Wednesday, September 09, 2020

யாருவெச்ச கொள்ளியோ எங்க வீடு வந்து சேர்ந்துருச்சு சாமி!

எங்கும் புகைமண்டலம்... நாசியிலேறும் ரத்தவாடை... மனம் நடுங்கும் ஓலக்குரல்கள்... வெடிமருந்துகளால் கண்டந்துண்டமாகப் பிய்த்து எரியப்பட்ட பெண்களின் உடல்கள்... “ஐயோ... அம்மா... உடம்பெல்லாம் எரியுது, காப்பாத்துங்க சாமி...” என்ற குரல்கள்! சிதிலமடைந்த கான்கிரீட் சுவர்களெங்கும் சதைத்துண்டுகளும் ரத்தக்கறையும் ஒட்டியிருக்க, கொடூரமான போர் நிகழ்ந்த களத்தைப்போலிருந்தது அந்தப் பகுதி!


செப்டம்பர் 4-ம் தேதி, கடலூர் மாவட்டம், குருங்குடி கிராமம். கிராமத்தையொட்டி அமைந்திருக்கும் ஐந்து பட்டாசுக் கூடங்கள். வழக்கம்போல காலை 10 மணிக்கு அவை திறக்கப்பட்டன. சுறுசுறுப்பாக வேலைகள் தொடங்கிய அரை மணி நேரத்தில் ஐந்து கூடங்களில் ஒன்றிலிருந்து பயங்கர வெடிச்சத்தம். நொடிப்பொழுதில் அந்தக் கட்டடம் தரைமட்டமானது. உள்ளே வேலை செய்துகொண்டிருந்த ஒன்பது தொழிலாளர்கள் சிதைந்துபோனார்கள். ஊர் மக்கள் ஓடிவந்து பார்த்தபோது, அங்கே மிஞ்சியிருந்தவை கொடூரமான காட்சிகள் மட்டுமே!


ராஜேஸ்வரி - ராதிகா

வெடிவிபத்து குறித்த தகவல் கிடைத்ததும் அந்தக் கிராமத்துக்கு விரைந்தோம். ஓலைக் குடிசைகளும் மண்பூசியச் சுவர்களுமாக வறுமையைப் பறைசாற்றின பெரும்பாலான வீடுகள். கொஞ்சமே கொஞ்சமாய் ஓட்டு வீடுகள். விவசாயம் பெரிதாக இல்லை. வானம் பார்த்த பூமியில் ஓரளவு வயிற்றுப் பிழைப்புக்குக் கைகொடுக்கிறது நூறு நாள் வேலைத் திட்டம். விபத்து நடந்த இடத்தை அடைந்தோம். விபத்து நடந்து பல மணி நேரமாகியும் காற்றில் அலைந்து கொண்டிருந்தது ரத்தவாடை. தூரத்தில் துண்டிக்கப்பட்டுக் கிடந்த இரண்டொரு விரல்கள் விபரீதத்தின் வீரியத்தை உணர்த்தின. உரிய இடைவெளியின்றி, அடுத்தடுத்து அமைக்கப்பட்டிருந்தன ஐந்து பட்டாசுக் கூடங்கள். அதிலொன்று முற்றிலுமாய் நொறுங்கிப்போயிருந்தது.


அடுத்தவேளை உணவைக்கூட உறுதிசெய்ய முடியாத வறுமை. கொரோனா ஊரடங்கால் கழுத்தை நெரிக்கும் கடன்சுமை. இவற்றை எதிர்கொள்ள 150 ரூபாய் தினக்கூலிக்காக, பட்டாசு ஆலைக்குச் சென்ற ஒன்பது பேரைக் கோரமாகச் சிதைத்துப்போட்டிருக்கிறது விபத்து. அவர்களில் ஏழு பேர் உயிரிழந்துவிட்ட நிலையில், இருவர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இதில் ஜீரணிக்க முடியாத கொடூரம் என்னவென்றால், அத்தனை பேரும் குடும்பத்தின் சுமைதாங்கிகளாக விளங்கிய பெண்கள்.காட்டுமன்னார்கோயிலை ஒட்டி யிருக்கும் இந்தக் கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசுக்கூடங்கள், கொரோனா ஊரடங்கால் ஆறு மாதங்களாக மூடப்பட்டிருந்தன. செப்டம்பர் 1-ம் தேதியிலிருந்து ‘நாட்டுவெடிகள்’ தயாரிக்கும் பணிகள் மீண்டும் தொடங்கின. சம்பவ நாளன்று அதே கிராமத்தைச் சேர்ந்த சித்ரா, மலர்க்கொடி, ராசாத்தி, ரத்தினாம்பாள், ருக்மணி ஆகிய ஐந்து பேரும் காந்திமதி என்பவருக்குச் சொந்தமான பட்டாசுக் கூடத்துக்குப் பணிக்குச் சென்றனர். காந்திமதியும் தன் மகள் லதா, பேத்தி அனிதா, மருமகள் தேன்மொழி ஆகியோருடன் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போதுதான் இந்தக் கோர விபத்து நடந்திருக்கிறது. `வேலை செய்யும்போது ஏற்பட்ட வெடிமருந்து உரசலே விபத்துக்குக் காரணம்’ என்று கூறப்படுகிறது.


“எம்மா... எம்மா... வந்துரும்மா...” உயிரிழந்தவர்களில் ஒருவரான மலர்க்கொடியின் மூன்று மகள்கள் விபத்து நடந்த இடத்தில் கதறி அழுதுகொண்டிருந் தார்கள். இளையமகள் இளவரசி விசும்பிக்கொண்டே பேசினார், “காலையில வேலைக்குக் கிளம்புறப்போகூட என் தலையைத் தடவி, `என் பேரப் புள்ளைங் களை பத்திரமா பார்த்துக்கோ’னு சொல்லிட்டுப் போனாங்க. ஆனா, எங்கம்மாவோட தலையை மட்டும்தான் இங்கிருந்து எடுத்தோம். உடம்பு துண்டு துண்டா போச்சு. அதையெல்லாம் தேடி எடுத்துச் சேத்துதான் சுடுகாட்டுல புதைச்சிருக்கோம்” என்று சொல்லும்போதே உடைந்தது அவர் குரல்.கணவரின் மறைவுக்குப் பிறகு, மலர்க்கொடிதான் கூலி வேலைக்குச் சென்று மூன்று மகள்களையும் காப்பாற்றி, திருமணமும் செய்துவைத்திருக்கிறார். கொஞ்ச காலமாக வேலைக்குச் செல்லாமலிருந்த மலர்க்கொடி, தன் பேரக்குழந்தைகளின் ஆன்லைன் வகுப்பு களுக்காக போன் வாங்க வேண்டும் என்று வேலைக்குப் போய் உயிரை இழந்திருக்கிறார்!


ஆதார் அட்டையிலிருக்கும் உயிரிழந்த சித்ராவின் புகைப்படத்தைச் சலனமில்லாமல் வெறித்துக்கொண்டிருந்தது அவரின் குடும்பம். அழுது ஓய்ந்திருந்தன அவர்களின் கண்கள். சித்ராவின் மகன் சிவராஜிடம் பேசினோம். “அப்பாவுக்கு பூ யாவாரம். அம்மா கூலி வேலைக்குப் போவாங்க. ரெண்டு பேருக்குமே தொடர்ச்சியா வேலை கெடைக்காது. இதுக்கு நடுவுல கொரோனா வந்துச்சு. ஊரடங்குல சாப்பாட்டுக்கே கஷ்டமாயிடுச்சு. செப்டம்பர் 1-ம் தேதி வெடிக்கொட்டாய் தொறந்தாங்க. விபத்து நடந்த அன்னிக்குக் காலையிலகூட `இனிமே மூணு வேளை சோறாச்சும் நிம்மதியா சாப்பிடலாம்’னு சொல்லிட்டு தான் வேலைக்குக் கிளம்பினாங்க. கடைசியில ரெண்டு காலு இல்லாம, கருகின முகத்தோட தான் என் அம்மாவைப் பார்த்தேன்...” கண்கள் குளமாகி நின்ற அவரை நம்மால் எதிர்கொள்ள முடியவில்லை.


மண் சுவரில் கிழிந்துபோன ஃப்ளெக்ஸ் கூரையுடன் இருக்கிறது ராசாத்தியின் வீடு. இரு மகள்களையும் திருமணம் செய்து கொடுத்துவிட்டு கணவர் மாதவனுடன் வசித்துவந்தார் ராசாத்தி. முதுமையால், மாதவனால் வேலைக்குச் செல்ல முடியவில்லை. கடைசி காலத்தில் வயிற்றுப் பாட்டுக்கும், மருத்துவச் செலவுகளுக்குமாக வேறு வழியில்லாமல் பட்டாசுக் கூடத்துக்கு வேலைக்குச் சென்றிருக்கிறார். மனைவியின் இறப்பை நம்ப முடியாமல் பிரமை பிடித்ததுபோலக் குடிசையின் வாசலில் “என் சாமி... என் சாமி...” என்று முணுமுணுத்தபடி முடங்கிக்கிடந்தார் மாதவன். “எனக்கு மருந்து வாங்கத்தான் வேலைக்குப் போனா என் சாமி. வெடிச்சத்தம் கேட்டு `ஐயோ... என் சாமி...’னு வயல்ல இறங்கி ஓடினேன். அங்கே என் சாமி தலையே இல்லாம கெடந்தா. என் சாமி இல்லாம இனிமே நான் எப்படி இருப்பேன்...” என்று உடைந்து அழுதார்.


சிவராஜ்

உடல்நிலை சரியில்லாத கணவர், மருமகள், பேரன் என அனைவரின் எதிர்காலத்தையும் ஒற்றை ஆளாகத் தாங்கிவந்தவர் ரத்தினாம்பாள். “அப்பாவுக்கு ரொம்ப வருஷமா உடம்பு சரியில்லை. வெளிநாட்டுக்குப் போன தம்பி என்ன ஆனான்னு தெரியலை. `கொள்ளிவெக்க ஆளில்லாமப் போயிருமோ...’னு அடிக்கடி அம்மா அழுவாங்க. அதனாலதான் எங்க அம்மா இப்படிப் போயிட்டாங்களான்னு தெரியலை. யாருவெச்ச கொள்ளியோ எங்க வீடு வந்து சேர்ந்துருச்சு சாமி...” என்று விம்மிச் சரிந்தார் அவரின் இளைய மகள் மாலா.


ருக்மணிக்கு இரு மகள்கள். சிறு வயதிலேயே கணவர் உயிரிழந்துவிட, குடும்பத்தை ஒற்றை ஆளாகத் தாங்கி மகள்களைப் படிக்கவைத்தார். மூத்த மகளுக்குத் திருமணமாகிவிட, இளைய மகள் கல்லூரியில் படித்துவருகிறார். `` `வெடி கட்டுற வேலைக்குப் போவாதம்மா... பயமாயிருக்கு’னு அடிக்கடி சொல்லுவோம். `உன்னை நல்லா படிக்க வெச்சுடுறேன். நீ வேலைக்குப் போனப்புறம் நான் வெடிகட்டப் போகலை’னு சொல்லுவாங்க. இப்போ பாதியி லேயே விட்டுட்டுப் போயிட்டாங்க” என்ற இளைய மகள் ராதிகாவால் அதற்கு மேல் பேச முடியவில்லை.


இந்த விபத்தில் ஆலையின் உரிமையாளர் காந்திமதி, அவரின் மகள் லதா இருவரும் உயிரிழந்து விட்டார்கள். காந்திமதியின் மருமகள் தேன்மொழி, லதாவின் மகள் அனிதா ஆகியோர் 70 சதவிகிதத் தீக்காயங்களுடன் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கல்லூரி மாணவியான அனிதா, பணியில் இருப்பவர்களுக்கு டீ எடுத்துச் சென்றபோது விபத்தில் சிக்கியிருக்கிறார். சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கும் வீடியோ ஒன்றில், முகம் கருகிய நிலையில் பேசும் அனிதா, தனது அம்மா இறந்தது தெரியாமல், “பயங்கரச் சத்தம் கேட்டுது. எனக்குக் காது கேட்கலை. அம்மா எங்க... உடம்பெல்லாம் எரியுது... குளிருது’ என்று பேசும் வீடியோ பதறவைக்கிறது.


பட்டாசு தயாரிப்புக் கூடங்களில் அரசு அதிகாரிகள் அன்றாடச் சோதனைகளை நடத்தி, பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கண்காணித்திருந்தால் இந்த விபத்து நடந்திருக்காது!


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment