Wednesday, September 30, 2020

கருணாநிதி பாணி அரசியலை கையிலெடுக்கும் எடப்பாடி?

 


“கருணாநிதி பாணியில், கடைசி நேரத்தில் கட்சியைக் கைப்பற்றும் யுக்தியை எடப்பாடி கையிலெடுக்கக்கூடும்” என்கிறார்கள் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள். பன்னீர்-பழனிசாமி இடையிலான பனிப்போர் உச்சகட்டத்தில் இருந்துவரும் நிலையில், “சிறையிலிருந்து சசிகலா வெளியே வந்ததும் அ.தி.மு.க-வை மீட்பதற்கான பணிகளைத் தொடங்குவார்” என அ.ம.மு.க நிர்வாகியான வெற்றிவேல் தன் பங்குக்குப் பற்றவைத்திருக்கிறார். இதனால் அ.தி.மு.க-வுக்குள் வெடித்துவரும் கலகம் உச்சத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.


என்ன நடக்கிறது கழகத்துக்குள்? அ.தி.மு.க தலைமைக்கு நெருக்கமானவர்கள் நம்மிடம் பகிர்ந்துகொண்ட சில விவகாரங்கள் முழுமையாக இங்கே... “அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் 11 பேர் கொண்ட வழிகாட்டுக்குழுவை அமைக்க வேண்டும் என்ற தனது முடிவைத் தெளிவாகச் சொல்லிவிட்டார் பன்னீர். பிறகு கட்சி அலுவலகத்துக்கும் விசிட் செய்து அதிர்ச்சி கொடுத்தார். இதையெல்லாம் பழனிசாமி தரப்பு அமைதியாக கவனித்துவருகிறது. பன்னீருக்குப் பின்னால் சில அமைச்சர்கள் அணிவகுத்தது உண்மைதான். எடப்பாடி மீது அதிருப்தியிலிருக்கும் அமைச்சர்கள், பன்னீர் பின்னால் அணி திரளத் தயாராக இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் இதுவரை வெளிப்படையாக எடப்பாடிக்கு எதிராகக் குரல் கொடுக்கவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.



இதில்தான் எடப்பாடியின் சூட்சுமம் இருக்கிறது. தனக்கு எதிராக அமைச்சர்கள் அணி திரண்டாலும், தன்னை எதிர்த்து இப்போதைக்கு குரல் கொடுக்க மாட்டார்கள்; அமைச்சர் பதவி அவர்களுக்கு முக்கியம் என்று எடப்பாடி நினைக்கிறார். ஆனால், கட்சி நிர்வாகிகளுக்கு அந்த நெருக்கடி இல்லை. அவர்கள் பன்னீர் பின்னால் சென்றாலும், எடப்பாடியால் அதைத் தடுக்க முடியாது. இதையெல்லாம் மனக்கணக்கு போட்டுத்தான் எடப்பாடி செயற்குழுவுக்கு ஒப்புக் கொண்டிருக்கிறார். செப்டம்பர் 28-ம் தேதி நடக்கவிருக்கும் செயற்குழுவில் 300 பேர் வரை கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதில், 200 பேர் தனது ஆதரவாளர்களாக இருப்பார்கள் என்று எடப்பாடி எண்ணுகிறார். அதேநேரம், செயற்குழுவில் யாரும் நினைத்ததையெல்லாம் பேசிவிட முடியாது. செயற்குழுவில் எந்தெந்த விவகாரங்கள் குறித்துப் பேச வேண்டும் என்பதை பன்னீர்-எடப்பாடி இருவருமே சேர்ந்துதான் முடிவெடுக்க வேண்டும். செயற்குழுவில் பேசப்படும் விஷயங்கள் குறித்த ஸ்கிரிப்ட்டை பன்னீர் ஏற்கெனவே முடிவு செய்துவிட்டார். அதை எடப்பாடிக்கும் அனுப்பியிருக்கிறார். அதில் சில பாய்ன்ட்களை எடப்பாடி சேர்க்கச் சொல்லியிருக்கிறார். இதுவரை இருவருக்குள்ளும் எந்த மோதலும் இல்லை. ஆனால், செயற்குழு நடக்கும் நாளன்று, வேறு ஏதும் பிரச்னை வெடிக்கலாம்” என்கின்றனர் கட்சியின் உள் விவரமறிந்தவர்கள்.


ஏற்கெனவே, தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கடந்த ஒரு மாதமாகவே முயன்றுவருகிறார் எடப்பாடி. அதற்கு பன்னீர் முட்டுக்கட்டையாக இருக்கிறார். இந்த நேரத்தில்தான் சசிகலா தரப்பு, மறைமுகமாக பன்னீருக்கு ஆதரவாகக் களமாட ஆரம்பித்துள்ளது. இதையெல்லாம் மனதில்வைத்திருக்கும் எடப்பாடி, தி.மு.க பாணியில் ஒரு கணக்கைக் கையிலெடுக்க இருக்கிறார். அதாவது, கட்சியின் முதல்வர் வேட்பாளர் குறித்து எந்தத் திட்டத்தையும் இப்போது பேச வேண்டாம். ஆனால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை மாற்றம் செய்யலாம் என்று எடப்பாடி தரப்பிலிருந்து சிலர் செயற்குழுவில் குரல் கொடுக்கப்போகிறார்கள்.


இது பற்றிப் பேசியவர்கள், “அண்ணா மறைவுக்குப் பிறகு, தி.மு.க-வில் அடுத்த பொதுச்செயலாளராக நாவலரைக் கொண்டுவந்தபோது, கட்சியின் அதிகாரம் அவர் கையில் போய்விடக் கூடாது என்று தி.மு.க-வின் தலைவர் பதவியைப் புதிதாக உருவாக்கி, பொதுச்செயலாளர் அதிகாரத்தைப் பாதியாகக் குறைத்தார் கருணாநிதி. அதேபோன்ற ஒரு திட்டத்தில் இப்போது எடப்பாடியும் இருக்கிறார்.



`பொதுச்செயலாளர்’ என்ற பதவியை மீண்டும் கொண்டுவந்துவிடலாம். அந்தப் பதவிக்குக் குறிப்பிட்ட அதிகாரங்களை வழங்கிவிடலாம். `அவைத் தலைவர்’ என்ற பதவியை எடுத்துவிட்டு, `கட்சியின் தலைவர்’ என்ற பதவியை உருவாக்கி, தலைவருக்கு என்று சில அதிகாரங்களைக் கொடுக்கலாம் என்று எடப்பாடி திட்டமிடுகிறார். இரண்டில் ஒரு பதவியில், தான் அமர வேண்டும் என்பதே எடப்பாடியின் திட்டம். பன்னீர் தரப்பில் எதிர்ப்பு இருந்தாலும், மெஜாரிட்டி தன் பக்கம் இருப்பதால், இதையே ஒரு தீர்மானமாக நிறைவேற்றி, அதைப் பொதுக்குழுவுக்குக் கொண்டு செல்ல எடப்பாடி திட்டமிடுகிறார்” என்று ஷாக் கொடுக்கிறார்கள்.


மேலும் “பன்னீர், திடீரென இப்படிப் போர்க்கொடி தூக்கக் காரணமே குடும்ப அரசியலை மையப்படுத்தத்தான். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மூத்த மகனை எம்.பி ஆக்கிவிட்டவர், அடுத்து மத்திய அமைச்சராக்கவும் திட்டமிடுகிறார். சட்டமன்றத் தேர்தலில் இரண்டாவது மகனையும் களத்தில் இறக்கப் பார்க்கிறார். இதற்கு எடப்பாடி தரப்பிலிருந்து எதிர்ப்பு வரும் என்பதால், தினகரன் பக்கம் சாய்கிறார். இப்போது பன்னீர் ஆக்ரோஷப்பட காரணமே, கேட்டும் இதெல்லாம் கிடைக்காததுதான். அவருக்கு வேண்டியது கிடைத்துவிட்டால் செயற்குழுவில் பவ்யமாகிவிடுவார் பன்னீர்” என்று எடப்பாடி தரப்பில் சொல்கிறார்கள்.


“சசிகலா விடுதலை குறித்துப் பேச்சு எழுந்தபோது, எடப்பாடி சில காய்களை நகர்த்த ஆரம்பித்துவிட்டார் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால், அவர் திட்டமிடுவதுபோல தலைமையில் பதவி மாற்றம் என்பதையெல்லாம் எளிதாகச் செய்துவிட முடியாது. ‘அடிப்படை உறுப்பினர்கள்தான் பொதுச்செயலாளரைத் தேர்வு செய்ய வேண்டும்’ என்கிற வழக்கு இப்போதுவரை நீதிமன்றத்தில் இருக்கிறது. எனவே, எடப்பாடியின் திட்டம் நிறைவேறுவது சாத்தியமில்லை” என்கின்றனர் பன்னீர் ஆதரவாளர்கள்.


அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமியிடம் இந்த விவகாரங்கள் குறித்துக் கேட்டபோது, “பன்னீர்செல்வத்தின் பின்னால் இப்போது நிர்வாகிகள் அணிதிரள்வதுபோல் ஒரு தோற்றம் இருக்கிறது. ஆனால், இப்போதும் எடப்பாடியின் ஆட்கள்தான் செயற்குழு, பொதுக்குழுவில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். செயற்குழு, பொதுக்குழு இரண்டு கூட்டங்களின் அறிவிப்பு எப்போதுமே ஒன்றாகத்தான் வரும். ஆனால், செயற்குழுவைத் தனியாக நடத்த ஒப்புக்கொண்டதன் பின்னால் எடப்பாடியின் வியூகம் ஏதாவது இருக்கும். செயற்குழுவில் எடப்பாடி தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க முயல்வார் அல்லது சில அதிகாரங்களோடு அ.தி.மு.க-வின் தலைமைப் பதவியை தன்பக்கம் கொண்டுவர முயல்வார். இதற்கு பன்னீர் அணைபோடுவது எளிதான காரியம் இல்லை” என்றார்.


பஞ்சாயத்துக்குப் பஞ்சமில்லாமல் இருக்கப்போகிறது அ.தி.மு.க செயற்குழு!


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment