Thursday, September 10, 2020

வீழும் ஜி.டி.பி. - மீளுமா இந்தியப் பொருளாதாரம்?

மோடி இரண்டாவது முறையாகப் பதவியேற்ற பிறகு, இந்தியப் பொருளாதாரம் குறித்துத் தனக்கு ஒரு கனவு இருப்பதாகவும், ஐந்து ட்ரில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.350 லட்சம் கோடி) மதிப்பிலான பொருளாதாரமாக இந்தியப் பொருளாதாரத்தை மாற்றுவதுதான் அந்தக் கனவு என்றும் அறிவித்திருந்தார். அதற்குப் பிறகு பற்றிக் கொண்டன விவாத மேடைகள். பல விவாதங் களில் இதுதான் மையக்கருவானது. ‘இதெல்லாம் சாத்தியமில்லாதது’ என்று பொருளாதார நிபுணர்களும் எதிர்க்கட்சிகளும் விமர்சித்துக் கொண்டிருந்த சமயத்தில், லக்னோவில் 2019, ஜூலை 6-ம் தேதி,‘பா.ஜ.க-வின் உறுப்பினர் சேர்ப்பு இயக்க’த்தின் தொடக்க நிகழ்ச்சி நடை பெற்றது. ஐயாயிரத்துக்கும் மேல் கூடியிருந்த தொண்டர்களுக்கு நடுவே மோடி உரையாற்றினார்.


“`ஐந்து ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடைவது சாத்தியமா?’ என்று கேட்கின்றனர் சிலர். அப்படிக் கேட்பவர்கள் இந்தியர்களின் திறன்மீது நம்பிக்கை இல்லாதவர்கள். `ஐந்து ட்ரில்லியன் டாலர்’ என்ற துணிச்சலும், புதிய சாத்தியக்கூறுகளும், வளர்ச்சிக்காகத் தியாகம் செய்யக்கூடிய குணமும், புதிய இந்தியாவுக்கான கனவும் இருக்க வேண்டும். இவை இருந்தால், `ஐந்து ட்ரில்லியன் அமெரிக்க டாலர்’ என்ற கனவை நனவாக்க முடியும்” என்று கர்ஜித்தார். இந்தக் கணக்குகளின் சாத்தியக்கூறுகள் புரியாமல் கைதட்டிக் கொண்டாடியது கூட்டம். மேடையிலிருந்த யோகி ஆதித்யநாத்தும் ஜே.பி.நட்டாவும்கூட அந்தக் கைதட்டலில் கலந்துகொண்டனர். ஒரு வருடம் முடிந்துவிட்டது. இன்றைய தேதியில், `பிரதமரின் கனவுமீது விமர்சனங்களை வைத்த பொருளாதார நிபுணர்களின் கூற்றே சரி’ என்று சொல்லும் நிலையில் இருக்கிறது இந்தியப் பொருளாதாரம்.‘நாங்க ரொம்ப ஸ்டெடி!’


ஆம். கடந்த நாற்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது இந்தியப் பொருளாதாரம். இதனால், கொரோனா காரணமாக வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் மக்கள், இன்னும் என்னென்ன பாடுபடப் போகிறார்களோ என்கிற கவலையும் அச்சமும் அதிகரித்துள்ளன.


கொரோனாவுக்கு முன்பாக ஐந்து சதவிகிதம், நான்கு சதவிகிதம் என்று சரிந்துகொண்டிருந்த இந்திய உள்நாட்டு மொத்த உற்பத்தி (ஜி.டி.பி), தற்போது மைனஸ் 23.9 சதவிகிதம் எனப் பாதாளத்தில் விழுந்துள்ளது. ‘நாட்டின் பொருளாதாரம் மோசமான சூழலை நோக்கிச் செல்கிறது’ என்று பொருளாதார நிபுணர்களும் எதிர்க் கட்சியினரும் எச்சரித்தபோதெல்லாம், ‘நாங்க ரொம்ப ஸ்டெடி’ என்று கெத்தாக பதிலளித்த ஆட்சியாளர்கள், இப்போது கடவுளைக் கைகாட்டுகிறார்கள். விமர்சகர்களுக்கு எதிராக அன்று முழங்கிய மோடி, ஜி.டி.பி மைனஸில் போய்க்கொண்டிருக்கும்போது மௌனம் காக்கிறார்.


கொரோனாவால் உலக அளவில் மோசமான பொருளாதார பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கும் நாடுகளின் பட்டியலில், பிரிட்டன்தான் முதலிடத்தில் இருந்தது. பிரிட்டனைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு இப்போது முதலிடத்துக்கு வந்திருக்கிறது இந்தியா.


ஜோதி சிவஞானம் - கே.டி.ராகவன்


தவறான அணுகுமுறைகள்!


இந்த வீழ்ச்சிக்கான காரணங்கள் குறித்து பொருளாதார நிபுணர் ஜோதி சிவஞானத்திடம் கேட்டோம். “தற்போது, மைனஸ் 23.9 சதவிகிதமாக இந்தியாவின் ஜி.டி.பி சரிந்திருப்பது கவலைக்குரியது. கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் 3.2 சதவிகிதமாக ஜி.டி.பி இருந்தது. அந்த வகையில் பார்த்தால், மைனஸ் 27 சதவிகிதம் என்றுதான் இந்த வீழ்ச்சியைப் பார்க்க வேண்டும். பொருளாதாரத்தைச் சரிவர நிர்வகிக்காததும், தவறான கொள்கை முடிவுகளும்தான் இந்த வீழ்ச்சிக்கு முக்கியக் காரணங்கள். குறிப்பாக, பண மதிப்பிழப்பு நடவடிக்கை என்பது தொழில், பொருளாதாரம், வேலை வாய்ப்பு போன்றவற்றில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது. எனவே, பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அடுத்ததாக, அவசர அவசரமாக ஜி.எஸ்.டி-யைக் கொண்டுவந்தார்கள். ஜி.எஸ்.டி என்பது நல்ல சீர்திருத்தம். ‘அரசுக்கு வரிவருவாயை ஈட்டித்தர வேண்டும்’, ‘வரி செலுத்தும் முறை எளிமையாக இருக்க வேண்டும்’ என்ற இரண்டு முக்கிய நோக்கங்கள் அதற்கு இருக்க வேண்டும். அந்த இரண்டு நோக்கங்களிலும் ஜி.எஸ்.டி படுதோல்வியடைந்துள்ளது. மத்திய அரசுக்குப் போதுமான வரிவருவாய் வரவில்லை. எனவே, மாநிலங்களுக்குத் தர வேண்டிய இழப்பீட்டைக்கூட அவர்களால் தர முடியவில்லை. கொரோனா நேரத்தில் புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்னையைச் சரியாகக் கையாளாதது உட்பட அரசின் பல தவறான அணுகு முறைகளால் இந்தியப் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது” என்றார்.பொருளாதாரம் மீண்டுவர ஆரம்பித்துவிட்டது!


இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து பா.ஜ.க-வின் பொதுச்செயலாளர்


கே.டி.ராகவனிடம் கேட்டபோது, “கொரோனாவுக்கு முன்பாக, அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போர் மற்றும் ஈரான் பிரச்னை போன்றவை உலக அளவில் பொருளாதாரத்தின்மீது தாக்கத்தை ஏற்படுத்தின. அப்போதுகூட இந்தியப் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை. இப்போது, கொரோனாவால் ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. அதில், இந்தியப் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. ஜி.டி.பி வீழ்ச்சியடைந்திருப்பதாக இப்போது குறிப்பிடப்படுவது, கடந்த ஏப்ரல் மாத காலாண்டுக்கான புள்ளிவிவரம். ஏப்ரல் மாதத்தில் முழுமையான பொதுமுடக்கம் அமலில் இருந்தது. அதனால் பாதிப்பு ஏற்பட்டது. இப்போது போக்குவரத்து உட்பட அனைத்தும் முழுமையாகச் செயல்படத் தொடங்கிவிட்டன. எனவே, பொருளாதாரம் மீண்டுவர ஆரம்பித்துவிட்டது” என்றார்.


நாம் போதுமான அளவுக்குக் கனவுகள் கண்டுவிட்டோம் பிரதமரே. இனி தேவை, செயல்பாடு!


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment