Friday, September 25, 2020

அச்சுத்துறையை அச்சுறுத்தும் ஜெயகாந்தன் ஐ.ஏ.எஸ்?!

`இது ஒரு சிறிய துறைதான். ஊழலுக்கான வாய்ப்புகள் குறைவு. இங்கிருக்கும் ஊழியர்களுக்குப் பெரிதாக வெளியுலகத் தொடர்புகள் இருப்பதில்லை. இந்தத் துறையில் பெரிய அளவில் ஊழல் செய்த ஒரே ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜெயகாந்தன் மட்டும்தான். தற்போது சிவகங்கை கலெக்டராக இருக்கிறார். ஆனாலும், தனது ஊழல் விவகாரங்களால் பாதிப்பு வந்துவிடக் கூடாது என்பதற்காக அச்சுத்துறை ஊழியர்களை அச்சுறுத்தி வருகிறார்!’ என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார், தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையின் முன்னாள் மேலாளர் பத்மநாபன்!


சென்னை அண்ணாசாலையில் இயங்கிவருகிறது எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை அலுவலகம். இந்தத் துறையின் மேம்பாட்டுக்காக ஒவ்வொரு நிதியாண்டிலும் ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்தத் தொகையில் அச்சு இயந்திரங்கள், மை, தாள்கள் உள்ளிட்டவை வாங்கப்படுகின்றன. அரசுத்துறைகளில் எந்தவிதச் சர்ச்சைக்கும் இடம் கொடுக்காத இந்த அலுவலகம், தற்போது சர்ச்சைகளின் மையப்புள்ளியாக மாறியிருக்கிறது.


ஜெயகாந்தன்


எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையின் இயக்குநராக 2013-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் பதவிக்கு வந்தார் ஜெயகாந்தன். ஏறக்குறைய நான்கு ஆண்டுகள் பொறுப்பிலிருந்தார். ஜெயகாந்தனின் காலகட்டத்தில் பல ஊழல்கள் நடந்திருப்பதாக, இதே துறையில் பணி மேலாளராக இருந்து ஓய்வுபெற்ற பத்மநாபன் விரிவான ஆவணம் ஒன்றைத் தயாரித்து வைத்திருக்கிறார். அந்த ஆவணத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தொடர்ந்து அரசு அதிகாரிகளைச் சந்தித்துவருகிறார்.


பத்மநாபனின் புகார் மனு மிக விரிவானது. `மத்திய அரசின், தேசிய மக்கள்தொகைக் கணக் கெடுப்பு பணிக்கான ஆவணங்களை அச்சடிக்கும் பணி, அச்சுத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக 8 கோடி ரூபாய் பணம் வந்தது. இந்தப் பணத்தை `அரசுக் கணக்கு’ என்ற பெயரில் வரவுவைக்காமல், அண்ணாசாலை ஐ.ஓ.பி வங்கிக்கிளையில், அச்சுத்துறை உதவி இயக்குநர் பெயரில் வரவுவைத்தார் ஜெயகாந்தன். இவ்வாறு செய்வதற்கு விதிகளில் இடமில்லை. அதுபோலவே ஆர்டர்களை அச்சடிக்க வேண்டிய அச்சுத்துறை, அப்பணியை மூன்று தனியார் ஜெராக்ஸ் கடைகளுக்குக் கொடுத்த வகையில் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.


அடுத்ததாக, பல்கலைக்கழகங்களின் விடைத் தாள்களை அச்சிடும் பணியைக் கையிலெடுத்தார் ஜெயகாந்தன். அச்சிடும் பணிக்கான கட்டணமாக ஒரு விடைத்தாளுக்கு ரூ.7.01 என நிர்ணயிக்கப்பட்டது. `இந்த அச்சுக் கட்டணம் குறைவானது; தவறானது’ எனக் கூறினார் ஒரு பெண் அதிகாரி. உடனே அவர் பணியிட மாற்றம் செய்யப் பட்டார். உண்மையில், தனியார் அச்சகங்களை ஒப்பிடும்போது இது குறைவான கட்டணமே. விடைத்தாள்களுக்காக மாணவர்களிடமிருந்து தேர்வுக்கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், அரசுக்கு லாபம் வரும் வகையில் அல்லாமல், குறைவாகக் கட்டணம் நிர்ணயிக்க வேண்டிய அவசியமென்ன? மேலும், கையாளும் கட்டணம், பேக்கிங் கட்டணம் ஆகியவற்றையும் கணக்கிட்டுப் பார்த்தால், பல கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது. அச்சுப் பணிக்கான செலவு விவரங்களை சம்பளக் கணக்கு அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். அப்படிச் செய்யவில்லை. தவிர, எழுதுபொருள் அச்சுத்துறையின் உதவி இயக்குநர் மூலமாகவே பணப் பட்டுவாடா நடந்திருக்கிறது. இந்த விவகாரத்தில், ஐ.ஓ.பி வங்கிக் கிளையிலுள்ள கணக்கை ஆய்வு செய்தாலே பல்வேறு முறைகேடுகள் தெரியவரும்.அச்சுத்துறையிலுள்ள கழிவுக் காகிதங்களை ஏலம் விட்டதில், டன்னுக்கு 18,749 ரூபாய் என்ற தொகையைக் குறைத்து, 12,000 ரூபாய்க்கு விற்றிருக்கிறார். இதனால், எழுதுபொருள் அச்சுத்துறைக்கு ரூ.2,35,69,335 இழப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, பொதுப்பணித் துறை மூலமாகச் செய்ய வேண்டிய சிவில் மற்றும் எலெக்ட்ரிக் பணிகளைத் தனியார்வசம் ஒப்படைத்து ஊழல் செய்திருக்கிறார். இந்தப் பணிகளை மேற்கொண்ட மூன்று நிறுவனங்களின் உண்மைத்தன்மை ஆராயப்பட வேண்டும். இவர் பதவியிலிருந்த காலத்தில், தொழில்நுட்பப் பிரிவுகளில் 250 பேருக்குப் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இதிலும் பெரும் மோசடி நடந்திருக்கிறது’ என்கிறது பத்மநாபனின் புகார் மனு.பத்மநாபனிடம் பேசினோம். ``ஜெயகாந்தனின் முறைகேடுகளுக்குத் தொழில்நுட்பப் பிரிவில் மேலாளராக இருந்த ஒருவரும், பெண் அதிகாரி ஒருவரும் உடந்தை. விதிகளை மீறி ஜெயகாந்தன் செய்த ஊழல்களைப் பற்றி, லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையரிடம் புகார் கொடுத்தேன். அவர், `புகாரில் உண்மை இருந்தால், துறைரீதியான நடவடிக்கை எடுங்கள்’ எனத் தமிழ் வளர்ச்சித்துறைச் செயலருக்கு அனுப்பினார். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. தொடர்ந்து அதிகாரிகளைச் சந்தித்த பிறகு, ஒரு கமிட்டி போட்டார்கள். அந்த கமிட்டியில், நான் புகாரில் குறிப்பிட்டுள்ள ‘ஒருவரே’ இடம்பெற்றிருக்கிறார். பிறகு எப்படி நடவடிக்கை எடுப்பார்கள்... இறுதியாக, தலைமைக் கணக்காயரிடம் முறையிட்டிருக்கிறேன். அவரும், விரைவில் ஆய்வு நடத்துவதாகக் கூறியிருக்கிறார். சிவகங்கையில் உட்கார்ந்துகொண்டு அச்சுத்துறையை ஆட்டுவித்துக்கொண்டிருக்கிறார் ஜெயகாந்தன். இந்த ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அச்சுத்துறை ஊழியர்களுக்கு நெருக்கடி கொடுத்துவருகிறார்” என்று கொதித்தார்.


இது தொடர்பாக விளக்கமறிய, சிவகங்கை ஆட்சியர் ஜெயகாந்தனை 11 முறை தொடர்புகொண்டும் நமது அழைப்பை அவர் ஏற்கவில்லை. இதையடுத்து, இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பினோம், அதற்கும் பதில் வரவில்லை. அவரது அதிகாரபூர்வ மின்னஞ்சல் முகவரிக்கும் (collrsvg@nic.in) மெயில் அனுப்பியிருக்கிறோம். ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பட்டுராஜை இரண்டுமுறை தொடர்புகொண்டோம். ``மீட்டிங்கில் இருக்கிறார், நீங்கள் தொடர்புகொண்டதை அவரிடம் தெரிவிக்கிறேன்’ என்று பதிலளித்தார். இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளிக்கும்பட்சத்தில் அதை வெளியிடவும் தயாராக இருக்கிறோம்.


மடியில் கனமில்லை என்றால், மௌனத்துக்கு இடமில்லையே!?


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment