Sunday, September 13, 2020

அப்பாவைவிட நல்லவருங்க! - டெல்டா தி.மு.க பாலிட்டிக்ஸ்!

தி.மு.க-வின் பொருளாளராக டி.ஆர்.பாலு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது டெல்டா தி.மு.க-வில் முக்கியப் பேசுபொருளாக மாறியிருக்கிறது. `இதன் மூலம், அடுத்தடுத்து டெல்டா தி.மு.க-வில் சில அதிரடி மாற்றங்கள் நிகழப்போகின்றன’ என்கிறார்கள் உடன்பிறப்புகள்.


தி.மு.க-வைப் பொறுத்தவரை ஒவ்வொரு மண்டலத்தையும் ஒரு குறுநில மன்னர் கோலோச்சுவார். இது தி.மு.க-வின் தொடக்க காலத்திலிருந்து இன்றுவரை தொன்றுதொட்டுத் தொடரும் ‘பாரம்பர்யம்.’ வேலூர் என்றால் துரைமுருகன், விழுப்புரம் என்றால் பொன்முடி, திருச்சி என்றால் கே.என்.நேரு, திண்டுக்கல் என்றால் ஐ.பெரியசாமி, கொங்கு மண்டலம் என்றால் பொங்கலூர் பழனிசாமி. இப்படியாக, அந்தந்த மண்டலங்களின் குறுநில மன்னர்கள் நினைவுக்கு வருவார்கள். இவர்கள் தி.மு.க-வின் இரண்டாம்கட்டத் தலைவர்களாகவும் வலம்வருவார்கள். ஆனால், ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட தி.மு.க-வில் மன்னை நாராயணசாமி, கோ.சி.மணிக்குப் பிறகு, தனிப்பெரும் ஆளுமையாக யாரும் உருவெடுக்கவில்லை.


இந்த வெற்றிடத்தை நிறைவு செய்யத்தான் 2014-ம் ஆண்டு டெல்டாவுக் குள் என்ட்ரி ஆனார் டி.ஆர்.பாலு. கறாரான பேச்சு, கடுகடுப்பான அணுகுமுறை, வடசேரி சாராய ஆலை பிரச்னை, மீத்தேன் திட்டத்துக்கு வித்திட்டவர் போன்ற காரணங்களால் டெல்டா மக்களிடம் இவருக்குக் கடும் எதிர்ப்பு நிலவியது. அப்போது நடைபெற்ற தஞ்சைத் தொகுதி நாடாளுன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவினார். டெல்டா மக்கள் மனதில் மட்டுமல்ல, கட்சித் தொண்டர்கள் மனதிலும்கூட இவருக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால், டெல்டா அரசியலே தனக்கு வேண்டாம் என்று சுவரில் அடித்த பந்துபோல மீண்டும் பெரும்புதூருக்கே திரும்பினார்.

டி.ஆர்.பாலு - கலைவாணன்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, டி.ஆர்.பாலுவின் மகனும், மன்னார்குடி எம்.எல்.ஏ-வுமான டி.ஆர்.பி.ராஜா இந்தத் தொகுதி மக்களைப் பெரிதும் ஈர்த்திருப்பதாகச் சொல்கிறது டெல்டா தி.மு.க தரப்பு. தந்தையான டி.ஆர்.பாலு, கட்சியின் பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதால், டெல்டா தி.மு.க-வில் ராஜாவின் செல்வாக்கு உச்சநிலையை அடையும் என்றும், 2021-ல் தி.மு.க ஆட்சிக்கு வந்தால், ராஜா நிச்சயம் அமைச்சராக்கப்படுவார் என்றும் பேச்சு நிலவுகிறது.


இங்குள்ள தி.மு.க நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ‘‘டி.ஆர்.பாலு ரொம்ப கோபக்காரர். அவர் ஒரு ‘ஹைடெக்’ அரசியல்வாதி. இங்குள்ள கட்சி நிர்வாகிகள்கிட்ட முகம்கொடுத்துப் பேச மாட்டார். இந்திய அளவில் பிரபலமான கேபினெட் அமைச்சராக இருந்தபோதும், 2014-ம் வருடம் நாடாளுமன்றத் தேர்தலில், தஞ்சைத் தொகுதியில் தோற்றுப்போனார். காரணம், அவரோட ஏறுக்குமாறான அணுகுமுறை. சாராய ஆலை பிரச்னை, மீத்தேன் திட்டம் மாதிரியான விஷயங்களில் இவருக்கு மக்கள்கிட்ட நல்ல பேர் இல்லை.அப்படியொரு நெருக்கடியான நேரத்துலயும்கூட, கட்சிக்காரங்ககிட்ட கடுகடுனுதான் நடந்துக்கிட்டார் டி.ஆர்.பாலு.


தேர்தல் தோல்விக்குப் பிறகு, மன்னார்குடியில ஒரு திருமண விழாவுக்குத் தலைமையேற்க வந்தார். மணமக்கள் வர கொஞ்சம் தாமதமானது. டென்ஷனான டி.ஆர்.பாலு, மணமேடையிலேயே ‘எனக்குப் பிடிச்சது நேரம் தவறாமை... ஆனா உங்களுக்கெல்லாம் ரொம்ப பிடிச்சது நேரத்துக்கு வராமை’னு பேசினார். அந்த அளவுக்கு இடம் பொருள் தெரியாம பேசக்கூடியவர்.


டி.ஆர்.பி.ராஜா, இதுக்கு நேர்மாறானவர். மன்னார்குடித் தொகுதிவாசிகள் யார் போய் பத்திரிகை வெச்சாலும் கண்டிப்பா வந்துடுவார். கல்யாண மண்டபத்துல இருக்குற நூறு பேர்ல தொண்ணூறு பேர்கிட்ட தானா போய் நலம் விசாரிப்பார். தாத்தா, பாட்டி, மாமா, மச்சான்னு உறவுமுறை சொல்லி நெகிழவைப்பார். தொகுதிப் பிரச்னைகளைச் சமூக ஊடகங்களில் பதிவுசெய்வது, அதிகாரிகளைச் சந்தித்து மனு கொடுப்பது, அதை முக்கியப் பிரச்னையாகப் பேசவைப்பதுனு மன்னார்குடி மக்கள்கிட்ட இவரோட செல்வாக்கு ஓரளவு கூடியிருக்கிறது உண்மைதான்” என்றார்கள்.


‘‘மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி, திருவாரூர் மாவட்டத்துக்குள்தான் வருது. ஆனா, மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணனுக்கு, மன்னார்குடித் தொகுதியில் செல்வாக்கு சரிஞ்சுக்கிட்டே வருது. நீடாமங்கலம் ஒன்றியச் செயலாளராக இருந்த விசு.அண்ணாதுரை, பூண்டி கலைவாணனோட தீவிர ஆதரவாளர். கொரோனா நிவாரணப் பணிகள் தொடர்பான பிரச்னையில, அவரை ஒன்றியச் செயலாளர் பதவியிலிருந்து கட்சித் தலைமை நீக்கிடுச்சு. டி.ஆர்.பி.ராஜாவோட ஆதரவாளர்கள்தான் இப்போ ஒன்றியப் பொறுப்புக்குழு நிர்வாகிகள். இதில் கலைவாணனுக்கு ஏக வருத்தம். அதேசமயம், ராஜாவுக்கும் திருவாரூர் மாவட்டச் செயலாளர் ஆகணும்கிற ஆசை வந்திருக்கு. டி.ஆர்.பாலு, கட்சியில் அதிகாரம்மிக்க பொறுப்புக்கு வந்துருக்கிறதால விரைவில் எதுவும் நடக்கலாம்’’ என்கிறார்கள் தி.மு.க சீனியர்கள்.


டி.ஆர்.பி.ராஜா

டி.ஆர்.பி.ராஜாவைத் தொடர்புகொண்டோம். ‘‘மாவட்டச் செயலாளர் ஆகணும்கிற எண்ணம் எனக்குக் கிடையாது. தற்போதைய மாவட்டச் செயலாளரே சிறப்பாகச் செயல்பட்டுவருகிறார். அப்பா பொறுப்புக்கு வந்திருக்கிறதுக்கும் என் எதிர்கால அரசியலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவர் பாதை வேறு. என் பாதை வேறு. அமைச்சர் ஆசை எனக்கு இல்லை. தொகுதி மக்களுக்கு என்னால முடிஞ்ச உதவிகளைச் செஞ்சுக்கிட்டு இருக்கேன். மக்கள் என்மேல அன்பா இருக்காங்க. நானும் அப்படி நடந்துக்குறேன். அந்த அன்பில் அரசியல் இல்லை’’ என்றார்.


கட்சி சார்பற்ற நடுநிலையாளர்கள் சிலரிடம் விசாரித்தோம். ‘‘இவரோட தோற்றம், அணுகுமுறையால கொஞ்சம் ஈர்ப்பு இருக்கிறது உண்மைதான். ஆனா, இவரால தொகுதிக்கோ, மக்களுக்கோ பெருசா சொல்லிக்கிற மாதிரி எந்தவொரு நன்மையும் நடக்கலை. நீர்நிலைகள் மேம்பாடு, பாதாளச் சாக்கடைத் திட்டம், நீடாமங்கலம் மேம்பாலம்னு செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கு. எல்லா விசேஷங்களுக்கும் போறது, பாசமழை பொழியிறதெல்லாம் வழக்கமான அரசியல்வாதிகளோட உத்தி. அப்பாவைவிட மகன் பரவாயில்லைங்கிற காரணத்துக்காகவெல்லாம் தூக்கிப்பிடிக்க முடியாது. இதெல்லாம் ஊதிப்பெருக்கும் பிம்ப அரசியல்” என்றார்கள்.


இன்னும் சில மாதங்களில், டெல்டாவில் அனல் அதிகமாகும்!


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment