Friday, September 25, 2020

நீ வேலைக்குப் போனா பெரிய இவளா?

 


“துணியால என் கண்ணைக் கட்டி, என் மேல எதையோ ஊத்தினார். மண்ணெண்ணெய் ஸ்மெல் வந்துச்சு... நம்மை எரிச்சுக் கொல்லத்தான் போறார்னு சத்தமா கத்த ஆரம்பிச்சேன். அப்போ தீப்பெட்டிய ஒரசினாரு. அது பத்திக்கலைனு நினைக்கிறேன். அப்புறம், என் கால்ல அரிவாளால பலமா வெட்டினாரு. உயிர்போற வலியில நான் கத்தினேன்” மனம் பதறும் இந்த வாக்குமூலம் ஹெப்சிபாயினுடையது.


நாற்காலியோடு கட்டிவைக்கப்பட்டு கொடூர சித்ரவதைக்குள்ளான ஒரு பெண்ணை போலீஸார் மீட்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. அந்தப் பெண்ணின் அலறல் சத்தம் ஆயிரக்கணக்கான வாட்ஸ்அப்களில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. கொலையிலிருந்து காப்பாற்றப்பட்ட அந்தப் பெண் கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகேயுள்ள நெடுவிளை பகுதியைச் சேர்ந்த ஹெப்சிபாய். அவருக்கு இரணியல் கோர்ட்டில் இளநிலை உதவியாளராகப் பணி கிடைத்த ஆறாவது நாள், அவரின் கணவர் சுரேஷ்ராஜன் இந்தக் கொடூரத்தை நிகழ்த்தியிருக்கிறார்.


சுரேஷ்ராஜன்


சம்பவம் குறித்தும், சுரேஷ்ராஜனின் பின்புலம் குறித்தும் ஹெப்சிபாயின் பக்கத்து வீட்டுக் காரர்களிடம் விசாரித்தோம். ‘‘சுரேஷ்ராஜனோட அப்பா பாலையா, பெரிய கான்ட்ராக்டரா இருந்தார். நிறைய சொத்து சேர்த்தார். அவங்க வீடு இருக்கிற இடமே ஒரு ஏக்கர் முப்பது சென்ட் பரப்பளவு வரும். பாலையாவுக்கு நாலு பொம்பளப் பிள்ளைங்க. அஞ்சாவது பையன்தான் இவன். நாலு பெண்களுக்கும் கல்யாணம் செஞ்சு கொடுக்க, வீடும் வீட்டடியும் தவிர மத்த இடங்களை வித்துட்டாரு பாலையா. ஹெப்சிபாய்க்கும் சுரேஷ்ராஜனுக்கும் கல்யாணமாகி 15 வருஷம் இருக்கும். ஆரம்பத்துல ரேஷன் கடையில வேலை பார்த்துக்கிட்டிருந்தான். `வயசைக் குறைச்சுக் காட்டி, வேலைக்குச் சேர்ந்துட்டான்’கிற புகார்ல வேலை போயிடுச்சு. அப்புறம், அடிக்கடி அவங்க வீட்டுல சின்னச் சின்னப் பிரச்னைகள் வந்துபோச்சு. அவங்களுக்குக் கொழந்தை இல்லாததால பிரச்னைகள் வருதுனு நினைச்சோம்.

போன ரெண்டாம் தேதி, பைக்குல அந்தப் பொண்ணைக் கூட்டிக்கிட்டு வெளியே கௌம்பிப் போனதைப் பார்த்தோம். சந்தோஷமாத்தான் போனாங்க. விசாரிச்சப்பதான் அந்தப் பொண்ணுக்கு கோர்ட்ல வேலை கிடைச்ச விவரம் தெரிஞ்சுது. ஊர்ல பார்க்கிறவங்ககிட்டல்லாம் ‘என் ஒய்ஃபுக்கு வேலை கிடைச்சிருக்கு. ரிட்டயர்டு ஆகுற வரைக்கும் கன்னியாகுமரி மாவட்டத்துலதான் இருப்பா’னு சொல்லிட்டுத் திரிஞ்சான். நாலு நாளா அவன்தான் கொண்டுபோய் விட்டுட்டு வந்தான். சம்பவம் நடந்த அன்னிக்கு, திடீர்னு காலையில எட்டேகாலுக்கு அவங்க வீட்டுலருந்து அலறல் சத்தம்... ஓடிப்போய்ப் பார்த்தோம். அப்போதான் அவன், அந்தப் பொண்ணைக் கட்டிவெச்சுக் கொலை செய்யப் பார்த்திருக்கானு தெரிஞ்சுது. அவன் இந்த அளவுக்குப் போவான்னு நாங்க நெனச்சுக்கூடப் பார்க்கலை’’ என்று சொன்னவர் களின் குரலில் இன்னும் பதற்றமிருந்தது.


‘‘ராத்திரி ரெண்டரை, மூணு மணிக்கெல்லாம்கூட அந்தப் பொண்ணு ரூம்ல லைட் எரிஞ்சுக்கிட்டிருக்கும். அந்த அளவுக்குக் கஷ்டப்பட்டுப் படிச்சுதான் வேலை கெடச்சுது. அந்த ரூம்தான் அவளுக்குத் தஞ்சம். அன்னிக்கு அந்த ரூம்லதான் அஞ்சு மணி நேரம் கொடுமையை அனுபவிச்சிருக்கா அந்தப் பொண்ணு. அந்தப் பையனுக்குக் கல்யாணத்துக்கு முன்னாடியே வேற ஒரு பொண்ணோட தொடர்பு இருந்துச்சு. அவ வீட்டுக்கெல்லாம் வந்து போயிட்டுதான் இருந்தா. சொந்தக்காரங்க கண்டிச்சதுக்குப் பிறகுதான் அவ இங்க வர்றதில்லை. அதெல்லாம் தெரிஞ்சும்கூட ஹெப்சிபாய் அவன் மேல சந்தேகப்படலை. ஹெப்சிக்கு ஒரு மாசம் ட்ரெயினிங் போட்டிருக்காங்கபோல. கெளம்புற அன்னிக்குத்தான் அவளுக்கு இந்தக் கொடுமை நடந்திருக்கு. அவ போட்ட சத்தம், பக்கத்துல இருக்கிற கடைக்காரருக்குக் கேக்கவும்தான் பதறிக்கிட்டு அங்கே ஓடுனாங்க. கதவைத் தொறக்க முடியாததால போலீஸுக்கு போன் போட்டாங்க’’ என்றார் பக்கத்துவீட்டுப் பெண் ஒருவர்.

அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாத ஹெப்சிபாய், மருத்துவமனையில் சிகிச்சையிலிருக்கிறார். அவர் நம்மிடம் பேசும் மனநிலையில் இல்லை. மருத்துவமனையில் அவர் போலீஸாரிடம் கொடுத்த வாக்குமூலம் இது: ‘‘எனக்கு நாகர்கோவில் கோர்ட்டுல ஒரு மாசம் ட்ரெயினிங் இருக்குன்னு சொன்னதுக்கு, `சரி’னுதான் மொதல்ல சொன்னாரு. ட்ரெயினிங் போறதுக்காகச் சமைச்சு எடுத்துக்கிட்டு கிளம்பத் தயாரானேன். `நீங்களும் ரெடியாகுங்க’னு சொன்னேன். என்ன நினைச்சாரோ தெரியலை, திடீர்னு டி.வி-யைப் போட்டு சவுண்டைக் கூட்டிவெச்சார். சட்டைகூடப் போடாம நின்னுக்கிட்டிருந்தார். மணி எட்டேகாலாகவும், பையை எடுத்துக்கிட்டு ‘வாங்க போகலாம்’னு சொன்னேன். அப்போதான் பிரச்னை ஆரம்பமாச்சு. ‘நீ வேலைக்குப் போனா பெரிய இவளா... நீ சொந்தக் கால்ல நின்னுருவியா, என்னைப் பழிவாங்கிருவியா’னு என் கையை முறுக்கினார். எனக்கு ஒண்ணுமே புரியலை. என் கையை முறுக்கி, கயித்தால கட்டினார். ரெண்டு மூணு தடவை நான் கயித்தை அவுத்தேன். அப்ப ஒருக்கா ரூமுக்குள்ள போய் ஜன்னலைத் திறந்து ‘என்னைக் கொல்றான்’னு சத்தமா கத்தினேன். அங்கருந்து இழுத்து ரூமுக்குள்ள கொண்டுபோய் கையை ரொம்ப டைட்டா கட்டிட்டார். ஒரு கையில அரிவாள் வெச்சிருந்ததால வெட்டிருவாரோங்கிற பயத்துல என்னால பலமா எதிர்க்க முடியலை. ஒருவாட்டி கதவுகிட்டபோய் தெறக்கப் போனேன். அப்ப, தலைமுடியைப் பிடிச்சு இழுத்து ரூமுக்குள்ள தள்ளிட்டார். திடீர்னு துணியால என் கண்ணைக் கட்டி, என் மேல எதையோ ஊத்தினார். மண்ணெண்ணெய் ஸ்மெல் வந்துச்சு... நம்மை எரிச்சுக் கொல்லத்தான் போறார்னு சத்தமா கத்த ஆரம்பிச்சேன். அப்போ தீப்பெட்டிய ஒரசினாரு, அது பத்திக்கலைனு நினைக்கிறேன். அப்புறம், என் கால்ல அரிவாளால பலமா வெட்டினாரு. உயிர்போற வலியில நான் கத்தினேன். அப்போதான் கதவை ஒடைச்சிக்கிட்டு உள்ளே வந்து போலீஸ்காரங்க காப்பாத்துனாங்க. வெட்டுபட்டதுல எனக்கு கால் ஒடைஞ்சு போச்சு. இப்ப பிளேட்வெச்சு தையல் போட்டிருக்காங்க. எந்திரிச்சு நடக்கவே அறுபது நாள் ஆகும்னு டாக்டர் சொல்றாங்க. ஏன் இப்படி நடந்துக்கிட்டார்னே எனக்குத் தெரியலை.’’


‘‘எல்லாரும் நல்ல இடம்னு சொன்னதாலதான் எண்பது பவுன் நகை போட்டு 2 லட்சம் ரூபா ரொக்கம் கொடுத்து ஹெப்சிபாயைக் கல்யாணம் பண்ணிக்கொடுத்தோம். கல்யாணத்துக்கு அப்புறமும் மூணு லட்ச ரூபாய் கொடுத்தோம். அவன் வயசைக் குறைச்சு சொல்லி, படிப்பை அதிகமாச் சொல்லி எங்களை நல்லா ஏமாத்தியிருக்காங்க. இந்த விஷயமெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான் எங்களுக்குத் தெரிஞ்சுது. அவனுக்கு இல்லீகல் கான்டாக்ட் வேற இருந்துச்சாம். ஹெப்சிபாய்கிட்ட அவன் உடல்ரீதியான தொடர்பு வெச்சுக்கலையாம். அதோட, அடிக்கடி இவகிட்ட பிரச்னை பண்ணிக்கிட்டே இருந்திருக்கான். இவளும் எல்லாம் சரியாகும்னு நம்பி ப்ரே பண்ணிக்கிட்டே இருந்திருக்கா. இதையெல்லாம் ஒரு வார்த்தை சொல்லியிருந்தான்னா டைவர்ஸ் பண்ணிக் கூட்டியாந்திருப்போம். பாவி மக... வாழ்க்கையை ப்ரேயர்லயே ஓட்டியிருக்கா.

இவளை அடிமையா, வேலைக்காரி மாதிரியேவெச்சு கொடுமைப்படுத்தணும்னு நினைச்சிருக்கான் கொடூரப் பாவி...

இவளுக்கு கோர்ட்டுல வேலை கிடைச்சதும் அவன் பண்ணின கொடுமைகளை வெளியே சொல்லிடுவாளோனு பயந்துட்டான். அதனாலதான் எரிச்சுக் கொலை பண்ணப் பார்த்திருக்கான்” வேதனையும் ஆதங்கமுமாக பகிர்ந்துகொண்டார் ஹெப்சிபாயின் நெருங்கிய உறவினர்.

ஹெப்சிபாயைக் காப்பாற்றிய குளச்சல் காவல் நிலைய எஸ்.ஐ-யான சுஜித் ஆனந்திடம் பேசினோம், ‘‘கட்டிப்போட்டு மண்ணெண்ணெய் ஊத்தின சமயத்துல நாங்க கதவை உடைச்சுக்கிட்டு உள்ளே போயிட்டோம். அவங்களுக்குக் கல்யாணம் ஆகி 15 வருஷமா குழந்தை இல்லை. அந்தப் பொண்ணுக்கு 40 வயசு. அவனுக்கு 53 வயசு. வயசு வித்தியாசம் அதிகம்கிறதால, மனைவி வேலைக்குப் போற இடத்துல ஏதாவது ஆம்பளைங்களோட பழக்கம் ஆயிருமோனு சந்தேகப்பட்டிருக்கான். அதோட மனைவிக்கு அரசு வேலையாங்கிற ஈகோவும் இருந்திருக்கு. அதனாலதான் இப்படிப் பண்ணியிருக்கான்’’ என்றார்.

பதினைந்து ஆண்டுக்கால திருமண வாழ்க்கை, ரத்தக்களறியில் முடிந்திருக்கிறது. ஆண் பெண் உறவின் சிக்கல் நீண்டுகொண்டே போகிறது. ‘ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் தேவை பரஸ்பர மரியாதை. அன்பு இரண்டாம்பட்சம்தான்’ என்கிற

எழுத்தாளர் ஜி.நாகராஜனின் கருத்து எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டியது.

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment