத்தைப் பற்றிய குறியீடு மட்டும்தானா?


காலத்தில் ஒன்றுமே இல்லை மூர்த்தி, அது ஒரு மேடைபோல. அதில் என்ன நாடகம் நடக்கிறது என்பதைப் பொறுத்தே அது நவீன நாடகமா, கிளாசிக் நாடகமா, தெருக்கூத்தா என்று சொல்ல முடியும். ` ‘நவீன கட்டணக் கழிப்பறை’ என்ற வாசகத்தில் மட்டுமே இன்று நவீனம் வாழ்கிறது’ என்று எங்கோ படித்தது ஞாபகம் வருகிறது. நாம் வாழ்ந்துகொண்டிருப்பது முழுமையான நவீன காலம் அல்ல!


@நெல்லை குரலோன், பொட்டல்புதூர்.


ஒரு காலத்தில் செழிப்பாக இருந்த ‘சிறு பத்திரிகைகள்’ இப்போது எப்படியிருக்கின்றன?


முன்பைப்போல காத்திரமான விவாதங்களை, விமர்சனங்களைப் பார்க்க முடியவில்லை. என்றாலும், இலக்கியப் பரிசோதனைக்கூடமாக, இன்றைக்கும் உயிரோட்டமாக வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன.


@பெ.பச்சையப்பன், கம்பம்.


மறதி மனிதனுக்கு காயமா, மருந்தா?


சில சமயம் காயம்... சில சமயம் மருந்து!


@மோகன், கோவில்பட்டி.


வருமான வரி அதிகாரிகள்போல நடித்து பணம், நகைகளைப் பிடுங்கிக்கொண்டு ஓடுபவர்களைத் தடுக்க வழியே இல்லையா?


அதிகாரிகள் தோரணையில் யாராவது வந்து நின்றாலே எதிர்க் கேள்வி கேட்காமல், சொன்னதைச் செய்வது நம் மக்களின் வழக்கமாகிவிட்டது. எல்லா ஆவணங்களும் இருந்தாலும் போலீஸ் நிறுத்தும்போது லைட்டாக உதறலெடுப்பது, நியாயமான தேவைக்காக நமக்குச் சேவை செய்ய பணியிலிருக்கும் அரசு அலுவலகங்களுக்குச் சென்று அதிகாரிகளைச் சந்திக்கும்போது கைகட்டி பவ்யம் காட்டுவது, நான்கு சொற்கள் தொடர்ச்சியாக ஆங்கிலம் பேசுபவர்களை வியந்து பார்ப்பது போன்றவைதான் இவற்றுக்குக் காரணம். அடிமை மனநிலையிலிருந்து வெளிவந்தாலே இவற்றைத் தடுத்துவிடலாம்.


@சிவா, மதுரை.


எம்.பி-க்களின் ஊதியம் குறைக்கப்பட்டது பற்றி?


நமக்கென்ன இது புதுசா... ஒரு ரூபாய் சம்பளத்தையெல்லாம் பார்த்தவங்கதானே சிவா நாமெல்லாம்!


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment