Wednesday, September 09, 2020

கொரோனா கூத்துகள்... குளறுபடிகள், கொள்ளைகள்!

‘கொரோனா ஒரு பக்கம் படுத்துகிறது என்றால், அதைப் பெரிய பிசினஸாக்கி அரசு, தனியார் என அத்தனை தரப்பும் எங்களைப் பாடாய்ப்படுத்துகின்றன’ என்று புலம்புகிறார்கள் அப்பாவி மக்கள்.


நோ கொரோனா... நோ சிகிச்சை... 8 லட்சம் அபேஸ்!


ஒரு தனியார் மருத்துவமனை, ‘கொரோனா நெகட்டிவ்’ நோயாளியிடம் 8 லட்ச ரூபாய் வசூல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பாதிக்கப்பட்டவரான மதுரையைச் சேர்ந்த ராஜா, நீதிமன்றத்தை நாடியிருக்கிறார். உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ``எனக்கும் என் மனைவிக்கும் சமீபத்தில் காய்ச்சல் மற்றும் தலைவலி ஏற்பட்டதால், என்.டி.சி மருத்துவமனைக்குச் சென்றோம். அங்கு, `கொரோனா பாதிப்பு’ என்று சொல்லி, 8 லட்ச ரூபாய் முன்பணம் கட்டச் சொன்னார்கள். ஆனால், டெஸ்ட் எடுத்துப் பார்த்தபோது, ‘நெகட்டிவ்’ என்று வந்தது. மறுநாளே டிஸ்சார்ஜ் செய்துவிட்டார்கள். ஆனால், எங்களிடம் வாங்கிய 8 லட்ச ரூபாயைத் திருப்பித் தரவில்லை. ‘கொரோனா சிகிச்சைக்கான கட்டணம்’ என்று சொல்லிவிட்டனர். கொரோனா பாதிப்பு இல்லாத எங்களுக்கு எந்தச் சிகிச்சையும் அளிக்காமல், 8 லட்ச ரூபாய் வாங்கியதை திருப்பித் தர உத்தரவிட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், “கொரோனா சிகிச்சையளிக்கும் தனியார் மருத்துவமனைகளைச் சுகாதாரத்துறைக் கண்காணிக்கிறதா... இந்த மருத்துவமனைமீது எடுக்கப்படும் நடவடிக்கை என்ன?” என்று விளக்கம் கேட்டு தமிழக அரசின் சுகாதாரத்துறைச் செயலாளருக்கும், சம்பந்தப்பட்ட என்.டி.சி மருத்துவமனைக்கும் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.


அதிக விலை கணக்கு... ஒரு கோடியை அமுக்கு!திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் நகராட்சியில் கொரோனா நோய்த் தடுப்பு உபகரணங்கள் வாங்கியதில் ஒரு கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. ‘‘நகராட்சி ஆணையராகப் பொறுப்புவகிக்கும் ஜின்னா, பணியாளர்களுக்கான முகக்கவசத்தைப் பல மடங்கு அதிக விலைக்கு வாங்கியதாகக் கணக்கு எழுதியிருக்கிறார். பி.பி.இ உபகரணங்கள், சானிடைஸர், பிளீச்சிங் பவுடர் என நகராட்சி மூலம் வாங்கிய பொருள்களுக்கு அதிகமான விலைவைத்து கணக்குக் காட்டி, ஒரு கோடி ரூபாய் வரை கொள்ளை யடிக்கப்பட்டுள்ளது” என்று குற்றம்சாட்டியுள்ளார் நகராட்சி ஊழியர் ராமசுந்தரமணி. நீதிமன்றத்தில் அவர் முறையீடு செய்ததில், ‘லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை செய்ய வேண்டும்’ என நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது!

‘அசிங்கப்படுத்திவிட்டீர்கள்... ஒரு கோடி இழப்பீடு வேண்டும்!’

திருநெல்வேலியைச் சேர்ந்த 35 வயது இளைஞர் சிவசுப்பிரமணியன். தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் இவர், வாடகைக்குத் தங்கியிருக்கும் வீட்டின் உரிமையாளருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், இவருக்கும் சோதனை செய்யப்பட, ‘பாசிட்டிவ்’ என ரிசல்ட் வந்திருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி, நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தங்கியிருந்த வீட்டின் முகப்பில் ‘கொரோனா நோயாளி’ என்ற அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இந்நிலையில், மருத்துவமனையிலிருந்து சிகிச்சை முடிந்து வந்த சிவசுப்பிரமணியன் நஷ்டஈடு கேட்டு, சுகாதாரத்துறை அதிகாரிகள்மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.


``ஆகஸ்ட் 8-ம் தேதி, என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இரண்டு நாள்களாகப் படுக்கை வழங்காமல் தரையில் படுக்கவைத்தனர். எந்தச் சிகிச்சையும் அளிக்கவில்லை. 10-ம் தேதி படுக்கை கொடுத்தார்கள். அடுத்த இரண்டு நாள்களிலேயே டிஸ்சார்ஜ் செய்வதாகச் சொன்னார்கள். நான் கேட்டதற்கு, `நோயாளிகள் அதிகமாக வருகிறார்கள். இங்கு இடமில்லை’ என்று காரணம் சொன்னார்கள். அதோடு, ஆகஸ்ட் 3-ம் தேதியிலிருந்து 12-ம் தேதிவரை நான் சிகிச்சை எடுத்துக்கொண்டதாக மருத்துவமனை சார்பாக டிஸ்சார்ஜ் சம்மரி எழுதிக் கொடுத்திருக்கிறார்கள். கொரோனா பாதிப்பே இல்லாத என்னை, பொய்யான ரிசல்ட்டைக் காட்டி மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்று, வீட்டில் நோட்டீஸ் ஒட்டி அசிங்கப்படுத்தியதால், ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்” என மானநஷ்ட வழக்கு தொடர்ந்திருக்கிறார் சிவசுப்பிரமணியன்.

டெஸ்ட்டில் தில்லுமுல்லு... புத்தம் புது குச்சிக்கு பாசிட்டிவ்!


தேனி மாவட்டத்தில், `ஒவ்வொரு பிளாக்கிலும் தினமும் 500 நோயாளிகளுக்கு கொரோனா டெஸ்ட் எடுக்க வேண்டும்’ என உத்தரவிட்டிருக்கிறார் மாவட்ட கலெக்டர். சுகாதாரப் பணியாளர்கள் கிராமம் கிராமமாகச் சுற்றி கொரோனா டெஸ்டுக்கு ‘ஆள்பிடித்து’ வருகிறார்கள். ஆனால், பல கிராமங்களில் மக்கள் ஒத்துழைக்காமல், சுகாதாரப் பணியாளர்களை விரட்டியடிக்கிறார்களாம். சமீபத்தில், உத்தமபாளையம் பிளாக்கில் டெஸ்டுக்கு ஆள் கிடைக்காத காரணத்தால் ஒரு சுகாதாரப் பணியாளர், அவராகவே 30 பெயர்களை எழுதி, ‘டெஸ்ட்டுக்குப் பயன்படுத்தாத’ ஸ்வாப் டெஸ்ட் குச்சிகளை பரிசோதனைக்கு அனுப்பிவிட்டார். அந்த 30 குச்சிகளில், 10 குச்சிகளுக்கு `பாசிட்டிவ்’ என ரிசல்ட் வந்துள்ளது. யாருடைய தொண்டையிலும் மூக்கிலும் படாத புத்தம்புதிய குச்சிகளில் எப்படி பாசிட்டிவ் என ரிசல்ட் வரும் என்று சுகாதாரப் பணியாளர்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். ‘அந்த 10 பேரை’ உடனே சிகிச்சை மையத்தில் சேர்க்க உத்தரவு வந்ததால், ஏற்கெனவே ட்ரீட்மென்ட்டிலிருந்த 10 பேரின் பெயர்களை மாற்றி ரெக்கார்டு கிரியேட் செய்து விஷயத்தை அப்படியே அமுக்கியிருக்கிறார்கள்!

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment