Wednesday, September 09, 2020

அரசு நிறுவனமாக இருந்தாலும் மூட உத்தரவிடப்படும்!

 மக்கள் ‘இயல்பு’ வாழ்க்கைக்குத் திரும்பி விட்டார்கள். கூடவே, தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்குச் சென்றிருந்த மக்களும் சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருக் கிறார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை, சென்னையில் தொற்று எண்ணிக்கை ஆயிரத்திலிருந்து குறையவே இல்லை. இந்நிலையில், சென்னை மாநகராட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ச்சியாக வைக்கப்படுகின்றன. கேள்விகளோடு ‘பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர்’ பிரகாஷ் ஐ.ஏ.எஸ்-ஐ ரிப்பன் மாளிகையில் சந்தித்தோம்.


“குறைந்துகொண்டிருந்த தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரித்திருக்கிறதே?”


“ஒரு பெரும் நோய்த்தொற்று திடீரென்று வந்து விடாது; அதேபோல திடீரென்று மறைந்தும் விடாது. படிப்படியாகக் குறைக்கும் நடவடிக்கை களில் ஈடுபட்டுவருகிறோம். காய்ச்சல் முகாம்கள், வீடு வீடாகச் சென்று மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் போன்ற நடவடிக்கைகள் நல்ல பலனைத் தருகின்றன. புதிதாக பாதிக்கப்படுவோரின் விகிதம், ஒரு நிலையான எண்ணிக்கையில் உள்ளது. இதுவே பெரும் வெற்றிதான்.”


“ ‘ஒரு கொரோனா பாசிட்டிவ் கேஸ் பிடித்துக் கொடுத்தால், 5,000 முதல் 10,000 ரூபாய் வரை அதிகாரிகளுக்கு கமிஷன் கிடைக்கிறது. அதனால்தான் நோய் எண்ணிக்கை அதிகரித்துக் காட்டப்படுகிறது’ என்கிறார்களே..?”


“இது போன்ற குற்றச்சாட்டுகளைக் கேட்கும்போது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. இதில் துளியும் உண்மை இல்லை. ‘அறிகுறியுள்ள நபர்களை அடையாளம் காணுங்கள்’ என்று கூறியதை யாரோ தவறாகப் புரிந்து கொண்டு, இப்படி ஒரு செய்தியைப் பரப்பியிருக்கக்கூடும். மக்களிடம் பரிசோதனை மாதிரி எடுக்க, அதை RT-PCR பரிசோதனை செய்ய, அவர்களை மருத்துவமனைக்கு அல்லது முகாம்களுக்கு அழைத்துச் செல்ல, அங்கு அவர்களுக்கான உணவு வழங்க, தொடர்ந்து பராமரிக்க எனப் பெரிய தொகையே செலவாகும். இதில் எங்கும், யாருக்கும் ஐயாயிரமோ பத்தாயிரமோ கொடுக்க வாய்ப்பே இல்லை. இது ஒரு வடிகட்டிய பொய்.”


“கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் ஒருவரின் ஒரு நாள் உணவுக்கு ஆகும் செலவுதான் எவ்வளவு?”


“சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை, நாளொன்றுக்கு மூன்று வேளை உணவு, கபசுரக் குடிநீர், பயறு, முட்டை, பழங்கள், தேநீர் உள்ளிட்டவற்றை வழங்குகிறோம். இதில், உணவைக் கொண்டுவருவதற்கான செலவு, உள்ளே வந்து கொடுப்பவர்களுக்கான பாதுகாப்பு உபகரணம், அவர்களின் சம்பளம், அந்தக் குறிப்பிட்ட வார்டின் கழிப்பறைப் பராமரிப்பு என அனைத்துச் செலவுகளும் உணவுக் கணக்கில்தான் வரும். இவ்வகையில், ஒருவருக்கு ஒரு நாளைக்கு 350 ரூபாய் வரை செலவாகிறது.”


சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்


“ஆகஸ்ட் 20-ம் தேதி, வேலூர் ஆய்வுக் கூட்டத்தில் பேசிய முதல்வர், ‘தமிழகம் முழுமைக்குமான கொரோனா நோயாளிகளின் ஒரு நாள் உணவுச் செலவு 20-லிருந்து 25 கோடி ரூபாய்’ என்று குறிப்பிட்டார். அன்றைய நாளில் ஒட்டுமொத்த தமிழகத்திலும், தனியார் மருத்துவமனைகள் உட்பட - தோராயமாக 53,000 நோயாளிகள் சிகிச்சை பெற்றுவந்தார்கள். நீங்கள் குறிப்பிடும் 350 ரூபாய் கணக்குப்படி, ஒரு நாள் செலவு தோராயமாக 1.85 கோடிதான் வருகிறது. அப்படியானால், முதல்வர் சொன்னது தவறான கணக்கா?”


“முதல்வர் குறிப்பிட்ட தொகை, உணவுக்கானதாக மட்டும் இருக்காது. மருத்துவச் செலவு, மருத்துவ ஊழியர்களுக்கான சம்பளம், பரிசோதனை, போக்குவரத்து, உணவு, பராமரிப்பு என ஒட்டுமொத்தமாக ஆகும் செலவைத்தான் குறிப்பிட்டிருப்பார் என்று நினைக்கிறேன்.”


“தொற்றில் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டு வாசலில் தகரம் அடிப்பதில் பாகுபாடு பார்க்கப்படுவதோடு, முறைகேடுகள் நடப்பதாகவும் சொல்லப்படுகிறதே..?”


“எந்தப் பாகுபாடும் பார்ப்பதில்லை. முறைகேடுகள் குறித்து இதுவரை எழுத்து பூர்வமாக எந்தப் புகாரும் வரவில்லை. ஆனாலும், விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. வீடுகளில் தகரம் அடிக்கும் முறை சென்னையில் தற்போதைக்கு நிறுத்தப் பட்டுள்ளது.”


“களப்பணியாளர்களுக்குக் கடந்த இரண்டு மாதங்களாகச் சம்பளம் வழங்கப்படவில்லையாமே..?”


“சம்பளம் வங்கிக் கணக்கில்தான் வரவு வைக்கப்படுகிறது. சரியான வங்கிக் கணக்கு எண் சமர்ப்பிக்காதவர்களுக்கும், 50 சதவிகிதத்துக்கும் குறைவான வருகைப் பதிவு கொண்டவர்களுக்கும் மட்டுமே சம்பளம் நிறுத்திவைக்கப் பட்டுள்ளது.”


“கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில், குறிப்பாக செலவு விவரங்களில், மாநகராட்சி வெளிப்படைத் தன்மையோடு செயல்படவில்லையோ?”


“இது ஓர் அரசு அலுவலகம், இங்கு யாருமே எதையுமே மூடி மறைத்துச் செய்ய முடியாது. அனைத்தும் பதிவுசெய்யப்படும். அரசின் வரைமுறைக்குள் தான் செலவுகள் செய்யப்படுகின்றன. அனைத்துச் செலவு விவரங்களையும் விரைவில் எங்கள் இணையதளத்தில் பதிவுசெய்ய இருக்கிறோம்.”


“தற்போது, மாநகராட்சித்துறை சார்ந்த அனைத்துப் பணிகளும் தாமதமாகவே நடைபெறுகின்றனவே, ஏன்?”


“சில துறைகளில் தாமதம் ஏற்பட்டிருப்பது உண்மைதான். உதாரணமாக முன்னர் பிறப்புச் சான்றிதழ் வழங்க இரண்டு நாள் ஆகும். இறப்புச் சான்றிதழுக்கு ஏழு நாள்கள் ஆகும். அனைத்துத் துறை அதிகாரிகளும் கொரோனா தடுப்புப் பணியில் இருப்பதால், சான்றிதழ்கள் வழங்க 30 நாள்கள் வரை ஆகின்றன. இந்தத் தாமதம் விரைவில் சரிசெய்யப்படும்.”


பொதுப் போக்குவரத்து, மால்கள் என அனைத்தும் திறக்கப்பட்டுவிட்டன. இதன் மூலம் தொற்று அதிகரிக்காதா?


“அரசின் விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றினால், தொற்று அதிகரிக்காது. அனைத்தும் எங்கள் கண்காணிப்பில்தான் இருக்கின்றன. விதிமுறைகளைக் கடைப்பிடிக்காத நிறுவனம்... அது, அரசு நிறுவனமாக இருந்தாலும் கண்டிப்பாக மூட உத்தரவிடப்படும். மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கக் கூடாது என்பதற்காகவே இந்தத் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. சில மாதங்களுக்கு முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியோடு, அரசு கூறும் அறிவுரைகளைக் கேட்டு நடந்துகொள்ளுமாறு ‘ஜூனியர் விகடன்’ மூலம் மக்களைக் கேட்டுக்கொள்கிறேன்!”


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment