Wednesday, September 16, 2020

கறார் வனத்துறை... கண்ணீரில் காடர்கள்!

 


‘‘காடுதான் எங்க வீடு வாசல், வாழ்க்கை, சாமி எல்லாமே... காட்டோட எங்க நாடி நரம்புகளெல்லாம் பின்னிக்கிடக்கு. மீனைத் தரையில துக்கிப்போட்டு வாழச் சொல்றதும் எங்களைக் காட்டிலிருந்து வெளியே அனுப்பிட்டு வாழச் சொல்றதும் ஒண்ணுதான்...” - காடர் பழங்குடியினப் பெண் ராஜலட்சுமியின் வார்த்தைகளில் வலி அதிகமாகத் தெரிகிறது.


கோவை மாவட்டம், வால்பாறை அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட அடர் வனப்பகுதி அது. இரண்டு பக்கமும் ஆறு, நடுவிலுள்ள மலையிலிருக்கிறது காடர்களின் கல்லாறு கிராமம். குறுமிளகு, இஞ்சி, காப்பி என்று எதைப் போட்டாலும் துளிர்விடுகிற பொன்விளையும் பூமி அது. சமவெளியின் எந்தப் பரபரப்பும் இல்லாமல், இயற்கை யோடு இயற்கையாய் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்திவந்தன, காடர் இனத்தைச் சேர்ந்த 23 குடும்பங்கள். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெய்த பெருமழை, பாதி ஊரை அழித்துவிட, பாதுகாப்புக்காக அதே வனத்தின் வேறு பகுதிக்கு இடம்பெயர்ந்து குடிசை போட்டு வசித்து வந்தன அந்தக் குடும்பங்கள். “வனச்சட்டம் அனுமதிக்காது. உங்களின் பழைய இடத்துக்கே செல்லுங்கள் அல்லது வனத்தைவிட்டு வெளியேறுங்கள்!’’ என்று கறார் காட்டியது வனத்துறை.அழிந்துபோன ஊருக்கு மீண்டும் எப்படிச் செல்வது? மீண்டும் அந்த இடத்துக்குப் பாறைகள் உருண்டு வரலாமே என்கிற பயத்தில் செய்வதறியாது திகைத்தனர் மக்கள். அவர்களின் குடிசைகளை அதிரடியாக அகற்றி, 5 கி.மீ தூரத்திலுள்ள ‘தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழக’த்தின் லைன் வீடுகளில் தற்காலிகமாகத் தங்க வைத்தது வனத்துறை.அகதிக் குடியிருப்புகள் போன்ற வசதியற்ற வீடுகள், குடிநீர்ப் பிரச்னை, இரவுகளில் உறங்க இடம்பிடிக்கும் போராட்டம், கிடைக்கும் கொஞ்ச இடத்தில் நெருக்கியடித்துத் தூங்க வேண்டிய நிலை, எல்லாவற்றுக்கும் மேலாக வாழ்வாதாரமற்ற நிலை. இந்தப் பிரச்னைகளையெல்லாம் சுட்டிக்காட்டி, ‘‘எங்கள் காட்டிலேயே மாற்று இடம் ஒதுக்கித் தாருங்கள்’’ என்று கெஞ்சுகிறார்கள் அந்த மக்கள். அவர்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதுதொடர்பாக, ‘‘எங்க மூச்சு அடங்குனா... அது காட்டுக்குள்ளதான் அடங்கணும்!’’ என்ற தலைப்பில் 1.9.2019 தேதியிட்ட ஜூ.வி இதழில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். இன்றுவரையிலும் அவர்களின் போராட்டமும் அல்லாட்டமும் ஓயவில்லை, தீர்வும் கிடைக்கவில்லை!


ராஜலட்சுமி, சக்திவேல்

‘‘10 நாள்ல மாற்று இடம் தர்றோம். அதுவரை இங்க இருங்க”னு வனத்துறையில சொன்னாங்க. ஆனா, ஒரு வருஷமே ஆகிப்போச்சு. சொல்ல முடியாத வேதனைல இருக்கோம். எனக்கு மூணு பசங்க இருக்காங்க. காட்டுல இருக்கறப்ப எந்தப் பிரச்னையும் அவங்களுக்கு வந்ததில்ல. இப்ப அடிக்கடி உடம்பு சரியில்லாமப் போகுது. ஒரே வீட்ல மூணு குடும்பங்கள் அடைஞ்சு கிடக்கறோம். மூச்சு முட்டுது... எங்க வீட்ல நான், என் கணவர், மூணு பசங்க, என் அப்பா, அம்மா, பாட்டி, ரெண்டு அத்தைங்க, அத்தை பொண்ணு, தம்பினு மொத்தம் 12 பேர் இருக்கோம். மூணு குட்டி குட்டி ரூம் இருக்கு. அதுக்குள்ளதான் முடங்கிக்கணும். அதுல ஒரு ரூம், மழை வந்தா ஒழுகுது. பாத்ரூம் வசதியும் இல்ல. ஒரு கிணறு இருக்கு. அதுல மோட்டார் போட்டுதான் தண்ணி எடுக்குறோம். காலைல எந்திருச்சவுடனே எஸ்டேட்காரங்க, ‘நாங்க வேலைக்குப் போறவங்க... அதனால, நாங்கதான் முதல்ல’னு தண்ணிக்கு நிக்கிறாங்க. இங்க எஸ்டேட்ல வேலை செய்யவறவங்கதான் அதிகம். நாங்க ஒண்ணும் சொல்ல முடியாது. பறவைகள் சத்தத்துல நிம்மதியா துங்கிக்கிட்டிருந்த நாங்க, இன்னிக்கு நைட்டுக்கு தூங்க இடம் கிடைக்குமானு புலம்பிக் கிட்டிருக்கோம்.


கல்லாறுலயிருந்து காட்ல வேறு இடத்துக்கு மாறுனப்ப, வனத்துறை கொஞ்சம்கூட அவகாசம் கொடுக்காம, நாங்க போட்ட குடிசைகளை அகற்றுனாங்க. அப்ப வனத்துறையோட நடவடிக்கையில பயந்து, எங்க அத்தைக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துருச்சு. இங்க வந்த பிறகு, நாங்க எங்க போனாலும் வனத்துறைகாரங்க எங்க பின்னாடியே வந்து கண்காணிச்சுட்டு இருக்காங்க. சுதந்திர தினம் அன்னிக்கு, நாங்க சுதந்திரமா இல்லங்கிறதை சொல்ற விதமா நிலம் கேட்டு உள்ளிருப்புப் போராட்டம் பண்ணோம். உடனே, மலை உச்சில ஒரு டென்ட் போட்டு அங்கிருந்தே கண்காணிக்கத் தொடங்கினாங்க. வனத்துறைக்காரங்க வந்தாலே, ‘நம்மள விரட்டறவங்க வர்றாங்கமா’னு எங்க குழந்தைங்க பயப்படுறாங்க. கலெக்டர் வரை நேர்ல பார்த்து எங்க கோரிக்கையைச் சொல்லிட்டோம். அவங்கெல்லாம்கூட நம்பிக்கையாதான் பேசுறாங்க. வனத்துறைதான் எங்களையும் ஏமாத்திட்டு, இடம் கொடுக்க விடாமத் தடுக்குறாங்க’’ என்று கலங்கினார் ராஜலட்சுமி.‘‘இப்பவும் காலைல எந்திருச்சு, 5 கி.மீ தூரம் காட்டுக்குப் போய் முடிஞ்ச வேலைகளைச் செஞ்சிகிட்டுதான் இருக்கோம். வாழ்க்கை இப்படியே முடிஞ்சிருமோனு பயமா இருக்கு. இங்க இவ்வளவு கஷ்டப்படுறதுக்கு, எங்க கிராமத்துக்குப் போய் வெள்ளத்துல செத்தாலும் பரவாயில்லைனு தோணுது. சீக்கிரம் இதுக்கு ஒரு தீர்வு கொடுங்க சாமி’’ என்று கையெடுத்துக் கும்பிடுகிறார் சக்திவேல்.


ஆனைமலை புலிகள் காப்பகக் கள இயக்குநர் (பொறுப்பு) அன்வர்தீன் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி இருவரையும் தொடர்புகொண்டோம். ‘‘அவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்குவதில் சட்டச் சிக்கல்கள் இருக்கின்றன. விரைவில் நல்ல முடிவை எடுப்போம்’’ என்று அதே வழக்கமான பழைய பதிலையே சொல்கிறார்கள்.


அதிகார வர்க்கத்துக்கு எந்த அளவுக்கும் வளைந்து கொடுக்கும் அரசு நிர்வாகம், எளிய மக்கள் என்றால் மட்டும் இழுத்தடித்து ஏளனம் செய்யும் போக்கு எப்போது மாறும்?


- குருபிரசாத்


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment