Wednesday, September 30, 2020

சட்ட மசோதாக்களும் கில்லட்டின்களும்!


கடந்த ஞாயிறு (செப்.20) அன்று நடைபெற்ற மாநிலங்களவைக் கூட்டம், நாடாளுமன்ற நடைமுறைகளையே கேலிக்கூத்தாக்கிவிட்டது. பெரும்பான்மையான மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் இந்நாட்டில், அவர்களை பாதிக்கக்கூடிய மூன்று விவசாயச் சட்ட மசோதாக்கள் விவாதமில்லாமலும், ஓட்டெடுப்பு இல்லாமலும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.


மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டவுடன், அவற்றின்மீது உறுப்பினர்கள் விவாதிக்கவும், அதற்கு அரசுத்தரப்பில் விளக்கமளிக்கவும், பிறகு அவையினர் விரும்பினால் ஓட்டெடுப்பு நடத்தவும், அதில் பெரும்பான்மை வாக்குகள் மசோதாவுக்கு ஆதரவாக இருக்கும்பட்சத்திலேயே, அவை நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அதன் பின்னரே அந்தச் சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டு, நடைமுறைக்குக் கொண்டுவரப்படும்.


கே.சந்துரு, மேனாள் நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்

அரசமைப்புச் சட்டத்தின்படி துணைக் குடியரசுத் தலைவரே மாநிலங்களவையின் தலைவராகப் பொறுப்பு வகிப்பார். தற்போதைய தலைவர் வெங்கய்ய நாயுடு எல்லா நெளிவு சுளிவுகளையும் அறிந்தவர். அவர் அவையில் இல்லாதபோது துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் பொறுப்புவகித்தார். விவாதங்கள் குறித்துப் பிரச்னை எழுப்புவதைத் தடுப்பதற்கு அவையின் ஒலி அமைப்புக் கருவிகள் நிறுத்தப்பட்டன. மசோதாக்கள்மீது உறுப்பினர்களின் விவாதம் ரத்துசெய்யப்பட்டது. அவை உறுப்பினர்களின் ‘மசோதாக்களை ஓட்டுக்குவிட வேண்டும்’ என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, சத்தப் பெரும்பான்மையில் சட்ட வரைவுகள் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகளின் எட்டு உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு அவையைவிட்டு வெளியே அனுப்பப்பட்டனர்.


இதைவிட நாடாளுமன்ற நடவடிக்கைகளைக் கேலிக்கூத்தாக்க முடியாது. நாடாளுமன்ற நடவடிக்கைகள் எப்படி உருவாகின என்பதைப் பார்ப்போம். 1950-ல் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட அரசமைப்புச் சட்டம், நாடாளுமன்றத்தின் இரு அவைகளை உருவாக்கியதுடன், அவற்றுக்கான நடைமுறை விதிகளையும் கோடிட்டுக் காட்டியது. அவையின் பாரம்பர்யம் மற்றும் வரலாற்றுத் தொடர்ச்சி இவற்றைக் கருதி அவைகளின் அதிகாரம், சலுகை, பாதுகாப்பு இவற்றைப் பற்றிக் கூறும்போது, ‘அதற்குத் தனியாக விதிகள் எவற்றையும் உருவாக்காமல், ஏற்கெனவே பிரிட்டனிலுள்ள நாடாளுமன்றத்தின் (வெஸ்ட் மினிஸ்டர் மாதிரி) அதிகாரங்களும், சலுகைகளும், பாதுகாப்புகளும் இந்திய நாடாளுமன்றத்தின் அவைகளுக்கும் தொடர்ந்து கிடைக்கும்’ என்று கூறப்பட்டது.சுதந்திரம் பெற்று குடியரசாக உருவாக்கப்பட்டு, அதற்கென்று தனியான அரசமைப்புச் சட்டம் எழுதப்பட்ட பிறகும் அதில், காலனி ஆதிக்கம் செய்துவந்த பிரித்தானிய நாடாளுமன்ற நடைமுறைகள் பொருந்துமென்று கூறியது அவமானகரமாகப்பட்டது. 29 ஆண்டுகளுக்குப் பிறகு, 44-வது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி, ‘வெஸ்ட் மினிஸ்டர்’ என்ற வார்த்தை, அரசமைப்புச் சட்டத்திலிருந்து 20.6.1979 முதல் நீக்கப்பட்டது.


இனிவரும் காலங்களில் நமது நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள், சலுகைகள், பாதுகாப்பு ஆகியவை 20.06.1979-ம் தேதிக்கு முன் எவையெல்லாம் இருந்தனவோ அவை இனியும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டது. நமக்கேயுள்ள புத்திக்கூர்மை அன்றுதான் பளிச்சிட்டது. நாடாளுமன்றத்தின் மக்களவையைத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதன் தலைவரும், மாநிலங்களவையை துணைக் குடியரசுத் தலைவரும் நடத்திச்செல்வார்கள். அதற்கான நடைமுறை விதிகள், அரசமைப்புச் சட்டம் 118-வது பிரிவின் கீழ் இயற்றப்படும் என்றும், 122-வது பிரிவின்படி அவை நடவடிக்கைகளின் சட்டபூர்வத் தன்மையை எந்த நீதிமன்றமும் விசாரிக்க முடியாதென்றும் கூறப்பட்டிருக்கிறது.


நாடாளுமன்றத்தின் ஏதேனும் ஓர் அவையில், புதிய சட்டத்தின் வரைவு, துறைசார்ந்த அமைச்சரின் மூலம் அறிமுகப்படுத்தப்படும். நாடாளுமன்றம் ஆண்டொன்றுக்கு மும்முறை யாவது கூட்டப்படும். `மாரிக்கால தொடர்’, `குளிர்கால தொடர்’, `வேனிற்கால தொடர்’ என்றும் அவை அறியப்படும். அவை கூட்டப்படாத நேரங்களில், ஒவ்வோர் அமைச்சரவை இலாகாவின் கீழ் நிலைக்குழு செயல்படும். பல நேரங்களில் இந்தக் குழுக்கள் புதிய சட்ட வரையறை பற்றி விவாதித்து, அதன் பின்னரே துறைசார்ந்த அமைச்சர் புதிய சட்ட வரைவை அறிமுகப்படுத்துவார்.


சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி-க்கள்

சட்ட வரைவு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, ஒவ்வொரு கட்சியின் பிரதிநிதிகளுக்கும் விவாதத்துக்கான நேரம் ஒதுக்கப்படும். இதை அவைத் தலைவர் அலுவல் ஆலோசனைக் குழுவின் பரிந்துரையின்படி முடிவு செய்வார். அதன் பின்னர் துறைசார்ந்த அமைச்சர், உறுப்பினர்களின் சந்தேகங்களுக்கு பதிலளிப்பார். உறுப்பினர்கள் விரும்பினால், சட்ட வரைவில் திருத்தங்களை முன்மொழியலாம். பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவுபெற்ற சட்டங்கள் அநேகமாக விவாதங்களின்றியும், ஓட்டெடுப்பு இன்றியும் நிறைவேற்றப்படும்.


ஓட்டெடுப்பைத் தவிர்க்கும் யுக்தியாக, `சத்த ஓட்டுப் பெரும்பான்மை’ என்ற முறை இருக்கிறது. இதன்படி விவாதம் முடிவுபெற்ற பிறகு அவைத் தலைவர் “ஏற்போர் ஆம் என்க! மறுப்போர் இல்லை என்க!” என்று கூறி, அதில் பெரும்பாலானோரின் உரத்த குரல்களைக் கேட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டு விட்டதாக அறிவிப்பார்கள்.


சில நேரங்களில் அவைத்தொடரின் காலவரையறை சுருக்கப்பட்டு, விவாதமின்றி சட்ட வரைவுகளை நிறைவேற்ற உறுப்பினர்களின் பிரதிநிதிகள் ஒப்புக்கொள்வார்கள். அப்போது, பிரித்தானிய நாடாளுமன்ற நடைமுறைகளின்படி, விவாதமின்றி நிறைவேற்றப்படும் மசோதாக்களை ‘கில்லட்டின்’ மூலம் விவாதங்கள் கொல்லப்பட்டதாகக் கூறுவார்கள்.


பிரெஞ்சுப் புரட்சியின்போது, பல அரச வம்சத்தினரின் தலைகளைச் சிரச்சேதம் செய்வதற்கு, புரட்சியாளர்கள் பயன்படுத்திய இயந்திரமே கில்லட்டின். அது போன்று விவாதமின்றி அலுவல்களை முடித்துக்கொள்வதற்கும் `கில்லட்டின்’ என்ற வார்த்தை நாடாளுமன்ற நடைமுறையில் பயன்பட்டுவருகிறது.


கடந்த மார்ச் மாதத்தில், கோவிட் தொற்றுநோய் பரவிவந்த வேளையிலும் நாடாளுமன்றம் தொடர்ந்து நடத்தப்பட்டது. அவை விதிகளின்படி, அன்று முகக்கவசம் அணிந்து வருவதற்குக்கூட அனுமதி மறுக்கப்பட்டது. ஆளும்கட்சி உறுப்பினர்கள் பலர் அவைக்கே வரவில்லை. மத்திய அரசு ஊரடங்கு பிறப்பித்த பின்னரும் அவையை நடத்த முற்பட்டதை எதிர்க்கட்சிகள் கண்டித்த பிறகே அவை கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் ஆறு மாதங்களுக்குக் கூட்டத்தொடரைத் தொடங்குவதற்கு அரசுத் தரப்பில் முன்வரவில்லை.ஆனால், திடீரென்று அவைகளின் மாரிக்காலத் தொடர் கூட்டப்பட்டு, அதில் முக்கியமான சட்ட வரைவுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. விவசாயம் சம்பந்தமான மூன்று வரைவுகள், தொழிலாளர் சட்டங்களைச் சீரமைத்த மூன்று வரைவுகள் இப்படிப் பல முக்கியமான சட்டங்கள் அவசர அவசரமாக அறிமுகப்படுத்தப் பட்டிருக்கின்றன.


22.9.2020 அன்று, மாநிலங்களவையில் நாட்டின் பெரும்பான்மையினரான விவசாயிகளையும் தொழிலாளர்களையும் பாதிக்கக்கூடிய ஏழு சட்டங்கள் வெறும் மூன்றரை மணி நேரத்தில் நிறைவேற்றப்பட்டிருப்பது பா.ஜ.க-வின் ‘சாதனை’யே. நாடாளுமன்றத்தின் நடைமுறைகளை, தங்களுக்கு உரிய பாணியில் வளைத்து, மக்கள் விரோதச் சட்டங்களை நிறைவேற்றிக்கொள்வதில் பா.ஜ.க-வை யாரும் மிஞ்ச முடியாது. 2014-ல் மக்களவையில் வெற்றி பெற்றிருந்தாலும், மோடி அரசுக்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை பலம் இல்லை. 2019-க்குப் பிறகு பா.ஜ.க-வின் பிடி மாநிலங்களவையில் பெருகியிருந்தாலும், அறுதிப் பெரும்பான்மை இன்னும் கிட்டவில்லை. எனவே, மாநிலங்களவையில் சட்ட வரைவுகளையொட்டி விவாதம் நடத்த முற்படுவதற்கு அவர்கள் தயாராகவே இருந்ததில்லை. அரசமைப்புச் சட்டத்தின்


110-வது பிரிவில், நிதி குறித்த சட்டமாக இருப்பின், அதை மாநிலங்களவையின் ஒப்புதலுக்கு அனுப்பத் தேவையில்லை. ஒரு சட்டம் நிதி குறித்ததா (அ) இதர பிரச்னைகளை உள்ளிட்டதா என்பதை முடிவுசெய்யும் அதிகாரம், மக்களவைத் தலைவரின் அதிகாரத்துக்கு உட்பட்டது.


ஆதார் அட்டை அறிமுகப்படுத்தப்பட்ட போது, அதையொட்டிய வழக்கை உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. மக்களுடைய அந்தரங்கமான விஷயங்களை பாதிக்கும் வகையில் ஆதார் விவரங்கள் மத்திய அரசால் பராமரிக்கப்பட்டு வந்ததால், அதை அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதேசமயத்தில், மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் பணப் பரிவர்த்தனைகள் குறித்து மத்திய அரசு சட்டமொன்றை இயற்றிக்கொள்ளலாம் என்று அனுமதியளித்தது.


ஆனால், மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாததால், ஆதார் அட்டையையொட்டிய பணப் பரிவர்த்தனைகளுக்கான சட்டத்தை மக்களவையில் மட்டும் நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுக்கொண்டது மத்திய அரசு. அதற்கான தந்திரமாக, அந்தச் சட்ட வரைவு ‘நிதி குறித்த சட்டம்’ என்று மக்களவைத் தலைவரால் குறிப்பிடப்பட்டு மக்களவையில் மட்டுமே நிறைவேற்றப்பட்டது. பின்னர் இதை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அரசமைப்புச் சட்டத்தின் 110-வது பிரிவில், ‘ஒரு சட்டம் நிதி குறித்து மட்டுமே இருப்பின், அதை நிதி சார்ந்த சட்டம் என்று கூறலாம்’ என்று கூறப்பட்டிருப்பினும், தீர்ப்பளித்த நீதிபதிகள் பலரும் இது பற்றி மாற்றுக் கருத்து கூறவில்லை. அதேசமயத்தில் நீதிபதிகள் ஐவரில் ஒருவரான, தனஞ்செய் சந்திரசூட் அளித்த ‘சிறுபான்மை’ தீர்ப்பில் மட்டும், ‘ஆதார் அட்டை பணப் பரிவர்த்தனை சட்டம், நிதி குறித்த சட்டம் மட்டுமல்ல. பல இதர விஷயங்களையும் உள்ளடக்கியது’ என்று குறிப்பிட்டதோடு, ‘இது நாடாளுமன்ற நடைமுறையின் மோசடி’ என்றும் தீர்ப்பில் கூறியிருக்கிறார்.


இந்தியா, நாடாளுமன்றக் குடியரசாக இருப்பினும், அதன் சாரமான நடைமுறைகளை நீர்த்துப்போகும் செயல்களில் பா.ஜ.க ஈடுபட்டுவருவது ஜனநாயகவாதிகளை அச்சமுறச் செய்கிறது. மக்கள் விரோதச் சட்டங்களின் மீதான விவாதங்களைக் கில்லட்டால் சிரச்சேதம் செய்து விடாதீர்கள்!


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment