Friday, September 04, 2020

கமலின் மெகா கணக்கு!

 ‘நாமே முன்னெடுப்போம் ஒரு புதிய தொடக்கத்தை, புதிய எதார்த்தத்தை, புதிய வாழ்க்கையை. நாமே தீர்வு!” என கன ஜோராக ‘பிக் பாஸ்-4’ புரொமோ வீடியோவில் பளிச்சிடத் தொடங்கியிருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். வழக்கமான `பிக் பாஸ்’ சீஸனைப்போல இது இருக்காது. முழுமையாக எலெக்‌ஷனுக்கான புரொமோஷனாகத்தான் இருக்கும் என்கிறார்கள் `நம்மவரு’க்கு நெருக்கமானவர்கள். இது கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன்னரே தீட்டப்பட்ட திட்டம்தான்.


ஜூலை பாதியில் தொடங்கி, அக்டோபர் வரை `பிக் பாஸ் சீஸன்-4’, பிறகு தேர்தல் சுற்றுப் பயணம், தேர்தலையொட்டி ஏப்ரலில் ‘இந்தியன்-2’ என மெகா பிளானுடன் களமிறங்கக் காத்திருந்தார் கமல்ஹாசன். ஆனால், கொரோனா தாக்கத்தால் பிக் பாஸ் தள்ளிப்போனது; `இந்திய’னிலும் பிரச்னை. இந்தநிலையில், பிக் பாஸ் மேடை கிட்டத்தட்ட தயாராகிவிட்டது. அடுத்த நான்கு மாதங்கள் மக்களிடம் குறிப்பாக, பெண்களிடமும் இளைஞர்களிடமும் உரையாடுவதற்கான களமாக பிக் பாஸைத்தான் பயன்படுத்தவிருக்கிறார். கொரோனா காலத்தில், மற்ற அரசியல் தலைவர்களுக்கு இல்லாத வாய்ப்பு கமலுக்குக் கிடைத்திருக்கிறது. அதையே தன் அரசியல் பிரம்மாஸ்திரமாக பயன்படுத்தக் காத்திருக்கிறார் கமல். மக்கள் நீதி மய்யத்தின் முன்னணி நிர்வாகி ஒருவர் சில நாள்களுக்கு முன்பாக, அ.தி.மு.க-வுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்த, அது கமலின் காதுக்குப் போனது. நிர்வாகிகள் கூட்டத்தில் `கட்சியைக் கலைத்துவிடுவேன்’ என கமல் கொந்தளிக்க, நடுங்கிப்போனார்கள் கட்சியின் நிர்வாகிகள். காரணம், கமலிடம் இருப்பதோ மெகா பிளான். ரஜினி - கமல், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை இணைத்து வலுவான மாற்று அணியை உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறார் கமல். ஸ்டாலினா, எடப்பாடியா, மூன்றாவது அணியா என 2021 தேர்தல் களம் அமையக் கூடாது; ரஜினி-கமல் இணைந்த கூட்டணி வேண்டுமா, வேண்டாமா... என்பதை மட்டும்தான் சிந்திக்க வேண்டும். அந்த அளவுக்கு, இறங்கும்போதே பலமாக இறங்க வேண்டும். அதைச் சீர்குலைக்கும் வகையில் யாராவது நடந்துகொண்டால், அது யாராக இருந்தாலும் கடுமையான தண்டனைதான் என எச்சரிக்கை விடுத்திருக்கிறார் கமல்.‘இந்தியன் - 2’ ஒருவேளை தாமதமானால், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பரபரவென ஓர் அரசியல் படத்தை முடித்து, தேர்தலுக்கு முன்பாக வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார் கமல். இதையும் மனதில்வைத்து ‘என் தரப்புப் பணியை நீங்கள் நினைப்பதை, எதிர்பார்ப்பதைவிட பல மடங்கு அதிகமாகச் செய்துவிடுவேன்... எனக்குத் தேவை உங்களுடைய சரியான ஒத்துழைப்புதான்’ எனக் கட்சி நிர்வாகிகளுக்குக் கட்டளையிட்டிருக்கிறார் கமல். ‘பிரசாந்த் கிஷோர் டீம் நமக்கேற்ற வகையில் இல்லை என்பதால்தான் சங்கையா சொல்யூஷன்ஸை உருவாக்கியிருக்கிறேன். யாரோ ஒருவர் வந்து நம்மை வேலை வாங்குவதா என நினைக்க வேண்டாம். அதற்குத் தலைவரும் நான்தான்’ எனக் கட்சி நிர்வாகிகளை உத்வேகப்படுத்தியிருக்கிறார் கமல்.


வரும் சட்டமன்றத் தேர்தலில் சென்னையில்தான் போட்டியிடுவார் கமல். அதிலும், தி.மு.க-வின் இளைய வாரிசு போட்டியிடுவார் என கணிக்கப்படும், ‘ஆயிரம் விளக்கு’ தொகுதியில்தான் போட்டியிடுவார் என அடித்துச் சொல்கிறார்கள் `நம்மவ’ரின் நம்பிக்கைக்குரியவர்கள். சபாஷ்... சரியான போட்டி!


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment