Wednesday, September 16, 2020

ராகுலின் நம்பிக்கைக்குரியவர்கள்! - சோனியா முடிவின் அதிரடி பின்னணி

‘முழுநேரத் தலைவர் வேண்டும்’ எனக் காங்கிரஸ் கட்சிக்குள் மையம்கொண்ட `கடித’ சூறாவளிக்கு, நியமனங்கள்மூலம் அதிரடிக் காட்டியிருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி.


கொரோனா பெருந்தொற்று பரவத் தொடங்கிய காலத்தில், தனக்கு ஏற்கெனவே இருக்கும் சில உடல் உபாதைகளைக் கணக்கிட்டு சில நடவடிக்கைகளை மேற்கொண்டார் சோனியா. டெல்லியில் உள்ள தனது இல்லத்தில், ஒரேயொரு சமையல்காரரை மட்டும் அனுமதித்துவிட்டு மற்றவர்களை வீட்டுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தினார். அவரது அன்றாட நிகழ்வுகளைக் கவனித்து வந்த உதவியாளர்கள் மாதவன், ஜார்ஜ் ஆகியோருக்கும் எந்தப் பணியும் கொடுக்கப்படவில்லை. அரசியல் சந்திப்புகளையும் முற்றாகத் தவிர்த்திருந்தார் சோனியா. இதையே பிரதான காரணமாக முன்வைத்து, `கட்சி செயல்படவில்லை. முழு நேரம் செயல்படக்கூடிய தலைவர் தேவை’ என கபில்சிபல், குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட 23 பேர் சோனியாவுக்குக் கடிதம் எழுதினார்கள்.


`இந்தக் கடிதம் எனக்கு வலியை ஏற்படுத்தியுள்ளது. பலவீனமாக இருக்கும் நிலையில், அவர் (சோனியா) மீது தாக்குதல் நடத்துகிறீர்கள். கட்சித் தேர்தலுக்கு கால அளவை நிர்ணயிப்போம். அதற்கான நடவடிக்கைகளை 6 மாதங்களுக்குள் முடித்து, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தைக் கூட்டுவோம்’ எனச் செயற்குழுவில் வேதனையைக் காட்டினார் ராகுல் காந்தி. இந்நிலையில், கட்சியின் அமைப்பில் மிகப்பெரிய மாற்றத்தை அமல்படுத்தியுள்ளார் சோனியா காந்தி. ‘பழிவாங்கும் நடவடிக்கையாக இல்லாமல், அனைவரையும் அரவணைத்துப் பதவிகளை வழங்கியுள்ளார்’ என அந்த நியமனங்களைக் கொண்டாடுகின்றனர் காங்கிரஸ் நிர்வாகிகள்.


செயற்குழுக் கூட்டத்தில் வீசிய அனலுக்குக் காரணமான தலைவர்களில் ஒரு சிலரைத் தவிர, மற்றவர்களுக்குப் புதிய பதவிகள் வழங்கப் படவில்லை. குலாம் நபி ஆசாத்திடம் இருந்த பொதுச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டு, காரியக் கமிட்டி உறுப்பினராக மட்டும் அவர் நீடிக்கிறார். காரியக் கமிட்டியில் உறுப்பினர்களாக இருந்த கபில்சிபல், சசிதரூர், மணீஷ் திவாரி ஆகியோருக்கு மீண்டும் இடம் அளிக்கப் படவில்லை. தற்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளில் பலரும் ராகுல் காந்தியின் ஆதரவாளர்களாகப் பார்க்கப்படுகிறவர்கள். இங்குதான் சோனியா காந்தியின் அறிவிப்பை உற்றுக் கவனிக்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.


காரியக் கமிட்டியின் 26 நிரந்தர அழைப்பாளர்களில் 11 பேர் ராகுலுக்கு வேண்டியவர்கள். நிரந்தர உறுப்பினர்களாக உள்ள 22 பேரில் கே.சி.வேணுகோபால், ரந்தீப் சுர்ஜிவாலா, அஜய் மக்கான், ஜிதேந்திர சிங் உட்பட பலர், ராகுலின் நம்பிக்கைக்கு உரியவர் களாக உள்ளனர். சிறப்பு அழைப்பாளர்களில் 9 பேரில் ஏழு பேர் ராகுலுக்கு விசுவாசமானவர்கள். மாநிலங்களில் மேலிடப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள 17 பேரில் 13 பேர் ராகுலின் அபிமானத்தைப் பெற்றவர்கள்.


இதில், சர்ச்சைக்குரிய கடிதத்தில் கையொப்பமிட்ட முகுல் வாஸ்னிக், ஆனந்த் சர்மா ஆகியோர் காரிய கமிட்டி உறுப்பினர் பதவியைத் தக்கவைத்துள்ளனர். காங்கிரஸ் தலைவருக்கு உதவும் சிறப்புக் குழுவிலும் முகுல் வாஸ்னிக் சேர்க்கப்பட்டுள்ளது, நிர்வாகிகளை ஆச்சர்யப்பட வைத்துள்ளது. இந்தச் சிறப்புக் குழுவில் ஏ.கே.அந்தோணி, அகமது படேல், அம்பிகா சோனி, கே.சி.வேணுகோபால் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். தலைமைக்கு எதிரான கடிதத்தில் கையொப்பமிட்ட ஜிதின் பிரசாதாவுக்கு மேற்கு வங்கத்தில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் செயல் தலைவராக இருந்த தினேஷ் குண்டுராவ், தமிழ்நாடு, கோவா, புதுச்சேரி மாநிலங்களின் பொறுப்பாளராக நியமிக்கப் பட்டுள்ளார். இவரின் நியமனத்தை வரவேற்கும் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர், ‘‘இதற்கு முன்னால் மேலிடப் பொறுப்பாளர்களாக இருந்தவர்களுக்குப் பல்வேறு விருப்பு வெறுப்புகள் இருந்தன. இதன் காரணமாக, மாவட்ட நிர்வாகிகளில் சிலர் தன்னிச்சையாகச் செயல்பட்டனர். குண்டுராவ் நியமனத்தின் மூலம், அதுபோன்ற பிரச்னைகள் இனி எழாது என நம்புகிறோம். மேலும், ராகுலின் நம்பிக்கைக்குரியவராகப் பார்க்கப்படும் மாணிக்கம் தாகூர் தெலங்கானா பொறுப்பாளராகவும், செல்லக்குமார் ஒடிசா பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பணிக்குழுவில் ஜோதிமணி இடம் பெற்றுள்ளார். இவர்களின் நியமனமும் ராகுலின் கரத்தை வலுப்படுத்தும்” என்கின்றனர்.


சோனியாவின் அதிரடி சீர்திருத்தம் குறித்து மூத்த தலைவர் அஸ்வனி குமார் இப்படிச் சொன்னார்... ‘‘அனுபவம், விசுவாசம், இளமை ஆகியவை சமநிலையில் இருப்பதுடன் தலைமுறை மாற்றத்துக்கான ஒரு செயல் திட்டமாகவும் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது. வருங்கால கட்சித் தலைமைக்கான வடிவமைப்பை இந்த நியமனங்கள் எடுத்துக்காட்டுகின்றன!’’


சோனியாவின் மனநிலையைப் புரிந்து கொண்ட வார்த்தைகள் இவை.


- ஆ.விஜய்ஆனந்த்


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment