Wednesday, September 16, 2020

அரசியல் அலையடிக்கும் குமரி! - இடைத்தேர்தல் பரபரப்பு

வசந்தகுமார் மறைவையடுத்து, கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி காலியானதாக அறிவித்திருக்கிறது மக்களவைச் செயலகம்.


இதனால், அங்கு இப்போதே இடைத்தேர்தல் பரபரப்பு பற்றிக்கொண்டது. காங்கிரஸ் தரப்பில் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த்தும், பா.ஜ.க தரப்பில் பொன்.ராதாகிருஷ்ணனும் கிட்டத்தட்ட பிரசார வேலைகளைத் தொடங்கிவிட்டார்கள்.


வசந்தகுமாருக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக செப்டம்பர் 3-ம் தேதி, கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் குழித்துறை டு மார்த்தாண்டம் வரை மெளன ஊர்வலம் நடந்தது. இதில் கலந்துகொண்ட விஜய் வசந்த், தன் தந்தையைப்போலவே மூவர்ண காங்கிரஸ் துண்டைத் தோளில் போட்டிருந்தார். கூடவே, தந்தை பாணியில் சட்டை பட்டனில் ‘வெற்றி’ என்ற வாசகத்தைப் பொருத்தியிருந்தார். இதுவே விஜய் வசந்தின் அரசியல் பிரவேசத்தை வெளிக்காட்டியது. மேலும், அப்போது பேட்டி கொடுத்த விஜய் வசந்த், “கட்சி சீட் கொடுத்தால் தேர்தலில் நிற்கலாம்” என்கிறரீதியில் பேசினார். இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடக்கவிருக்கும் வசந்தகுமாருக்கான அஞ்சலிக் கூட்டங்களில் கலந்துகொண்டு கட்சித் தொண்டர்களைச் சந்திக்கத் திட்டமிட்டிருக்கிறாராம் விஜய் வசந்த்.



இது பற்றி நம்மிடம் பேசிய காங்கிரஸ் நிர்வாகி ஒருவர், “விஜய் வசந்த் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பது அவருடைய குடும்பத்தினரின் விருப்பம். அரசியலில் வசந்தகுமாரின் இடத்தை விட்டுத்தர அவர்கள் தயாராக இல்லை. செப்டம்பர் 18-ம் தேதிக்கு மேல் மாநிலத் தலைவருடன் டெல்லிக்குச் சென்று, சோனியா காந்தியைச் சந்திக்கவும் அவர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள்” என்றார்கள். விஜய் வசந்திடம் பேசினோம். “எதுவாக இருந்தாலும் என் அம்மாவிடம் பேசிவிட்டுத்தான் முடிவு செய்வேன்” என்று நழுவினார்.


எதிர் முகாமில் பா.ஜ.க சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இடைத்தேர்தலில் களமிறங்க மும்முரமாகிவருகிறார். “வசந்தகுமாரின் மரணத்தால் ஏற்பட்டிருக்கும் அனுதாப அலை ஏழு நாள்களுக்குத்தான் இருக்கும். அது தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தாது. கன்னியாகுமரியில் பா.ஜ.க வெல்லும்” என்று கூறிவருகிறார் அவர். செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தமிழ்நாடு ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் மாநிலத் தலைமையகம் சார்பில், ‘கொரோனாவை வெல்வோம்... மன உளைச்சல் நீங்கி வாழ்வோம்’ என்ற தலைப்பில் பிரசார யாத்திரை தொடங்கியது. அதில் கொரோனா காலத்தில் மத்திய அரசு கொண்டுவந்த மக்கள் நலத் திட்டங்களை துண்டுப் பிரசுரங்களாக வழங்கி, கிட்டத்தட்ட தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டார் பொன்.ராதாகிருஷ்ணன். அவரிடம் பேசினோம். “வேட்பாளரைக் கட்சி மேலிடம் முடிவு செய்யட்டும். அதன் பிறகே அது பற்றிப் பேசுவேன்” என்றார்.


அநேகமாக வரும் நவம்பர் அல்லது டிசம்பரில் கன்னியாகுமரி இடைத்தேர்தல் நடக்கலாம் என்கிறார்கள். ஆனால், இப்போதே முக்கடலைத் தாண்டி அரசியல் அலையடிக்கிறது குமரி தேர்தல் களம்.


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment