Tuesday, September 22, 2020

சொந்தக் கட்சிக்கே விசுவாசமாக இல்லை! - துரை மீது பாயும் தொண்டர்கள்

பதவி ஆசை யாரை விட்டது?! தி.மு.க வரலாற்றில் பொதுச்செயலாளர் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்ற துரைமுருகனின் தீராத ஆசை நிறைவேறியிருக்கிறது. அதை வெளிப்படுத்தும்விதமாக, ‘‘நான் மட்டுமல்ல; எனக்குப் பின்னால் என் குடும்பமும் உங்களுக்கு நன்றிகொண்டதாக இருக்கும். தாசனுக்கு தாசனாக தலைமைக்கு என் குடும்பம் இருக்கும்’’ என்றெல்லாம் பொதுக்குழுவில் உணர்ச்சிப்பெருக்கில் உருகினார் துரைமுருகன்.


‘கட்சிக்குப் புதிய பொதுச்செயலாளர் வந்துவிட்டதால், தொண்டர்கள் கொண்டாட்டமாக இருப்பார்கள்’ என்று நினைத்து தொண்டர்களிடம் பேசினால், கொலைவெறியில் கொந்தளித்துவிட்டார்கள். “பழைய பெருங்காய டப்பாவைவைத்தே இத்தனை காலம் அரசியல் செய்துவருகிறார் துரைமுருகன். எம்.ஜி.ஆர் மறைந்து 33 வருடங்கள் கடந்துவிட்டன. ஆனால், ‘எம்.ஜி.ஆர் அழைத்தே அ.தி.மு.க-வுக்குச் செல்லாதவன்’ என்பதையே தனது ஒரே அரும்பெரும் சாதனையாகச் சொல்லிவரும் துரைமுருகன், அ.தி.மு.க-வுக்குச் சென்றிருந்தால்கூட இவ்வளவு சொகுசாக இருந்திருக்க முடியாது. தி.மு.க-வின் உள்ளடி அரசியலை நன்கறிந்தவர் துரைமுருகன். கருணாநிதி தலைவராக இருந்தபோது, காலையிலும் மாலையிலும் அவர் வீட்டுக்கு ‘விசிட்’ செய்து, ‘கருணாநிதியின் நிழல்’ என்ற பிம்பத்தை ஏற்படுத்திக்கொண்டார். அதைவைத்தே வேலூர் மாவட்டத்தில் தன்னைத் தவிர வேறு யாரும் தி.மு.க-வில் அரசியல் செய்ய முடியாது என்கிற எண்ணத்தைக் கட்டமைத்தும் விட்டார்’’ என்றவர்கள், மேலும் சில தகவல்களையும் பகிர்ந்துகொண்டார்கள்.


‘‘அறுபது ஆண்டுகள் இந்தக் கட்சிக்காக உழைத்தவன் என்கிறார் அவர். இதுவரை தனது மாவட்டத்தில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஒரு மாநாட்டையாவது நடத்தியிருக்கிறாரா? சொந்தச் செலவில் பொதுக்கூட்டத்தைக்கூட நடத்த மாட்டார். முதலில் தலைவருக்குத் தாசனாக இருந்தவர், ஸ்டாலின் தலைவரான பிறகு அவருக்கும் தாசனாகிவிட்டார். அந்த நெருக்கத்தைவைத்தே தன் மகனுக்கும் சீட் வாங்கி எம்.பி-யாக்கினார்.


பொதுப்பணித்துறையும் சட்டத்துறையும் அவர் வசம் இருந்தபோதே தொகுதிக்குப் பெரிதாக எதையும் செய்யவில்லை. வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் தன் மகன் கதிர் ஆனந்தைக் களத்தில் இறக்கியபோது எழுந்த சிக்கல்கள் நினைவிருக்கிறதா? ஐம்பது ஆண்டுகளைத் தாண்டி ஒரு மாவட்டத்தில் அரசியல் செய்யும் ஒரு தலைவர், தன் மகனைக் களமிறக்கிய முதல் தேர்தலில் அத்தனை பாடுபட்டது ஏன் என்று யோசியுங்கள். வேலூர் மாவட்டத்தில் வேறு வழியில்லாமல்தான் கட்சிக் காரர்கள் இவரை ஆதரிக்க வேண்டியிருக்கிறது” என்கிறார்கள்.


வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகளும் இதை ஆமோதிக்கிறார்கள். “நாடாளுமன்றத் தேர்தலின்போது இவருக்கு நெருக்கமானவர்களுக்குச் சொந்தமான இடங்களில் கட்டுக்கட்டாகப் பணத்தை அதிகாரிகள் கைப்பற்றினார்கள். உடனே ஒரு மாவட்டச் செயலாளரைக் குறிவைத்து பொதுவெளியில் பேட்டி கொடுத்தார். அதே போன்று கட்சியிலுள்ள வேறு நபர்கள் சொல்லியிருந்தால் கட்சி பார்த்துக்கொண்டு சும்மா இருக்குமா?


காட்பாடியில் இதுவரை அவர் கோலோச்சுவதற்குக் காரணம் எதிர்க் கட்சிகளுடன் அவர் காட்டும் இணக்கமே. பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் தேர்ந்தெடுக்கப் பட்டவுடன், அவருக்கு முதல் வாழ்த்து அமைச்சர் கே.சி.வீரமணியிடமிருந்து வந்ததிலிருந்தே இதைப் புரிந்துகொள்ளலாம். அரசியல் நாகரிகம் என்று எண்ணி இதை ஒதுக்கிவிட முடியாது. இதற்குப் பின்னால் பல கணக்குகள் உண்டு’’ என்கிறார்கள்.அறிவாலயத்தில் சிலருடன் பேசினோம். ‘‘எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு துரைமுருகன் அ.தி.மு.க தரப்புடன் வெகு இணக்கமாகச் செயல்பட்டது தலைமைக்கும் தெரியும். கடந்த சட்டமன்ற கூட்டத்தொடர் முடிந்த பிறகு எடப்பாடி பழனிசாமியை, தனியாக துரைமுருகன் சந்தித்துப் பேசினார் என்கிற குற்றச்சாட்டு தலைமை வரை எட்டியது. இதற்கு துரைமுருகன் தரப்பிலிருந்து எந்த விளக்கமும் இதுவரை வரவில்லை. அதற்குப் பிறகு நடந்த சில விவகாரங்களையும், எடப்பாடியுடன் துரைமுருகன் பேசியதையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியிருக்கிறது’’ என்று சஸ்பென்ஸ் வைத்தவர்கள், அதற்கான காரணத்தையும் சொன்னார்கள்:


‘‘துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தின் மனைவி பெயர் சங்கீதா. இவர்கள் இருவரின் பெயரையும் இணைத்துதான் ‘கே.எஸ். கன்ஸ்ட்ரக்‌ஷன்’ என்ற நிறுவனம் தொடங்கப் பட்டதாகச் சொல்கிறார்கள். தொடங்கிய சில மாதங்களிலேயே பொதுப்பணித்துறையில் முதல்நிலை ஒப்பந்ததாரராகப் பதிவு செய்திருக்கிறார்களாம். ஒரு முதல்நிலை ஒப்பந்ததாரருக்கான லைசென்ஸ் பெற வேண்டுமென்றால், ஐந்து வருடங்களில் ஐந்து வேலைகளையாவது செய்திருக்க வேண்டும். ஆனால், அந்த விதி சரிவர பின்பற்றப்படவில்லை. இப்போது காரணம் புரிகிறதா?” என்றார்கள்.


சரி இங்குதான் பிரச்னை எனத் தொகுதி பக்கம் விசாரித்தால், ``கட்சிக்காரர்கள் பரவாயில்லை. அப்பாவிடம் மட்டும்தான் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். தொகுதி மக்களாகிய நாங்களோ அப்பா, பையன் என இரண்டு பேரிடமும் மாட்டிக்கொண்டு படாதபாடு படுகிறோம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’’ என்று ஒரு பேப்பரைக் காட்டி, “துரைமுருகன் எட்டடி பாய்ந்தால், கதிர் ஆனந்த் பதினாறு அடி பாய்கிறார். வேலூர் தொகுதிக்கு எம்.பி-யான கதிர் ஆனந்த், தனது எம்.பி கோட்டாவுக்கு ஒதுக்கப்பட்ட 10 கேந்திரிய வித்யாலயா சீட்டுகளில், இரண்டை மட்டும் தனக்கு வேண்டியவர்களுக்குப் பரிந்துரைத்துவிட்டு மீதமுள்ள எட்டு சீட்களை யாருக்கும் வழங்காமல் வீணடித்துவிட்டார். இதிலிருந்தே மக்கள்மீது இவருக்கு இருக்கும் அக்கறையைப் புரிந்துகொள்ளலாம்” எனக் கடுகடுத்தார்கள்.


“துரைமுருகன், தொகுதி மக்களுக்கு மட்டுமல்ல... சொந்தக் கட்சிக்கே விசுவாசமாக இல்லை” என்பதே தி.மு.க தொண்டர்களின் குமுறலாக இருக்கிறது!


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment