Wednesday, September 30, 2020

20-வது சட்டத்திருத்தம் - இலங்கையின் அரசன் கோத்தபய?

இலங்கைத் தீவின் இப்போதிருக்கும் அரசியலமைப்புச் சட்டம், 1978-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்ததிலிருந்தே நடைபெற்ற பெரும்பாலான ஜனாதிபதி தேர்தல்களில் வேட்பாளர்கள், ‘ஜனாதிபதி முறைமையை அகற்றுவோம்’, ‘நிறைவேற்று அதிகாரத்தைக் குறைப்போம்’, ‘நாடாளு மன்றத்தை பலப்படுத்துவோம்’ என்றெல்லாம் வாக்குறுதி களை வழங்கியே தேர்தல்களில் போட்டியிட்டார்கள். ஆனால், வெற்றிபெற்ற பிறகு அவற்றைக் காற்றில் பறக்கவிட்டார்கள். சிம்மாசனத்தில் அமர்ந்ததும், அவர்களின் ‘லிபரல் முகமூடிகள்’ கழன்று விழுந்துவிடும். தங்களது ஆட்சியின் கடைசி நிமிடம் வரை நிறைவேற்று அதிகாரத்தின் கடைசித்துளியையும் ருசித்துவிட்டே அவர்கள் அகல்வார்கள்!


ஆனால், இந்தமுறை ராஜபக்சேக்கள் அப்படியெல்லாம் பாசாங்கு செய்யவில்லை. நேரடியாகவே ‘ஜனாதிபதியின் அதிகாரத்தைக் கூட்டுவோம்’ என்று கேட்டுத்தான் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். மேலும், ‘ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்து, நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை அதிகப்படுத்தும் 19-வது சட்டத் திருத்தம் வெளிநாடுகளின் தூண்டுதல்களால் உருவாக்கப்பட்டது. அதை அகற்ற வேண்டும். ஈஸ்டர் குண்டு வெடிப்பு போன்றவற்றிலிருந்து நாட்டைப் பாதுகாத்து ஆட்சி செய்வதற்கு இரும்பு மனிதர்கள் வேண்டும். அதற்கு, ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டும்’ என்றெல்லாம் கூறித்தான் அவர்கள் இந்தமுறை மக்களிடம் ஆணை கேட்டார்கள்.


அவர்கள் கேட்ட ஆணையைச் சிங்கள மக்கள் அவர்களுக்கு வழங்கியிருக்கிறார்கள். அதன்படி, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்குத் தேவையான அசுரபலத்துடன் ராஜபக்சேக்கள் ஆட்சிக்கு வந்துவிட்டார்கள். ஆட்சிக்கு வந்த கையோடு அவர்கள் 19-வது சட்டத் திருத்தத்தை பலவீனப்படுத்தும் வகையில் 20-வது திருத்தத்தைக் கொண்டுவரப்போகிறார்கள்.


இந்தத் திருத்தத்துக்கான உத்தேச வரைவு செப்டம்பர் 3-ம் தேதி வெளியிடப்பட்டது. அதற்குப் பெரிய அளவில் எதிர்ப்பு இருக்காது என்று ராஜபக்சேக்கள் கணக்கு போட்டார்கள். அசுரபலத்துடன் ஆட்சிக்கு வந்திருப்பதால், தங்களது வெற்றி அலைக்குள் எதிர்ப்புகள் அடித்துச் சென்றுவிடும் என்று எண்ணினார்கள்.ஆனால், எதிர்பார்த்ததைவிடவும் எதிர்ப்பு பலமாக காணப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு பிரிவுகளும்தான் அதை முதலில் எதிர்த்தன. ஏனெனில், 19-வது திருத்தத்தைக் கொண்டுவந்தது அந்தக் கட்சிதான். அடுத்ததாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முஸ்லிம் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. மேற்கத்திய நாடுகளிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்தன. மேற்கத்திய நாடுகளின் ஊடகங்கள், ‘ராஜபக்சேக்கள் அரசர்களாக வருவதற்கு முயல்கிறார்கள்’ என்ற தொனியில் விமர்சனங்களை முன்வைத்தன. மேற்கு நாடுகளின் தூதுவர்களும் இது தொடர்பாகத் தங்களது கவலையை வெளிப்படுத்தினர். ஐ.நா-வின் மனித உரிமைகள் ஆணையாளரும் தனது கவலையை வெளிப்படுத்தியிருந்தார்.


ஜனநாயகத்தைத் தூக்கிப்பிடிக்கும் இவர்கள் யாவரும் எதிர்த்ததில் ஆச்சர்யம் எதுவுமில்லை. ஆனால், ராஜபக்சேக்களின் சொந்தக் கட்சியான தாமரை மொட்டு கட்சிக்குள்ளிருந்தும் எதிர்ப்பு கிளம்பியதுதான் ஆச்சர்யம். அங்குதான் இருக்கிறது ராஜபக்சே ‘சகோதர’ பூசல் அரசியல்.


‘20-வது சட்டத் திருத்தத்தை உருவாக்கியது அரசியல்வாதிகள் அல்ல; கோத்தபய ராஜபக்சேவின் பின்னால் நிற்கும் ‘வியத்மக’ என்று அழைக்கப்படும் சிந்தனைக் குழாம்தான் அதை வடிவமைத்தது’ என்று கருதப்படுகிறது. ஓய்வுபெற்ற படைப் பிரதானிகள், ராஜதந்திரிகள், மகா சங்கத்தினர், அறிவுஜீவிகள், படைப்பாளிகள், ஊடகவியலாளர்கள் ஆகியோரை உள்ளடக்கியதே ‘வியத்மக’ சிந்தனைக் குழாம். கோத்தபய ராஜபக்சேவின் வெற்றிக்கான நிகழ்ச்சி நிரலை உருவாக்குவதே இவர்கள்தான்.


‘வியத்மக’ அமைப்பின் கீழ் ‘எலிய’ என்கிற அமைப்பு இயங்குகிறது. அது கிராம அளவில் பௌத்த விகாரைகளை உள்ளடக்கிய வெகுஜன வலைப் பின்னலைக்கொண்டது. கோத்தபய ராஜபக்சேவுக்காக அடிமட்ட மக்கள் மத்தியில் உழைப்பது இந்த அமைப்புதான். இந்த இரண்டு அமைப்புகளும்தான் நடந்து முடிந்த தேர்தலில், ராஜபக்சேக்கள் வெற்றிபெற பின்னணியில் நின்றன.


ஆனால், அர்த்தம் அது மட்டுமல்ல... கட்சியின் நடுநாயகமாகவும், மூத்த தலைவராகவும், பெரும்பான்மைச் சிங்களவர்களை வசீகரிக்கக் கூடிய முகமாகவும் இருப்பவர் மகிந்த ராஜபக்சே. ஆனால், அவரின் இளைய சகோதரராகிய ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சேவின் பின்னணியில் நிற்கும் இந்த அமைப்புகள், மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்களைப் புறந்தள்ளி விட்டு, ஒரு சட்டத் திருத்தத்தை உருவாக்கியிருப்பது அவர்கள் மத்தியில் அதிருப்தியைத் தோற்றுவித்திருக்கிறது.


அதுமட்டுமல்ல... பொதுவாகவே ஒரு சட்டத் திருத்தம், அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பிறகே ‘சட்டமா அதிபர்’ திணைக்களத்துக்கு அனுப்பப்படும். ஆனால், இம்முறை அது ‘சட்டமா அதிபர்’ திணைக்களத்துக்கு அனுப்பப்பட்ட பிறகே அமைச்சரவையில் சமர்ப்பிக்கப் பட்டிருக்கிறது.


செப்டம்பர் 3-ம் தேதி சட்டத் திருத்தத்தின் நகல் வரைவு அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டது. இதை ஆய்வு செய்வதற்காக ஏழு பேர் அடங்கிய நாடாளுமன்றக்குழுவை அமைத்தார் மகிந்த ராஜபக்சே. அந்தக்குழுவும் தனது அறிக்கையை விரைவாகச் சமர்ப்பித்தது. ஆனால், அந்த அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை; விவாதிக்கப்படவும் இல்லை. ‘உத்தேச வரைவை ஆய்வு செய்வதற்கு அமைக்கப்பட்ட குழுவின் சிபாரிசுகள் இணைக்கப்பட்டு, உத்தேச வரைவு திருத்தப்படும்’ என்று முன்பு கூறப்பட்டது. ஆனால், செப்டம்பர் 3-ம் தேதி வெளியிடப்பட்ட அதே உத்தேச வரைவுதான், செப்டம்பர் 22-ம் தேதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. அதில் திருத்தங்கள் எதுவும் செய்யப்படவில்லை. அதாவது, மகிந்த ராஜபக்சே நியமித்த குழுவின் பரிந்துரைகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப் படவில்லை. இது எதைக் காட்டுகிறது, ராஜபக்சே சகோதரர்களுக்கு இடையிலான பூசலையா அல்லது ‘வியத்மக’ அமைப்பின் கை மேலோங்குவதையா? இரண்டும் ஒன்றுதான்!நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட உத்தேச வரைவுக்கு யாராவது எதிர்ப்பு தெரிவித்து ஏழு நாள்களுக்குள் வழக்கு தொடரலாம். அதை நீதிமன்றம் விசாரித்து, மூன்று நாள்களுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும். இல்லையெனில், ஏழு நாள்களுக்குப் பிறகு அது நாடாளுமன்றத்தில் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும். ‘வரைவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருவேளை வழக்கு தொடரப்பட்டாலும், நீதிமன்றம் வரைவை நிராகரிக்கும் வாய்ப்புகள் குறைவு’ என்றே சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.


ஏனெனில், உத்தேச வரைவில் இருப்பவை ஏற்கெனவே 18-வது சட்டத் திருத்தத்தில் இருந்தவைதான். மகிந்த ராஜபக்சேவால் கொண்டுவரப்பட்ட அந்தத் திருத்தத்தை அப்போது நீதிமன்றம் கேள்விக்கு உட்படுத்தவில்லை; நிராகரிக்கவும் இல்லை. அதனால், நீதிமன்றம் இந்தமுறையும் பெரிய அளவில் முட்டுக்கட்டைகளைப் போடாது என்கிறார்கள்.


நாடாளுமன்றத்தில் அதை எதிர்க்கும் தரப்புகள் ஒருவேளை அந்த வரைவில் திருத்தங்களைச் செய்யக்கூடும். முடிவில் அந்த வரைவு மூன்றாவது வாசிப்பின் பிறகு வாக்கெடுப்புக்கு விடப்படும். அதில் பெரும்பான்மையைப் பெறும்பட்சத்தில் அது அரசமைப்புச் சட்டத்தில் இணைக்கப்படும். கோத்தபய ராஜபக்சே அரசனாகிவிடுவார். அரசனுக்கு இருக்கக்கூடிய பெரும்பாலான அதிகாரங்களும் அவருக்குக் கிடைத்துவிடும்.


இது ஏறக்குறைய 1978-ம் ஆண்டு ஜெயவர்த்தனே இந்த அரசமைப்புச் சட்டத்தைக் கொண்டுவந்தபோது பெற்றிருந்த நிறைவேற்று அதிகாரங்களுக்கு நிகரானது. அந்த அதிகாரங்கள் குறித்து ஒருமுறை ஜெயவர்த்தனே சொன்னது இது: “ஓர் ஆணைப் பெண்ணாக மாற்ற முடியாதே தவிர, ஏனைய எல்லாவற்றையும் செய்யக்கூடிய அதிகாரம் எனக்கு உண்டு!”


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment