Wednesday, September 16, 2020

டஜன் அமைச்சர்களுக்கு ‘கல்தா’... எடப்பாடி டெரர் கணக்கு!

அ.தி.மு.க-வில் ‘முதல்வர் வேட்பாளர்’ ரேஸ் இன்னும் முடியவில்லை. இ.பி.எஸ், ஓ.பி.எஸ் தரப்புகளின் போஸ்டர் யுத்தம் தொடர்கிறது. “சசிகலாவின் விடுதலைக்குப் பிறகு, இந்த ரேஸ் இன்னும் வேகமெடுக்கும்; இதில் பல முக்கிய தலைகள் பந்தாடப்படும்” என்கிறது அ.தி.மு.க வட்டாரம். இதற்கிடையே தனது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் ரகசிய சர்வே ஒன்றை எடுத்துள்ளார் எடப்பாடி. சர்வே முடிவுகளின்படி ஒரு டஜன் அமைச்சர்களுக்கு அவர் ‘கல்தா’ கொடுக்க முடிவு செய்திருப்பதுதான் கோட்டை வட்டாரத்தின் தற்போதைய ஹாட் டாபிக்!


மும்பையைச் சேர்ந்த சர்வே டீம் ஒன்றுதான் எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அமைச்சர்களின் செயல்பாடு, மக்களின் மனநிலை என இந்த ரகசிய சர்வேயை நடத்தியுள்ளது. ஓய்வுபெற்ற ஐ.ஜி ஒருவர்தான், சர்வே ஒருங்கிணைப்புப் பணிகளைப் பார்த்துள்ளார். ‘40 எம்.எல்.ஏ-க்கள் உட்பட ஒரு டஜன் அமைச்சர்களின் தொகுதிகள் படு ‘வீக்’காக இருக்கின்றன; இந்த அமைச்சர்களுக்கு மீண்டும் சீட் கொடுத்தால் டெபாசிட் கூட தேறாது’ என்று கூறுகின்றனவாம் சர்வே முடிவுகள். இத்துடன், சில அரசியல் கணக்குகளையும் கலந்துகட்டி ஒரு டஜன் அமைச்சர்களை, வரும் தேர்தலில் வீட்டுக்கு அனுப்ப முடிவெடுத்திருக்கிறாராம் எடப்பாடி.


சிரிப்பாய் சிரிக்கும் ‘திண்டுக்கல்’


மேடையில் பேசும்போது மற்றவர்களைக் குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைக்கும் திண்டுக்கல் சீனிவாசனுக்கு மீண்டும் சீட் கொடுத்தால் தேர்தல் முடிவுகள் ‘சிரிப்பாய் சிரித்துவிடும்’ என்கிறரீதியில் வந்திருக்கிறதாம் சர்வே முடிவு. போதாக்குறைக்கு இவரது உடல்நிலையும் சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை. இவற்றையெல்லாம் கணக்குப்போட்டுத்தான் ஏற்கெனவே அவருக்கு திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பை அளித்து அமைதியாக்கியதாம் கட்சித் தலைமை. வேட்பாளர் தேர்வின்போது, ‘அண்ணே 72 வயசு ஆகிடுச்சு. அமைதியா கட்சி வேலையைப் பாருங்கண்ணே’ என்று சீனிவாசனை ஓரங்கட்டவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள்.


‘கறார்’ கருப்பண்ணன்... சுரீர் எடப்பாடி!


சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணனின் துறைக் கோப்புகள் பெரும்பாலும் முதல்வர் அலுவலகத்திலேயே முடிவெடுக்கப்படுகின்றன. இதனால், மனிதர் ஏகத்துக்கும் அப்செட். சர்வே முடிவுகளோ, ‘பவானி தொகுதியின் குடிநீர் பிரச்னை, சுகாதாரப் பிரச்னை பலவும் அமைச்சரின் டேபிளில் பெண்டிங்கில் இருக்கின்றன. இதனால், அமைச்சர்மீது மக்கள் கடும் அப்செட்’ என்கிறதாம். சமீபத்தில் இவர் தரப்பிடம் கட்சிக்கு நிதி கேட்டபோது, கறார் காட்டி கடுகடுத்ததாம் அமைச்சர் டீம். இதனால், அப்போதே ‘சுரீர்’ என்று ஏறிய கோபத்தை அடக்கிக்கொண்ட கட்சித் தலைமை, இப்போது கருப்பண்ணனுக்கு கல்தா கொடுக்க முடிவு செய்துள்ளதாம்!


பிரதமரின் ‘தீ’ பார்வை... துரைக்கு ‘நோ’ சீட்!


வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக் கண்ணுவின் துறையில், அவரின் மகன் அய்யப்பன் தலையீடு குறித்து ஏற்கெனவே பலமுறை முதல்வர் அலுவலகத்துக்குப் புகார்கள் சென்றுள்ளன. முதல்வர் அலுவலகத்திலிருந்தும் அமைச்சருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இந்தநிலையில், சமீபத்தில் வேளாண்மைத்துறையில் வெடித்துள்ள ‘கிசான் சம்மான்’ முறைகேடு விவகாரத்தால் துரைக்கண்ணுமீது பிரதமர் அலுவலகத்தின் பார்வை ‘தீயாய்’ பதிந்துள்ளதாம். இவையெல்லாம் சர்வே முடிவுகளிலும் எதிரொலித்துள்ளன. இதனால், துரைக்கண்ணுவுக்கு சீட் கிடையாது என்கிறது முதல்வர் அலுவலகத் தரப்பு.


வெல்லத்துக்கு இல்லை இனிப்பு!


சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், தனது திருச்சி கிழக்குத் தொகுதியை முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டார் என்கிறதாம் சர்வே முடிவு. திருச்சி மாநகர், மாவட்டச் செயலாளராக வெல்லமண்டி அறிவிக்கப் பட்டபோதே கட்சிக்குள் அவருக்குப் பலத்த எதிர்ப்புகள் கிளம்பின. கூடவே, மாவட்டப் பொறுப்புகளில் அமைச்சர் செய்த புதிய நியமனங்களை எதிர்த்தும் கண்டன போஸ்டர்கள் முளைத்தன. எனவே, இந்தமுறை வெல்லமண்டிக்கு ‘சீட்’ கொடுத்தால், கட்சிக்காரர்களே கலகம் செய்வார்கள் என்று நினைக்கிறது எடப்பாடி தரப்பு. எனவே, வெல்லத்துக்கு இந்தமுறை இனிப்பான செய்தி எதுவுமில்லை!‘வளர்ந்த’ வளர்மதி... வளராத தொகுதி!


பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரான வளர்மதி, தன் வளர்ச்சியில் காட்டிய அக்கறையை தனது ஸ்ரீரங்கம் தொகுதியின் வளர்ச்சியில் காட்டவில்லை என்பதுதான் ரிப்போர்ட்டின் சாராம்சம். அதுபோக, தான் சார்ந்த முத்தரையர் சமூகத்துக்கும் அவர் எதுவும் செய்யவில்லை என்கிற கோபம் தொகுதியிலிருக்கும் அந்தச் சமூகத்தினர் இடையே இருக்கிறது. அ.ம.மு.க தலைமை நிலையச் செயலாளர் மனோகரன் தரப்பும் அமைச்சருக்கு எதிராகக் குறுக்குசால் ஓட்டுகிறது. இவ்வளவு பிரச்னைகளை வைத்துக்கொண்டு வளர்மதிக்கு ‘சீட்’ அளித்தால், ஜெயலலிதாவின் தொகுதியில் டெபாசிட்கூட மிஞ்சாது என்பது முதல்வர் தரப்பு கணக்கு!


ராஜலட்சுமிக்கு இல்லை ‘ராஜ’யோகம்!


ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமியின் சங்கரன்கோவில் தொகுதியில், பெரும்பான்மையாக உள்ள முக்குலத்தோர், அமைச்சருக்கு எதிராக உள்ளனர் என்கிறது சர்வே முடிவு. ‘பட்டியல் சாதிகள் பிரிவிலுள்ள ஏழு சாதிகளை இணைத்து ‘தேவேந்திர குல வேளாளர்’ என்கிற ஒரே பெயரின்கீழ் கொண்டுவர வேண்டும்’ என்கிற அரசாணை வெளியாவதில் தாமதம் ஏற்படுவதால், அந்தச் சமூகத்தினரும் அமைச்சர்மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இவையெல்லாம் சேர்ந்து தொகுதிக்குள் அ.தி.மு.க-வை மண்ணைக்கவ்வ வைத்துவிடும் என்று பயப்படுகிறது கட்சித் தலைமை. இதனால், வேறொருவரை வேட்பாளராக ‘டிக்’ செய்ய முடிவெடுத்துள்ளது முதல்வர் தரப்பு.


சேவூர் ரூட், கட்!


இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கு கட்சிக்குள் எதிரிகள் அதிகம் என்கிறது சர்வே முடிவு. ஏற்கெனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் இவருக்கும் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்குமான மோதல் உச்சத்தில் இருக்கிறது. எனவே, எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம் என்று சேவூராருக்கு ‘நோ’ சொல்கிறது இலைத் தலைமை!


‘பாஸ்’கரன் ஃபெயில்!


அமைச்சர் பாஸ்கரனின் பெயர் ரொம்பவே ரிப்பேராகி இருக்கிறதாம். காரணம், தொகுதிக்குள் நடக்கும் மண் கொள்ளை. இதில் ஈடுபடும் பலரும் அமைச்சரின் பெயரைச் சொல்லியே தப்பித்துக்கொள்கிறார்கள். இதுபற்றியெல்லாம் ரிப்போர்ட் அளித்துள்ளது சர்வே டீம். ஏற்கெனவே, அமைச்சருக்கு எதிராக உளவுத்துறை அளித்த அறிக்கையும் அவ்வளவு ‘உவப்பான’தாக இல்லையாம். நாம் தமிழர் கட்சியின் சீமான் சிவகங்கையில் போட்டியிடுவார் என்று கூறப்படும் நிலையில், ‘வீக்’ வேட்பாளரை நிறுத்தி, சீமானுக்கு ‘கேக்’ வெட்ட வாய்ப்பளிக்க வேண்டாம் என்று நினைக்கிறது கட்சித் தலைமை!


ஹிட் லிஸ்ட்டில் ரா.கி!


கால்நடைத்துறை அமைச்சரான உடுமலை ராதாகிருஷ்ணனை ‘சசிகலா ஆதரவாளர்’ என்றே நினைக்கிறது எடப்பாடி தரப்பு. உள்ளூர் கட்சியினர் பலரும் இவர்மீது அதிருப்தியில் இருப்பதாக ‘நோட்’ போட்டிருக்கிறது சர்வே டீம். இவை தவிர, உடுமலைப்பேட்டை தொகுதிக்குள் முன்னாள் அமைச்சரான எம்.எஸ்.எம்.ஆனந்தனின் கை ஓங்குகிறது. மில் தொழிலதிபர்கள் தரப்பு அமைச்சருக்கு எதிராக இருப்பதால், ராதாகிருஷ்ணுக்கு எதிராக நிற்கிறது கவுண்டர் லாபி. இவற்றையெல்லாம் கணக்கிட்டு, ராதாகிருஷ்ணனை ஹிட் லிஸ்ட்டில் வைத்திருக்கிறது கட்சித் தலைமை!


எதிரலை... இருவருக்கும் இல்லை ‘இலை’!


தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா இருவருமே வீட்டைவிட்டே வருவதில்லை. தொண்டர்களை மதிப்பதில்லை என்று குறிப்பிட்டுள்ளதாம் சர்வே டீம். தவிர, ஆளும்கட்சிக்கு எதிரான அலை இவர்களது வாணியம்பாடி மற்றும் ராசிபுரம் தொகுதியில் அதிகமாக வீசுவதாகவும் சொல்கிறது ரிப்போர்ட். எதிர்ப்பு அலையைச் சரிகட்ட வேட்பாளர்களை ஓரங்கட்டும் முடிவுக்கு வந்திருக்கிறது எடப்பாடி தரப்பு.


மாஃபாவுக்கு மறுக்கப்படும் சீட்


கல்தா பட்டியலில் 12-வது நபராக இடம் பிடித்திருப்பவர் மாஃபா பாண்டியராஜன். பன்னீரின் அணியில் இடம்பெற்றிருப்பதால் எடப்பாடி மனதில் இவருக்கு இடம் இல்லை. இவரது ஆவடி தொகுதியின் ரியல் எஸ்டேட் துறையில் நடக்கும் ‘வணிக’ லாபி, சொந்தக் கட்சிக்காரர்களையே இவருக்கு எதிராகத் திரும்ப வைத்துள்ளது. இதைக் குறிப்பிட்டிருக்கும் சர்வே டீம் இவருக்கு சீட் வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.


இவர்கள் தவிர, ஸ்பெஷல் ஹிட் லிஸ்ட் பட்டியல் ஒன்றும் உண்டு. ராஜேந்திர பாலாஜி, செல்லூர் ராஜு உள்ளிட்ட சிலர் அதில் இடம்பெற்றிருக்கிறார்களாம். அவர்கள் நடந்துகொள்வதைப் பொறுத்தே அவர்களின் அரசியல் எதிர்காலம் அமையும் என்கிறது எடப்பாடி தரப்பு!


எடப்பாடியின் இந்த ‘டெரர்’ கணக்கு எடுபடுமா அல்லது பல்வேறு கோஷ்டிகளாகக் கட்சி உடைபடுமா என்பது விரைவில் தெரிந்துவிடும்!


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment