Wednesday, September 16, 2020

குட்டிக்கரணம் அடிக்கிறார் ஜெயக்குமார்! - அ.ம.மு.க வெற்றிவேல் அதிரடி

‘‘சசிகலா ஒரு பாம்பு... அவருக்கு அ.தி.மு.க-வில் இடமே இல்லை’’ என்று கடந்த இதழ் ஜூ.வி-யில் இடம்பெற்ற அமைச்சர் ஜெயக்குமாரின் பேட்டி அ.ம.மு.க- வினரை கொந்தளிக்க வைத்துள்ளது. இதைத் தொடர்ந்து நம்மைத் தொடர்புகொண்டு தனது ஆதங்கத்தைக் கொட்டிய அ.ம.மு.க பொருளாளர் வெற்றிவேலிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்...


‘‘2019 நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, அ.ம.மு.க என்ற கட்சி தமிழகத்தில் இருக்கிறதா இல்லையா?’’


‘‘இதென்ன கேள்வி? உள்ளாட்சித் தேர்தலில் கூட நாங்கள் போட்டியிட்டோம். ஊடகத்தினரான நீங்கள்தான் அரசாங்கத்தின் மிரட்டலுக்கு பயந்து எங்கள் செய்திகள் எதையுமே வெளியிடுவதில்லை. குறிப்பாக, விஷுவல் மீடியாவில் எங்களைப் பற்றிய செய்திகள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. நாங்கள் எப்போதும்போல் மக்கள்நலப் பணிகளைச் செய்துதான் வருகிறோம்!’’


‘‘சிறையிலிருந்து சசிகலா அடுத்த மாதம் வந்துவிடுவார்; இந்த வாரம் வந்துவிடுவார் என்றெல்லாம் சொல்லிக்கொண்டே இருக்கிறீர்களே... எப்போதுதான் அவர் வெளியே வருவார்?’’


‘‘சட்டப்படி சிறையைவிட்டு வெளியே வருவதற்கான தகுதிகளை சசிகலா பெற்று விட்டார். எனவே, விரைவிலேயே அவர் வெளியே வருவார். இது கொரோனா காலகட்டம் என்பதால், அவர் வெளியே வருவது தடைபட்டு நிற்கிறது... அவ்வளவுதான்!’’


‘‘சசிகலா சிறையைவிட்டு வெளியே வந்ததும், அவரது தலைமையின்கீழ் அ.தி.மு.க வந்துவிடும் என்கிறீர்கள். ஆனால், அரசியல் சூழல் அதுபோன்று இல்லையே?’’


‘‘ஆட்சி அதிகாரம் அவர்கள் கையில் இருப்பதாலேயே கட்சியும் அவர்களிடம்தான் இருக்கிறது என்பது மாதிரியான தோற்றத்தை ஆட்சியாளர்கள் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். மற்றபடி, மக்களிடம் வாக்கு கேட்டுச் செல்கிற தலைமைத் தகுதியும், அதற்கான முகமும் அவர்கள் யாரிடமும் கிடையாது!’’


‘‘கடந்த இடைத்தேர்தலில், ஆட்சியைத் தக்கவைக்கிற அளவுக்கான வெற்றியை தமிழக மக்கள் இதே தலைமைக்குக் கொடுத்திருக்கிறார்களே?’’


‘‘ஆட்சியைத் தக்கவைப்பதற்குத் தேவையான தொகுதிகளில் ஜெயித்திருக்கிறார்கள் என்று நீங்களே சொல்கிறீர்கள். அந்த வெற்றியும்கூட தேர்தல் ஆணையம், மத்திய அரசு உள்ளிட்ட வற்றின் உதவிகளோடு கிடைத்ததுதான். அதனால் தானே எங்களுக்கு ஒரே தேர்தல் சின்னம் ஒதுக்கப்படவில்லை. சரி... நாடாளுமன்றத் தேர்தலில் அநியாயத்துக்குத் தோற்றார்களே... அதற்கு என்ன காரணம்?’’


அ.ம.மு.க வெற்றிவேல்

‘‘தற்போதைய அ.தி.மு.க அரசுக்கு மத்திய அரசு ஆதரவு இருக்கிறது எனில், சசிகலா தலைமையின்கீழ் அ.தி.மு.க செல்வதற்கான சூழல் மட்டும் எப்படிச் சாத்தியமாகும்?’’


‘‘2017-ல் சசிகலாவை முதலமைச்சராகத் தேர்ந்தெடுத்து, நாங்கள் கடிதம் கொடுத்தோம். ஆனால், சட்டப்படியான எங்கள் கோரிக்கையை ஏற்காமல் வேண்டுமென்றே மத்திய அரசு இழுத்தடித்தது. சொல்லிவைத்தாற்போன்று சசிகலாவுக்கு எதிராகத் தீர்ப்பும் வந்தது. அவையெல்லாம் வேறு விஷயம். ஆனால், இப்போது நடைபெறப்போவது 2021 சட்டமன்றத் தேர்தல். இதில் தீர்மானம் செய்யக்கூடிய இடத்தில் இருப்பது மக்கள்தாம். இதில் மத்திய அரசு எப்படித் தலையிட முடியும்? தி.மு.க-வை எதிர்ப்பதற்குத் தேவையான சக்தியும் முகமும் ஜெயலலிதாவுக்குப் பிறகு, சசிகலாவிடம்தானே இருக்கிறது.’’


‘‘ஆனால், ‘ஜெயலலிதாவுக்குத்தான் நாங்கள் மரியாதை கொடுத்தோம். அவர் கழுத்தில் பாம்பாக இருந்த சசிகலாவுக்கு அல்ல’ என்கிறாரே அமைச்சர் ஜெயக்குமார்?’’


‘‘சசிகலாவுக்கு நாங்கள் மரியாதை செலுத்தவில்லை என்று இன்றைக்கு வாய்ச் சவடால் பேசுகிற அமைச்சர் ஜெயக்குமார், ‘நீங்கள்தான் பொதுச் செயலாளர் ஆக வேண்டும்’ என்று சசிகலா வீட்டு வாசலில் போய் நின்று கெஞ்சிய வீடியோக்கள் எல்லாம் இன்னும் பத்திரமாக இருக்கின்றன. சிங்கம் சாதாரணமாக நடந்து வந்தாலே அது கம்பீரம்! ஆனால், குரங்குகள் குட்டிக்கரணம் அடித்தால்தான் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க முடியும். அதுபோல் செய்திகளில் தன் பெயர் வர வேண்டும் என்பதற்காக ஜெயக்குமார் இது போன்ற குட்டிக்கரணங்களை அடித்துக் கொண்டிருக்கிறார்.’’


‘‘புகழேந்தி ஆடியோ, நாஞ்சில் சம்பத் வீடியோ என்று சொந்தக் கட்சி நிர்வாகிகளையே பிளாக் மெயில் அரசியலில் வைத்திருந்ததும் அ.ம.மு.க வீழ்ச்சிக்கு காரணம்தானே?’’


‘‘அப்படிப் பார்க்காதீர்கள்... ஓர் அரசியல் கட்சி என்றால், அதில் சில இடப்பெயர்ச்சிகள் இருக்கத்தான் செய்யும். அப்படி நடக்காத அரசியல் கட்சிகளே இந்திய அரசியல் வரலாற்றில் கிடையாது. அப்படி கட்சி மாறிச் செல்பவர்களை யாராலும் தடுக்கவும் முடியாது. ஆனால், ஜெயக்குமார் செய்த பஞ்சமா பாதகத்துக்கு இப்போது வயது 2. அந்தப் பிரச்னைகளையெல்லாம் அவர் முதலில் தீர்க்கட்டும். அதைவிடுத்து, சசிகலாவைப் பற்றிப் பேசுவதற்கு அவருக்கு எந்தத் தகுதியும் கிடையாது.’’


‘‘அ.தி.மு.க முதல்வர் வேட்பாளர் குறித்து இதுவரை கேள்வி எழுப்பிய அமைச்சர்களேகூட இன்றைக்கு எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துகிறார்களே?’’


‘‘இன்னும் எட்டு மாதங்கள் பதவி இருக்கிறது. அதைத் தக்கவைப்பதற்காக என்ன வேண்டுமானாலும் பேசுவார்கள். மற்றபடி கட்சிக்குள் இதுகுறித்து எவ்வளவு பெரிய சண்டைகள் நடந்துகொண்டிருக்கின்றன என்பதெல்லாம் பத்திரிகையாளர்களாகிய உங்களுக்கு நன்றாகவே தெரியும்.


அ.தி.மு.க தொண்டனைப் பொறுத்தவரையில், தி.மு.க-வை வீழ்த்துகிற சக்தியும் முகமும் யாரிடம் இருக்கிறது என்றுதான் பார்ப்பான். அந்த வகையில், சசிகலா எப்போது சிறையிலிருந்து வெளியே வருவார் என்றுதான் அ.தி.மு.க தொண்டர்கள் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்!’’


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment