Sunday, September 13, 2020

காட்டிக் கொடுத்த ஒத்தச் செருப்பு! - மாட்டிக்கொண்ட மதன்...

சென்னை செம்மஞ்சேரி. செப்டம்பர் 2, மதிய நேரம். வேகாத வெயிலில் வெறுப்பாக வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தது அந்தச் சிறு காவல் படை. கறுப்பு நிறத்தில் வந்தது ஒரு ஹோண்டா ஆக்டிவா. வண்டியை வழிமறித்து, ஆவணங்களைக் கேட்டார்கள் காவலர்கள். கொத்தாக ஆவணங் களை நீட்டினார் அந்த வாலிபர். ‘ஜோதி’ என்ற பெயரிலிருந்த ஆவணங்கள் சரியாகவே இருந்துள்ளன. ஆனால், அந்த வாலிபரின் முகத்தில்தான் ‘ஜோதி’ இல்லை. மாறாக, ஏகத்துக்கும் பீதி. இப்படியாகத் தொடங்கிய துப்பறியும் படலத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது ஒற்றைச் செருப்பு! வாருங்கள், விசாரணைப் படலத்துக்குள் செல்வோம்.


அந்த வாலிபரின் பெயர் மதன். ‘என் அண்ணி ஜோதியின் வண்டி இது’ என்பதுதான் அவரது வாதம். ஆனாலும், பேஸ்மென்ட் வீக்கான அவரது உதறலைக் கண்டு சந்தேகமடைந்த காவலர்கள், வண்டியின் முன்பகுதியில் ஒட்டப்பட்டிருந்த விநாயகர் ஸ்டிக்கரை கவனித்தார்கள். அப்போதுதான் ஒட்டப்பட்டதுபோல லேசாக உப்பியிருக்க, ஒரு காவலர் அதைக் கிழித்தார். உள்ளே இன்னொரு ஸ்டிக்கரில் சிலுவையுடன் காட்சியளித்தார் இயேசு கிறிஸ்து. வெளியே விநாயகர்... உள்ளே இயேசு! “தம்பி, இப்படிக்கா வா...” என்று மதனை ஓரங்கட்டியது போலீஸ். அடுத்தகட்ட விசாரணை சற்று மிரட்டலாகவே தொடர்ந்தது. “ஹலோ... ஐயாம் டீசன்ட் ஃபேமலி...” என்று பதறினாலும் மதனின் உதறல் நிற்கவில்லை.

மதன் - சௌந்தர்ராஜன்

அன்று காலையில்தான் அதே பகுதியில் வசிக்கும் ஆசிரியர் சௌந்தர்ராஜன் என்பவர் தன் வீட்டில் களவு நடந்திருப்பதாகப் புகாரளித்திருந்தார். எல்.இ.டி டி.வி., லேப்டாப், ஸ்பீக்கர் செட், தங்க டாலர், வெள்ளி குங்குமச் சிமிழ், பட்டுப் புடவைகள், வேட்டி, சட்டைகள், ஹோண்டா ஆக்டிவா உட்பட ஏகப்பட்ட பொருள்கள் களவாடப்பட்டிருந்தன. இதே காவலர்கள்தான் ஆசிரியரின் வீட்டுக்கும் சென்று பார்வையிட்டி ருக்கிறார்கள்.


ஏதோ ஒன்று பொறிதட்டவே... “எங்க உன் வீடு? வா வீட்டுக்குப் போகலாம்...” என்று மதனின் வீட்டுக்குச் சென்றார்கள் காவலர்கள். வீட்டைச் சல்லடை போட்டுத் தேடினாலும், ஆசிரியர் வீட்டில் திருட்டுப்போன பொருள்கள் ஒன்றுகூட இல்லை. ஆக்டிவாவின் ஆவணங்களும், மதனின் அண்ணி பெயர் ஜோதியை உறுதிப்படுத்த ஒருகட்டத்தில், “ஒரு அப்பிராணியைத்தான் பாடாய்ப் படுத்திட்டோமோ...” என்று உச்சுக்கொட்டத் தொடங்கியது போலீஸ். மதனும், “ஐயாம் பாவம்...” ஸ்டைலில் முகத்தை தொங்கப் போட்டுக்கொண்டிருக்க... “ஸாரி பாஸ்” என்றபடி அவரது வீட்டிலிருந்து வெளியேறத் தொடங்கினார்கள் காவலர்கள்.அசுவாரஸ்யமாக வெளியே வந்த காவலர் ஒருவர் கண்களில் தட்டுப்பட்டது ஜோடியின்றி கவிழ்ந்துகிடந்த ஒற்றைச் செருப்பு. அவரின் கண்களில் திடீர் மின்னல். எங்கேயோ பார்த்த காட்சி ஒன்று மனக்கண்ணில் டாலடித்து மறைந்தது. ஒருகணம் மூளையைக் கசக்கியவர் `லபக்’கென்று அந்தக் காட்சியை கேட்ச் செய்தார். வாவ்... ஜோடியின்றி கிடந்த ஒற்றைச் செருப்புக்கு ஜோடி கிடைத்துவிட்டது. “ஒன்று இங்கிருக்கிறது, மற்றொன்று... ஆங், அது வாத்தியார் வீட்டு வாசலில் அல்லவா கிடக்கிறது... கண்டேன் திருடனை!” என்று மீண்டும் மதனின் வீட்டுக்குள் துள்ளிக்குதித்து ஓடினார் காவலர்.


ஆம், அன்றைய தினம் காலையில் ஆசிரியர் வீட்டை அந்தக் காவலர் பார்வையிட்டபோது இந்த செருப்பின் மற்றொரு ஜோடி அங்கு கிடந்திருக்கிறது. பிறகென்ன... செருப்புகளைச் சேர்த்துவைத்து மதனைப் பிரித்துமேய்ந்தது போலீஸ். அதற்குள் சரிபார்க்க அனுப்பிய வண்டியின் இன்ஜின் எண் விவரம் வந்திருந்தது. அது ஆசிரியர் செளந்தர் ராஜனின் வண்டி என்றது!


“நானும் என் ஃப்ரெண்ட் ராகுலும் சரக்கடிக்க டாஸ்மாக் போனோம் சார். பார் வேற தொறக்கலையா... சரக்கை வாங்கிட்டு வீட்டு வசதி வாரிய காலனி வழியா நடந்தோம். ஒரு வீடு பூட்டியிருந்துச்சு. வீட்டுக்குப் பின்னால உட்கார்ந்து சரக்கடிச்சோம். போதை பத்தலை. கையில காசும் இல்லை. பூட்டை உடைச்சு உள்ளே பூந்துட்டோம். உள்ளேயிருந்த பொருள்கள் எல்லாத்தையும் மூட்டைகட்டி அங்கிருந்த ஹோண்டா ஆக்டிவாலயேவெச்சு கொண்டாந்துட்டேன். சந்தேகம் வரக் கூடாதுனு என் அண்ணியோட வண்டி நம்பரை இதுல ஒட்டிட்டேன். இதான் என் மொதத் திருட்டு சார். அதனாலதான் விவரம் இல்லாம போதையில ஒத்தச் செருப்பை அங்கே விட்டுட்டு வந்து, இப்படி ஒரே நாள்ல மாட்டிக்கிட்டேன்” என்றிருக்கிறார் மதன். தொடர்ந்து சம்பவத்தின் பார்ட்னர் ராகுலையும் கைது செய்தது போலீஸ்.எல்லாம் சரி... திருடிய லேப் டாப், எல்.இ.டி டி.வி., பட்டுப் புடவைகள், வேட்டி, சட்டைகள், பித்தளை விளக்குகள், தங்க டாலர், குங்குமச் சிமிழ் இவையெல்லாம் எங்கே என்று கேட்கிறீர்களா? துப்பறியும் போலீஸார் ‘கப்’பைத் தாங்க மாட்டார்கள் என்று வீட்டுக்குப் பக்கத்தில் பயன்பாடில்லாமல் கிடந்த பொதுக் கழிப்பிடத்தில் அவற்றையெல்லாம் பதுக்கி வைத் துள்ளார் பலே மதன்!


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment