Friday, September 25, 2020

கழுகார் பதில்கள்

@சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.


யாரைத் திருத்துவது கடினம்?


‘நான் சொல்வதுதான் சரி’ என்று முன்முடிவுகளுடன் பேசுபவர்களை!


@வெங்கட்


நூலகங்களைப் பற்றிக் கவலைப்படாதது, கூடுதல் டாஸ்மாக் கடைகளைத் திறப்பது... இதில் எது ஒரு மாநிலத்தின் குடிமக்களை அதிகம் பாழாக்குகிறது?


இரண்டுமே அடுத்த தலைமுறைக்கு அரசு செய்யும் துரோகம்தான்! ஒன்று, அடுத்த தலைமுறை அறிவார்ந்த சமூகமாவதைத் தடுக்கிறது. இன்னொன்று, அடுத்த தலைமுறையைக் குடிநோயாளியாக்குகிறது.


@வெ.மணிமேகலை, பொள்ளாச்சி.


`முதல்வர் எடுத்த ரகசிய சர்வேயை வெளியிட்டு, அ.தி.மு.க துண்டு துண்டாகச் சிதறும் நிலையை ஏற்படுத்தியது ஜூ.வி’ என்கிறேன். கழுகாரின் பதில் என்ன?


அரசியல் களத்தில் நடக்கும் நிகழ்வுகளையும் காய்நகர்த்தல்களையும் எடுத்துச் சொல்வதே பத்திரிகையின் பணி. அதிருக்கட்டும்... துண்டு துண்டாக உடைகிற அளவுக்கா ஒரு கட்சி இருக்கும்? உங்க ஜட்ஜ்மென்ட் ரொம்பத் தப்புங்க!


@மாணிக்கம், சங்ககிரி.


தினசரி, வாராந்தர, மாதாந்தர பத்திரிகைகளில் பல்வேறு மொழிகளில் எழுதப்படும் தலையங்கங்கள் சம்பந்தப்பட்டவர்களின் கவனத்துக்குச் சென்றடைய வாய்ப்பிருக்கிறதா?


சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் எழுதப்படுகின்றன. மக்கள்மீது அக்கறையிருந்தால், ஆட்சியாளர்கள் நிச்சயம் கவனத்தில் எடுத்துக் கொள்வார்கள்.


@கா.கு.இலக்கியன், செங்குன்றம், சென்னை-52.


தந்தை பெரியாரின் பிறந்தநாளுக்காக பா.ஜ.க தலைவர் முருகன் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியை எப்படிப் பார்க்கிறீர்கள்?


அரசியல் நாகரிகம்!


@காந்திமதி, சேலம்


மத்திய அமைச்சராக இருந்த ஹர்சிம்ரத் கௌர் பாதல், மோடியின் அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்தது ஏன்?


மத்திய உணவுப் பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சராக இருந்த ஹர்சிம்ரத் கௌர் பாதல், சிரோமணி அகாலி தளம் கட்சியைச் சேர்ந்தவர். இவரது கட்சி, மோடியின் கூட்டணியில் அங்கம்வகித்தது. கூட்டணியில் இருந்தாலும், அதைப் பற்றிக் கவலைப்படாமல், மத்திய அரசின் வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் கௌர். பஞ்சாப்பின் விவசாய பூமியிலிருந்து வீறுகொண்டெழுந்த வீரப் பெண்மணியைப் பாராட்டலாம்! தமிழகத்திலும்தான் இருக்கிறார்களே சிலர்...@யாழினி, எழும்பூர், சென்னை.


கழுகாருக்குப் பயணம் செய்வது பிடிக்குமா, பிடித்த இடம்?


ரொம்பவே பிடிக்கும். ஆனால், பிடித்த இடம்தான் வித்தியாசமானது. ஆமாம், வாசிப்புவழியாகக் கடந்த காலத்துக்குள் சென்று வரலாற்றில் உலாவுவது ரொம்பப் பிடிக்கும். பயணங்களை அறிந்துகொள்ளும் பயணம் அது. கடந்தகால மனிதர்களின் பயணங்கள்தான் நிகழ்கால உலகத்தை வடிவமைத்தவை. உலகளாவிய வணிகத்தை, நாகரிகங்களை, மொழிகளை, மதங்களை, அறிவை வளர்த்ததில் பயணங்களுக்குப் பெரும் பங்கு உண்டு. அவற்றில் சுவாரஸ்யமான கதைகளும் உண்டு. ‘பரிணாம வளர்ச்சிக் கொள்கை’யை உலகுக்குத் தந்த சார்லஸ் டார்வினின் ‘பீகிள் கடற்பயணம்’ வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால், அந்தக் கப்பலின் கேப்டன் முதலில் டார்வினை நிராகரித்திருக்கிறார். ஒருவழியாகப் போராடி அந்தக் கப்பலில் இடம்பிடித்து, பின் வரலாற்றிலும் இடம்பிடித்தார் டார்வின். இதில், சுவாரஸ்யம் என்னவென்றால், ‘டார்வினின் மூக்கு எனக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான் அவரை நிராகரிக்க நினைத்தேன்’ என்று தனது குறிப்பில் எழுதியிருக்கிறார் கேப்டன் ஃபிட்ஸ்ராய். என்ன... பயணங்களுக்குள் பயணம் செய்வது பிடித்திருக்கிறதுதானே யாழினி?


@எல்.ஆர்.சுந்தரராஜன், மடிப்பாக்கம்‌.


ஐபிஎல் ஜுரத்தில் கொரோனாவின் மார்க்கெட் அடிபட்டுப்போவது யதார்த்தம் என ஒப்புக்கொள்கிறீரா?


நம்ம மனநிலையே இதானே பாஸ்... நாட்டுல பல பிரச்னைகள் இருக்கறப்பவே பீப் சாங்கும், ஜிமிக்கி கம்மலும் டிரெண்ட் ஆகலையா... இப்ப ஐபிஎல் டிரெண்ட் ஆகி, கொரோனாவை மறக்கடிச்சிரும். பின்னாடியே ‘பிக் பாஸ்’ வேற வருது!


@இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.


அ.தி.மு.க தலைமையை அதிகமாக வி(மி)ரட்டி வருவது பா.ம.க-வா அல்லது தே.மு.தி.க-வா?


மிரட்டுவதற்கு வெளியிலிருந்தெல்லாம் ஆள் வர வேண்டுமா என்ன?


@வெங்கட்


அரசியல்வாதிகள் அதிகம் தடுமாறுவது எப்போது... மேடைப் பேச்சிலா, பேட்டியின்போதா?


வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு விட்டு மீண்டும் அதே மக்களிடம் வாக்குக் கேட்டுப் போகும்போது!@இந்துக்குமரப்பன், விழுப்புரம்.


தடைசெய்யப்பட்ட போதைப்பொருள்கள் தமிழகத்தில் அதிக அளவு புழங்குகின்றனவே... இது எதைக் காட்டுகிறது?


இந்துக்குமரப்பன்... 26.8.2020 தேதியிட்ட ஜூ.வி படிக்கவில்லையா?


@ராஜ்குமார், திருச்சி.


பாராட்டு எப்படிக் கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும்?


பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், பாவேந்தர் பாரதிதாசனிடம் உதவியாளராக இருந்தவர். ஒருமுறை பாவேந்தர், பட்டுக்கோட்டையாரையும் அவரின் நண்பர்களையும் அழைத்திருக்கிறார். பாவேந்தர் கையிலொரு காகிதம். “டேய், பசங்களா... நீங்கல்லாம் என்னடா எழுதறீங்க? அகல்யானு ஒரு பொண்ணு எழுதியிருக்கற பாட்டைப் படிங்க” என்று சொல்லி காகிதத்தை நீட்டுகிறார். பட்டுக்கோட்டையாருக்கு இன்ப அதிர்ச்சி. ஏனெனில், அ.கல்யாணசுந்தரம் என்ற தனது பெயரைச் சுருக்கி ‘அகல்யா’ என்ற பெயரில் அதை எழுதியதே அவர்தான். பாராட்டு என்றால் இப்படிக் கிடைக்க வேண்டும்!


@அருணகிரி, காஞ்சிபுரம்.


மாங்கா மடையன், தேங்கா மடையன் என்று திட்டுகிறார்களே... அதற்கு என்ன அர்த்தம் கழுகாரே?


சீஸனுக்குக் கிடைக்கிறது மாங்கா... எப்பவும் கிடைக்கிறது தேங்கா! இன்னும் புரியலையா... எப்பவாச்சும் மடத்தனம் பண்றவன் `மாங்கா மடையன்.’ எப்பப் பார்த்தாலும் மடத்தனம் பண்றவன் `தேங்கா மடையன்.’


@இரா.கோதண்டராமன், அசோக்நகர், சென்னை.


உயிரைக் குடிக்கும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை ஆந்திராவைப்போல, நம் தமிழக அரசும் தடை செய்யலாமே..?


இருங்க... உட்கட்சிப் பிரச்னையையெல்லாம் தீர்த்துட்டு, கொரோனா கணக்கெல்லாம் சரிபண்ணிட்டு, அதுக்கப்புறமாவது இதுக்கு வருவாங்கனு நம்புவோம்!@ப்ரியபாரதி, நாகப்பட்டினம்.


வித்தியாசமான புத்தகம் ஒன்றை அறிமுகப்படுத்துங்களேன் கழுகாரே..?


`வரலாற்றை எழுதுவது என்பது அணுகுண்டு தயாரிப்பதைவிடவும் ஆபத்தானது’ என்பார்கள். ஆனால், வரலாற்றை விளையாட்டாகவும், சுவாரஸ்யமாகவும், ‘நறுக்’கென்றும் எழுதியவர்களில் முக்கியமானவர் லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் எடுவர்டோ கலியானோ (Eduardo Galeano). ஜனவரி 1-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை ஓராண்டு நாட்குறிப்புபோல ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். முழுக்க வரலாற்று விமர்சனங்கள்... ஆனால், வாசிக்கக் கதைகள் போலிருக்கும். ஒவ்வொரு பக்கத்திலும் வரலாற்றின் ஒரு கீற்று தெறிக்கும். மிக வித்தியாசமான அந்தப் புத்தகத்தின் பெயர் ‘சில்ட்ரன் ஆஃப் த டேஸ்.’ அதன் உபதலைப்பு, ‘மனிதகுல வரலாற்றின் நாட்காட்டி!’


@‘திருப்பூர்’ அர்ஜுனன்.ஜி, அவிநாசி.


இ.பி.எஸ், ஓ.பி.எஸ் இருவரும் ராமர், லட்சுமணனா... அர்ஜுனன், துரியோதனனா?


ஃபிடல் காஸ்ட்ரோ, சே குவேரா... அவங்களை விட்டுட்டீங்களே!


@இல.கண்ணன், நங்கவள்ளி, சேலம்.


‘எனது பிறந்தநாள் பரிசாக மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும்’ என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருக்கிறாரே..?


`வாய் மூடியிருப்பது நல்லது’ என்று சொல்கிறார்போல!


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment