Friday, September 25, 2020

மூன்று வேளாண் சட்டங்கள்... மூளும் விவாதங்கள்! - செழிக்குமா... வலிக்குமா?

“மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் வேளாண் சட்டங்கள் ஆபத்தானவை; அவற்றால் விவசாயிகளும் பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்’’ என்று கொந்தளிக்கின்றன சில விவசாயச் சங்கங்கள்.

மத்திய பா.ஜ.க அரசில் அங்கம் வகிக்கும் ‘சிரோமணி அகாலிதளம் கட்சி’யைச் சேர்ந்த உணவுப் பதப் படுத்துதல் தொழில்துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கௌர் பாதல், இந்தச் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தனது பதவியை ராஜினாமா செய்திருக் கிறார். காங்கிரஸ், தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி உள்ளிட்ட கட்சிகளும் இந்தச் சட்டங் களுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக் கின்றன. அதேசமயம், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ‘இந்தச் சட்டங்களால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை’ என ஆதரவு தெரிவித்திருக்கிறார். இந்தநிலையில், காவிரி உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமையில் விவசாயிகள் சங்கத்தினர், இந்தச் சட்டங்களின் நகல்களை எரித்தார்கள். அத்துடன், தொடர் போராட்டங்களுக்கும் ஆயத்தமாகிவருகிறார்கள்.

தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் கி.வெங்கட்ராமனிடம் பேசினோம். ‘‘விவசாயிகளை பாதிப்பதோடு, மாநில உரிமைகளையும் இந்தச் சட்டங்கள் பறிக்கின்றன. ‘அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்ட’த்தின் மூலம் இன்றியமையாத பொருள்கள் என்ற பட்டியலிலிருந்து உணவு தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள், சமையல் எண்ணெய் வகைகள், வெங்காயம், உருளைக்கிழங்கு உட்பட இன்னும் பல விளைபொருள்கள் நீக்கப்பட்டிருக்கின்றன. இதனால், இனிவரும் காலங்களில் விவசாயிகளின் விளை பொருள்களை அரசு கொள்முதல் செய்யாத நிலை ஏற்படும். தனியார் வியாபாரிகளும், கார்ப்பரேட் நிறுவனங்களும் சொல்லும் விலைக்கு விவசாயிகள் விற்பனை செய்ய வேண்டிய நிர்பந்தம் உருவாகிவிடும்.


‘வேளாண் விளைபொருள்கள் வணிக ஊக்குவிப்புச் சட்டம்’ மற்றும் ‘பண்ணைச் சேவைகள் ஒப்பந்த அவசரச் சட்டம்’ ஆகியவை மூலமாக, வேளாண் சந்தையை கார்ப்பரேட் நிறுவனங்கள் முழுமையாக ஆக்கிரமிப்பதற்கான ஆபத்து உருவாகியிருக்கிறது. ‘தாங்கள் விரும்பும் வணிகர்களிடமும், வணிக நிறுவனங்களிடமும் விவசாயிகள் தங்கள் விளைபொருள்களைப் பேரம் பேசி, லாப விலைக்கு விற்றுக்கொள்ளலாம்’ எனச் சட்டம் கூறுகிறது. இது சாத்தியமே இல்லை. நம் விவசாயிகளில் பெரும்பாலானவர்கள், கடன் வாங்கி விவசாயம் செய்பவர்கள். விளைபொருள்களைப் பாதுகாப்பாகச் சேமித்து வைத்து, நல்ல விலை கிடைக்கும்போது விற்றுக்கொள்ளும் அளவுக்கு சேமிப்புக் கிடங்கு வசதிகள் நம் விவசாயிகளிடம் இல்லை. இதனால், கார்ப்பரேட் நிறுவனங்கள் கேட்கும் விலைக்குத் தங்கள் விளைபொருள்களை விற்க வேண்டிய நிர்பந்தத்துக்கு அவர்கள் தள்ளப்படுவார்கள். பொருள்களை எடுத்துச் செல்வதற்கும், இருப்பு வைப்பதற்கும் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டிருப்பதும்கூட கார்ப்பரேட்களுக்கே சாதகமானது. இந்த மூன்று சட்டங்களுமே விவசாயிகளின் கழுத்தை நெரிக்கக்கூடியவை’’ என்றார்.


‘‘உணவுப் பொருள்களின் பதுக்கலைத் தடுக்கத்தான் அத்தியாவசியப் பொருள்களின் பட்டியலில் அவை இடம்பெற்றிருந்தன. வெங்காயத் தட்டுப்பாடு ஏற்பட்டபோது, நாட்டில் எங்கெல்லாம் வெங்காயம் பதுக்கிவைக்கப் பட்டிருந்ததோ அவற்றை அரசு பறிமுதல் செய்து பொதுமக்களுக்கு நியாயமான விலைக்கு வழங்கியது. இனி, திட்டமிட்டுப் பதுக்குபவர்களிடமிருந்து அதுபோல பறிமுதல் செய்ய முடியாது.

பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களிலுள்ள விவசாயிகள் தங்களது விளைபொருள்களைப் பெரும்பாலும் அரசின் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் மூலமாகவே விற்பனை செய்தார்கள். குறைந்தபட்ச ஆதார விலைக்கு மேல்தான் வியாபாரிகள் ஏலம் கேட்க முடியும் என்ற நிலை இருக்கிறது. ‘வேளாண் விளைபொருள்கள் வணிக ஊக்குவிப்பு சட்ட’த்தின் மூலம் அந்தக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டிருக்கின்றன. இதனால், தனியார் நிறுவனங்கள் தங்கள் விருப்பம்போல் சந்தைகளை உருவாக்கி, விவசாயிகளின் வயிற்றில் அடிப்பார்கள்’’ எனக் கொந்தளித்தார் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் ஒருங்கிணைப் பாளரான வழக்கறிஞர் ஈசன். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்தச் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது குறித்து தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணுவிடம் கேட்டோம். ‘‘மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் சட்டங்களால் விவசாயிகளுக்கு எந்தவொரு சிறு பாதிப்பும் வராது. அதனால்தான் இதை நாங்கள் எதிர்க்கவில்லை’’ என்றார்.

கி.வெங்கட்ராமன் - ஈசன் - துரைக்கண்ணு - வானதி சீனிவாசன்

தமிழக பா.ஜ.க-வின் துணைத் தலைவர் வானதி சீனிவாசனிடம் பேசினோம். ‘‘இந்தச் சட்டங்கள் விவசாயத்துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும். விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருள்களுக்குத் தாங்களே விலையை நிர்ணயம் செய்ய முடியும். அதேசமயம் விளைபொருள் களுக்கு மத்திய அரசு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்வதும், கொள்முதல் செய்வதும் எப்போதும்போல் தொடரும். வதந்திகளை நம்ப வேண்டாம்.விவசாயப் பொருள்களை இருப்பு வைப்பதிலும், எடுத்துச் செல்வதிலும் கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதால், வேளாண் சார்ந்த தொழில்கள் வளர்ச்சியடையும். இடைத்தரகர்கள் தவிர்க்கப்பட்டு விவசாயிகள் நேரடியாகப் பலனடைவார்கள். குறு, சிறு விவசாயிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் ஒப்பந்த நிறுவனங்கள் செய்து கொடுக்கும். இதனால் விவசாயிகள் பயனடைவதோடு, சட்டரீதியான பாதுகாப்பும் உத்தரவாதமான வருமானமும் அவர்களுக்குக் கிடைக்கும்’’ என்றார்.

இந்தச் சட்டங்களால் யார் செழிப்படையப் போகிறார்கள் என்பது விரைவில் வெளிச்சத்துக்கு வரத்தானே போகிறது!

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment