Saturday, September 12, 2020

கழுகார் பதில்கள்

 @பாண்டி பாஸ்டன்


கடந்தகால மகாராஷ்டிர அரசியலில் எதற்கெடுத்தாலும் பாகிஸ்தானை வம்புக்கு இழுத்துக்கொண்டிருந்த சிவசேனாவைப் பார்த்து, `இன்றைய மும்பை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்போல இருக்கிறது’ என்று நடிகை கங்கனா ரணாவத் சீறியிருக்கிறாரே..?


நடப்பது குழாயடிச் சண்டை. அப்போது சிவசேனா சீறியபோது தோள்கொடுத்தவர்கள், இப்போது கங்கனாவுக்குத் தோள்கொடுக்கிறார்கள்.


கங்கனா ரணாவத்

@அ.யாழினி பர்வதம், சென்னை-76.


ரஜினி, கமல், விஜயகாந்த், கார்த்திக், சரத்குமார், சீமான்... என சினிமாக்காரர்களின் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதா?


அட ‘ஆட்சி.’ நல்ல டைட்டிலாக இருக்கிறதே! இந்தப் பெயரில் இதுவரை ஒரு சினிமா வந்ததில்லை. இவர்களில் யாராவது ஒருவர் முந்திக்கொண்டு பதிவுசெய்துவிடுவது நல்லது.


@இல.கண்ணன், நங்கவள்ளி, சேலம் மாவட்டம்.


‘திருப்போரூர் கந்தசாமி கோயில், ஆளவந்தார் அறக்கட்டளைக்குச் சொந்தமான 60,000 கோடி ரூபாய் சொத்துகளை அபகரிக்க முயற்சி நடப்பதால், யாருக்கும் பத்திரப்பதிவு செய்யக் கூடாது’ என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதே..?


நம் அரசியல்வாதிகள் வார்த்தை ஜித்தர்கள். ‘யாருக்கும்’ என்பதை ‘வேறு யாருக்கும்’ என்று எடுத்துக்கொண்டு, அவர்களே பட்டா போட்டுக்கொண்டுவிடப் போகிறார்கள். எதற்கும் ஒரு கண்காணிப்புக்குழுவை நீதிமன்றம் அமைப்பது நல்லது.


@கு.ப.இரகுநாதன், பூவிருந்தவல்லி, திருவள்ளூர் மாவட்டம்.


‘ஆன்லைன் மூலம் கல்வி புகட்டுவது தவறு இல்லை’ என்கிற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியில்லைதானே?


‘ஆன்லைன்’ என்கிற பெயரில் குழந்தைகளுக்கு அழுத்தம் தரக் கூடாது என்று நாம் அழுத்திச் சொல்லலாம். அதற்காக, ‘ஆன்லைன் கல்வியே கூடாது’ என்று பேசுவதில் அர்த்தமில்லை. இக்கட்டான ஒரு சூழலில், ‘கல்வி பாதிக்கப்பட்டுவிடக் கூடாது... ஓராண்டு மொத்தமும் இப்படியே வீணாகிவிடக் கூடாது’ என்கிற எண்ணத்தில்தான் ‘ஆன்லைன் கல்வி’ ஆரம்பமாகியிருக்கிறது. அத்துடன், எதிர்காலம் ஆன்லைன்தான். அதை யாராலும் மாற்ற முடியாது என்பதையும் அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.


@சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம், திருநெல்வேலி மாவட்டம்.


‘பிரதமரின் கிசான் நிதியுதவித் திட்டத்தில் கோடி கோடியாகக் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தது அ.தி.மு.க அரசுதான்’ என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமைப்பட்டுக் கொள்கிறாரே..?


கொள்ளையடித்தவர்களுக்குத்தானே முதலில் தெரியும்.


@அந்திவேளை.


அமைச்சர் பாண்டியராஜன், ‘ஜெயலலிதா காலத்தைவிட பலமாக இருக்கிறோம்’ என்கிறாரே?


பார்த்தாலே தெரியவில்லையா... மிக மிக பலத்துடனும் செழிப்புடனும்தானே இருக்கிறார்கள். ஜெயலலிதா இருந்திருந்தால், தோழியும் இருந்திருப்பார். பிறகு எப்படி இவர்களிடம் ‘பலம்’ இருக்கும். பாண்டியராஜன் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் இப்படி ‘உள்ளது உள்ளபடி’ பேசிவிடுவார். அவரிடம் பிடித்ததே இந்த ‘நல்லகுணம்’தான்.


@ஆர். ஹரிகோபி, புதுடெல்லி-75.


‘ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லையென்றால் தமிழகத்தின் எதிர்காலமே இருண்டுவிடும்’ என்பது போன்ற ஒரு கருத்து தமிழக மக்கள்மீது திணிக்கப்படுவதாகத் தோன்றுகிறது. கழுகாரின் கருத்து?


எதிர்காலத்தைவிடுங்கள், நிகழ்காலம் மட்டும் என்ன இருண்டா கிடக்கிறது... புள்ளிவிவரங்களைப் பார்த்தாலே, கடந்த 54 ஆண்டுகளில் தமிழகம் வளர்ந்த அளவுக்கு மற்ற மாநிலங்கள் வளரவில்லை. இங்கே ஏழை, எளிய, பாட்டாளி மக்களுக்குக் கிடைத்த அளவுக்கான முன்னேற்றம் வேறு எந்த மாநிலத்திலும் கிடைக்கவில்லை. தமிழகத்தில் பிரச்னைகளே இல்லை என்று கூறிவிட முடியாது. அதற்காக, வெறும் அரசியல் காரணங்களுக்காக தமிழகத்தில் சாக்கடை மட்டுமே ஓடுவதுபோலவும், வடமாநிலங்களிலெல்லாம் பாலாறும் தேனாறும் ஓடுவதுபோலவும் மக்களை மூளைச்சலவை செய்யப் பார்ப்பது நியாயமில்லைதான்.


ஜூ.வி. 27/02/2019 தேதியிட்ட சிறப்பிதழில் வெளியான ‘தன்னிகரில்லா தமிழகம்... தரவுகள் இதோ!’ என்ற கட்டுரை, இதைத்தான் பேசுகிறது. https://rb.gy/lyxcxt


@கே.இந்து குமரப்பன், விழுப்புரம்.


கொரோனோ வராமலிருக்க, வீட்டு வாசலில் வேப்பிலை கட்டிவைப்பது மூடநம்பிக்கைதானே?


முழு நம்பிக்கை. வேப்பிலை ஓர் அருமையான கிருமிநாசினி. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர் கண்டறிந்த இயற்கை வேக்ஸின் (தடுப்பு மருந்து). அதுமட்டுமல்ல, இன்றைக்கு ‘தகரம்’ அடித்து எச்சரிக்கப்படும் சமூக இடைவெளியை, வீட்டுக்கு வீடு வாசலில் கட்டிவைக்கப்பட்ட அந்த வேப்பிலைதான் அன்றைக்கும் ஊருக்கே உணர்த்தியது. ‘பக்தி’ என்ற பெயரில் எல்லாவற்றையும் கண்மூடித்தனமாக ஆதரிப்பது எவ்வளவு தவறோ... அதற்குச் சற்றும் குறைவில்லாத தவறுதான் ‘பகுத்தறிவு’ என்ற பெயரில் எல்லாவற்றையும் மூடநம்பிக்கைப் பட்டியலில் சேர்ப்பது.


மெய்ப்பொருள் காண்பதறிவு.


@ப்யூனி பிரதர்ஸ்.


‘வன்னியர்களுக்குக் கல்வி, வேலை வாய்ப்புகளில் 15 சதவிகிதத்துக்கும் கீழ் பிரதிநிதித்துவம் குறைந்தால் போராட்டத்தில் குதிப்பேன்’ என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கிறாரே..?


‘தேர்தல் வருதே...


தேர்தல் வருதே...


பொக்கிஷமெல்லாம்


கொட்டிக் கொடுக்க


பொதுத் தேர்தல்


வருதே!’@‘திருப்பூர்’ அர்ஜுனன்.ஜி, அவிநாசி.


எடப்பாடியைப் புகழ்ந்து பாடிப் பரிசுகள் பெறலாம் என்றிருக்கிறேன். கிடைக்குமா?


ஏதோ, என்னால் முடிந்தது உங்களுக்காக...


“அரியர் வைத்தோர் வாழ்வெல்லாம்


ஆல் என தழைக்க


ஆல் பாஸ் தந்த தலைவ...


இன்று முதல்


‘ஆல்பாஸ் எடப்பாடி’ என்று


அன்போடு நீ அழைக்கப்படுவாய்!’’


மண்டபத்தில் யாரோ எழுதிக் கொடுத்தது என்பதை வெளிப்படுத்திக் கொள்ளாமல் பாடிப் பாருங்கள். ‘பொற்கிழி’ கிடைத்தால்கூட எனக்கு வேண்டாம்!


@லட்சுமிகாந்தம், வேலூர், நாமக்கல் மாவட்டம்.


இறந்தவர்களின் பிறந்தநாளை ஆடம்பரமாகக் கொண்டாடுவது சரியா?


இறந்தநாளோ... பிறந்தநாளோ... அதீத கொண்டாட்ட மனப்பான்மைதான் பல்வேறு சீரழிவுகளுக்கும் முழுமுதற் காரணமாக இருக்கிறது என்பதை யாரும் உணர்வதாகவே தெரியவில்லை. ஆரம்பத்தில் திருமண நிகழ்வுகள் வீட்டுக்குள்ளேயே நடைபெற்றன. பிறகு வீதிக்கு வந்தன. அடுத்து ஊரிலேயே இருக்கும் பெரிய வீட்டுக்கு இடம் மாறின. இப்போது, ‘கோயம்புத்தூர்லயே பெரிய மண்டபமாம்... ஒரு நாள் வாடகையே 50 லட்சமாம்’ என்று பலரும் வாய்பிளக்கும் அளவுக்கு முன்னேறியிருக்கின்றன. கூடவே, பட்டாசு, கேக் வெட்டுவது தொடங்கி பலவும் ஒட்டிக்கொண்டே இருக்கின்றன. பகட்டுக்கு ஏது எல்லை!


@மல்லிகா அன்பழகன், சென்னை-76.


ரௌடிகள் செல்வாக்காக வலம்வரக் காரணம், அரசியல்வாதிகளா... அதிகாரிகளா?


அமைதியாகவே இருக்கும் நாமும்தான். நாம் அனைவரும் கைகோத்துவிட்டால், அரசியல்வாதி+அதிகாரி+ரௌடிகள் கூட்டணியை கருவறுத்துவிட முடியும். ஆனால், நாம்தான் சாதி, மதம், அரசியல் ஆகியவற்றின் பெயரால் எப்போதுமே பிரித்தாளப் படுகிறோமே!


@அ.ஜெயப்பிரகாஷ், கழுகுமலை, தூத்துக்குடி மாவட்டம்.


மதுக்கடைகளைத் திறப்பது, இயற்கையை அழித்து சாலை அமைப்பது போன்ற விஷயங்களில் ‘அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது’ என்று நீதிமன்றங்கள் ஒதுங்குவது, உண்மையையும் நீதியையும் மறைப்பதாகாதா?


இட ஒதுக்கீடுகூடத்தான் அரசாங்கத்தின் கொள்கை முடிவு. அதிலெல்லாம் அவ்வப்போது காலைக்கூட விடுகின்றனவே நீதிமன்றங்கள். ஆக, இதெல்லாம் நீதிமன்றத்தின் ‘கொள்கை முடிவு’ என்று வேடிக்கை பார்ப்பதோடு நாம் நிறுத்திக்கொள்வோம்.


@மா.பவழராஜன், நன்செய் இடையாறு, நாமக்கல் மாவட்டம்.


2021 சட்டமன்றத் தேர்தலிலும் மக்களாகிய நாங்கள் தோற்கப்போவது உறுதி என்று எங்கள் கனவில் வந்து கடவுள் சொல்லிவிட்டார். உங்கள் கனவில் யார் ஜெயிப்பார்கள் என்று அவர் சொல்லியிருந்தால், எங்களுக்கும் சொல்லுங்களேன் கழுகாரே?


கடவுளே... கடவுளே!


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment