Thursday, September 10, 2020

ரூபாய் ஒன்றிலிருந்து அரையாண்டு சிறை வரை...

ஈரைப் பேனாக்கி, பேனை பெருமாளாக்கிய சம்பவம்போல் பிரசாந்த் பூஷண்மீது எடுக்கப்பட்ட நீதிமன்ற அவதூறு வழக்கு ஒருவழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. அவர் ட்விட்டரில் போட்ட இரண்டு கருத்துகள் நீதிமன்றத்தின் மாண்பைக் குறைப்பதாகத் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், பலத்த எதிர்க்கணைகளாலும் விமர்சனங்களாலும் அவருக்கு ஒரு ரூபாய் அபராதம் விதித்து வழக்கை முடித்துக்கொண்டார்கள்.


வழக்கைப் பல நாள்களுக்கு நடத்திய பெரிய வக்கீல்களுக்குக் கட்டணம் அளிக்க வேண்டும். ஆனால், பிரசாந்த் பூஷண் அந்த ஒரு ரூபாயையும் தனது வக்கீலிடமிருந்தே வாங்கி நீதிமன்றத்தில் செலுத்தி விட்டார்.


`ஒரு ரூபாய் அபராதம் விதித்த சம்பவம் முன் எப்போதாவது நடந்திருக்கிறதா?’ என்று பலரும் கேட்கிறார்கள். நீதிமன்ற கிரிமினல் அவதூறு வழக்கில், அதிகபட்சமாக ஆறு மாதச் சிறைத்தண்டனையும், ரூ.2,000 அபராதமும் சேர்த்தோ (அ) தனித்தனியாகவோ விதிக்கலாம்.


1970-களில் கேரள முதலமைச்சராக இருந்த ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்டுக்குக் கேரள உயர் நீதிமன்றம் ரூ.1,000 அபராதம் விதித்தது. அதை எதிர்த்து ஈ.எம்.எஸ் செய்த மேல்முறையீட்டில், உச்ச நீதிமன்றம் அபராதத் தொகையை ரூ.50 ஆக மாற்றியது. எழுத்தாளர் அருந்ததிராய் மீது தொடுக்கப்பட்ட வழக்கில், நீதிமன்றம் கலைந்து செல்லும்வரை அவருக்கு ஒரு நாள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. சிறைக் கம்பிகளை எண்ணுவதற்கு பதிலாக, நீதிமன்ற வளாகத்திலேயே மாலைவரை இருந்துவிட்டு வீடு திரும்பினார் அவர்.


`அப்படியென்றால், நீதிமன்ற கிரிமினல் அவதூறு வழக்கில், இதுவரை யாருக்குமே ஆறுமாதச் சிறைத் தண்டனை விதிக்கப்படவில்லையா?’பூஷண் விஷயத்தில், நீதிபதிகள் ஒருவரை `குற்றவாளி’ என்று சொன்ன பிறகு, ‘மன்னிப்புக் கேட்டுவிடுங்கள்... வழக்கை முடித்துவிடலாம்’ என்று தொடர்ச்சியாகப் பலமுறை கோரியதைப் பார்த்தவர்களுக்கு ஆச்சர்யம் ஏற்படலாம். இப்படி நீதிபதிகளே குற்றவாளியை, `மன்னிப்புக் கேட்டுவிடு... விட்டுவிடுகிறேன்’ என்று சொன்ன சம்பவம் சென்னை உயர் நீதிமன்றத்திலும் ஒரு முறை நடந்தது.


குமாரசாமி என்கிற கயிலை மன்னன், `சிவப்பு நாடா’ என்ற பத்திரிகையை வெளியிட்டு, நடத்திவந்தார். அவரது இதழ், வெளியில் விற்பதைவிட அதிகமாக நீதிமன்ற வளாகங்களில் விற்கப்பட்டு, சுற்றுக்கு வந்தன. ஏனெனில், எந்தப் பத்திரிகையிலும் இல்லாத வகையில் அவரது சிவப்பு நாடாவில் மட்டுமே நீதிபதிகளைப் பற்றிய கிசுகிசு அடிக்கடி வெளிவரும். 70-களில் ஒருமுறை, அன்றைய தலைமை நீதிபதி வீராசாமி கொடைக்கானலில் ஒரு பெண்ணுடன் உலாவந்தார் என்று சிவப்பு நாடாவில் செய்தி வெளியானதைப் பார்த்துப் பலருக்கும் அதிர்ச்சி. ஆனால், யாரும் கயிலை மன்னன்மீது வழக்கு போட தயாராகவே இல்லை. நீதிமன்றமே அந்த வழக்கைத் தானாகப் பதிவுசெய்து அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. மேலும், வழக்கை விசாரிப்பதற்குப் பல நீதிபதிகளும் தயக்கம் காட்டியதால், அன்றைக்கு கிரிமினல் வழக்குகளை விசாரித்துவந்த நீதிபதி கிருஷ்ணசாமி ரெட்டியார் முன்னால் அது விசாரணைக்கு வந்தது.


வழக்கில் தன் தரப்பு நியாயத்தை வெளிப்படுத்துவதற்கு கயிலை மன்னன் பலமுறை வாய்தா வாங்கியதால் வழக்கில் பரபரப்பு ஏற்பட்டது. எப்படியாவது இந்த வழக்கை முடித்தால் போதும் என்ற சூழ்நிலை உருவானது. நீதிபதி, கயிலை மன்னனிடம் `மன்னிப்புக் கேட்டுவிட்டால் விட்டுவிடுகிறோம்’ என்று பலமுறை கூறியும் அவர் கேட்க மறுத்துவிட்டார்.


ஒருநாள் நீதிமன்றத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. அந்தச் சமயத்தில் இந்த வழக்கும் பட்டியலிடப்பட்டது. நீதிபதிக்கும் கயிலை மன்னனுக்கும் தொடர்ச்சியாக உரையாடல் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே, கயிலை மன்னனின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டு அவரை எச்சரித்து விடுவிப்பதாக நீதிபதி தீர்ப்பை எழுதினார். அதற்குப் பிறகும் கயிலை மன்னன் பேச முற்பட்டபோது நீதிபதி அவருக்கு அறிவுரை கூறி அடுத்த வழக்கை விசாரிக்க முற்பட்டார்.


அதன் பிறகு, சிவப்பு நாடாவின் விற்பனை அதிகரித்தது. தொடர்ந்து இது போன்ற செய்திகளை வெளியிட்ட கயிலை மன்னன், மீண்டும் ஒருமுறை தலைமை நீதிபதி வீராசாமியைப் பற்றி அவதூறாக எழுதினார். `பேருந்துகளை தேசியமயமாக்கிய தி.மு.க அரசின் சட்டம் செல்லாது’ என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறிய தீர்ப்பைப் பற்றி அந்தப் பத்திரிகையில் `இது அரசும் நீதிமன்றமும் சேர்ந்து செய்த சதி’ என்றும், `நான் அடிப்பதுபோல் அடிப்பேன், நீங்கள் அழுவதுபோல் அழ வேண்டும் என்பதாக இருக்கிறது’ என்றும் எழுதியிருந்தார். ஆனால் உயர் நீதிமன்றம், நீதிமன்ற அவதூறு வழக்கு எதையும் கயிலை மன்னன்மீது எடுக்கவில்லை. அந்த வழக்கில் ஆஜரான சீனியர் வக்கீல் வசந்த் பை, உச்ச நீதிமன்றத்தில் அவதூறு வழக்கைத் தொடர்ந்தார். உச்ச நீதிமன்றம் கயிலை மன்னனுக்கு ஆறு மாதச் சிறைத் தண்டனை வழங்க, அவர் சென்னை மத்தியச் சிறையில் தள்ளப்பட்டார்.


சென்னை உயர் நீதிமன்றத்தில் பல பொதுநல வழக்குகளைத் தொடர்ந்தவர் எஸ்.கே.சுந்தரம் என்ற வழக்கறிஞர். ஒருமுறை அவர், சென்னையில் தலைமை நீதிபதியாக இருந்து பதவி உயர்வு பெற்று, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியான ஏ.எஸ்.ஆனந்துக்கு ஒரு தந்தியை அனுப்பினார். அப்போது நீதிபதி ஆனந்தின் பிறந்த தேதி பற்றிய ஒரு சர்ச்சை எழுந்தது. அவர் இங்கிலாந்து நாட்டில் படித்தபோது கொடுத்திருந்த பிறந்த தேதிக்கும், உயர் நீதிமன்றத்தில் நியமனம் செய்யப்பட்டபோது கொடுத்திருந்த தேதிக்கும் முரண்பாடு இருப்பதாகக் கூறப்பட்டது. எஸ்.கே.சுந்தரம் அனுப்பிய தந்தியில், ஆனந்த் மீது கிரிமினல் வழக்கு தொடரப்போவதாகவும், அவர் மூன்று கோடி ரூபாய் நீதிமன்றத்தில் செலுத்த வேண்டுமென்றும், ஓய்வு வயதைக் கடந்த பிறகும் எந்த அடிப்படையில் அவர் பதவியிலிருக்கிறார் என்பது பற்றி விளக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.


இதில், உச்ச நீதிமன்றம் தானாகவே முன்வந்து எஸ்.கே.சுந்தரம் மீது அவதூறு வழக்கு பதிவு செய்தது. அவரைக் குற்றவாளி என்று அறிவித்து, அவருக்கு அதிகபட்சமான ஆறு மாதச் சிறைத் தண்டனை விதித்தது. பின்னர் தண்டனையை ஒரு மாதத்துக்கு ஒத்திவைத்து, அந்த வழக்கறிஞர் `நான் இது போன்ற கிரிமினல் அவதூறு வழக்கில் ஈடுபட மாட்டேன்’ என்று உறுதிமொழிப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அதையும் மீறி அவர் அவதூறு நடவடிக்கையில் ஈடுபட்டால் நீதிமன்றம் அளித்த தண்டனை மறுபடியும் நடைமுறைக்கு வரும் என்றும் உத்தரவிட்டது. அப்படிப்பட்ட உறுதிமொழியை அளிக்க மறுத்த எஸ்.கே.சுந்தரம் இறுதியில் ஆறு மாதச் சிறைத் தண்டனையை அனுபவித்தார்.


அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்த நாவரசு, தனது சக மாணவர் ஒருவரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தது. அந்தக் கொலையை நேரில் பார்த்த சாட்சிகள் எவருமில்லை என்றாலும், சூழ்நிலை அடிப்படையில் குற்றவாளி ஜான் டேவிட் விசாரணை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார். ஆனால், மேல்முறையீட்டில் சென்னை உயர் நீதிமன்றம் சாட்சியம் போதாமையால் அவரை விடுதலை செய்தது.


கே.சந்துரு - மேனாள் நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்


பொதுமக்களுக்கு சட்ட அறிவை ஊட்டும் வகையில் புத்தகங்களை வெளியிட்டு வந்ததுடன், பல சந்தர்ப்பங்களில் நீதிமன்றத் தீர்ப்புகளை விமர்சிப்பவராகவும் இருந்த செந்தமிழ்க் கிழார், நாவரசு வழக்கின் தீர்ப்பைக் கையிலெடுத்தார். இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்துக்கு ஒரு கடிதமும் எழுதினார். அதில் `ஜான் டேவிட் குற்றவாளி இல்லையென்றால், வேறு எந்தக் குற்றவாளி இந்தக் கொலையைச் செய்தார் என்பதை சென்னை நீதிமன்றம் அறிவிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். அவர் எழுதிய கடிதத்தால் கோபமடைந்த உயர் நீதிமன்றம், அவர்மீது நீதிமன்ற கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்து அவரைச் சிறையில் தள்ளியது.


இப்படிப் பலரும் நீதிமன்ற கிரிமினல் அவதூறு வழக்குகளில் சிறைத் தண்டனை அனுபவித்திருந்தாலும், அவதூறு வழக்குகள் குறைந்தபாடில்லை. பிரசாந்த் பூஷண் தண்டனையைப் பற்றி அருந்ததிராய் இவ்வாறு கூறினார்... ``நீதிமன்றங்கள் தங்களது மாட்சிமையைத் தாங்கள் வழங்கும் தீர்ப்புகளால் பெற வேண்டுமேயொழிய, அவதூறு வழக்கு தண்டனை மூலம் அடைய முடியாது.”


இதுதான் நிதர்சனம்!


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment